Search This Blog

20.8.10

அளந்து பேசட்டும் மருத்துவர் இராமதாசு!


சமூகநீதியைப்பற்றி முதல்வர் கருணாநிதியோ, வேறு திராவிடக் கட்சித் தலைவர்களோ பேசலாமா?

உச்சநீதிமன்றம் அளித்த 69 சதவிகித இட ஒதுக்கீடு தீர்ப்பு வந்த மறுநாளே ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தமிழக அரசு உத்தர விட்டிருக்க வேண்டும் செய்யாதது ஏன்?

மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பல மாநிலங்களுக்குச் சென்று ஆதரவைத் திரட்டி இதற்காகப் போராடியது பா.ம.க.தான். தமிழகத்தில் எந்தக் கட்சியாவது இதற்காகக் குரல் கொடுத்தது உண்டா?

பல ஆண்டுகளாக தமிழகத்தில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு ஒரே தொகுப்பாகத்தான் வழங்கப்பட்டு வந்தது. வன்னியர் சங்கம் தொடங்கி 30 உயிர்களைப் பலி கொடுத்த பிறகுதான் மிகவும் பிற்படுத்தப் பட்டவர்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு 20 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

தனியார் துறையிலும் ஒதுக்கீடு கோரு வது பா.ம.க. மட்டுமே. சமூகநீதியைப் பற்றி இங்கு பேச எந்தக் கட்சிக்கும் தகுதி இல்லை.

இட ஒதுக்கீட்டிற்காக முதன்முதலில் போராடியதும் பா.ம.க.தான்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பைப் பார்த்து நீங்கள் சந்தோஷப்பட்டிருக்கவேண்டாமா?

நீங்கள் சமூகநீதிக்காக என்ன செய்தீர்கள்? 1989 ஆம் ஆண்டு முதல் இன்று வரை சமூகநீதிக்காகப் போராடி வருபவன் இந்த ராமதாஸ் மட்டும்தான்.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் வழக்கம்போல் தடாலடியாக இவ்வாறு பேசியுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களும், தக்க வகையில் ஆதாரத்துடன் பதில் அளித்துள்ளார். (முரசொலி, 18.8.2010).

ஒட்டுமொத்தமாக திராவிட இயக்கம்பற்றி குற்றப் பத்திரிகையா?

திராவிட இயக்கத்தைப்பற்றி ஒட்டுமொத்தமாகக் குற்றப்பத்திரிகை படித்துள்ள நிலையில், நமது கருத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகிவிட்டது.

(1) 1989 முதல் சமூகநீதிக்காகக் குரல் கொடுப்ப தாக அவரே ஒப்புக்கொண்டுள்ளார். இந்த நிலையில், இட ஒதுக்கீட்டுக்காக முதன்முதலில் போராடியது பா.ம.க.தான் என்று கூறுவது எத்தகைய நகைப்புக் குரியது!

வரலாறு தெரியவேண்டாமா?

நீதிக்கட்சியான திராவிட இயக்கம் தோன்றியது எப்பொழுது? அது போர்க்குரல் கொடுத்தது எந்தக் காலகட்டத்தில்? முதல் இட ஒதுக்கீடு ஆணை பிறப் பிக்கப்பட்டது எந்த ஆண்டில்? முதல் சட்டத் திருத்தம் எப்பொழுது நடைபெற்றது? அதற்குக் காரணம் யார்? என்கிற சமூகநீதியின் பாலபாடம் தெரிந்திருந்தால் இப்படியெல்லாம் பேசியிருக்கமாட்டார். 1910 இல் டாக்டர் சி. நடேச முதலியாரால் வித்திடப்பட்டு, நீதிக் கட்சி ஆட்சி ஆதரவோடு, 1928 இல் எஸ். முத்தையா முதலியார் முயற்சியால் ஆணை பிறப்பிக்கப்பட்டு, இட ஒதுக்கீடு நடைமுறைபடுத்தப்பட்ட வரலாறு தெரியாமல், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசலாமா?

பிட்டி தியாகராயரும், டாக்டர் நடேசனாரும், டாக்டர் டி.எம். நாயரும், தந்தை பெரியாரும் திராவிட இயக்கத்தவர் அல்லர் என்று புதுக்கதை எழுதப் போகிறாரா?

நான் நான்! எனும் தன்முனைப்பு!

எதற்கெடுத்தாலும் நான் நான் என்கிற தன்முனைப்பு அவரை ஆட்டிப் படைத்துக்கொண்டு இருப்பதை அறிய முடிகிறது.

(2) எம்.ஜி.ஆர். ஆட்சியில் ஆண்டு ஒன்றுக்கு 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பை எதிர்த்து திராவிடர் கழகம் போராடியதனால் வந்த 50 இல் இருந்துதான் 30, 20 என்பது பிரிக்க முடிந்தது. அந்தக் காலம் (1979-80) தாங்கள் அரசியலுக்கே வராத காலம்! அந்த நிலையை உருவாக்கிக் கொடுத்ததால்தான் 30 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், 20 சதவிகிதம் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் வாய்ப்பு என்பதை மறந்துவிட்டீர்களே! (விடுதலை, 9.2.2008 அறிக்கை) என்று 30 மாதங்களுக்கு முன் விடுதலை அறிக்கையில் குறிப்பிட்டு இருந்ததை மீண்டும் நினைவூட்ட வேண்டியிருக்கிறது.

எம்.ஜிஆர். கொண்டு வந்த அந்த ஆணையை எதிர்த்து முறியடித்ததில் திராவிடர் கழகத்திற்கு எந்த அளவு முக்கியத்துவமும், முன்னுரிமையும் இருந்தது என்பதை நாடறியும்.

சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் பற்றி மருத்துவர் கூறியது என்ன?

(3) மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல்படுத்த வைக்க திராவிடர் கழகம் நடத்திய மாநாடுகள் 42; போராட்டங்கள் 16 என்பதை மருத்துவர் இராமதாசு அறிவாரா? திராவிடர் கழகம் திராவிட இயக்கம் இல்லை என்று சொல்லப் போகிறாரா?

மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்களை எப்படியெல்லாம் கொச்சைப்படுத்தியவர் இவர் என்பதை எளிதில் மறந்துவிட முடியுமா?

மேல்ஜாதி (ராஜபுத்திரர்) வெறிபிடித்த வி.பி. சிங்! அழுகிக் கொண்டிருக்கும் இந்திய அரசியல் பழத்தில் அழுகாததுபோல் தோற்றமளிக்கும் பகுதிதான் வி.பி. சிங்.; செல்லாத நாணயத்தில் ராஜீவ் ஒரு பக்கம் என்றால், வி.பி. சிங் மறுபக்கம் ஆவார்!

(தினப்புரட்சி, தலையங்கம் 10.6.1989).

மருத்துவர் உணரவேண்டும்!

சமூகநீதியில் அக்கறையிருந்தால், சமூகநீதிக்காக தம் பதவியையே தூக்கி எறிந்த ஒருவரை தக்க தருணத்தில் அடையாளம் கண்டிருந்திருக்கவேண்டாமா? எதிலும் அவசரம், ஆத்திரம், அடாவடித்தனம் என்பது பொது வாழ்வுக்கு உகந்ததுதானா என்பதை அருள்கூர்ந்து டாக்டர் அவர்கள் உணரவேண்டும்.

கலைஞரைப்பற்றி மருத்துவர் அன்று கூறியது என்ன?

(4) சமூகநீதியைப்பற்றி முதல்வர் கலைஞர் பேசலாமா என்ற வினாவையும் எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு அசைவையும், வரலாற்றையும் மறக்காமல் பதிவு செய்து வருகிற திராவிடர் கழகமும், விடுதலையும் இருக்கும்போது எந்தத் தைரியத்தில் பா.ம.க. நிறுவனர் இப்படிப் பேசுகிறார் என்று தெரிய வில்லை.

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலேயும், மத்திய அரசானாலும் சரி, பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கென்று ஒரு பிரிவு இல்லை. அந்தப் பிரிவை மிகமிக பின்தங்கிய (இது கலைஞர் அவர்களுக்கான வார்த்தை) மக்களுக்காக இட ஒதுக் கீட்டை அள்ளித் தந்த கலைஞர் அவர்களைச் சிறுபான்மைச் சமுதாயமான 107 சமுதாயமும் மறக்க முடியுமா? அப்படி மறந்தால் அவர்கள் நன்றி கெட்டவர்கள் ஆவார்கள் (முரசொலி, 11.7.1999, பக்கம் 8).

இப்படிப் பேசிய பெருமகனார்தான் சமூகநீதியைப் பற்றி கலைஞர் பேசலாமா என்று மிகுந்த நன்றி உணர் வோடு பேசியிருக்கிறார். நன்றியின் இலக்கணத்தை மருத்துவரிடம்தான் கற்றுக்கொள்ளவேண்டும் போலும்!

மண்டல் குழு பரிந்துரையை வாபஸ் பெற்றால், இன்று இந்தியா குலுங்குகிறது, நாளை இந்தியா இருக்காது (தமிழக முதல்வர் கலைஞர் பேச்சு!).

மக்கள் காவலர்: பதவி போய்விடுமோ என்ற அச்சத்தை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, துணிகரமாக தமிழக மக்களின் (ஒரு சில புல்லுருவிகளைத் தவிர) ஒட்டுமொத்த கருத்தைத் தெரிவித்த தமிழக முதல்வருக்கு எனது பாராட்டுகள்.

தென்னிந்தியாவில் உள்ள அனைத்து முதல்வர்களும் இதுபோன்று துணிச்சலான அறிவிப்புகளை வெளியிட்டால்தான் வட மாநிலங்களில் உள்ள பார்ப்பனர், பனியாக்கள் அடங்குவர்.

தேசிய ஒருமைப்பாடு என்பது மண்டல் குழு அறிக்கையை முழுவதும் அமல்படுத்துவதில்தான் இருக்கிறது! (தினப்புரட்சி, 2.10.1990, முதல் பக்கம்).

இதுவும் பா.ம.க. நிறுவனரின் அருள்வாக்குதான்.

அன்று விழுப்புரத்தில்...

விழுப்புரத்தில் வன்னியர் சங்கம்; பா.ம.க. மாநாடு கூட்டி (1995 அக்டோபர் 8) தமிழகத்தை ஆளத் தகுந்த தமிழன் கருணாநிதி ஒருவர்தான் என்று அறிவித்து முதலமைச்சர் நாற்காலி என்று கூறி, ஒரு தனி நாற் காலியில் கலைஞர் அவர்களை அமர வைத்து, தில்லி கொம்பனால்கூட எங்கள் கூட்டணியைப் பிரிக்க முடியாது என்று அம்மாநாட்டில் கொக்கரித்தார். (அதன்படி மருத்துவர் நடந்துகொள்ளவில்லை என்பது வேறு சங்கதி).

(5) தொழிற்கல்லூரிகளில் வன்னியருக்குக் கூடுதல் இடங்கள் கிடைத்தது குறித்து மருத்துவர் இராமதாசு என்ன எழுதினார்?

கடந்த ஆண்டைவிட அதிகம் கிடைத்துள்ளது. அதற்காகக் கருணாநிதி பெருமைப்படவேண்டும். (தினப்புரட்சி, 17.7.1989) என்று எழுதியவரும் சாட்சாத் டாக்டர்தான்.

ஒருக்கால் அப்பொழுதெல்லாம் கலைஞர் திராவிட இயக்கத்தவர் என்று மருத்துவருக்குத் தெரியாமல் போகும் அளவுக்கு அம்னீஷியாவுக்கு ஆளாகியிருப்பாரோ என்று நினைக்கக்கூடத் தோன்றுகிறது.

சமூகநீதித் திசையில் கலைஞரின் சாதனைகள்

சமூகநீதித் திசையில் கலைஞர் அவர்களின் சாதனைகள் சாதாரணமானதுதானா?

கலைஞர் அவர்கள்மீது குற்றப் பத்திரிகை படிக்குமுன் சமூகநீதி கண்ணோட்டத்தில் அவர் எத்தகையவர் என்ற அடிப்படையை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

(அ) தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர் களுக்கும் சேர்த்து மொத்த இட ஒதுக்கீடே 41 என்று இருந்த நிலையை மாற்றி 49 விழுக்காடாக உயர்த்தியவர்.

(ஆ) பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று தனித்தனித் துறைகளை இந்தியத் துணைக் கண்டத்திலேயே முதன்முதலாக ஏற்படுத்தியவர்.

(இ) உதவித் தொகை பெறுவதற்கு 50 மதிப்பெண்கள் பெறவேண்டும் என்று இருந்ததை 40 மதிப்பெண்களாகக் குறைத்தவர்.

(ஈ) பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு மதிப் பெண்கள் பிற்படுத்தப்பட்டவருக்கு 50, மிகவும் பிற்படுத்தப் பட்டவருக்கு 45, தாழ்த்தப்பட்டவர்கள் வெற்றி பெற்றிருந் தாலே போதுமானது என்று ஆணை பிறப்பித்தவர்.

(உ) தந்தை பெரியாரின் குரலை மதித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்முதலாக தாழ்த்தப்பட்டவர் ஒருவர் நீதிபதியாக நுழைவதற்குக் காரணமாக இருந்தவர். பின்னர் அதே நீதிபதிதான் முதல் தாழ்த்தப்பட்டவர் உச்சநீதிமன்றத்தில் நுழைந்தார் என்ற பெருமைக் குரியவராவதற்கும் மூலகர்த்தா.

(ஊ) பார்ப்பன மயமாக இருந்த சென்னை உயர்நீதி மன்றத்தில் பார்ப்பனரல்லாதார் ஆதிக்கம் பெறும் நிலையை உருவாக்கியவர்.

(எ) 1967-1974 வரை குரூப் ஒன்று துறையில் மொத்தம் 122 பேர்களுள் 112 பேர்கள் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களுமாக வரக்காரணமாக இருந்தவர். அதன் காரணமாகவே பார்ப்பனர்களின் கடுமையான எதிர்ப்புக்கும், பிரச்சாரத்துக்கும் ஆளானவர்.

(ஏ) குடும்பத்தில் பட்டப் படிப்பு இல்லாத முதல் தலைமுறையினருக்கு பொறியியல் கல்லூரியில் இலவசப் படிப்பு, வேலைவாய்ப்பில்லா இளைஞர்களுக்கு உதவித் தொகை அருந்ததியர்க்குத் தனி ஒதுக்கீடு, சிறுபான் மையினருக்குத் தனி ஒதுக்கீடு, நுழைவுத் தேர்வு ரத்து (நுழைவுத் தேர்வு குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்வதற்கு கலைஞர்தானே காரணம்!) என்பதெல்ம் கலைஞர் சாதித்தார் என்பதற்காக சமூகநீதிப் பட்டியலில் சேராதோ!

(6) தனியார்த் துறைகளிலும் ஒதுக்கீடு கோருவது பா.ம.க. மட்டுமே என்று மார்தட்டுகிறார்.

இன்றைக்கு 28 ஆண்டுகளுக்குமுன்பே திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டில் இதுகுறித்து தீர்மானம் தீட்டியது திராவிடர் கழகம் (மதுரை, 2.1.1982) என்பதை மருத்துவர் அறிவாரா?

தொடர்ந்து ஒவ்வொரு மாநாட்டிலும் இதனை வலியுறுத்தி வந்திருக்கிறோம் என்ற தகவல் தெரியுமா? மாநிலம் தழுவிய அளவில் இதற்காகத் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது (17.10.2003) மருத்துவர் இராமதாசு மலைவாசம் சென்றிருந்தாரா?

தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மனு ஒன்றினை திராவிடர் கழகம் அங்கம் வகிக்கும் சமூகநீதிக்கான தேசியக் கவுன்சில் டில்லியில் கூடி (7.4.1994) தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்றும், பதவி உயர்விலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை பின்பற்றவேண்டும் என்றும் தீர்மானித்து, குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோளாகவும் வைக்கப் பட்ட வரலாறு எல்லாம் மதிப்பிற்குரிய மருத்துவர் இராமதாசு அவர்கள் அறியாத நிலையில், வாய்ப்புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்று பேசலாமா?

4.3.2006 அன்று திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டிலும் தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு தேவை என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வற்புறுத்தப்பட்டதே இவற்றை எல்லாம் அறியாமல் ஆணவமாகப் பேசலாமா?

கைக்குட்டை கொடுத்த கனவான் இவர்தானோ!

(7) உச்சநீதிமன்றத்தில் 69 சதவிகித இட ஒதுக் கீடுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தபோது, நீங்கள் சந்தோஷப்பட்டிருக்கவேண்டாமா என்ற வினா தொடுக்கிறார்!

இந்தத் தீர்ப்பு வந்தபோது மானமிகு கலைஞர் அவர்களும், திராவிடர் கழகத்தினராகிய நாங்களும் ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்தபோது, கைக் குட்டை கொண்டுவந்து கொடுத்த கனவான் இவர் தானோ? தான்தான் எனும் முறையில் வழக்கம்போல, அவர் மட்டுமே சந்தோஷத்தைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறார் நம்புங்கள்.

69 விழுக்காடு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதலில் வரவேற்று கருத்துத் தெரிவித்த வர்கள்தான் நாங்கள்!

பன்மொழிப் புலவர் லத்தீப் போட்டு உடைத்தாரே!

ஒரு உண்மையை நினைவூட்டினால் மருத்துவரின் சமூகநீதி ஜாலம் சுக்கல் நூறாக உடைந்து சிதறி விடுமே.

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு என்ற ஆணையை எதிர்த்து முற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உச்சநீதிமன்றம் சென்ற நிலையில், 50 சதவிகிதத்தை எப்படி எட்டினீர்கள்? அதற்கான அளவுகோல் என்ன? அதற்கென்று குழு ஒன்றை நியமித்து அறிக்கை கொடுக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஓய்வு பெற்ற அரசு அதிகாரி அம்பாசங்கர் அய்.ஏ.எஸ். தலைமையில் ஆணையம் அமைக்கப் பட்டதே அந்தக் குழுவின் தலைவர் அம்பாசங்கர் 50 சதவிகிதம் தேவையில்லை என்ற கருத்தைத் தெரிவித்த போது மருத்துவர் ராமதாசு மவுனம் சாதித்தது ஏன்?

சமூகநீதிக்கு எதிராக ஒரு வன்னியர் செயல்பட் டால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டுமா?

சென்னையில் திராவிடர் கழகம் நடத்திய சமூகநீதி மாநாட்டில் (6.11.1993) கலந்துகொண்ட டாக்டர் ராமதாசு அவர்களைப் பார்த்து மறைந்த பன்மொழிப் புலவர் அப்துல் லத்தீப் அவர்கள் நேருக்கு நேர் இந்த வினாவை எழுப்பினாரே சவுகரியமாக மருத்துவர் மறந்திருக்கக் கூடும்.

(8) ஜாதிவாரி கணக்கெடுப்புப் பிரச்சினையிலும் பிரத்தியேக உரிமை கொண்டாடுகிறார். எந்தக் கட்சியாவது இதற்காகப் போராடியதா? என்று வழக்கமான பாணியில் கேள்விக் கணையைத் தொடுத்துள்ளார்.

திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்திடவில்லையா?

ஜாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியதே (10.5.2010). இந்து நாளேட்டில் படமே வந்துள்ளது.

அன்றாடம் ஏடுகளைப் படிக்கும் பழக்கம் மருத்துவருக்கு இல்லை போலும்!

அமைச்சரவையில்
தி.மு.க.வின் குரல்!

நாடாளுமன்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியத்தை தி.மு.க. வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்திலும் தி.மு.க. உறுப்பினர்கள் வலியுறுத்திப் பேசியுள்ளனர். பிரத மருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதம்பற்றி எல்லாம் ஏடுகளிலும் வெளிவந்துள்ளது.

மத்திய அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளும் நிலையில், தனியாக மாநில அரசு ஏன் எடுக்கவேண்டும் கால விரயமும், பொருள் விரயமும் தேவைதானா? இந்தப் புள்ளிவிவரம் இந்திய அளவில் தேவைப்படும் நிலையில், தமிழ்நாடு மட்டும் எடுப்பதில் பிரயோசனம் உண்டா?

வெளியுலகத் தொடர்பே இல்லாமல் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார் என்றுதான் பொதுவானவர்கள் கருதுவார்கள்.

தமது கட்சிபற்றி மருத்துவரின் வாக்குமூலம்...

(9) கொள்கை, இலட்சியம் எல்லாம் தமக்கே உண்டு, தமது கட்சிக்கே உண்டு என்று பேசுவதெல்லாம் உண்மைதானா தமது கட்சியைப்பற்றி மருத்துவரின் கணிப்பு என்ன?

இவ்வளவு பேசுகிறாரே மருத்துவர் மத்திய அரசுத் துறைகளில் வன்னியருக்கு 2 சதவிகிதம் இட ஒதுக்கீடு என்று தொடங்கினாரே அதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்ன?

மத்திய அமைச்சரவையிலும் இவர் கட்சி இடம் பெற்றதே ஒரு எள் மூக்கு முனையளவாவது அசைத்ததுண்டா? தி.மு.க. என்றால் மட்டும் இளக்காரமா?

இன்றைக்குத் தமிழ்நாட்டுல எந்தக் கட்சி கொள்கைக்காக நடக்குது? எங்கள் கட்சி உள்பட. எல்லாத்துக்குமே அரசியல் ஆதாயம் ஒண்ணுதான் அடிப்படை! (ஆனந்தவிகடன், 13.9.1998)

எங்களிடம் கொள்கை இல்லை அரசியல் ஆதாயமே எங்களின் அடிப்படை என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டு, வீராப்பு பேசுவதில் என்ன பயன்?

மருத்துவரே, முதலில் உங்களைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள்.

சென்னை

20.8.2010

தலைவர்,
திராவிடர் கழகம்.


தி.க.வுக்கும் பா.ம.க.வுக்கும்
உள்ள வித்தியாசம்

திராவிடர் கழகத்திற்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இது ஓட்டுப் பொறுக்குகிற கட்சி; அவ்வளவுதான். ஓட்டுப் பொறுக்குகிற வேலையையும் சற்று நிறுத்தி வைத்து விட்டு, திராவிடர் கழகத்தின் பின்னாலே வருவதற்கு நாங்கள் என்றைக்கும் தயாராக இருக்கிறோம்.

(சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சமூகநீதி ஆதரவு மதவெறி ஆதிக்க எதிர்ப்பு மாநாட்டில் மருத்துவர் ராமதாசு, 6.11.1993).

அந்த மருத்துவர் ராமதாசு எங்கே?

இந்த மருத்துவர் ராமதாசு எங்கே?

-------------------------------------------------------------------------------------------------

------------------" விடுதலை” 20-8-2010

1 comments:

Unknown said...

நண்டுகள் ஒன்றை ஒன்று,கீழே இழுக்கும்! ஒரு பிராணி, தன் இனத்தை பார்த்தே குரைத்து, சண்டைக்குப் போகும்!