Search This Blog

30.8.10

இராஜாசி வாக்கும் - பெரியார் நோக்கும்


சாமி சண்டை

வைதீகரான மறைந்த ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் ஒருமுறை சொன்னார்: நம் நாட்டில் மற்றவர்கள் சண்டையைக் காட்டிலும் பக்தர்களின் சண்டையே அதிகம். என் தெய்வம் பெரிதா? உன் தெய்வம் பெரிதா? என்ற சண்டைதான் அதிகம் என்றார். (சென்னை தமிழிசைச் சங்கக் கட்டடத் திறப்பு விழாவில், 15.4.1953).

அவர் வாய்க்குச் சர்க்கரையைத்தான் போடவேண்டும் என்பதற்குச் சாட்சியமாக நாட்டில் அன்றாடம் ஒரே மதத்துக்குள் சண்டை சாமி நம்பிக்கையின் அடிப்படை யில் சண்டைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

சாமி ஊர்வலம் என்கிறபோது தாழ்த்தப்பட்டோர் வீதிக்குச் செல்லுவதா செல்லக்கூடாதா என்பதில் சண்டை; கோயிலில் பரிவட்டம் யாருக்கு முதலில் சூட்டுவது என்பதில் சண்டை; தேரை இழுப்பதில் தாழ்த்தப்பட்டோர் பங்குகொள்ளலாமா கூடாதா என்பதில் சண்டை; கோயிலில் தேவாரம் ஓதலாமா, ஓதக்கூடாதா என்பதில் சண்டை; யானைக்கு வடகலை நாமம் போடுவதா தென்கலை நாமம் போடுவதா என்பதில் சண்டை; தேரை எந்த மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் ஓட்டுவது என்பதில் துண்டறிக்கை சுவரொட்டி அச்சிட்டுப் பொதுமக்கள் மத்தியிலே குழப்புவதுவரை பெரிய சச்சரவுகள் (திருவாரூர்) இப்படி பக்தர்களுக்குள் சண்டைகள் நடைபெற்று வருவது வழமையாகிவிட்டது.

தெருச்சண்டை, அடிதடி சண்டைகள் மட்டுமல்ல; நீதிமன்றம் வரை இவர்களின் சண்டை தவம் கிடப்பதும் உண்டு. காஞ்சிபுரம் யானைக்கு வடகலை நாமம் போடு வதா, தென்கலை நாமம் போடுவதா என்ற சண்டை லண்டன் பிரிவி கவுன்சில் வரை சென்றது என்பதெல்லாம் சாதாரணமா?

இவ்வளவு சண்டைகள் சாங்கோபாங்கமாக தம் பக்தர்களிடையே நடந்துகொண்டு வந்தாலும் எந்த சாமியும் தலையிட்டு சண்டையைத் தீர்த்து வைத்த தாகவோ, சமாதானம் செய்ததாகவோ தகவல் இல்லை.

இவ்வளவுக்கும் பல சண்டைகள் அந்தச் சாமிகளின் முன்னிலையில்தான் நடைபெற்று இருக்கின்றன. அந்தச் சாமியைத் தூக்குவதிலும்கூட பிரச்சினைகள் வெடித்துள்ளன. அப்பொழுதும்கூடக் கொஞ்சம் கண்களைத் திறந்து சைகைக் கூட காட்டியதில்லை. காரணம் வெளிப்படை அது ஒரு கல்லு அல்லது உலோகம்.

பிரபல கணபதி ஸ்தபதி அவர்களே இதுபற்றி வித்தாரமாகக் கூறிவிட்டாரே ஒரு கடவுள் சிலையை வடிவமைக்கிறதுன்னா சும்மாவா? யார் பார்த்திருக்காங்க கடவுளை? அவர் எப்படி இருப்பார்னு யாருக்குத் தெரியும்? எங்களால மட்டும் எப்படி அத்தனைத் தத்ரூபமா ஒரு கல்லுல அவரைக் கொண்டுவர முடியுது? கோயிலுக்குப் போன உடனே அந்தச் சிலையைப் பார்த்து ஏன் அத்தனைப் பரவசப்படறீங்க?

நீங்க அனுபவிக்கிற பரவசத்தை, பக்தியைக் கொண்டு வரணும்னா ஒரு கல்லு, சிலையா மாறணும். அந்தக் கல்லுக்கு உயிர் வரணும்; அப்பத்தான் கையைக் கூப்பி வணங்க முடியும். அந்த உயிரை யாரு கொடுக்கிறாங்க? நாங்கதானே? எங்ககிட்ட அப்படி என்னதான் வித்தை இருக்குன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா? (கல்கி, 11.6.2006) என்று புகழ்பெற்ற தமிழரான கணபதி ஸ்தபதி பேட்டி கொடுத்தாரே, இதன் பொருள் என்ன? கல்லைக் கடவு ளாக்கும் சக்தி சிற்பியிடம்தான் உள்ளது என்று மட்டை இரண்டு கீற்றாகக் கிழித்துக் காட்டிவிட்டாரா இல்லையா?

கல்லுக்குச் சக்தி கொடுக்கும் சிற்பி மனிதன்தானே? அப்படியென்றால், கடவுள் என்ற எண்ணம் மனிதனால் செயற்கையாகக் காட்டப்படுகிறதே தவிர, கடவுள் என்று தனியாக ஏதும் இல்லை என்பது பெறப்படவில்லையா?

இந்தச் செயற்கை விடயத்திற்கு மனிதர்கள் ஒருவருக் கொருவர் அடித்துக்கொள்கிறார்களே ஆச்சாரியார் சொன்னதுபோல, பக்தர்கள் என் கடவுள் பெரியதா? உன் கடவுள் பெரியதா? என்று சண்டை போட்டுக்கொள்கிறார்களே என்னே பரிதாபம்!

நேற்று ஒரு சேதி ஏடுகளில் வெளிவந்தது. திட்டக் குடியை அடுத்த கண்டமத்தான் அய்யனார் கோயிலில் திருப்பணி நடந்ததாகவும், அப்பொழுது ஒரு பெண் சாமி வந்து ஆடியதாகவும் (அது ஒரு ஹிஸ்டீரியா நோய்!) இந்தக் கோயிலுக்குரிய அய்யனார் சாமி சிலை கேட்பாரற்றுக் கிடப்பதாகவும் (கேட்பாரற்றுக் கிடக்கும் அளவுக்குச் சாமிக்குச் சக்தியில்லையோ!) அதைக் கொண்டு வந்து இந்தக் கோயிலுக்குள் வைத்தால், சுபிட்சம் ஏற்படும் என்றும் சொன்னாராம்.

அவ்வளவுதான் அந்தக் கருங்கல்லாலான அய்யனாரைத் தேடிப்பிடித்து கோயிலுக்குக் கொண்டு வைத்துவிட்டார்களாம். அங்குதான் பிரச்சினையே கிளம்பி இருக்கிறது. பக்கத்து ஊரான புலிகரம்பனூர் கிராம மக்கள் 500 பேர் திரண்டு, கண்டமத்தான் கோயிலுக்குள் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ள அந்தச் சாமி சிலை எங்கள் ஊருக்குச் சொந்தமானது இங்கு கொண்டு வந்து எப்படி வைக்கலாம்? என்று தகராறு வெடித்து இரு கிராம மக்களிடம் மோதல் நிலை உருவாகியிருக்கிறது. காவல் துறை அதிகாரிகளும், வருவாய்த் துறை அதிகாரிகளும் தலையிட்டு, அய்யனார் சிலையை வட்டாட்சியர் அலுவலகத்துக்குக் கொண்டு போய் வைத்துள்ளனர்.

இரு கிராமங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்களிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி, அதன் அடிப்படையில் அய்யனாரை எங்கு கொண்டுபோய் வைப்பது என்று முடிவு செய்யப்படுமாம்.

எப்படி இருக்கிறது இந்தக் கேலிக் கூத்து? கடவுள் சமாச்சாரங்களைக்கூட மனிதர்கள்தான் தீர்த்து வைக்க வேண்டியுள்ளது.

சாமி சண்டைபற்றி ஆச்சாரியார் சொன்னதையும், கடவுளை மற, மனிதனை நினை என்று தந்தை பெரியார் சொன்னதையும் கொஞ்சம் சீர்தூக்கிப் பார்க்கட்டும் பக்தகோடிகள்.

------------------- ”விடுதலை” தலையங்கம் 30-8-2010

0 comments: