Search This Blog

11.8.10

Y க்கும், U வுக்கும் சண்டை

பாலியல் வன்முறை, வெடிகுண்டு கலாச்சாரங்களில் ஈடுபடுபவர்கள்
காலிக்கூட்டமான காவிகளே! வாலாஜா பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கவுரை

வன்முறை கலாச்சாரங்கள், பாலியல் கலாச்சாரங்களை செய்பவர்கள் காலிகளான காவிக்கூட்டத்தினரே என்று வாலாஜா மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

8.8.2010 அன்று வாலாஜாவில் நடைபெற்ற மண்டல திராவிடர் கழக மாநாட்டில் திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

அதனாலே அவர்களுக்கு வடகலை என்றாலும் தெரியவில்லை. தென்கலை என்றாலும் தெரிய வில்லை. உடனே வெள்ளைக்கார நீதிபதி கேட்டார், வடகலை என்றால் என்ன? தென்கலை என்றால் என்ன? என்று கேட்டார். வடகலை, தென்கலை என்பது என்ன வழக்கு என்று நீதிபதி கேட்டார்.

இந்தியாவிலிருந்து போன வழக்குரைஞர் கெட்டிக்காரர். அவரும் வெள்ளைக்காரர்தான். நீதிபதி அவர்களே, இந்த வழக்கு Yக்கும், Uவுக்கும் இடையே நடைபெறுகிற சண்டை என்று சொன்னான்.

Y க்கும், U வுக்கும் சண்டை

Y என்றால் ஆங்கில எழுத்து. பாதம் வைத்த நாமம் U என்றால் பாதம் வைக்காத நாமம். இந்த Yக்கும், U வுக்குமா சண்டை போட்டு இவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள் என்று சொன்னபொழுது ஆச்சரியத்தோடு கேட்டார் வெள்ளைக்கார நீதிபதி.

பல யானைகள் செத்துப் போய்விட்டன

இந்த கோவிலுக்கு வந்த நான்கு, அய்ந்து யானைகள் செத்துப் போய்விட்டன. ஆனால் வழக்கு சாகவில்லை. இன்னமும் வழக்கு இருக்கிறது. இன்னமும் உயர்நீதிமன்றத்தில் விசாரித்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்னமும் நிறுத்த வில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வீராசாமி தலைமை நீதிபதியாக இருந்தார். அண்மைக் காலத்தில் அவர்கூட மறைந்துவிட்டார். 94 வயது வரைக்கும் இருந்தார். அவர் ஒரு தீர்ப்புக் கொடுத்தார். ஒருவாரம் அந்த நாமம் போடு. ஒரு வாரம் இந்த நாமம் போடு என்று.

இஸ்லாமியர், கிறிஸ்தவரிடம் வித்தியாசம் இல்லை

ஆக, நாமம் பட்ட பாடு. யானை பட்ட பாடு. இவ்வளவும் வைத்திருக்கிறவர், இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று சொல்லுகிறவர், எங்கே போக வேண்டும்? முதலில் அங்கே போகவேண்டும். வடகலையையும், தென்கலையையும் ஒன்று சேர்க்காமல், இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று சொன்னால் என்ன அர்த்தம்?.

இஸ்லாமிய சகோதரர்கள் ஒன்றாக இருக்கி றார்கள். யாரிடமும் வித்தியாசம் இல்லாமல் பழகுகிறார்கள். இங்கே எனக்குக்கூட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சால்வை போர்த்தினார் முகமது சகியும் சால்வை போர்த்தினார். கட்டித் தழுவிதான் சால்வை போர்த்தினார். ஆலிங்கனம் செய்வது இஸ்லாமிய சகோதரர்கள் இப்படி ஒரு இடி இடித்து அப்படி ஒரு இடி இடித்து கட்டித் தழுவிதான் அன்பை வெளிப் படுத்துவார்கள்.

வெள்ளைக்காரன் வந்தவுடனே ஹலோ என்று ஷேக்ஹேண்ட் கொடுப்பான். இந்துக்கள் கும்பிடுகிறார்கள் பாருங்கள். அதன் தத்துவம் என்னவென்றால், கிட்டே வந்திடாதே, எட்டி நில்! என்னைத் தொட்டு விடாதே! மனிதத் தன்மைக்கே விரோதமான ஒரு மதம் இருக்கிறதென்றால் அதுதான் ஆரியமதமான இந்து மதம் என்பதற்கு இதைவிட மிகப்பெரிய அடையாளம் வேறு கிடையவே கிடையாது.

ஜாதியை ஒழிக்க முன்வருவார்களா?

வர்ணாசிரம தர்மத்தை நீக்கிய இந்து மதம் உண்டா? ஜாதி வாரிக்கணக்கெடுப்பு கூடாது என்று வேண்டுமானால் அவர் சொல்லலாமே தவிர, நாங்கள் இந்து மதத்தில் இருந்து ஜாதியை ஒழிக்கத் தயாராகிவிட்டோம் என்று என்றைக்காவது அவர்களைச் சொல்லச் சொல்லுங்கள். வர்ணாசிரம தர்மம் இருக்கக் கூடாது என்று சொல்லச் சொல்லுங்கள். சங்கராச்சாரியார் ஒத்துக்கொள் வாரா?

ஆகவே இந்து மதம் என்று சொன்னாலே வர்ணாசிரம தர்மம்தான். நம்மைப் பற்றி பேசிய இராமகோபாலன் முதுகிலே பூணூல் போட்டி ருக்கிறார். நாம் ஜாதி வாரியாகக் கணக்கெடுப்பு வேண்டும் என்கிறோம். எதற்காக? பிற்படுத்தப் பட்டவனுடைய எண்ணிக்கை எவ்வளவு என்று நீதிமன்றத்தில் கேட்கிறார்.

1931க்குப் பிறகு சென்சஸ் எடுக்கவில்லையே

பிற்படுத்தப்பட்ட மக்கள் 80 சதவிகிதம், 85 சதவிகிதம் இருக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள், மற்ற தோழர்கள் எல்லாம் அன்பாக இருப்பதற்கு என்ன காரணம்? நாங்கள் எல்லாம் ஒரே இலக்கை நோக்கி போகக்கூடியவர்கள்.

சமூக நீதிக்காகப் போராடக்கூடியவர்கள். சமூக நீதியை வென்றெடுக்கும்பொழுது அண்ணல் அம்பேத்கர் சிந்தனை, தந்தை பெரியார் சிந்தனை வழியிலே செல்லக்கூடியவர்கள் நாங்கள்.

இடஒதுக்கீடு, மண்டல் கமிசனைப் பற்றி இங்கே சொன்னார்களே. ஜாதி வாரிக் கணக்கெடுப்பு 1931ஆம் ஆண்டுதானே எடுத்தீர்கள். அதற்குப் பிறகு சென்சஸ் கணக்கு எடுக்கவில்லையே. ஆகவே தான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று சொல்லுகின்றோம். ஜாதி நிலைக்க வேண்டும் என்பதற்காக அல்ல. ஜாதியை ஒழிப்பதற்கான வழி இது. ஜாதியை ஒழிப்பதற்கு ஜாதிவாரி கணக் கெடுப்பா? இது என்ன முரண்பாடாக சொல்லு கிறாரே என்று மேலெழுந்தவாரியாக எண்ணத் தோன்றும்.

ரொம்ப அற்புதமான பதிலை இதற்குச் சொன்னார். அம்மை குத்துகின்ற தத்துவத்தைச் சொன்னார். அம்மை நோய் வந்தால் எப்படி நாம் தடுக்கின்றோம்? இப்பொழுது பெரும்பாலும் அம்மை நோயை ஒழித்தாகிவிட்டது. அதற்கு முன்னாலே அம்மை நோய் வந்ததை மூட நம்பிக்கையினாலே சொல்லுவான்.

அம்மை நோய்க்கு மருந்து போடுவது மாதிரி

அம்மைநோய் வந்தது என்று வாயால் சொல்ல மாட்டான். இந்து மதம் இவனை எப்படி மூடநம்பிக்கையில் ஆழ்த்தியிருக்கிறது பாருங்கள். அம்மை போட்டிருக்கிறதா என்று கேட்டால் ஆத்தா வந்திருக்காளாம்ஆத்தா வந்திருக்கிறாள், முத்து போட்டிருக்கிறாள் என்று சொல்லுவார்கள்.

தூத்துக்குடியிலிருந்து வாங்கிக்கொண்டு வந்து ஆளுக்கு கொஞ்சம், கொஞ்சம் முத்து கொடுத்திருக்கிறாள் ஆத்தா. ஆத்தா முத்தம் கொடுத்திருக்கிறாளோ இல்லையோ முத்து கொடுத்திருக்கிறாள்.

இன்றைக்கு முத்து கொடுக்க முடியாது. ஆத்தா வர முடியாது. சுகாதார அதிகாரி கேட்பார், ஆத்தா வந்திருக்கிறாளா என்று. இல்லை, முனிசிபாலிட்டி எல்லைக்கு வெளியிலேயே ஆத்தாளை நிப்பாட்டியாகிவிட்டது என்று சொல்லுவார்கள்.

இன்றைக்கு ஆத்தாளுக்கு வேலையே இல்லை. உங்களுக்குத் தெரியும். அம்மை குத்துகிறவன் வந்தாலே பிள்ளைகள் ஓடி ஒளிந்து கொள்வார்கள் என்பது உங்களுக்கு தெரியும். வயதானவர்களுக்குத் தான் தெரியும். இப்பொழுது அதற்கு வாய்ப்பே இல்லாமல் இருக்கிறது. அம்மை தடுப்பு ஊசி போடும்பொழுது அம்மைக் கிருமி கொஞ்சம் எடுத்துதான் உடம்பில் ஏற்றுவார்கள் எதற்கு? அம்மையை எதிர்ப்பதற்கு.

ஜாதியை ஒழிப்பதற்கு ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு தேவை என்பது அம்மை நோயை ஒழிப்பதற்காக எப்படி அம்மை கிருமியை உடலினுள் செலுத்துகிறார்களோ அதே மருத்துவ சிகிச்சை தான் இது.

அரசியல் சட்டத்தில் 18 இடங்களில் ஜாதி

ஆகவே எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை அறிந்து ஜாதி வாரியாக இடஒதுக்கீடு தர வேண்டும் என்பது நமது கோரிக்கை. இன்றைக்கு இதை ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்வார்கள். பதில் சொல்ல வேண்டும். இதோ என்கையில் இருப்பது இந்திய அரசியல் சட்டம். இங்கே வழக்குரைஞர்கள் நாங்கள் நான்கைந்து பேர் இருக்கிறோம். மற்ற வழக்குரைஞர்களுக்குத் தெரியாத ஒரு செய்தியைச் சொல்லுகின்றேன்.

நாங்கள் எதையும் பெரியார் கண்ணாடி போட்டு பார்க்கக் கூடியவர்கள். எங்களுக்குத்தான் பளிச்சென்று தெரியும். ஜாதி என்கிற சொல் மாத்திரம் இந்திய அரசியல் சட்டத்திலே 18 இடங்களில் இருக்கிறது. ஒரு இடம் இரண்டு இடம் அல்ல. கேஸ்ட் (Caste) என்கிற வார்த்தை 18 இடங்களில் இருக்கிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை வந்திருக்கின்ற பேப்பரில் பாருங்கள். மணப்பெண் தேவை. மணமகன். தேவை. இதில் ஜாதியை மட்டும் போட்டால் போதாது கோத்திரத்தைப் போடுகின்றான். இந்த கோத்திரம் அந்த கோத்திரம் என்று போடுவார்கள்.

மணமுறையில், பூணூலில் ஜாதி மணமுறையில் ஜாதி வேண்டும். பூணூல் போடுவதில் ஜாதி வேண்டும். இங்கே கூட நம்முடைய தோழர் துரை.சந்திரசேகரன் கோபத்தோடு சொன்னார். இங்கே பக்கத்தில் இருக்கின்ற உணவுவிடுதியைப் பற்றிச் சொன்னார்கள். அய்யா சொன்னார் பாருங்கள் பிராமணாள் என்று போடக்கூடாது என்று. இந்த ஓட்டலினுடைய உரிமையாளர் பார்ப்பனரா, பார்ப்பனர் அல்லாதவரா என்று நமக்குத் தெரியாது. இருந்தாலும் ரொம்ப அன்போடு அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

ஜாதி வாரியாக கணக்கெடுப்பு என்பது வேறு. பிராமணாள் முரளீஸ் காபி கிளப் என்று போட்டதை பெரியார் அவர்கள் 1958இல் போராட்டம் பண்ணி எடுக்க வைத்தார். எங்கேயாவது ஒன்றிரண்டு முளைக்கும். செய்யாறில், திருவத்திபுரத்தில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு கொஞ்ச நாள்களுக்கு முன் போயிருந்தேன். அங்கே ஒருத்தர் இப்படித்தான் ஒரு போர்டை போட்டிருந்தார்.

ஓர் அன்பான வேண்டுகோள்!

ஒரு வேண்டுகோள் விடுத்தோம். அவர் எடுத்துவிட்டார். அதே மாதிரி இங்கேயும் உள்ள ஓட்டல் உரிமையாளருக்கு ஒரு வேண்டுகோளை வைக்கின்றோம். திராவிடர் கழகத்தின் சார்பிலே, ஜாதி ஒழிப்பாளர்களின் சார்பிலே அன்பான ஒரு வேண்டுகோளை வைக்கின்றோம்.

நம்முடைய தோழர்கள் நாளைக்கோ அல்லது மறுதினமோ ஒரு வேண்டுகோளை எழுதிக் கொடுங்கள். பிராமணாள் என்ற பெயர்ப் பலகையினை நீங்கள் அகற்றிவிட வேண்டும். உயர்தர உணவுவிடுதி, சைவ உணவுவிடுதி என்று போட்டிருக்கின்றீர்கள். எதை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள். பிராமணாள் என்று இருக்கக்கூடாது என்று துரை.சந்திரசேகரன் தெளிவாகச் சொல்லிவிட்டார். நாங்கள் வன்முறையில் இறங்காத கூட்டம். மற்றவர்கள் மாதிரி ஆய், ஊய் என்று கத்திக்கொண்டு நடக்க மாட்டோம். நாங்கள் அன்பான வேண்டுகோளை வைக்கின்றோம்.

பிராமணாள் என்று பெயர் இருக்கக்கூடாது

பிராமணாள் என்று இப்பொழுது சொன்னால் மற்றவர்கள் சூத்திரர்கள், பஞ்மர்கள், இழிவான வர்கள் என்று அர்த்தம். இந்த காலகட்டத்திலே அதுவும் இந்த ஊரிலே இப்படி ஒரு நிலை இருக்கக்கூடாது. இது(Oldest municipality)முதல் முனிசிபல் நகரம் இந்த வாலாஜாதான். பல்வேறு வகையில் அந்தக் காலத்தில் அதைவிட இதனுடைய சிறப்பான விழாவிற்கு தந்தை பெரியாரை அழைத்தார் வரதராஜன். நாம் தமிழர் இயக்கத்தில் ஆதித்தனாருக்கு எவ்வளவு செல்லப்பிள்ளையோ, அதேபோல வரதராஜன் அவர்கள். வயதானவர்களுக்குத் தெரியும்.

இந்த ஊர் நகர சபைத் தலைவராக இருந்தவர். எங்களிடமெல்லாம் ரொம்ப அன்பாகப் பழகியவர். அகற்ற அவகாசம் கொடுங்கள் பார்ப்பானே நடுக்கண்டம் நம்முடையதுதான் என்று சொல்லக்கூடிய அளவுக்கு எல்லாவற்றையும் சாப்பிடுகின்றான். அதனால் இப்பொழுது அந்தப் பிரச்சினை இல்லை. யாரையும் ஏமாற்றிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் நம்முடைய தோழர்கள் ரொம்ப அமைதியாக, அடக்கமாக ஓட்டல் உரிமையாளரிடம் சொல்ல வேண்டும். அவர்களுக்கு பதினைந்து நாளோ அல்லது ஒரு மாதமோ அவகாசம் கொடுங்கள். பிராமணாள் என்பதை எடுத்துவிட வேண்டும். அன்பாக நாங்கள் இதையும் வேண்டுகோளாக வைக்கின்றோம்.

மற்றபடி வன்முறையிலேயோ அல்லது வலிந்து மிரட்டுவதோ, அச்சுறுத்தலோ இல்லாமல் அன்பான கேட்டுக்கொள்கின்ற தத்துவத்தைத்தான் நடைமுறை செய்ய வேண்டும் என்று சொல்லு கின்றோம். அடுத்தபடியாக நண்பர்களே! இந்த காவிகளைப் பற்றிச் சொன்னார்கள். இதோ பாருங்கள் இது இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை. 5.8.2010இல் வந்த பத்திரிகை.

ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி ராமகோபாலன் வகையறா கம்பெனிகளைச் சேர்ந்த ஆடிட்டர் குருமூர்த்தி மற்ற பார்ப்பனர்கள் நடத்துகின்ற பத்திரிகை, கோயங்காவினுடைய ஆங்கில பத்திரிகை. ஆர்.எஸ்.எஸ். மற்றும் கோட்சே கூட்டத்தை ஆதரிக்கின்ற பத்திரிகை. ஒரு பெரிய கட்டுரை எழுதியிருக்கின்றார். அமுல்யா கங்குலி என்ற டில்லியில் இருக்கிற ஒரு பெரிய ஆராய்ச்சியாளர் கட்டுரை எழுதியிருக்கின்றார்.

ஆர்.எஸ்.எஸ். என்பதுகாவிகள் என்பது எவ்வளவு சதி செய்து, குண்டு வைத்ததில் பயங்கரவாதத்தில் முன்னணியில் இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதுவரையில் பழியைப் பூராவும் எங்கே போட்டார்கள்? இஸ்லாமிய சகோதரர்கள் மீது போட்டார்கள்.

இந்துத் தீவிரவாதிமுஸ்லீம் தீவிரவாதி

தீவிரவாதி என்றாலே ஒரு தாடியை வைத்து, தலையில் ஒரு குல்லாயை வைத்து, கார்ட்டூன் போடுவதாக இருந்தால்கூட இப்படித்தான் போடுகிறார்கள். தீவிரவாதியில் என்ன இந்து தீவிரவாதி, இஸ்லாமிய தீவிரவாதி? தீவிரவாதம் அது எந்த தீவிரவாதமாக இருந்தாலும் எல்லாவற்றையும் ஒழிக்க வேண்டியதுதான். குறிப்பிட்ட மக்களை அடையாளம் காட்டி அவர்களை எல்லாம் சமூக விரோதிமாதிரி ஏன் காட்ட வேண்டும்? இதைவிட சமுதாய நல்லிணக்கத்திற்கு விரோதமான போக்கு வேறு உண்டா?

இனம் இனத்தோடுதானே சேரும்?

குஜராத்தில் முன்னாள் உள்துறை அமைச்சர் அமித்ஷா என்பவர் ஓடி ஓடி ஒளிந்தார். அவரை கைது செய்து சி.பி.அய். காவலில் எடுத்து விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி முழுக்க முழுக்க இந்து மத, சனாதன மதவெறி பிடித்தவர். அவருக்கு 26 பதார்த்தத்தில் 36 பதார்த்தத்தில் அம்மா விருந்து வைப்பார். இனம் இனத்தோடு தான் சேரும்.

இந்த கட்டுரையில் உள்ள செய்தியைப் பற்றி எங்களுடைய பொதுச்செயலாளர் அறிவுக்கரசு சொன்னார். கவிஞர் கலி.பூங்குன்றன் சொன்னார். துரை.சந்திரசேகரன் சொன்னார். ஆர்.எஸ்.எஸ் காவிகளினுடைய நடவடிக்கையை இண்டியன் எக்ஸ்பிரசில் எழுதியிருக்கின்றார்கள். காவிகளே குண்டு வைக்கின்றார்கள். பயங்கரவாதியாக இந்த நாட்டிலே வலம் வருகின்றார்கள்.

ஆன்மீக போர்வையில் வன்முறைகள்

இஸ்லாமியப் பகுதிகளிலும் குண்டுகளை வைக்கின்றான். அதே மாதிரி இந்துக்கள் பகுதியிலும் இவனே குண்டு வைத்துவிட்டு இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்துகின்றான். இஸ்லாமியர் பெயரில் இரண்டு நோட்டீஸ் துண்டுகளைப் போட்டு விடுவது. இஸ்லாமிய சகோதரர்கள்தான் இதை செய்தார்கள் என்று காட்ட வேண்டியது.

இராணுவத்திற்கு சப்ளை செய்யப்பட்ட வெடி மருந்தை எடுத்து செய்திருக்கிறார்கள் என்றால் அதுவும் ஆம்பளை மேலே சந்தேகம் வரும் என்று பெண் சாமியாரே ஈடுபட்டிக்கின்றார். இவ்வளவு வன்முறை வேஷத்தையும் போட்டுக் கொண்டு ஆன்மீக வாதிபோல் காட்டுகிறார்கள். எந்தெந்த பயல் காவி போட்டிருக்கின்றானோ அவர்களை எல்லாம் பிடித்தால் இன்னொரு திகார் ஜெயில் மாதிரி அதில் அடைக்கலாம் (கைதட்டல்).

இவ்வளவு மோசமாக இருக்கிறார்களே என்று வருத்தம், ஆத்திரம், கோபம் எங்களுக்கு வந்தால்கூட, இன்னொரு வகையிலே அவர்கள் தொண்டு செய்கிறார்கள் என்று எங்கேயாவது காட்ட முடியுமா? நாங்கள் கார் இழுத்தோம். அது மாதிரி மக்களுக்குப் பயனுள்ளதை செய்து காட்டுகிறார்கள் என்றால் இல்லை.

காஞ்சி தேவநாதன் அய்யர்

காஞ்சிபுரத்தில் ஒரு அர்ச்சகர் பெயர் தேவநாதன், தேவர்களுக்கே நாதன். அந்த அர்ச்சகர் செய்திருக்கிற வேலை சாதாரணமல்ல. நாங்கள் கடவுள் இல்லை என்பதை ஆயிரம் கூட்டத்தில் செய்தாலும், அவன் ஒரே ஒரு இடத்தில் வைத்த பக்தியின் இலட்சணம் என்ன, கோயில் கருவறை என்பது எதற்குப் பயன்படுகிறது என்று உலகத்திற்கே காட்டிவிட்டான்.

கர்ப்பக்கிரகம்

தாய்மார்களை வைத்து சொல்வதற்கே கூச்சமாக இருக்கிறது. அவன் தேர்ந்தெடுத்த இடம் இருக்கிறது பாருங்கள்கோயில் கர்ப்பகக் கிரகம். கர்ப்ப கிரகம் புனிதமான இடம் என்று சொல்லுவான். கர்ப்பமும் அங்கேதான் நடக்கிறது. கிரகமும் அங்கேதான் நடக்கிறது.

--------------------தொடரும் 11-8-2010

0 comments: