Search This Blog

30.8.10

பெரியாரும் - கலைவாணரும்


கலைவாணர்

சிரிப்பும், சிந்தனையும் மனிதனுக்கு அழகு என்பதை கலை வடிவம் மூலம் மக்களுக்கு அன்றாடம் பாடம் நடத்திய நகைச்சுவை மன்னன் கலை வாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1957).

தந்தை பெரியாரால் உச்சி மோந்து போற்றப்பட்ட, பாராட்டப்பட்ட கலையுலகக் கனிகள் இருவர் உண்டென்றால், அவர்கள் நடிகவேள் எம்.ஆர். இராதாவும், என்.எஸ்.கே. அவர்களுமேயாவார்கள்.

இனி என்.எஸ். கிருஷ் ணன் செத்தாலும் சரி, அவர் பணம் காசெல்லாம் நழுவி அன்னக்காவடி கிருஷ்ணன் ஆனாலும் சரி, நாடகப் புரட்சி உலகைப்பற்றி சரித்திரம் எழுதப்பட்டால், அச்சரித்திரத்தின் அட்டைப் பக்கத்தில் கிருஷ்ணன் படம் போடாவிட்டால், அச்சரித் திரமே தீண்டப்படாததாக ஆகி விடும் (குடிஅரசு, 11.11.1944) என்று தந்தை பெரியார் எழுதி னார் என்றால், இதைவிட கலை வாணரின் பெருமைக்கும், தொண்டுக்கும் கட்டளைக்கல் வேறு ஒன்றும் இருக்க முடியுமா?

கலைவாணர்பற்றி தந்தை பெரியார் கூறினார்; சரி, தந்தை பெரியார்பற்றி கலைவாணர் என்ன கூறினார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டாமா?

நம் நாட்டைப் பொறுத்த வரையில் செயற்கரிய செய்த பெரியவர்கள் பலர். அவர்களின் வரிசையிலே இடம்பெறத்தக்க ஒரு பெரியார் நமது தலை முறையில் வாழ்ந்து கொண் டிருப்பது குறித்து நாம் பெருமை கொள்ளலாம்.

சிந்திப்பதே பாவம் என்று எளியோரை வலியோர் அர்த்தமில்லாமல் வேத, புராண, இதிகாசங்கள் மூலமாக அடக்கி வருகின்றனர் என்று கருதப்படும் சூழ்ச்சியை ரகசியமாகவோ, தந்திரமாகவோ அல்லாமல் வெளிப்படையாக எதிர்க்கும் யாவரும் சிந்திக்கலாம் என்கிற புதிய பொது நிலையை உண்டு பண்ணி வைத்த ஒரே ஒரு பெரியார் நமது ஈ.வெ.ரா. அவர்கள்தான்.

பெரியாரை வாழ்த்தாத தமிழன் இருக்கமாட்டான். பெரியாரால் வாழ்த்துப் பெறாத தமிழனும் இருக்க முடியாது.

தமிழகம் பெற்றிருக்கும் பொதுச் செல்வங்களில் அவரும் ஒருவர் பூப்போன்ற நெஞ்ச முள்ளார் புகழுக்காகத் தம் போக்கை மாற்றிக் கொள்ள மாட்டார். அவருக்காக வேண் டுமானால் புகழ் தனது போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும். புனிதமான மனிதர். துணிவு என்னும் மூன்றெழுத்து முத் தமிழ்ப் பண்பை மனித உருவில் காணவேண்டுமாயின் அந்த உருவம் ஈ.வெ.ரா.தான். காரணம், வேறு எதுவுமில்லை, அவரது உண்மையில், உயர்ந்த பண்பில், ஒழுக்கத்தில் அவ ருக்கு அவ்வளவு நம்பிக்கை.

ராஜதந்திரிகளையும் கவரும் அளவுக்குப் பொல்லாத அரசியல் மேதை. புரிய முடியாத பெரிய மூளை. பொறுமைமிகும் தலைவர். சுருங்கக் கூற வேண் டுமாயின், தமிழ் இனத்தின் மெய் யான தந்தை. இன்று அன்னாரது பிறந்த தினவிழாவைப் பெரு மிதத்துடன் கொண்டாடுகிறோம்.

வாழ்க பெரியார். ஏனெனில், தமிழனும், அறிவும் இன்னும் எவ்வளவோ வளரவேண்டியி ருக்கிறது.

(விடுதலை, 17.9.1959).

இவ்வளவு பெரிய கலை உலக மேதை 50 வயதுவரை கூட (49) வாழாமல் மறைந்தது தமிழினத்துக்கு மாபெரும் இழப்பாகும்.

நடிகவேளும், கலைவாணரும் இன்னொருவருக்கு ஒப்பிடப்பட முடியாத கலையுலகச் சிகரங்கள்!

வாழ்க கலைவாணர்!

------------------------மயிலாடன் அவர்கள் 30-8-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

குறிப்பு: படிக்கப்பட வேண்டிய நூல்: பேராசிரியர் அன்புக்கொடி நல்லதம்பி (கலைவாணரின் மருமகள்) எழுதிய கலை வாணர் சிந்தனைத் துளிகள்.

2 comments:

புல்லாங்குழல் said...

கலைவாணரின் சிந்திக்க தூண்டும் நகைசுவையும்,பெரியாரின் சமூக உயர்வுக்கான அர்பணமும் யார் தான் மறக்க இயலும். பொருத்தமான நேரத்தில் அருமையான பதிவை இணைத்திருக்கின்றீர்கள் ஓவியா!

ஒசை said...

N.S.K ஆக இருந்தால் என்ன... M.R.R ஆக இருந்தால் என்ன... கட்டிய மனைவிக்கு துரோகம் பண்ணிட்டு, எல்லாம் ரெண்டாவது கல்யாணம் பண்ணிகிட்டவங்க. இது போக "குடி"மகன்களாக வாழ்ந்தவர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கமில்லாதவர்கள், எது பற்றியும் பேச, முக்கியமா பகுத்தறிவு பத்தி பேச தகுதி இல்லாதவர்கள்.