Search This Blog

23.4.11

இதுவா கடவுள் ஒழுக்கம்?


கடவுள் பற்றிய விளக்கம்

என் தொண்டிற்கு இடமுண்டு

சிறிய பட்டிக்காடாகிய இங்கு நாலாயிரத்துக்கு மேற்பட்டவர் கூடியுள்ள இப்பொதுக்கூட்டத்தைக் காணும் போது நான் உண்மையிலேயே சந்தோஷமடைகிறேன். பெரிய பட்டணங்களில் சாதாரணமாகக் கூடும் அளவை விட இது இரண்டு மூன்று பங்கு அதிகமாகவே இருக்கிறது. நானோ விஷமிகளால் எவ்வளவோ தூற்றப்பட்டு - ஜாதி இழந்தவனெனவும், தேசத் துரோகி யெனவும், நாஸ்திகனெனவும், அரசியலில் பிற்போக்கானவன் என்று தூற்றப்பட்டு வந்தும் அப்படிப்பட்ட என் பிரசங்கத்தைக் கேட்க இந்த 100 வீடுகள் உள்ள கிராமத்தில் 10 , 20 மைல் தூரத்திலிருந்து 4000 பேர்கள் இவ்வளவு திரளான மக்கள் கூடியிருக்கும் இக்காட்சியை என் எதிரிகள் வந்து காண வேண்டுமென ஆசைப்படுகிறேன். விஷமப் பத்திரிகை ஆசிரியர்கள் பார்த்தால் அவர்கள் நெஞ்சு வெடித்துப் போகும் என்றே எண்ணுகிறேன்.

இந்த பிரமாண்டமான கூட்டத்தைப் பார்க்கும்போது, உண்மையிலேயே என்னைப்பற்றி யார் என்ன சொன்னாலும் என் தொண்டை விரும்புபவர்களும், ஆதரிப்பவரும், ஏற்றுக்கொள்பவரும் இருக்கிறார்கள் என்பதும், என் தொண்டிற்கு நாட்டிலே இடமிருக்கிறது என்பதும், அந்தத் தொண்டை தொடர்ந்து செய்யும்படி மக்கள் எனக்குக் கட்டளை இடுகிறார்களென்றுமே எண்ணுகிறேன். உங்கள் வரவேற்புப் பத்திரத்திற்கு நன்றி செலுத்துகிறேன்.

வீண் விவாதத்தைக் கிளப்புகிறார்

இப்போது என்னை பேசும்படி கேட்டுக்கொண்டிருக்கும் விஷயம் கடவுள், மதம் என்பதாகும். வேறு எந்த விதமான பிரசாரகர் வந்த போதிலும், எவ்வளவு பித்தலாட்டம் பேசும் பேர்வழிகள் வந்த போதிலும் இந்த விஷயங்களை பற்றி அவர்களை கேட்பதில்லை. ஆனால் நாங்கள் செல்லுமிடங்களில் எங்களை கேட்கிறார்கள். நான் மதப்பிரசாரத்தை ஒரு தொழிலாகவோ சீவன மார்க்கமாகவோ கொண்டவனுமல்ல. அல்லது கடவுளைப் பற்றிய விவாதத்தைப் பற்றிப் பேசிக் காலந்தள்ளி வருபவனுமல்ல. எங்களுடைய வேறு முக்கியமான - நாட்டிற்கும் மனித சமூகத்துக்கும் தேவையான தொண்டுகளைச் செய்து வரும்போது அதனால் பாதகமடையும் எங்கள் எதிரிகள் பாமர மக்களிடத்தில் இந்த இரு விஷயங்களையும் கிளப்பி விட்டு அவர்களைக் கொண்டு கேள்விகள் கேட்கச் செய்து இவைகளைப் பற்றிப் பேச வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு எங்களைக்கொண்டு வந்து விடுகிறார்கள். எப்படி இருந்த போதிலும் எங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லத் தடையில்லை.

கடவுள் - மத கற்பனை

மனித சமூகத்திலே எங்கு பார்த்தாலும் கடவுள், மத உணர்ச்சி இருந்து வருவதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் சமூக வாழ்விற்கு இந்தக் கடவுள் மதங்கள் அல்லாமல் - தேவை இல்லாமல் இயற்கையே பெரிதும் படிப்பினையாகவும் மனிதனை நடத்துவதாகவும் இருந்து வருகிறது. காலதேச வர்த்தமானத்திற்கு ஏற்றபடியும் அவனது அனுபவம் அவசியம் ஆகியவைகட்கு ஏற்றபடியும் சமூக வாழ்வின் செளகரியங்களை மனிதன் அமைத்துக்கொள்கிறான். இக்காரியங்களுக்குக் கடவுள் மத தத்துவங்களைப்பற்றியோ அவைகளைப் பற்றிய கற்பனைகளைப் பற்றியோ மனிதன் சிந்திப்பதில்லை. சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதுமில்லை.

ஆனால் பயமும் சந்தேகமும் பேராசையும் பழக்க வழக்கங்களும் மற்றவர்களின் படிப்பினைகளும் சுற்றுப்புறமும் மனிதனுக்குக் கடவுள் மத உணர்ச்சியை உண்டாக்கிவிடுகின்றன. அவை எப்படி இருந்த போதிலும் எங்களுக்கு அவைகளைப்பற்றி கவலை இல்லை. அந்த ஆராய்ச்சியிலும் நாங்கள் சிறிதும் காலத்தையோ புத்தியையோ செலவழிப்பதில்லை. ஆனால் மனித சமூகத்துக்குத் தேவையான தொண்டு என்று நாங்கள் கருதிவரும் தொண்டுகளைச் செய்து வரும் போது மனித சமூக சுதந்திர - சுகவாழ்வுக்குப் பிறவியிலேயே எதிரிகளாக உள்ள புரோகிதக் கூட்டத்தார் - மதத்தின் பேரால் கடவுள் பேரால் தங்கள் வாழ்க்கையை நிச்சயித்துக் கொண்ட சோம்பேறி மக்கள் எங்கள் தொண்டிற்கு - கொள்கைகளுக்கு சமாதானம் சொல்லி எதிர்த்து நிற்க சக்தியற்ற கோழைகள் கடவுளையும் மதத்தையும் பற்றிக் குழப்பமாய் பேசி அவைகளைக் குறுக்கே கொண்டு வந்து போட்டு விடுகிறார்கள்.

மதம்

உதாரணமாக மனித சமூகத்தில் பிறவியில் உயர்வு தாழ்வு, ஜாதி பேதம் ஒழிந்து ஆண்டான் அடிமை தன்மை மாறி ஆணும் பெண்ணும் சகல துறைகளிலும் சம சுதந்தரத்துடன் வாழவேண்டுமென்று நாங்கள் சொன்னால் தீண்டாமையும் ஜாதிபேதமும் ஒழித்தால் தமது உயர்வும் தம் பிழைப்பும் கெடுமென்றெண்ணி, பாடுபடாது, உழைக்காது வாழ்ந்து வரும் பார்ப்பனர்கள் மதம், வேதம், சாஸ்திரம், புராணமாகியவைகளை கொண்டுவந்து குறுக்கே போட்டு, எங்களைத் தடைபடுத்தும்போது அவை எவையாயினும் மனித சமூக ஒற்றுமைக்கும் சமத்துவத்துக்கும் சுதந்தர வாழ்வுக்கும் கேடு செய்வதாக இருந்தால் அவற்றைக் கொளுத்தி ஒழிக்க வேண்டுமெனக் கூறுகிறோம்.

தீண்டாமையை மேல் ஜாதிக்காரர்கள் என்னும் பார்ப்பனர்கள் மதத்துடன் சேர்த்துக் கட்டிப் பிணைத்து இருப்பதாலேயே தான் நாங்கள், தீண்டாமை ஒழிய வேண்டுமென்றால் அந்த மதம் ஒழிந்துதான் ஆக வேண்டும் என்கிறோம். தீண்டாமையை அசைக்கும் போது அதோடு பிணைத்த மதமும் ஆடுகிறது. அப்போது, மதம், நரகம், மோட்சம் முதலிய பல கற்பனைகளை வெகு நாட்களாக ஊட்டி வந்த பாமர மக்களிடம் உடனே, பார்ப்பனர்கள் சென்று, "மதம் போச்சுது மதம் போச்சுது" என்று விஷமப் பிரசாரம் செய்து, எங்களை மதத்துரோகி என தூற்றிவிட அவர்களால் சுலபமாக முடிகிறது.

கடவுள்

கடவுளைப்பற்றிய தத்துவங்களையே எடுத்துக்கொண்டு பார்ப்போம். அதுவும் இப்படித்தான். அதாவது கடவுளைப்பற்றி விளக்க இதுவரை எத்தனையோ ஆத்ம ஞானிகள், சித்தர்கள், முத்தர்கள் என்போரும் நாயன்மார்கள், ஆழ்வார்கள் அவதாரங்கள், கடவுள்களால் அனுப்பப்பட்டவர்கள் என்பவர்கள் எவ்வளவோ அரும்பாடு பட்டிருக்கின்றனர். ஆனால் முடிந்ததா? முடிவு இதுதான் எனச் சொல்லப்பட்டதா? அல்லது இவர்களைப் பின்பற்றியவர்களுக்கு ஆவது புரிந்ததா? புரிய வைக்க முடிந்ததா?

"கடவுள் ஆதி இல்லாதது, அந்தமில்லாதது, உருவமில்லாதது, அது இல்லாதது, இது இல்லாதது, புரியப்பட்ட அறியப்பட்ட சங்கதி எதுவும் இல்லாதது" என அடுக்கிக்கொண்டே போய், அப்படிப்பட்ட ஒன்று இருப்பதாக அல்லது இருக்கும் என்பதாக அல்லது இருந்துதானே தீரவேண்டும் என்பதாக அல்லது இருக்கிறதாக எண்ணிக்கொண்டு தான் ஆகவேண்டும் என்பதாக சொல்லிவிடுகிறார்கள்.

இன்று இந்நாட்டினரால் மனித ஆத்மாவுக்கு மீறிய ஒரு ஆத்மா உடையவர் என்று கருதி மகாத்மா என்று சொல்லப்படுபவராகிய தோழர் காந்தியார் "சத்தியம் தான் கடவுள்" என்கிறார்.

சைவசமயிகள் "அன்பே சிவம்" "அன்புதான் கடவுள்" என்கின்றனர்.

ராமலிங்க ஸ்வாமிகள் என்று சொல்லப்பட்ட பெரியார் "அறிவுதான் கடவுள்" (அறிவான தெய்வமே) எனக்கூறினதுடனன்றி, ஜாதி, சமயம், மோட்சம், நரகம், மோக்ஷ நரகங்களைக் கொடுக்கும் கடவுள்கள் ஆகியவைகள் எல்லாம் வெறும் பித்தலாட்டங்கள் என பச்சையாகச் சொல்லி விட்டார். தோழர்களே! உங்களை - ஆஸ்திகர்களை நான் கேட்கிறேன் இவர்கள் எல்லாம் நாஸ்திகர்களா?

ஒரு மனிதன் கடவுள் உண்டா இல்லையா என்ற விஷயத்திலே கவலை செலுத்தாது அதை அறிவதற்கு மெனக்கெட்டு குழப்பமடையாது இருப்பதற்கு ஆகவே மனித சமூக வாழ்வுக்கு நன்மையும் அவசியமுமான காரியங்கள் குணங்கள் அவை எவையோ அவைகளைத்தான் கடவுள் எனப் பெரியார்கள் சொன்னார்கள். இதைப் பார்த்தாவது மனிதனுக்கு அறிவு வந்து உண்மையுணர்ந்து பேசாமல் இருக்க வேண்டாமா? என்கிறேன்.

ஒரு மனிதன் அறிவுடையவனாகி உண்மையுடையவனாகி மக்களிடம் அன்பு காட்டி மனம் வாக்கு காயங்களால் அவைகளைக் கொண்டு தொண்டு செய்து அவைகளின்படி நடப்பானேயானால் அவன் கடவுள் துரோகியாகக் கருதப்படுவானா? என இங்கு ஆஸ்திகர்கள் யாரிருப்பினும் சொல்லட்டுமே என்றுதான் கேட்கின்றேன். அன்பு அறிவு உண்மை இவை தவிர வேறு கடவுள் ஒன்று இருந்தாலும் கூட அக்கடவுள் தன்னை இல்லை என்று சொன்னதற்கும் தன்னை விழுந்து கும்பிடாததற்கும் அப்படிப்பட்டவனை தண்டிப்பாரா என்று கேட்கிறேன். உண்மையில் யாரும் அறிய முடியாத ஒரு கடவுள் இருந்தால் அவரை அறிந்து அவருக்கே பக்தி செய்து வணங்கி வந்தவனை விட கடவுளைப்பற்றி கவலைப்படாமல் கடவுளுக்கு பக்தி செய்யாமல் அன்பு அறிவு உண்மை ஆகியவைகளுடன் நடந்து வந்தவனுக்கே தான் கருணை காட்டுவார் என்று உறுதி கூறுவேன். இந்த உணர்ச்சியினாலேயே தான் நான் கடவுளைப் பற்றிய விவாதத்தில் இறங்கிக் காலங்கழிக்காமல் நான் மனித சமுதாயத்திற்கு என்னாலான தொண்டை நான் அறிவு, உண்மை, அன்பு ஆகியவைகளைக் கொண்டு செய்து வருகிறேன்.

நான் கூறின மேல் கண்ட தத்துவங்கள், மதத்தலைவர்கள், அதிலே நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் ஆகியவர்கள் வாக்கு ஆகும்.

மற்றும் சித்தர்களும், வேதாந்திகளும் உலகமும் தோற்றமும் எண்ணங்களும் மனிதனுட்பட எல்லாம் மாயை என்று சொல்லிவிட்டனர். ஆகவே ஒரு மனிதன் தன்னை நிஜ உரு என்று கருதி கடவுள் உண்டு என்று கண்டுபிடித்தாலும் முடிவு கொண்டாலும் அதுவும் மாய்கைதானே ஒழிய உண்மையாய் இருக்க இடமில்லையே!

மகா அறிவாளியான சங்கராச்சாரியார் அஹம்பிரம்மம் நானே கடவுள் என்று கூறினார். அதற்காக சைவர்கள் அவரைத் "தானே கடவுளெனும் பாதகத்தவர்" என்று தண்டிப்பதுமுண்டு.

இதைப்போன்றே சுமார் 10 வருஷங்களுக்கு முன்பு சைவர்களிடம் விவாதம் வந்த காலையில் சைவர்களுக்காக வக்காலத்து வாங்கிய சென்னை திரு.வி. கலியாணசுந்தர முதலியார் அவர்கள் கட்சியில் "இயற்கையே கடவுள்" எனக்கூறி விவாதத்தை முடித்துக்கொண்டார். அதுகண்ட சைவர்கள் அவர்களைச் சீறவே பிறகு அவர், "அழகே கடவுள்; அழகு என்றால் முருகு; தமிழர் தெய்வம் முருகன்; ஆதலால் கடவுள் என்றால் அழகுதான் வேறு கிடையாது" என்று சொல்லிவிட்டார். அதற்கேற்றாற்போல் அவர் அடிக்கடி "என் இயற்கை அன்னை என் இயற்கை கடவுள்" என்று பிரசங்கத்திலும் சொல்லுவார்.

இவை இப்படியிருக்க சிலர் உலக நடத்தையைப் பார்த்து அதற்கு விபரம் புரியாமல் "இதற்கு ஏதோ ஒரு சக்தி இருக்கவேண்டாமா" என்று கேட்கின்றனர். ஏதோ ஓர் சக்தி இருக்கட்டும் இருக்கவேண்டியவைகளை யெல்லாம் நாம் கண்டு விட்டோமா? இல்லாதவைகளையெல்லாம் உணர்ந்து முடிவு செய்துவிட்டோமா? அதைப்பற்றிய விவாதமேன் நமக்கு? என்று தான் நான் கேட்கிறேன்.

மேலும் "மனித சமுதாயம் ஒற்றுமையாக, ஒழுக்கத்துடன் சமத்துவத்துடன் வாழ சாந்தியாய் இருக்க ஏதாவது ஒருவிதமான கடவுள் உணர்ச்சி மனிதனுக்கு வேண்டாமா?" என்று கேட்கிறார்கள். வேண்டுமென்றே வைத்துக் கொள்வதானால் அப்படிப்பட்ட உணர்ச்சியானது மக்கள் சமூகத்தில் ஒழுக்கம், ஒற்றுமை, சமத்துவம் சாந்தி அளிக்கிறதா என்பதை முதலில் கவனிக்க வேண்டாமா? ஏனெனில், எந்த உணர்ச்சி காரணமாகவே, மனிதனின் வாழ்க்கையில் ஒழுக்கம் ஏற்படுமெனச் சொல்லப்படுகிறதோ வாழ்க்கையில் நீதி, அன்பு நிலவ மேற்படி உணர்ச்சி தூண்டுகோலாய் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறதோ அந்த கடவுள் உணர்ச்சிக்கும் அந்த உணர்ச்சி கொண்ட மனிதனுடைய நடத்தைக்கும் ஒருவித சம்பந்தமுமின்றிச் செய்து விட்டனர். மற்றும் நமது கடவுளைக் கண்ட பெரியார்கள் என்பவர்கள் உலகத்தில் கேடு, கூடா ஒழுக்கம், வஞ்சனை பொய் முதலியன செய்பவர்களை இந்த மாதிரியான ஒரு கடவுள் உணர்ச்சியை தங்களின் மேல்கண்ட காரியத்துக்கு உபயோகப்படுத்திக் கொள்ளும்படி செய்து விட்டார்கள். உதாரணமாக ஆயிரத்தில் பத்தாயிரத்தில் ஒருவரையாவது கடவுள் உணர்ச்சியின் அவசியத்திற்கேற்றபடி அவர்களது வாழ்க்கையிலே நீதி, நேர்மை, ஒற்றுமை, அன்பு நிலவும்படி நடப்பதை நாம் பார்க்கிறோமா? பெரும்பான்மையோருக்கு அவ்வுணர்ச்சி அப்படி பயன்பட்டிருந்தால், உலகிலே துன்பத்துக்கு வஞ்சனைக்கு இடமேது? எவ்வளவு அக்கிரமம் செய்தபோதிலும் பிரார்த்தனை, கடவுள் பெயர் உச்சரிப்பு, புண்ய ஸ்தல யாத்திரை, புண்ணிய ஸ்தல ஸ்பரிசம் செய்த மாத்திரத்தில் மன்னிப்பும் பாப விமோசனமும் கிடைக்கும் - ஏற்பட்டுவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு அதனால் மக்களுக்கு அக்ரமம் செய்யவே தைரியம் தருகிறதேயல்லாமல் யோக்கியனாக, அன்பனாக நடக்க கட்டாயப்படுத்துகிறதா? இன்று சிறையிலுள்ள 2 லக்ஷம் கைதிகளில் சம்சயவாதிகளோ, நாஸ்திகர்களோ, விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே இருப்பார்கள். மற்றையோர் யாவரும் கடவுள் உணர்ச்சியிலே ஒருவித சந்தேகமும் கொள்ளாத ஆஸ்திகர்களேயாகும். ஆகவே அவர்கள் சொல்லும் கடவுள் உணர்ச்சியை மனிதனுடைய நடத்தையுடன் ஒப்பிட்டுப் பார்த்து வரவு செலவு கணக்கு போட்டு லாப நஷ்டப்பட்டி இறக்கிப் பார்க்கும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த திருக்கூத்துகள் ஏன்?

"இந்து" மத ஆள்களின் கடவுள் உணர்ச்சியை சற்று கவனிப்போம். "இந்து" மதக்காரர்கள் இந்த கடவுள் உணர்ச்சியை எப்படி வெளிப்படுத்து கிறார்கள்! மத உணர்ச்சியை எவ்விதம் காட்டிக் கொள்ளுகிறார்கள்? என்று பாருங்கள். மக்களைக் காப்பாற்ற இருக்கும் கடவுளை இவர்கள் காப்பாற்ற முற்பட்டு அதற்காக ஒவ்வொரு கடவுளுக்கும் இரண்டு மூன்று இலட்சம் ரூ.கள் செலவில் கோயில்களும், ஒரு லட்சம் செலவில் கோபுரமும், கலசமும் வைத்து அரை லக்ஷத்தில் கும்பாபிஷேகங்கள் செய்து பூசைக்கும் திருவிழாக்களுக்குமாகப் பாடுபடும் மக்களின் கணக்கற்ற பணத்தைப் பாழாக்கி விடுகிறார்கள்.

மனிதனில் இலட்சக்கணக்கான பேர் வீடின்றி வாடி வதைபடுவது இவர்களுக்குத் தெரியாதா? இந்த மனிதர்களைக் கவனியாது இவர்களுக்கு வீடு வாசல் வேண்டாமா என்பதை கவனியாது கடவுள் ஆலயங்களின் திருப்பணி பேரால் எவ்வளவோ பணத்தை விரயம் செய்கிறார்கள். பாலின்றி வாடும் பச்சைக் குழந்தைகள் லட்சக்கணக்கில் இருக்க நெய் என்பதைக் கண்ணில் கண்டறியாத குடும்பங்கள் எவ்வளவோ லக்ஷம் இருக்க, பழனி, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் முதலிய இடங்களில் ஆயிரக்கணக்கான குடம் பாலையும் கொட்டி சாக்கடை போய்ச்சேரும்படி பாழாக்குவதும் ஆயிரக்கணக்கான டின் நெய்யை நெருப்பை எறித்தும் நெருப்பில் கொட்டியும் வீணாக்குவதும் சரியா? கடவுள் உணர்ச்சியை இப்படித்தான் காட்டுவதா? பாலும் நெய்யும் மக்களுக்கு உண்ண ஏற்பட்டதா? கல்லிலும், நெருப்பிலும் கொட்ட ஏற்பட்டதா? ஏ ஆஸ்திகர்களே! உங்களைத்தான் கேட்கின்றேன்.

இந்த முட்டாள்தனத்தையும், கொடுமையையும் ஒழிக்க இதுவரை என்ன செய்தீர்கள்? பச்சை வெண்ணெயை டின் டின்னாக கொண்டு போய் களிமண் மாதிரி வாரி வாரி நெருப்பில் எறிகிறதைப் பார்த்து ஆனந்தப் படுகிறாயே! கடவுளும் ஆனந்தப்படும் என்று எண்ணுகிறாயே!! ஏ ஆஸ்திகனே! நீ உன்னை மனிதன் என்று எண்ணிக்கொண்டுதான் இருக்கிறாய்.

இதுவா கடவுள் ஒழுக்கம்?

ஒழுக்கத்துக்காக மனிதனின் - நல் வாழ்க்கைக்கு ஆக கற்பிக்கப்பட்ட கடவுளை தாசி வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போகிறாயே. மற்றொருவன் பெண்ணை தூக்கிக்கொண்டு வருகிற உற்சவம் நடத்துகிறாயே, குறத்தியையும், துலுக்கச்சியையும் கூட்டி வந்ததாக அதற்கு ஒரு கோவிலும் கட்டி பொம்மை வைத்து விளையாடுகிறாயே இதுவா கடவுள் ஒழுக்கம்?

அஹிம்சையா? அன்பா?

அஹிம்சை, அன்பு, கருணை ஆகிய குணங்களைக் கொண்டது கடவுள் என்று சொல்லிவிட்டு கழுவேற்றுவதும் கழுத்தை வெட்டுவதும் வயிற்றை இழிப்பதும் இப்படிப்பட்ட கடவுள்கள் கைகளில் கத்தி ஈட்டி சூலாயுதம் வில் வேல் தண்டாயுதம் கொடுத்திருப்பது யோக்கியமா? இவற்றிற்கு வேலை கொடுப்பதும் உற்சவம் செய்வதுமான காரியத்தால் மனிதனுக்கு ஒழுக்கம் அஹிம்சை அன்பு ஏற்படுமா? ஏ ஆஸ்திகர்களே! சிந்தித்துப்பாருங்கள்.

கடவுளுக்கு செலவு

கடவுளுக்கு என்று ஒரு காசுதான் ஏன் செலவழிக்க வேண்டும்? ஏன் செங்கல்பட்டு மாகாண சுயமரியாதை மகாநாட்டில் கடவுளுக்கு ஒரு காசுகூட செலவழிக்கப்படாது என்று சகல ஹிந்து மத ஆஸ்திகர்களும் வந்திருந்து தீர்மானம் செய்தார்கள். அது சிறிதாவது கவனிக்கப்படுகிறதா? கடவுளுக்கு ஆக செலவழிக்கப்படும் பணம், காசு, செலவுகள் யார் வயிற்றை நிரப்புகிறது? பாடுபடாது வயிறு வளர்க்கும் பார்ப்பனர்களுக்கும் ரயில்காரனுக்கும்தான் பெரிதும் இப்பணம் போய்ச் சேருகிறது. இப்படிச் சேரும் பணம் வருஷம் பலகோடி என்பது உங்களுக்குத் தெரியாதா?

புதுப் பார்ப்பன தந்திரம்

இருக்கும் ஸ்தலங்கள் போதாதென்றும் இருக்கும் புண்ணிய ஸ்தலங்களும் தீர்த்தங்களும் போதாதென்றும் ஒரு புதிய ஸ்தலத்தை புண்ணிய ஸ்நான கரையை பார்ப்பனரும் ரயில்வேக்காரரும் ஒப்பந்தம் செய்து கொண்டு, பிரமாதமாக விளம்பரப்படுத்துகிறார்கள். அதாவது கோடிக்கரை என்ற இடத்து உப்புத் தண்ணீரில் ஒரு முழுக்கு போட்டுவிட்டால் எப்படிப்பட்ட பாபமும், முன்னோர் செய்த பாபமும், இனிமேல் செய்யும் பாபமும் போய்விடுமெனவும் அவ்வளவு மகிமை உடையது எனவும் "மித்திரன்" விளம்பரப்படுத்துகிறது. இதற்கு "மகோதய புண்ணிய கால ஸ்நானம்" எனப் பெயராம்.

ரயில்வேக்காரரும், பார்ப்பனரும் சேர்ந்து செய்யும் இச்சூழ்ச்சியில் எத்தனையோ ஆயிரக்கணக்கானவர்கள் சிக்கி அங்கு சென்று தங்கள் பணம், மானம், சுகாதாரம் ஆகியவற்றை பாழாக்கிக்கொண்டு, திரும்பி வரும்போது கூடவே காலராவையும் அழைத்துக்கொண்டுதான் வீடு திரும்பப் போகிறார்கள். இது என்ன நியாயம் என்று கேட்கிறேன். "கோடிக்கரை" சென்று குளிக்கவேண்டிய அவ்வளவு பாபம் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்கிறேன்.

காலை முதல் மாலை வரை பாடுபட்டு உழைத்து, பணத்தை முதலாளிக்கும், பார்ப்பானுக்கும் கொடுத்துவிட்டு, கையைத் தலையின்கீழ் வைத்துக்கொண்டு படுக்கிற நீங்கள் கோடிக்கரை செல்ல வேண்டிய அவ்வளவு பாபம் நீங்கள் எப்படிச் செய்தீர்கள்? தொழிலாளியின் வாழ்வே இதனால் பாழாகிறது. முதலாளியுடன் போட்டியிட்டு, தன் நிலைமையை உயர்த்திக் கொள்ள வேண்டிய சக்தியை இழந்து, இதனால் பணம், நேரம், புத்தி ஆகியவை இழந்து அவன் தவிக்கிறான். இதற்குத்தானே இந்த கடவுள் திருவிழாவும் புண்ணிய ஸ்நானங்களும் உதவுகின்றன.

விஞ்ஞான வளர்ச்சியே விமோசனம் தரும்

இந்துமத ஊழல்களை திருத்தப்பாடு செய்த புதுமதக் கொள்கைகளே இன்று கிறிஸ்து மார்க்கம், முஸ்லிம் மார்க்கம் முதலிய பல புதிய மார்க்கங்களாக தோன்றலாயின.

இந்து மதகொடுமை தாங்கமாட்டாமலேதான் பல்கோடிப் பேர்கள் முஸ்லிம்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் ஆனார்கள். இன்றும் இந்துக்கள் தான் பிற மதம் புகுகிறார்கள் என்றாலும் முஸ்லிம்மார்க்கம் தவிர வேறு எந்த மார்க்கத்துக்கு மனிதன் போனாலும் அவன் பின்னாலேயே ஜாதிச் சனியன் தொடர்ந்து கொண்டே போகிறது. உதாரணமாக ஒருவர் கிறிஸ்துவனான பிறகும், பார்ப்பனக் கிறிஸ்துவன், பள்ளக் கிறிஸ்துவன், பறை கிறிஸ்துவன், நாயுடு கிறிஸ்துவன், ஆசாரி கிறிஸ்துவன், நாடார் கிறிஸ்துவன் என்கின்ற பாகுபாடும் சடங்கு ஆச்சார அனுஷ்டானமும் எந்தக் கிறிஸ்துவனையும் விட்டுத் தொலைவதில்லை. பிரார்த்தனை ஸ்தலங்களிலும் இந்து கோவில்கள் போல் பேதங்கள் பல இருந்து வருகின்றன.

ஆனால் இந்த இழிவு ஆபாசம் முஸ்லீம் மார்க்கத்திலே காண முடியவில்லை. ஒரு தீண்டாதவன், முஸ்லீம் மதத்தை தழுவிவிட்டால், உடனே தீண்டாமை பறந்து போகிறது. அவன், அந்த சமூகத்தில் மனித சுதந்தரத்தை, சமத்துவத்தைப் பெறுகிறான். அங்கு பற முஸ்லீம் என்று யாரேனும் சொல்லி, தங்கள் பற்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது. ஏன்? அவர்கள் தங்கள் மதத்தினிடை சமத்துவம் நிலவ வேண்டுமென்ற உணர்ச்சியை அவ்வளவு அதிகமாகக் கொண்டுள்ளார்கள். அதனாலேயே தீண்டாமையை விலக்கிக்கொள்ள வேண்டுமென்கிறவர்களை முஸ்லிம் மார்க்கத்தை தஞ்சமடையும்படி இந்த 10 வருஷமாய் சொல்லிவருகிறேன். இந்த மாபெரும் சனியனான ஜாதிமத பேத தொல்லைகள் மனித சமூகத்தை விட்டுத் தொலைய வேண்டுமானால் மனிதனுக்கு விஞ்ஞான ஞானமும் நாட்டில் விஞ்ஞான வளர்ச்சியும் தேவை. தொழில் காரணமாகத்தான் தொழில்கள் ஆதாரமாகத்தான் ஜாதிகளோ ஜாதிக்கொடுமைகளோ ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தோட்டி என ஒரு ஜாதியும் அவனுக்கு இழிவும் தீண்டாமையும் எப்படி ஏற்பட்டது? மலம் எடுக்கும் தொழிலை நாற்றமுள்ள தொழிலை அவன் ஏற்றுக்கொண்டதால்தான், இப்படியே கஷ்டமானதும் இழிவானதுமான வேலை செய்பவர்கள் எல்லாம் கீழ் ஜாதியாகவும், சுகமாகவும் மேன்மையாகவும் உள்ள வேலை செய்கிறவர்கள் மேல் ஜாதியாகவும் ஒரு வேலையும் செய்யாமல் ஊரார் உழைப்பில் வயிறு வளர்த்துக்கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு வஞ்சித்துத் திரிகிறவர்கள் மகாமகா மேல் ஜாதியாகவும் ஏற்பட்டதற்குக் காரணம் விஞ்ஞான ஞானமில்லாமையே. மேனாட்டிலே, இம்மாதிரியான தொல்லை அநேகமாக தீர்ந்து விட்டது.

விஞ்ஞான வளர்ச்சி காரணமாக, சமத்துவம் அந்த சமூகத்திலே உண்டாக மார்க்கம் ஏற்பட்டுவிட்டது. நாம் என்ன கூறினாலும், இனிமேல் நமது பின் சந்ததியார்கள் பழய தொழில்முறை ஜாதி முறை திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது உறுதி. உலகம் இன்று புதிய பாடத்தைக் கற்பித்துக்கொண்டு வருகிறது. விஞ்ஞான வளர்ச்சி மூலமாகவே விமோசனம் ஏற்படும் என்ற உறுதி எனக்கு ஏற்பட்டிருக்கிறது. பழமையான சகல முறைகளிலும் மாறி சகலதுறைகளிலும் புதுமை தோன்றியிருக்கிறது. வெகு சீக்கிரத்தில் புதிய உலகம் காணப்போகிறோம்.

மக்கள் பிறப்பது கூட இனி அருமையாகத்தான் போய்விடும். அதுபோலவே சாவும் இனி குறைந்து விடும். மனிதன் வெகு வெகு சுலபமாக நூறு ஆண்டு வாழமுடியும்; யாரும் சராசரி ஒன்று இரண்டு பிள்ளைகளுக்குமேல் பெற மாட்டார்கள். ஆண் பெண் புணர்ச்சிக்கும் பிள்ளைப் பேறுக்கும் சம்மந்தமில்லாமலே போய்விடும். வேலை செய்கிற குதிரைகள் வேறு, குட்டி போடுகிற போடச் செய்கிற குதிரை வேறு என்கிற மாதிரி மனித சமூகத்தில் இருக்கும் பிள்ளை பெறும் கொல்லை வளர்க்கும் தொல்லை அதற்கு சொத்து, சுகம், தேடும் தொல்லை ஒழிந்து போகும் என்கின்ற நம்பிக்கை எனக்கு உண்டு. மனிதன் அறிவு பெற்றதற்கு காரணம் சாமி விளையாட்டும் பிள்ளைகள் உண்டாக்கும் விவசாயப் பண்ணையும்தானா?

மனித அறிவின் எல்லையைக் காண வேண்டாமா? செல்வம் தரித்திரம், சுகம் - கஷ்டம், கவலை-தொல்லை இதுதானா மனிதனின் கதி மோக்ஷம்?

பெண்கள்

பெண்களை ஆண்கள் நடத்துகிறமாதிரியும், படுத்துகிறபாடும்போல் உலகத்தில் வேறு எந்த ஜீவனாவது செய்கிறதா? பெண்களிடம் சக்தி சொரூபத்தையும், தெய்வத்தன்மையையும், காதல் களஞ்சியத்தையும், தாய்மையையும், அன்பையும் கண்ட "பெரியார்கள்" என்னும் மிருக சிகாமணிகள் பெண்களைப் பற்றி எப்படி எழுதி வைத்திருக்கிறார்கள்; எப்படி நடத்தும்படி எழுதி வைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் உலகில் சுயமரியாதை உள்ள பெண்கள் குழந்தைகள் பெறவே மாட்டார்கள். அப்படி பெற நேர்ந்தாலும் பிறந்தது ஆண் குழந்தை என்று கண்டால் கழுத்தை திருகிவிடுவார்கள். இது விஷயத்தில் மனிதன் திருத்தப்பட முடியாவிட்டால் எந்த மனிதனும் மனிதத் தன்மைக்கு அருகதையற்றவன் என்றே சொல்லுவேன்.

பெண்ணுக்கு சொத்து கூடாதாம், காதல் சுதந்தரம் கூடாதாம் அப்படியானால் மனிதன் தன் தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளும் ரப்பர் பொம்மையா? அடிமை உருவா? அது என்று கேட்கின்றேன்.

விதவை

பெண்களில் விதவைகள் என்று ஒரு நிலைமை ஏன் இருக்க வேண்டும்? கல்யாணம் செய்து கொண்டதால்தானே இந்தக் கொடுமை? கல்யாணம் செய்து கொள்ளாவிட்டால் பெண் எப்படி விதவையாக முடியும்? கல்யாணம் செய்து கொள்ளாமல் இருப்பதில் பெண்களுக்கு இரண்டுவித லாபம் இருக்கிறது. குழந்தை பிறக்காது என்பதுடன் விதவையும் ஆக முடியாது. அடிமை நிலையும் சொத்து வைத்திருக்க உரிமையற்ற நிலையும் இருக்க முடியாது. உலகில் உள்ள சகல கொடுமைகளிலும் விதவைக் கொடுமையே அதிகமானது. மற்றும் விவசாரம் பெருகுவதற்கு விதவைத்தன்மையே காரணம். ஒவ்வொரு பெற்றோர்களும் பெரிதும் தங்கள் குழந்தை சகோதரி விதவைகளை "இலை மறைவு காய்மறைவாய்" கலவி உணர்ச்சியை தீர்த்துக்கொள்ள சம்மதிக்கிறார்களே ஒழிய ஒரு புருஷனுடன் சுதந்தரத்துடன் வாழ இடம் கொடுப்பதில்லை. இது தானா கடவுள், மதத்தன்மை ஏற்பட்ட பலன் என்று கேட்கின்றேன்.

--------------------- 23.01.1938 இல் ஆய்க்கவுண்டன் பாளையத்தில் நடைபெற்ற மாநாட்டில் தந்தைபெரியார் அவர்கள் மதம், கடவுள் எனும் தலைப்பில் ஆற்றிய உரை. ”குடி அரசு” - 30.01.1938

0 comments: