Search This Blog

4.8.10

பெரியார் பார்வையில் குழந்தை வளர்ப்பும் சுகாதாரமும்
நமது நாட்டு மக்களில் 100க்கு 95 பேர் சுகாதாரத்தின் பயனை யறியாதவர்களாயும் அதையறிந்து கொள்ள வேண்டுமென்னும் அக்கறையில்லாதவர்களாயுமிருக்கின்றார்கள். காரணம் படிப்பின்மையும், பழக்க வழக்கமுமேயாகும். இதையனுசரித்தே மேல் நாட்டார் நம்மை சுகாதாரமற்றவர்கள் என்றும், நாகரிகமற்றவர்கள் என்றும் நினைக்கிறார்கள். நம் நாட்டிலும் மேல் ஜாதிக்காரர்கள் என்போர் தங்களை நாகரிகஸ்தர் என்றும், சுகாதாரமுடையவர்கள் என்றும் நினைத்துக் கொண்டு, மற்றவர்களை சுகாதாரமற்றவர்கள் என்றும் நாகரிகமற்றவர்கள் என்றும் தாழ்ந்த ஜாதியார்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள். சுகாதாரமின்மையாலேயே ஒரு கூட்டத்தாரைத் தாழ்த்தப்பட்டவர்கள் என்று காரணமும் தத்துவார்த்தமும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சுகாதாரத்தைக் கைக் கொள்ளாத தாழ்த்தப்பட்ட மக்களை சுகாதாரத்தைக் கைக் கொள்ள முடியாமல் கிணறு, குளம், நல்ல வாழ்க்கை முதலியவைகளை கடவுள் பேராலும் மதத்தின் பேராலும் தடைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. நம்மில் அத்தகைய இழிவும் தடையும் கற்பிக்கும் மக்களின் கெட்ட எண்ணத்தையும், அதன் பயனாய் சுகாதார வசதியை அனுபவிக்க முடியாமல் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கப்பட்டிருக்கும் மக்களின் பரிதாப நிலைமையையும் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். இந்த விஷயத்தில் "சுகாதாரம்" என்பதற்கு ஏற்பட்டுள்ள பெரும் தடையை ஒழிக்க சுகாதார இலாகா அதிகாரிகளும், அரசாங்கமும் தக்க சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

மேல் நாட்டினர் தங்கள் வாழ்க்கையில் சுகாதாரத்தை அடிப் படையாகக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய வாழ்க்கையில் உடை, உணவு, வீடு, வாசல், பானம், நல்ல காற்று, சுத்தமான தேகம் ஆகியவைகளில் கண்ணுங்கருத்துமா யிருப்பார்கள். எனது ஐரோப்பா யாத்திரையில் லண்டனிலிருந்து 270 மைல் தூரத்திலிருக்கும் ஒரு கிராமத்தில் ஒரு தொழிலாளி வீட்டில் ஒரு நாள் தங்கினேன். நான் தங்கியிருந்த வீட்டில் ஒரு சிறுபையன் இருந்தான். அவனுடைய அம்மாளும் அக்காளும் ஆக மூவரும் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று பையன் வெளியில் ஓடினான். பிறகு வெகுநேரம் வரவில்லை. பிறகு பையன் எங்கே என்று நான் கேட்டேன். உடனே அவன் அக்காள் வெளியில் சென்று அவனைத் தேடி பிடித்து வந்தாள். பேசிக் கொண்டிருக்க இருக்கத் திடீரென்று வெளியில் போன காரணம் என்ன என்று கேட்டதற்கு "நான் நல்ல காற்று உட்கொள்ள வெளியில் போய் உலாவி வந்தேன்" என்று பதில் சொன்னான். இது அவன் ஒரு சாக்குக்காக சொல்லி இருக்கலாம் என்றாலும் 5 வயது பையன் நல்ல காற்று கெட்ட காற்று என்பதை உணர்ந்திருக்கிறான் என்பது கவனிக்கத்தக்கதாகும். எந்த வேலையிருந்தாலும், காலா காலங்களில் சுகாதாரத்தைக் கைகொள்ளுவதில் மேல் நாட்டில் சிறுவர்கள் முதல் கவலை கொண்டிருக்கிறார்கள் என்பது இதனால் தெரிகிறது. நம்நாட்டுப் படிப்பில் சுகாதார வாசமே இல்லை. நம்நாட்டிற்கு ஆண் பெண் அடங்கலும் அனேகர் சுகாதாரம் இன்னதென்பதையறியாமலும், கொஞ்ச நஞ்சம் கேள்விப் பட்டாலும் அதை பொருட்படுத்தாமலுமே தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். வீதிகளில் பெரும் அசுத்தம் செய்கின்றனர். கொஞ்சம் படித்த பெண்களும் கூட தங்கள் வீடு வாசல்களைச் சுகாதார முறைப்படி சுத்தமாய் வைத்துக் கொள்வதில்லை.

பொதுவாகவே மேல் நாட்டினர் தங்கள் வாழ்க்கையில் சுத்தத்தையும், சுகாதாரத்தையும் அடிப்படையாகக் கொண்டு அதற்கேற்றபடி நடந்து வருவதனால் வியாதிகளின் தொல்லைக்காளாகாமலும், சுகஜீவிகளாகவும் உலகில் அதிக நாள் வாழ்கிறார்கள். நம் நாட்டு ஜனங்களோ, வியாதி ஏற்படுவதும், மரணம் சம்பவிப்பதும் தங்கள் தங்கள் தலை விதியென்றும், அவரவர் கேட்டு வந்த வரம் என்றும் நினைத்துக் கொண்டு, தங்கள் அஜாக்கிரதையினாலும் சுகாதாரமின்மையினாலும் ஏற்படும் வியாதிகட்குத் தகுந்த வைத்திய சிகிச்சையும் செய்யாமல் கடவுளுக்குக் காணிக்கை எடுத்து முடிந்து வைப்பதும், விபூதி மந்திரித்துப் போடுவதும் இன்னும் பல வேண்டுதலைச் செய்து கொள்ளுவதும் கடைசியில் மரணம் ஏற்பட்டால் அவ்வளவு தான் அவனுக்கு ஆயுசு என்று முடிவு கட்டியும் விடுகிறார்கள். அஜீரணத்தினால் ஏற்படும் காலரா வியாதியை மகாமாரி என்று கொண்டாடுகிறார்கள். அதோடு நம் நாட்டில் பண்டிகைகளும், உற்சவங்களும் அநேகம். அதைப் பார்க்கச் செல்லும் ஜனக் கூட்டமும் ஏராளம். உற்சவம் நடக்குமிடங்களில் தான் வியாதிகள் உற்பத்தியாகின்றன. பிறகு அவைகள் அங்கிருந்து பல ஜனங்களின் மூலம் பல ஊர்களுக்குப் பரவுகிறது. இவ்வித மூடநம்பிக்கையும் அறியாமையும் உடைய ஜனங்கள் வியாதி வராமல் தடுக்க சுகாதாரத்தைக் கைக்கொள்ள வேண்டுமென்றால் அது இம்மாதிரி ஒரு நாள் இரண்டு நாளில் நடக்கும் கொண்டாட்டத்தினால் கொஞ்சமும் பலனளிக்காது. இந்தக் கொண்டாட்டத்தோடு சுகாதாரப் பிரசாரம் பூர்த்தியடைந்து விட்டதெனக் கருதக் கூடாது. நகர சபையார் ஜனங்களின் மனப்பான்மைக் கொத்தபடி முக்கியமாய் பெண்களுக்குப் பெண்டிர்களைக் கொண்டும், பெண் போதகர்களைக் கொண்டும் அடிக்கடி சுகாதார போதனை செய்து வரவேண்டும். சாதாரண ஜனங்கள் இதுவும் ஒரு சர்க்கார் பண்டிகை என்றே நினைப்பார்கள். இந்தக் கொண்டாட்டம் தீர்ந்தவுடன் நான் எதிர்பார்க்கும் புதிய முறைச் சுகாதாரப் பிரசாரம் நடத்தி வரவும், பொதுவாக தெருக்களிலும் பொது ஜாகாக்களிலும், குழாய் ஸ்தலங்களிலும் எந்தவித அசுத்தமும் நேராதபடி புதிய திட்டத்தில் முனிசிபல் கமிஷனர் சுகாதாரத்தை அமுலுக்குக் கொண்டு வருவார் என்று ஆசையுடன் எதிர்பார்க்கிறேன். அந்தப்படி செய்வதில் சில பணக்காரர் சுயநலக்காரரின் வருத்தம் ஏற்படலாம். அவற்றை லக்ஷியம் செய்யாமல் ஊர் பொது நன்மையே பெரிது எனப் பாவித்து நடுநிலைமையில் நல்ல ஏற்பாடு நடைபெறும் என்று நம்பி எதிர்பார்க்கிறேன்.

குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு விஷயத்தில் நம் நாட்டு மக்களுக்குக் கொஞ்சமும் கவலையே கிடையாது. குழந்தை வளர்ப்பு விஷயத்தில் அந்தந்த தாய் தகப்பன்மார்களைவிட அரசாங்கம் அதிக அக்கரை யெடுத்துக்கொள்ள வேண்டும். மேல்நாட்டில் ஒவ்வொரு நகரத்திலும் குழந்தை வளர்ப்புக்கென பொதுவிடங்கள் அமைத்து அங்கு சில ஆயிமார்களை நியமித்து சுகாதார முறைப்படி குழந்தைகள் வளர்க்கப்படு கின்றன. மற்றும் சில குடும்பத்தார்கள் தங்கள் தங்கள் சொந்த பொறுப்பிலும் ஆய்மார்களை நியமித்து குழந்தைகளை மிகவும் தேகாரோக்கியமாக வளர்க்கின்றனர். சுருங்கக் கூறில் மேல்நாட்டில் ஏழை முதல் எல்லாப் பணக்காரர் வீட்டுக் குழந்தைகளும் ஆய்மார்கள் மூலமாகவே வளர்கின்றன. மேல்நாட்டில் நான் பார்த்த ஒரு சாதாரண குடும்பத்தில் ஒரு குழந்தையின் தாய் தன் குழந்தையை வேறு ஒரு ஆயா வசம் வளர்க்க ஒப்புவித்துவிட்டுத் தான் வேறு ஒரு வீட்டுக் குழந்தையை வளர்க்கும் வேலையில் அமர்ந்திருந்தாள். இதற்குக் காரணம் என்ன வென்று கேட்டதில் தன் குழந்தையை வளர்க்கத் தான் மாதம் 20 ரூபாய் சம்பளம் கொடுப்பதாகவும், தான் வளர்க்கும் குழந்தையின் பெற்றோர் தனக்கு மாதம் 60 ரூபாய் சம்பளம் கொடுப்பதாகவும் அந்த அம்மாள் சொன்னார். இந்தப்படி மேல் நாட்டார்கள் குழந்தைகளை ஆய்மார்கள் மூலம் வளர்ப்பதால் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் தனித்தனியே சுகாதாரமும் தேகாரோக்யமும் நல்ல வாழ்வும் ஏற்படுகின்றன. நம் நாட்டிலோ அந்த வழக்கமில்லை. நம் நாட்டுப் பெண்கள் குழந்தைகள் பெறும் விஷயத்திலும், வளர்க்கும் விஷயத்திலும் இன்னும் மிருகப் பிராயத்திலேயே இருந்து வருகிறார்கள். மற்ற விஷயங்களைவிட இந்தக் குழந்தை பிரசவ விஷயமும், பின் குழந்தைகள் வளர்ப்பு விஷயமும் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியதாகும். அதோடு பிரசவ பெண்கள் பிரசவத்துக்கு முன்னும் பின்னும், பிரசவ காலத்திலும் நடந்து கொள்ள வேண்டிய விஷயத்தை அவர்களுக்கு நாம் நன்கு எடுத்துரைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

-------------------- 20.11.1934ல் ஈரோடு வள்ளுவர் புது வீதி முனிசிபல் சிசு பரிபாலன விடுதி முன் நடந்த ஈரோடு சுகாதார கல்வி வாரக் கொண்டாட்ட நிகழ்வில் ஆற்றிய உரை. “பகுத்தறிவு” 25.11.1934

2 comments:

அ.முத்து பிரகாஷ் said...

// உற்சவம் நடக்குமிடங்களில் தான் வியாதிகள் உற்பத்தியாகின்றன //
எல்லா வியாதிகளும் தான் ...(உடல் மற்றும் சமூக )

இனிய இரவு தோழர் ...!

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழர் நியோ