Search This Blog

7.8.10

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு எந்த நாளோ!

தீர்ப்பு வருகிறது!


1992 டிசம்பர் 6ஆம் தேதி அத்வானி தலைமையில் சங்பரிவார் வன்முறைக் கும்பலால் இடிக்கப்பட்டது _ 450 ஆண்டு கால வரலாறு படைத்த அயோத்தி பாபர் மசூதி. 18 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. இடைக் காலத்தில் இவர்கள் இந்தியாவின் பிரதமர், துணைப் பிரதமர் பதவி நாற்காலிகளில்கூட அமர்ந்துவிட்டனர். பலர் மத்திய அமைச்சர்களாகவும், மாநில முதல் அமைச்சர்களாகவும் படாடோபமாகப் பவனி வந்தனர். இந்தியாவில் பெரிய பதவிகளை அலங்கரிக்க வேண்டுமானால் பெரிய பெரிய கிரிமினல் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் போலும்!

இந்தியத் துணைக் கண்டத்தில் நிருவாகமும், நீதித்துறையும் எந்த அளவுக்குக் கிரிசை கெட்டுப் போய் விட்டன என்பதற்கு இந்த வழக்கு ஒன்று போதாதா?

அடேயப்பா! மற்றவர்கள் விடயத்தில் இந்த பி.ஜே.பி., சங்பரிவார்க் கும்பல் பேசும் வக்கணையிருக்கிறதே அது வண்டி வண்டியாகவே இருக்கும்.

ஆனால் அவர்களுக்கென்று வரும்போது தலைப்பு மாற்றிப் பேச ஆரம்பித்து விடுவார்கள்.

துக்ளக் சோ ராமசாமிகளும், குருமூர்த்திகளும் முடியைப் பிளந்து எழுவார்கள் முஷ்டியைத் தூக்கிப் பேசுவார்கள்.

பாபர் மசூதி இடம் யாருக்கு உரிமையுடையது என்ற வழக்கு 1960ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

1949ஆம் ஆண்டு டிசம்பர் 22 அன்று நள்ளிரவில் இந்த ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா கும்பல் திருட்டுத்தனமாக பாபர் மசூதி இருக்கும் வளாகத்துக்குள் புகுந்து ராமன்,லட்சமணன், சீதை மற்றும் அனுமான் சிலைகளை வைத்துவிட்டனர்.

நியாயமான நிருவாகம் நாட்டில் நடக்கிறது என்றால் என்ன செய்திருக்க வேண்டும்? திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட அந்தச் சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.

ஆனால் நடந்ததோ வேறு! இரண்டு அர்ச்சகர்கள் நாள்தோறும் சென்று அந்தச் சிலைகளுக்குப் பூஜை நடத்த உத்தரவு பிறப்பித்தார் மாவட்ட ஆட்சியர்.

இதனை எதிர்த்து முசுலிம்கள் தொடர்ந்த வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

1986 பிப்ரவரி 2இல் இன்னொரு விபரீதம் நடந்தது. பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் உமேசு சந்திரபாண்டே என்பவரால் தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட நீதிபதி கே.எம். பாண்டே ஓர் ஆணை பிறப்பித்தார்.

பாபர் மசூதி பூட்டை உடைத்து ராம பக்தர்கள் உள்ளே சென்று வழிபட அனுமதித்ததுதான் அந்த உத்தரவு.

பகவான் காரியமல்லவா அதற்காக எதைச் செய்தாலும் பாவம் ஆகாதே!

ஒட்டகத்தைக் கூடாரத்தில் நுழைய அனுமதித்தால் அதன்பின் அந்தக் கூடாரம் ஒட்டகத்தின் ஒட்டு மொத்த உடைமைதானே!

பாபர் மசூதிக்குள் காலடி வைத்த காலாடிகள் 1992 டிசம்பர் ஆறாம் நாளில் அதனை அடித்தே நொறுக்கி விட்டார்கள்.

பட்டப் பகலிலேயே பகிரங்கமாக நடந்த பயங்கரம் அது!

49 பேர்கள்மீது குற்றப் பத்திரிகை. சாதாரண குற்றங்கள் அல்ல. குற்றப் பிரிவு (இ.பி.கோ) 147, 153(ஏ) 149, 153(பி) மற்றும் 505.

கலகம் விளைவித்தல், மதக் குரோத உணர்வைத் தூண்டுதல், சட்ட விரோதமாகக் கூடுதல், தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவித்தல் _ ஒரு சமுதாயத்துக்கு விரோதமாகக் குற்றஞ் செய்யத் தூண்டுதல், மக்களிடையே பீதியை ஏற்படுத்துதல் என்கிற பிரிவுகளின்கீழ் இவர்கள்மீது குற்றச்சாற்று!

எல்.கே. அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி, வினய் கட்டியார், வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர் விஷ்ணுஹரி டால்மியா, சாத்வி ரீதாம்பரா உள்ளிட்ட 49 பேர்கள் மீது குற்றப் பத்திரிகை.

சாட்சியங்கள் மிகப் பலமாக இருக்கின்றன. வீடியோ க(ச)ட்சிகள் உண்டு.

பாபர் மசூதியை இடிக்கத் தூண்டும் அத்வானிகளின் உரைகள் அதில் உண்டு.

அத்வானியுடன் பாதுகாப்புக்குச் சென்ற அய்.பி.எஸ். அதிகாரி அஞ்சுகுப்தா என்ற அம்மையார் ரேபரேலி சி.பி.அய். சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சிக் கூண்டில் ஏறி, நடந்ததை அப்படியே வெளிப்படுத்தினார். அத்வானி உள்ளிட்டோர் பாபர் மசூதியை இடிக்கத் தூண்டும் வகையில் பேசினார்கள் என்று விலாவாரியாகப் பிளந்து தள்ளி விட்டாரே! (தினமணி 27.3.2010)

வாஜ்பேயி மட்டும் விதி விலக்கா? பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முதல் நாள் (5.12.1992). லக்னோவில் வாஜ்பேயி என்ன பேசினார்?

அயோத்தியில் நாளை நடைபெறும் கரசேவையின்போது என்ன நடக்கும் என்று எனக்கே தெரியாது. முட்களைப் போன்ற கற்களின்மீது நின்று கொண்டு பக்திப் பாடல்களைப் பாட முடியாது. அமைதியாக உட்கார்ந்து பாடுவதற்கு ஏற்ற வகையில் மண்ணை சமன் செய்ய வேண்டும் என்று பேசினாரே!

கவிஞர் அல்லவா தளுக்காகப் பேசினார். பாபர் மசூதியை நொறுக்கிச் சமன் செய்து அதன்மேல் அமர்ந்து கொண்டு பஜனை பாட வேண்டுமாம்.

இருப்பதிலேயே யோக்கியமான, அமைதியான மனிதரின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளான வன்முறை வெடிகுண்டுகள் இவை!

பாபர் மசூதி இடிப்பில் வாஜ்பேயிக்கு சம்பந்தம் உண்டா என்ற ஆராய்ச்சிக் கடலில் நாம் முழுக வேண்டாம்! விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவர் அசோக் சிங்காலே வாஜ்பேயியின் சம்பந்தத்தைக் கறாராகச் சொல்லி விட்டாரே!

ஏதோ ஒரு மூலையில் அல்ல; இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில் செய்தியாளர்களிடத்திலேயே கூறியது _ உண்டா இல்லையா?

நீதிபதி லிபரான் ஆணையத்தின் அறிக்கை யிலும் பாபர் மசூதி இடிப்பில் வாஜ்பேயிக்குச் சம்பந்தம் உண்டு என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பிஜேபியினர் துள்ளிக் குதிக்கவில்லையா? ரகளையில் ஈடுபடவில்லையா? (23.11.2009).

இதற்கு மேலும் வலுவான தன்னிலை ஒப்புதல் வாக்குமூலம் ஒன்று உண்டு.

யாருடைய ஒப்புதல் வாக்குமூலம்? நாடாளுமன்றத்தின் மக்களவையின் பா.ஜ.க.வின் தலைவர் சுஷ்மா சுவராஜ் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தி விட்டாரே!

ஆம்! பாபர் மசூதியை இடித்தது நாங்கள் தான்! தண்டனை ஏற்கத் தயார்! தயார்! உங்களால் எங்களைத் தண்டிக்க முடியுமா? முடிந்தால் தண்டித்துப் பாருங்கள்! என்று நாடாளுமன்றத் திலேயே நாதடிக்க முழங்கு முழங்கு என்று முழங்கினாரா இல்லையா?

(தினமலர் 9.12.2009 _ பக்கம் 11)

லிபரான் ஆணையத்தின் அறிக்கையும் நீண்ட கால விசாரணைக்குப் பிறகு அளிக்கப்பட்டு விட்டது.

தீர்ப்பு எப்பொழுது கிடைக்கும் என்று தெரியவில்லை.

இதற்கிடையே இன்னொரு தீர்ப்பு வரும் செப்டம்பர் இறுதியில் வரவிருக்கிறது. பாபர் மசூதி இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கின் தீர்ப்புதான் அது.

இந்த வழக்கில் இந்துக்கள் சார்பாக 54 சாட்சிகளும், முசுலிம்கள் சார்பாக 33 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

முசுலிம்கள் தரப்பு சாட்சிகளில் பெரும்பாலோர் இந்துக்கள் என்பது கோடிட்டுக் காட்டத் தக்கதாகும்.

முசுலிம்கள் சார்பாக பிரபல வழக்கறிஞர் ஜவர்யாப் ஜீலானி வாதாடியுள்ளார்.

செப்டம்பர் 15 க்குப் பிறகு எந்த நேரத்திலும் தீர்ப்பு வெளியாகலாம்.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு எந்த நாளோ!

----------------மின்சாரம் அவர்கள் 7-8-2010 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

0 comments: