Search This Blog

9.8.10

கோயில்களும் - கடவுள்களும்


குலத் தலைவர்கள் ராஜாக்களாக வளர்ந்து வந்தனரல்லவா? அவர்களு டன் புரோகிதர்களும் (பண்பாட்டு ஆதிக்கத்தைப் பெற்றிருந்தவர்கள்) வளர்ந்து வந்தனர். சில குலங்களில், ஒருவேளை, பல குலங்களிலும் ஒரு கட்டத்தில் குலத் தலைவரே நல்ல போர் வீரராகவும், நல்ல புரோகிதராகவும், நல்ல ஆட்சியாளராகவும் ஒருங்கே அமைவது இயல்பாக இருந்தது.

இத்தகையவர்கள் வாழ்ந்திருக்கும் பொழுதே தங்களுடைய சிலைகளையும் உருவங்களையும் உருவாக்கி அவற்றை வழிபடுகின்ற மய்யங்களை உண்டாக் கினர்.

எகிப்தில்தான் இது முதன்முதலாக உண்டானதாகக் கருதப்படுகின்றது.

நோவாவின் யாகபீடம் ஒரு கோயிலாக இருக்கவில்லை. ஆபிரகாம் அதனைச் சீர்ப்படுத்தியதாகச் சொல்லும்பொழுது அது ஒரு கோயிலாக இருக்கவில்லை.

ஆரியர்களுடைய யாக பூமியும் ஒரு கோயிலாக இல்லை.

க்ஷேத்ரம் (கோயில்) என்றால், சமஸ்கிருத மொழியில் வயல், விளைச்சல் நிலம், இருப்பிடம் என்றெல்லாம் பொருள்.

உணவைத் தேடுவதில் ஈடுபட்ட மனிதன், உணவை உற்பத்தி செய்ப வனாக வளர்ந்தது பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகுதான். அது விவசாயத்துடன்தான் ஆரம்பித்தது. விவசாயம் வளர்ச்சியடைந்த பிறகு தான் அவன் நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கத் தொடங்கினான்.

விவசாயம் வளர்ந்து வந்த ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் கோயில்கள் தோன்றின. கட்டடம் கட்டுதலும் வாஸ்து சிற்பமெல்லாம் அதனுடன் வளரவேண்டிய நிலையும் ஏற்பட்டது.

பூமியை அளந்து கணக்கிடுகின்ற க்ஷேத்ர பலன், க்ஷேத்ர கணிதம் முதலிய வையும் இதனுடன் வளரத் துவங்கின.

சமுதாயத்தில் விவசாயத்தின் ஆரம்பம், பெரிய முன்னேற்றத்தின் விடியலாக இருந்தது.

இந்தச் சூழ்நிலையில்தான் க்ஷேத்ரங்கள் கோயில்களாக ஆயின. தனியுடைமைச் சொத்து முறை வளர்ந்து வரவும் செய்தது.

எகிப்திலுள்ள ஃபரோவர்கள் தங்களைத் தாங்களே கடவுள்களாக்கி வழிபடுகின்ற கோயில்களைக் கட்டி னர்.

அவர்கள் தங்களைக் கடவுள் என்றும் கடவுளின் அவதாரம் என்றும் கடவுளின் தூதர்கள் என்றும் சூழ் நிலைக்கேற்ப பிரச்சாரம் செய்து மக்களிடையே வழிபாட்டு வழக்கத்தை வளர்த்தனர்.

இத்தகையவர்கள் இறந்தால் அவர்களை அடக்கம் செய்ததும் ஒருவகை கோயில்களில்தான். அவை தான் பிரமிடுகள். அவற்றின் உள்ளே உடல்களை மம்மிகளாக ஆக்கி வைத்து, அதற்கு உணவையும் ஆயுதங்களையும் அரச மரியாதைக்குரிய பொருள்களை யும் அருகில் வைத்துதான் அடக்கம் செய்தனர்.

ஏறத்தாழ கி.மு. மூன்றாம் நூற்றாண் டில்தான் எகிப்தில் இந்த முறை ஆரம் பித்தது.

எகிப்திலும், சீனாவிலும் ஆப்பிரிக்காவிலுள்ள வேறு சில நாடுகளிலும் இத்தகைய ஏற்பாடுகள் இருந்ததாகத் தெரிகின்றது.

இந்தக் கோயில்களுக்குச் சொத் துக்களையும் பிற வசதிகளையும் செய்து கொடுத்தனர்.

இந்தியாவில் புத்த விகாரங்கள் தான் கோயில்கள் உருவாக ஊக்கம் அளித்தன.

ரிக் வேதத்தில் கூறப்படுகின்ற யாகங்களுக்காக அமைக்கப்பட்ட யாக வேதிகள்தான் கோயில்களுடைய தொடக்கம் என்று சிலர் உரிமை கொண்டாடுவதுண்டு. ஆனால் இதுவே உண்மையென்று நிரூபிக்கப்படவில்லை. இப்பொழுது வங்காள தேசத்தைச் சேர்ந்த சிட்டாங்குக்கு அருகிலுள்ள நாகரியிலும், பஸ் நகரிலும் தான் இந்தியாவின் மிகப் பழைமையான கோயிலின் இடிபாடுகள் கண்டுபிடிக் கப்பட்டன.

கிறிஸ்துவுக்கு முன்பு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை இவையென ஊகிக்கின்றனர். ஒழுங்கான வட்ட வடிவில் அமைந்த சிறிய கோயில் கள் இவை. மரமும் களிமண்ணும் பயன் படுத்தி மேல் தளம் அமைக்கப்பட்டு உள்ளது. மண்டபமும் கர்ப்பக்கிருகமும் வலம் வரும் அமைப்பும் சேர்ந்ததே கோயில். விஷ்ணு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப் படுகின்றது.

கோயில்கள் எகிப்திலும், பாபிலோ னியாவிலும் உருவாகின்ற காலத்தில் ஒவ்வொரு பிரதேசங்களிலும் பண்டைய மதங்கள் உருக்கொண்டிருந்தன. இந்த மதங்களுடைய தலைமையிடத்தில் சர் வாதிகாரியாக இருந்தவர்கள் அந்தந்தப் பிரதேச ஆட்சியாளர்கள்தான். அவர்கள் மன்னராகவும், குலத் தலைவராகவும், படைத் தலைவராகவும் ஒருங்கே இருந்தனர். சவுலும், தாவீதும் இதற்கு எடுத்துக் காட்டுகளாவர்.

இந்தக் கோயில்களில் சிலைகளாக வைக்கப்பட்டிருந்தது மன்னரோ, அந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களேதான். சமூக அமைப்பின் பொருளாதார இயல்பு, அடிமைஉடைமை நிலைதான். கோயில்களிலுள்ள கடவுள்கள் உடைமை வர்க் கத்தின் சின்னமாகவும் உருப்பெறவும் செய்தன. இது மிகவும் இயல்பான ஒரு பரிணாம வளர்ச்சியாகவே இருந்தது.

ஆரம்பகால ஒரு கடவுள் நம்பிக்கை அக்னாதோண் ஃபரோவாவின் ஆட் சிக் காலத்தில்தான் தோன்றியது. அவர் அம்மன் ஃபோட்டப் என்ற பட்டப் பெயருடைய எகிப்தின் வலிமை பெற்ற பேரரசராக இருந்தார். கி.மு. 1424 முதல் 1388 வரைதான் இவருடைய ஆட்சிக் காலம் என்று கருதப்படுகின்றது. அட்டோண் என்று அழைக்கப்படுகின்ற சூரிய கடவுள்தான் அவர் பரப்பிய ஒரே கடவுள். அந்த சூரிய கடவுளின் அருமைக்குரிய வாரிசுதான் தான் என்று அவர் பிரச்சாரம் செய்தார். பல கடவுள் வழிபாட்டை அவர் அழிக்க முயன்றார்.

முன்பே சூரியக் கடவுள் மற்ற கடவுள்களுடன் சேர்ந்து வழிபடப்பட்டு வந்தது. இப்பொழுது அவற்றையெல்லாம் புறக்கணித்துக் கொண்டு சூரியன், ஒரு கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து மித்ர மதம் ஒரு பெரிய சக்தியாக வளர்ந்தது.

இந்தச் சூழ்நிலையிலிருந்துதான் யூத மதமும், யூத குலத்தின் தனிக் கடவுளான யஹோவா என்ற ஒரு கடவுள் உணர்வும் பிறந்தது.

---------------------மதமும் பகுத்தறிவும் நூலிலிருந்து

0 comments: