இன்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது 121ஆம் ஆண்டு பிறந்த நாள்!
திராவிடர் இயக்கத்தின் இலக்கியங்களுக்கு அவர் முன்னோடியாகத் திகழ்ந்தவர்.
புதுவையின் வைதீக கவிஞர் கனக சுப்புரத்தினம் - தந்தை பெரியார் என்ற ஞானசூரியனின் ஒளிக்கதிர்களால் ஈர்க்கப்பட்டு, சுயமரியாதை கொள் தோழா என்று முழக்கமிட்டு மாறி, புரட்சிக் கவிஞராக பூத்தார் - கனிந்தார்!
பார்ப்பான்பால் படியாதீர்; சொற்குக்கீழ் படியாதீர்
ஆர்ப்பான் நம் நன்மையிலே ஆர்வம்மிக உள்ளவன் போல் நம்ப வேண்டாம் என்று எச்சரிக்கை மணியோசை செய்த மாபெரும் இனக் காவலர் அவர்!
ஜாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே!
என்று ஆர்ப்பரித்து ஆவேசங் கொண்ட அடலேறு அவர்!
கல்வி நல்கா கசடர்க்குத் தூக்குமரம்
காண விரும்பிய கல்விப் பெருவள்ளல்!
பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டில்
மண்ணடிமை தீருவது முயற்கொம்பே
என்று கூறிய, மானிடத்தின் சரி பகுதியாகவே பெண் மக்களுக்காக வாதாடிய சமுதாய சமூகநீதி வழக்கறிஞர் அவர்!
தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதல் அமைச்சாய் வருதல் வேண்டும் என்று தமிழர் - திராவிடர்க்கு ஆணை பிறப்பித்த அரிமா அக்கவிஞர்!
சமயம் என்ற சூளையிலே தமிழ் நட்டால் முளையாது என்று கூறி மதச் சார்பின்மைக்காக வாதாடிய மனிதாபிமானக் கவிஞர் அவர்!
காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்; அவன் காணத் தகுந்தது வறுமையோ, பூணத் தகுந்தது பொறுமையோ? எனக் குமுறிக் கொதித்த தொழிலாளர்களின் தோழன் புரட்சிக் கவிஞர்!
ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி அவள் அணிந்திராத அணியாவார் - அவள் அறிந்திராத அறிவாவார் பெரியார் என்று திராவிடர்தம் மான மீட்பர் தந்தை பெரியார்பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே படம் பிடித்துக் காட்டியவர் பாவேந்தர் என்ற புரட்சிக் கவிஞர்!
அவர் என்றும் வாழ்கிறவர்! காரணம், அவரே குறிப்பிட்டபடி - தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை!
வாழ்க! வாழ்கவே!!
----------------- கி. வீரமணி, தலைவர், திராவிடர் கழகம் -29-4-2011
0 comments:
Post a Comment