Search This Blog

13.4.11

பி.பி. மண்டலும் - திராவிடர்கழகமும்சமூகநீதி வரலாற்றில் சாகா இடம் பெற்ற சரித்திரத்திற்குச் சொந்தக்காரரான பி.பி. மண்டல் அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1982).

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த வரும், முன்னாள் ஆளுநருமான பி.பி. மண்டல் அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டம் 340 ஆவது பிரிவின்படி மத்திய அரசால் அமைக்கப்பட்ட பிற் படுத்தப்பட்டோர் நலன்கள்பற்றி ஆராயும் குழுவின் தலைவர் ஆவார்.

முதல் குழுவுக்கு காகா கலேல்கர் என்ற பார்ப்பனர் தலைவராக நியமிக்கப்பட்டார். அந்தக் குழுவால் அளிக்கப்பட்ட பரிந்துரைகள் எந்தக் கரையான் பொந்தில் கிடக்கிறதோ யாம் அறியோம்.

பி.பி. மண்டல் அவர்களின் தலைமையில் இரண்டாம் ஆணையம் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களால் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது (20.12.1978).

1978 மார்ச் 21 அன்று இக்குழு தன் பணியினைத் தொடங்கியது.

இரண்டாண்டு 9 திங்கள் இக்குழு சுழன்று சுழன்று பணியாற்றிய முழு அறிக்கை குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவி ரெட்டி அவர்களிடம் அளிக்கப்பட்டது (31.12.1980). உள்துறை அமைச்சர் கியானி ஜெயில்சிங் அவர்களால் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது (30.4.1982).

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்ட ஒரு குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைப்பதற்காகக் கூட திராவிடர் கழகம்தான் போராட வேண்டியிருந்தது.

அதற்காகவே சென்னை சைதாப்பேட்டையில் திராவிடர் கழகம் மாநாடு ஒன்றை நடத்தியது. கருநாடக மாநில முதலமைச்சர் தேவராசு அர்ஸ் அவர்கள் அம்மாநாட்டில் கலந்து கொண்டு கர்ச்சனை செய்தார் (20.3.1982).

பி.பி. மண்டல் அவர்களும், அவர்தம் குழுவினரும் சென்னைப் பெரியார் திடலுக்கு அழைக்கப்பட்டு நல் வரவேற்பும் அளிக்கப்பட்டதுண்டு (30.6.1979).

நாங்கள் அறிக்கையைத் தயாரித்து அதனை அரசிடம் கொடுக்க முடியும். அதனை செயல்பட வைக்கும் ஆற்றல் தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணில், திராவிடர் கழகத்திடமும், அதன் தலைவர் வீரமணி அவர்களிடத்திலும்தான் இருக்கிறது என்று மனந்திறந்து பேசினார் மண்டல்.

42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் திராவிடர் கழகம் நடத்தி, சமூகநீதியாளர்களை இந்திய அளவில் ஒருங்கிணைத்து 10 ஆண்டுகள் போராடி வந்திருக்கிறது கழகம்.

சமூகநீதிக் காவலர் மாண்பு மிகு பிரதமர் வி.பி. சிங் அவர்களால் மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒன்றான பிற்படுத் தப்பட்டோருக்கு மத்திய அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறி விக்கப்பட்டது (7.8.1990).

இந்த ஒரு காரணத்துக் காகவே பா.ஜ.க.வால் வி.பி. சிங்கின் ஆட்சியும் கவிழ்க்கப் பட்டது.

மண்டல் அவர்களும், வி.பி. சிங் அவர்களும் ஒடுக்கப்பட்ட மக்களால் தங்கள் வாழ்வின் அம்சங்களோடு நன்றி மறவாமல் பாதுகாக்கப்படவேண்டிய விலை மதிக்கப்பட முடியாத வைரங்கள் ஆவர்.

இந்தியா முழுமையும் உள்ள 407 மாவட்டங்களில் 405 மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கையினை அளித்தார்கள்.

வி.பி.சிங் அவர்கள் பரிந்துரையை அறிவித்தபோது, அதை நேரில் கண்டுகளிக்க பி.பி. மண்டல் உயிரோடு இல்லை.

அவர் அளித்த பரிந்துரைகள் இன்னும் ஏராளம் உண்டு. பரிந்துரைக்கப்பட்ட அந்த ஒன்றே ஒன்றைக் காப்பாற்றிக் கொள்ளவே இன்னமும் போராட வேண்டிய நிலை நமக்கு இன்று வரை; ஆனாலும், மண்டல் அளித்த அத்தனைப் பரிந்துரை களையும் நடைமுறைப்படுத்தச் செய்யும்வரை நாம் ஓயப் போவ தில்லை! மண்டலையும் மறக்கப் போவதில்லை; வாழ்க பி.பி. மண்டல்!

----------------------- மயிலாடன் அவர்கள் 13-4-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: