Search This Blog

31.8.10

கி.வீரமணி அவர்கள் பார்வையில் கலைவாணர்

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது கிராமிய மக்கள் மத்தியிலும் வெகுகாலமாகப் புழங்கும் ஓர் அற்புதமான அனுபவப் பழமொழியாகும்.

மனிதர்களிடம் உள்ள நகைச்சுவை உணர்வு (Sense of Humour) என்பது அவர்களை நீண்ட காலம் வாழ வைக்கும்; அவர்களை மட்டுமல்ல, அவர்களுடன் பழகுபவர்களிடமும்கூட இதன் தாக்கம் ஏற்பட்டு அவர்களது வாழ்வும் நோயற்ற வாழ்வாக அமையும்.

கலைவாணர் நகைச்சுவை அரசர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் கலைத்துறையில் நாடகம், சினிமா போன்ற துறைகளில் எளிதில் காணமுடியாத கொள்கை வைரமாகும்!

அவர் பச்சை அட்டை குடிஅரசு ஏட்டினை வாராவாரம் படித்தே, பல்வேறு பகுத்தறிவு சிந்தனைகளைப் பெருக்கிக்கொண்ட குடிஅரசின் விசித்திர மாணவர் - மாமனிதர்!

அவரது நகைச்சுவைக் காட்சிகள் என்பது வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் இராது; மாறாக, வாழ்வியலை மற்றவர்களுக்கு ஒரு சில நொடிகளில் பதிய வைக்கும் ஆற்றலை உள்ளடக்கியவையாகும்!

அவர் மறைந்து சுமார் 50 ஆண்டுகளுக்குமேல் ஆன போதிலும்கூட, கலையுலகில் அவர் சாகா சரித்திரமாக வாழ்ந்து வருகிறார்கள்!

அவரது வாழ்க்கையில் பல்வேறு பழிகளுக்கு ஆளாகி, செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனை என்பதை உள்ளபடி ஏற்றும்கூட, சிறையேகிய பின்னரும் உறுதி குலையாது, உண்மையை நிலைநாட்டி விடுதலையாகி வந்தும் தனது தொண்டறத்தைத் தொடர்ந்தவர்!

தனது பொருளையெல்லாம் தாராளமாக வாரி வழங்கிய ஒப்புவமை இல்லாத வள்ளல் அவர்!

எந்தெந்த வள்ளல்களைப்பற்றியெல்லாம் படிக்கிறோம்; ஆனால், நம் கண்ணெதிரே வாழ்ந்த கலைவாணர் அவர்கள் தமது பொருள், செல்வத்தை ஊருணி நீராக மக்களுக்குத் தந்த மகத்தான உண்மை வள்ளல் ஆவார்கள்!

மனிதர்கள் தங்களைப்பற்றிக் கவலைப்படுவதைவிட, பிறரை அழிக்கவே சிந்திக்கின்றனர்; குரூர மனப்பான்மையாளர்களாகவும் அல்லது பொறாமையால் நெளிபவர்களாகவும்தான் வாழுகிறார்கள்; அது மிகவும் மோசமானது என்பதை அவர் நல்லதம்பி திரைப்படத்தில் (அறிஞர் அண்ணா அவர்கள் எழுதி வெளிவந்த திரைப்படம் சுமார் 60 ஆண்டுகளுக்குமுன்பு) ஒரு காட்சி:

அவரது உறவுக்காரராக அண்ணன் என்று அழைக்கும் திரு. சி.எஸ். பாண்டியன் (குழு நடிகர்) வந்து இவரிடத்தில், அண்ணே, அடுத்த தெரு பரமசிவஞ் செட்டியார் கதையைக் கேட்டீர்களா? அவருக்கு ஏகப்பட்ட கடனாம்! ரொம்ப கஷ்டமாம்! இனி தேறவே மாட்டாராம் என்றெல்லாம் ரொம்ப உற்சாகமாகப் பேசுவார்!

இவரும் அவரை தற்காலிகமாக உசுப்பிவிடுவதுபோல, ஓகோ அப்படியா? அப்ப, பரமசிவம் செட்டியார் சீக்கிரத்தில் குளோஸ்! அப்படித்தானே...?

ஆமாம் அண்ணே, அதிலென்ன சந்தேகம்?

அப்படி, சரி, சரி... உன் பையிலே என்னென்ன வச்சுருக்கே, தம்பி?

அதுவா? கொஞ்சம் காசு, சில நோட்டு, இப்படி பர்சிலே இருக்கு.

ஹூகும்... சரியா நோட்டு எவ்வளவு, சில்லறை எவ்வளவு என்றெல்லாம் விவரமாக சரியா சொல்லுப்பா...

அதெப்படிண்ணே உடனே சரியா சொல்ல முடியும்? எண்ணி, பிறகு சொல்றேன்...

...ஏம்பா, உன் பையிலே இருக்கிறது எவ்வளவுங்கிற விவரம்பற்றி உனக்குக் கவலை இல்லை; பக்கத்துத் தெரு பரமசிவம் செட்டியார் கதையைப்பற்றிப் பேசறீயே, உன் பையை முதலில் நீ எண்ணிப் பார்க்கவில்லை. இப்படி அக்கப்போர் எல்லாம் தேவையா? என்றவுடன்,

அவருக்குப் பொறி தட்டுகிறது. உடனே மன்னிப்புக் கேட்டு இனிமேல் ஊர் வம்பு, வெட்டிப் பேச்சு பேசமாட்டேன் என்று இவரிடம் கூறிவிட்டுச் செல்வார்!

ஒரே காட்சியில் எவ்வளவு பெரிய தத்துவம்! எவ்வளவு எளிதில் எல்லோருக்கும் வாழ்வியல் பாடமாகப் போதித்தது.

கலைவாணர் என்.எஸ்.கேயை தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும், கலைஞரும், எம்.ஜி.ஆரும், திராவிடர் இயக்கமும் ஏன் இவ்வளவு சிறப்பாக நேசித்தது என்பது புரிகிறதா?

இளைய தலைமுறைகூட அவருடைய பழைய நகைச்சுவை துணுக்குகளை இன்றும் சுவைக்கிறதே தலைமுறை இடைவெளி தாண்டிய மனிதாபிமானி அல்லவா அவர், அதனால்தான்!

அவருடைய நினைவு என்றும் நீங்கா நினைவாகும்!

வாழ்க கலைவாணர்! வளர்க அவர்தம் தொண்டறம்!!

---------------- கி.வீரமணி அவர்கள் எழுதி வரும் வாழ்வியல் சிந்தனைகளிலிருந்து - “விடுதலை” 31-8-2010

2 comments:

ஒசை said...

பகுத்தறிவாளர்கள் கொலை வழக்குல சிக்கினா, அது ஜோடனையா? பலே.. பலே..
நாளைக்கு பார்ப்பானும் இப்படியே சொல்லி தப்பிப்பான்.

Thamizhan said...

லட்சுமி காந்தன் கொலை வழக்கு மிகவும் பிரபலமான் தமிழ் நடிகர்கள்மேல் ஜோடிக்கப்பட்ட வழக்கு என்பதைப் பிட்டு வைத்து அவர்களின் விடுதலைக்குப் போராடியவர் மிகவும் நேர்மையும் கண்டிப்புமுள்ள வழக்கறிஞர் எதிராஜ் (எதிராஜ் கல்லூரி நிறுவனர்)அவர்கள்.தந்தை பெரியார் அவர்களே நேரில் சென்று அவரைப் பார்த்து எடுத்துச்சொல்லி வழக்காட அழைத்தார்.