Search This Blog

9.8.10

பல மொழிகளில் பெரியார் திரைப்படம்!தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளில் எல்லாம் திரை யிடப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, வெகு மக்களால் மிகவும் பாராட்டப்பட்ட லிபர்ட்டி கிரியேஷன்ஸின் தயாரிப்பில் வெளிவந்த பெரியார் திரைப்படம் வரும் 9 ஆம் தேதியன்று தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு, ஆந்திர மாநிலம் முழுவதும் 75 மய்யங்களில் திரையிடப்படுகிறது என்கிற சேதி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், பெரி யாரியல்வாதிகள், பகுத்தறிவாளர்கள், மனிதநேயர்கள் மத்தியில் கட்டுக்கடங்கா மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

தொடர்ந்து இந்தி, மலையாள மொழிகளிலும் வெளிவர டப்பிங் பணிகளும் நடந்துவருகின்றன என்கிற தகவல் நமது மகிழ்ச்சியைப் பல மடங்கு அதிகரிக்கச் செய்கிறது.

இந்தியத் துணைக் கண்டத்தில் எத்தனையோ சமூக சீர்திருத்தவாதிகள் தோன்றியிருந்தாலும், பாடுபட்டு இருந்தாலும் சீர்திருத்தத்தையும் தாண்டி, புரட்சிப் பூகம்பத்தைத் தூக்கிப் பிடித்து, பிரச்சினை களின் மூல பலம் மூல வேர் வரை சென்று, பேதங் களின் எல்லா வடிவங்களையும் நிர்மூலப்படுத்திய பாங்கு தந்தை பெரியார் என்ற மாபெரும் யுகப் புரட்சியாளருக்கே உண்டு.

தனி மனிதராகப் புறப்பட்டு, பட்டிதொட்டிகளில் எல்லாம் சுற்றித் திரிந்து பிரச்சாரம்! பிரச்சாரம்!! என்கிற புயலைக் கிளப்பி, அடிமட்ட மக்களிடத்திலிருந்து நடுத்தர, மேல்தட்டு மக்கள் வரை உள்ள அத்தனைப் பகுதியினரையும் கலக்கிய கருத்து மகா சமுத்திரம் தந்தை பெரியார்.

அதுவரை எவை எல்லாம் எம்மைக் காப்பாற்றும் என்று கருதிக் கொண்டு இருந்தார்களோ, நம்பிக் கொண்டு இருந்தார்களோ அவையெல்லாம் பொய்யில் புழுத்த புளுகு மூட்டைகள் அவற்றை நம்பாதே என்று ஆணித்தரமாக எடுத்துரைத்து நாட்டு மக்களைப் புதிய தடத்திற்கு நகர்த்திய நாயகர் அவர்.

அவர் கொடுத்த சுயமரியாதைக் குரல் இடுப்பில் இருந்த துண்டை தோளுக்குக் கொண்டு வந்து கொடுத்தது. அவர் கொடுத்த திராவிடம் என்ற இனக் குறியீடு ஆண்டாண்டுகாலமாக அடக்குமுறை ஆயுதத்தை ஆதிக்கக் கோட்டையைத் தம் சுண்டு விரலில் வைத்திருந்த ஆரியத்தை அதன் இருப்பிடங்களில் இருந்து இடுப்பு எலும்பு முறிய கீழே உருட்டிவிட்டது.

மக்கள் தொகையில் சரி பகுதியினரான பெண்களை காமப் பொருளாக அடுப்பூதும் கருவியாக கருத்துகளைக் கூறும் தகுதியற்ற தக்கைகளாக அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டு இருந்த மனுதர்மச் சமூக அமைப்பின் அடிவயிற்றில் ஆயிரம் ஆயிரம் சூடு போட்டு பெண்ணே எழு! நீயும் மானுடப் பிறவியின் சரிப் பகுதி கூறுதான்! என்று எழுச்சி முரசம் கொட்டி எழுந்திடச் செய்த எழுஞாயிற்றின் மறுபெயர்தான் தந்தை பெரியார்.

பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பித்து சுடு காட்டிலும்கூட அதனைச் சிந்தாமல், சிதறாமல் காப் பாற்றி வந்த வருணாசிரமத்தின் மூல ஊற்றுகளை யெல்லாம் பொசுக்கி, சமத்துவ, சமதர்ம உணர்வைச் சமைத்த சரித்திர நாயகர்தான் தந்தை பெரியார்.

மனிதநேயம் அவர் பார்வைக்கான பொருள். ஆனால், அந்த மகத்தான மாமனிதரை தங்கள் கைகளில் இருந்த ஊடகங்களால் உருமாற்றிக் காட்டிய காரியத்தில் ஆரியமும், அதற்குத் துணை போகும் விபீடணத் தொங்கு சதைகளும் ஓயாமல் ஈடுபட்டன.

பிரச்சாரம், போராட்டம் எனும் இரு அணுகுமுறைகளால் மக்களைச் சந்தித்துச் சந்தித்து சங்கநாதம் செய்தார். பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட திராவிடர் கழகமும், அவர்களால் வெளியிடப்பட்ட விடுதலையும், வெளியீடுகளும் ஒரு பக்கம்; அதனையும் தாண்டி காலத்தின் தேவையைக் கருதி திரைப்படத்தின்மூலம் தந்தை பெரியார் அவர்களைக் குக்கிராமம் வரை கொண்டு செல்லவேண்டும் என்ற கருத்துருவை உருவாக்கியவர் கருஞ்சட்டை இயக்கத்தின் தன்னிகரற்ற தலைவர் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்.

அவர்களின் உந்துதலால் உருவாக்கப்பட்டதுதான் லிபர்ட்டி கிரியேஷன்ஸ் என்ற அமைப்பு.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் தந்தை பெரியார் அவர்களின் தன்மானச் சீடர் மானமிகு கலைஞர் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சராக இருந்த நிலையில், அரசு சார்பில் செய்த நிதி உதவி, தமிழ்நாட்டு மக்கள் நீட்டிய உதவிக்கரங்கள் இவற்றின் காரணமாக பெரியார் திரைப்படம் வெற்றிப் படமாக கொள்கைப் படமாக, ஊரெங்கும் திரையிடப்பட்டது.

அதன் அடுத்தகட்டமாக மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளிவருவது என்பது மக்கள் மத்தியில் பெரும் மாற்றம் கொண்டு வருவதற்கான பெரிய முயற்சியாகும்.

இதற்குக் காரணமான அனைத்துத் தரப்பினரையும் பாராட்டி, நன்றி கூறி நமது மகிழ்ச்சியின் பேரலை களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!

--------------------- ”விடுதலை” தலையங்கம் 6-8-2010

0 comments: