Search This Blog

27.8.10

பெரியார் என்னும் வீரியம் ஆரியத்தை அழித்துக் கொண்டு இருக்கிறது

உ.பி.க்குப்பெரியார்அந்நியரா?


உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சி செல் வாக்குப் பெற்ற விதமே தனித்தன்மை யானது.

தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப் பட்ட மக்களும், சிறுபான்மையினருமே இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள்; அவர்கள் கைகளில்தான் ஆட்சி அதிகாரம் இருக்க வேண்டும் பகுஜன் என்பது இதுதான்! ஆனால் இன்றோ, இதற்கு மாறாக சிறுபான்மை எண்ணிக்கையில் உள்ள பார்ப்பனர் களின் கையில்தான் ஆட்சி அதிகாரம் இருக்கிறது. இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்பதற்காகத்தான் பகுஜன் சமாஜ் கட்சியைக் கண்டார் மதிப்பிற்குரிய கான்ஷிராம்.

இந்தியாவின் மிகப் பெரிய மாநில மான உத்தரப்பிரதேசத்திலேயே இந்தக் கொள்கையை அரங்கேற்றினார். இதன் நோக்கத்தை வெற்றி புரிக்கும் அழைத்துச் சென்றார். அதன் அடையாளமாகவே செல்வி மாயாவதி என்னும் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் முதல் அமைச்சர் நாற்காலியில் கம்பீரமாக வீற்றிருக்க முடிந்தது.

அந்த உணர்வைக் கடைசிவரை கொண்டு செல்லாமல் நொடித்துப் போன அரசியல் சேற்றில் சிக்கி தமது கட்சிக்கே பொது செயலாளராகப் பார்ப்பனரை அமர்த்திக் கொள்ளும் நிலைக்கு ஆளானது பரிதாபமே!

உ.பி. தலைநகரான லக்னோவில் 1995 செப்டம்பரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா அரசு விழாவாகவே எடுக் கப்பட்டது.

இந்தியாவிலேயே 12 சதவிகிதத்துக்கு மேல் மக்கள் தொகை கொண்ட பார்ப்பனர்கள் வாழும் மாநிலம் உத்தரப்பிரதேசம்! பல பிரதமர்களைத் தந்த மாநிலம் அங்கு பெரியாருக்கு விழா என்றால் சாதாரணமா?

லக்னோவில் நடு நாயகமான இடத்தில் பரிவர்த்தன் சவுக் என்ற பூங்கா உருவாக்கப்பட்டது. தந்தை பெரியார் ஜோதிபா பூலே, சாகுமகராஜ், நாராயணகுரு, அண்ணல் அம்பேத்கர் ஆகிய சமூகப் புரட்சியாளர்களுக்கு அப்பூங்காவில் சிலைகள் நிறுவுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

இவ்விழா எடுக்கப்பட்ட சில நாள்களிலேயே உ.பி.யில் மாயாவதியின் ஆட்சியைக் கவிழ்த்தது ஆரியம்.

அதன்பின் சிறிய இடைவெளிக் குப்பிறகு மீண்டும் அரியணை ஏறினார் அம்மையார். பாரதீய ஜனதா கட்சி கயோடுகூட சமரச உடன்படிக்கை செய்து கொண்டார்.

அய்ம்பெரும் தலைவர்களின் தனிப் பட்டியலிலிருந்து தந்தை பெரியாரை அகற்றிக்கொண்டார் அதன் மூலம் ஆரியத்தின் சுவீகாரப் புத்திரியாக ஆகலாம் என்று மனப்பால் குடித்தார்.

Periyar No More On ‘Great Leaders’ என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா தலைப்பிட்டுச் செய்தியை வெளியிட்டது. (6.12.2007)

பகுஜன் சமாஜ் கட்சிக்குப் பொதுச் செயலாளராக உ.பி.யின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் சதிஸ் சந்திர மிஸ்ரா என்ற பார்ப்பனர் ஆக்கப்பட்டார். ஆனாலும் அந்தப் பார்ப்பனர் எந்த வகையிலும் பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கைக் கோட்பாடுகளைத் தீண்டிக் கொள்ளவில்லை.

மாயாவதி முதல் அமைச்சராகப் பதவியேற்ற தருணத்தில், ஏழு பார்ப்பன அமைச்சர்களும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாயாவதியின் காலைத் தொட்டு விடாமல் ஏற்பாடு செய்து கொண்டார். அதே நேரத்தில் அந்த ஏழு பார்ப்பன அமைச்சர்களும், அந்த சதீஷ் மிஸ்ராவின் கால்களைத் தொட்டுக் கும்பிட்டுச் சென்றனர்.

என்னே நவீன வருணாசிரம தர்மத்துச் சர்ப்பம்!

உ.பி.யில் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு என்னும் நெருப்பு சோம்பிப் போய்விடவில்லை.

சூத்ரா என்ற ஓர் அமைப்பு உருவானது. அதுகுறித்து பார்ப்பன, இதழான ஜூனியர் விகடனே செய்தி வெளியிட்டது. (5.2.2006)

பார்ப்பனர்கள் ஒரு மசூதியை உடைத்து 5ஆண்டு ஆட்சி செய்யும்போது, நாங்கள் ஏன் 100 இந்துக் கோயில்களை உடைத்து 500 ஆண்டு காலம் ஆட்சி செலுத்த முடியாது என்ற வினாவை எழுப்பினர்.

பெரியார் விழாவை கொண்டாடி ராமன் உருவத்திற்குச் செருப்பு மாலை சூட்டினார்கள்.

இந்தியாவின் அரசியல் தலையெழுத்தையும் நிர்ணயிக்கக் கூடியது உத்தரப்பிரதேசம் என்று சொல்லப்படுவது உண்டு. இப்பொழுது அந்த மாநிலம் இரு கூறாக்கப்பட்டுவிட்டது உத்தரகாண்ட் உருவாகி விட்டது.

உ.பி.யில் எப்படியும் காலூன்ற வேண்டும் என்பதிலே காங்கிரஸ் குறியாக உள்ளது. இளையத் திலகமாக நெற்றியில் குங்குமத் திலகமிட்டுத் தூக்கி நிறுத்தப்படும் ராகுல் காந்தி உ.பி.யில் வியூகங்களை வகுத்துச் செயல்படுகிறாராம்.

சமூக நீதித் தலைவர்களாக உ.பி.யில் வலம் வரும் தலைவர்கள்மீது காங்கிரசின் கவனக் கணை பதிந்து வருகிறது. அம்பேத்கரைத் தவிர மற்ற நான்கு தலைவர்களும் அவரவர் மாநிலத்தில் சமூகப் போராட்டத்தை நடத்தியவர்கள்.

உள்ளூர் சமூகப் போராட்ட வீரர்களை நாங்கள் கையில் எடுத்துக் கொள்ளப் போகிறோம் என்கிறது காங்கிரஸ்; 5 ஆயிரம் சமூகப் போராளிகளை அவர்கள் பட்டியலிட்டு வைத்துள்ளார்களாம்.

லக்னோவில் தந்தை பெரியார் விழாவை எடுத்த தற்கான காரணத்தை கான்சிராம் செய்தியாளர் களிடம் வெளிப்படுத்தினார் (17.9.1995).

மற்ற நான்கு தலைவர்களும் பார்ப்பனர்களை எதிர்த்தனர் என்றாலும், மிகுதியும் பார்ப்பனர்கள் பாதிக்கப்பட்டது தந்தை பெரியார் அவர்களால்தான் என்று குறிப்பிட்டார். (17.9.1995) ஆனாலும், அகில இந்திய தேசியம் பேசும் காங்கிரசோ பிராந்தியத் தலைவர்களைத் தேடி அலைகிறது.

உண்மையைச் சொல்லப் போனால் உ.பி.க்கும் தந்தை பெரியார் அவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டே!

1944இல் (டிசம்பர் 29,30,31) ஆகிய மூன்று நாட் களிலும் உ.பி. கான்பூரில் அகில இந்திய பிற்படுத் தப்பட்டோர் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட் டுக்கு தந்தை பெரியார் அழைக்கப்பட்டார். அம்மாநாட்டுக்குத் தலைமை தாங்கி ஜாதி ஒழிப்புத் திட்டம் தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.

ஜாதி ஒழிப்பு என்பது புண்ணுக்குப் புனுகு பூசுவதல்ல அறுவை சிகிச்சையின் மூலம்தான் அதனை அகற்ற முடியும். ஜாதியின் ஆணிவேர் இந்துமதமும், இந்து சாஸ்திரங்கள், வேதங்கள், இதிகாசங்கள் இவைதாம். ஆகவே ஜாதி ஒழிக்கப்பட வேண்டுமானால், அதற்கு ஆதாரமாக இருக்கக்கூடிய இந்து மதக் கடவுள்கள், இந்து மத சரஸ்திர, வேத, இதிகாசங்கள், புராணங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற விரிவாக எடுத்துரைத்தார். தந்தை பெரியாரின் எழுச்சிமிகு எரிமலை உரையைக் கேட்ட மக்கள் திரண்டு எழுந்தனர். தீர்க்கமான முழக்கங்களை எழுப்பினார்.

இராவணாக்கி ஜே! (இராவணன் வாழ்க!) சம்புக்கி ஜே (சம்பூகன் வாழ்க!) இராமன் நாஸ்தி (ராமன் ஒழிக), சீதை நாஸ்தி (சீதை ஒழிக) என்று இடி முழக்கம் செய்தனர் (குடிஅரசு 13.1.1945).

1959இல் மீண்டும் ஒரு முறை வடநாட்டுச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பகுத்தறிவுப் பகலவன். கான்பூரில் தந்தை பெரியாருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு அதற்கு முன் கண்டிராதது. பெரியார் இராமசாமி ஜிந்தாபாத்! பம்மன் பாரத் சோடுதோ! (பார்ப்பானே, இந்தியாவை விட்டு வெளியேறு!)

நேரு ஜாதி நை சலேகி நை சலேகி!

(நேருவின் ஜம்பம் இனி பலிக்காது) என்று முழக்கமிட்டனர். குடியரசுக் கட்சியின் (ரிபப்ளிக்கன் பார்ட்டி) தொண்டர்கள் உருவிய வாளுடன் நின்று தந்தை பெரியார் அவர்களுக்குக் கொடுத்த வரவேற்பு அசாதாரணமானதே!

லக்னோவிலும், கான்பூரிலும், அலிகார் போன்ற இடங்களிலும் இருந்த முசுலிம்கள் தந்தை பெரியாரைச் சந்தித்து, பார்ப்பனர்களின் ஆதிக்கப் பிடியிலிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டனர். லக்னோ பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் ஆற்றிய உரை மாணவர்களை வீறு கொள்ளச் செய்தது. இந்து மகாசபை, ஜன சங்கம், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் எதிர்த்துக் கூச்சல் போட்டும் பார்த்தனர்; பார்ப்பனர் அல்லாத மக்களின் எழுச்சி அவர்களை அடங்கச் செய்தது.

உ.பி.யில் தந்தை பெரியார் பயணம் செய்ததன் விளைவு, தந்தை பெரியார் எழுதிய இராமாயணப் பாத்திரங்கள் எனும் நூல் சச்சு இராமாயண் என்று இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டது. உ.பி. அரசு தடை செய்தது; ஆனாலும் உச்சநீதிமன்றம் அந்தத் தடையை விலக்கியது.

1968இல் மீண்டும் ஒருமுறை வேன் மூலமாக தந்தை பெரியார் உத்தரப்பிரதேசம் சென்றார். லக்னோவில் நடந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட சிறுபான்மை வகுப்பினர் மாநாட்டில் பங்கு கொண்டார். அன்னை மணியம்மையார், ஆசிரியர் கி. வீரமணி முதலியோர் உடன் சென்றிருந்தனர்.

தந்தை பெரியார் அவர்கள் உரையை ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். மற்றொருவர் அதனை இந்தியில் மொழி பெயர்த்துச் சொன்னார்.

இழிவு நீங்கிட, டில்லி ஆட்சியிலிருந்து விலகுவதே ஒரே வழி என்றார் தந்தைபெரியார். இந்திய அரசியல் சட்டம் என்பது தங்கள் உணர்வுக்காகப் பார்ப்பனர்கள் ஏற்பாடு செய்து கொண்டது என்றும் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.

உ.பி.க்கும், தந்தை பெரியார் அவர்களுக்கும் நெருக்கமான இந்த உறவைப் புரிந்து கொள்ளாமலோ, அல்லது புரிந்து கொண்டு வேண்டும் என்றோ பெரியார் வேறு மாநிலத்தவர் என்ற ஒரு பிரச்சாரத்தைக் காங்கிரசார் முடுக்கி விடுகின்றனர்.

தந்தை பெரியார் மருந்து உ.பி.யில் பரவுமேயானால் அது உயர் ஜாதி ஆதிக்கத்தின் வேருக்கு வைக்கப்படும் அதிர்வேட்டு என்ற அச்சத்தால்கூட இந்தத் தந்திரத்தை அவர்கள் கையாளலாம்.

தந்தை பெரியார் மறைவுற்று 37 ஆண்டுகள் கடந்த பிறகும், பெரியார் என்னும் வீரியம் ஆரியத்தை அன்றாடம் அரற்றிக் கொண்டும், அழித்துக் கொண்டும் இருக்கிறது என்பது மட்டும் உண்மை உண்மையிலும் உண்மையே!

----------21-8-2010 ”விடுதலை” ஞாயிறுமலரில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

0 comments: