Search This Blog

10.8.10

இதுவும் கடவுள் சித்தமோ?


விளைவு இல்லாத காரணத்தால் மற்றும் பொருள் உற்பத்தி இல்லாத காரணத்தால் மக்கள் பட்டினி கிடப்பது ஒருசமயம் கடவுள் சித்தமாக இருக்கலாம். ஆனால், ஏதேஷ்டமாய் விளைந்து தாராள மாய் பொருள்கள் உற்பத்தி ஆகி இருக்கின்ற காலத்திலும் மக்கள் பட்டினி கிடந்து கஷ்டப்பட வேண்டுமானால் இது யாருடைய செயல் என்று ஆஸ்திகர்கள் சொல்லுவார்களோ தெரியவில்லை!

பொருளாதார நிபுணர்கள் அடங்கிய நாடாகவும், உலகிற்கு பொருளாதார சாஸ்திரம் கற்பிக்கின்றவர்களைக் கொண்ட நாடாகவும் உள்ள அய்ரோப்பா, அமெ ரிக்கா நாடுகள் இன்று மக்கள் வேலையில்லாமல் திண்டாடுவது ஒரு பக்கமும், போதிய ஆகாரமில்லாமல் பட்டினி கிடப் பது என்பது மற்றொரு பக்கமுமாக இருந்து கஷ்டப்பட்டு வருகிறார்கள். இந்தப்படி இவர் கஷ்டப்படுவது ஒருபுறமிருக்க மற் றொரு புறத்தில் மக்கள் உணவுக்கேற்ற விளை பொருள்களை நெருப்பிலும், பூமி யிலும், சமுத்திரத்திலும் கொட்டி நாசமாக்கி வருகிறார்களாம். இதைப் பற்றி தமிழ் நேசன் என்னும் பத்திரிகையில் சில குறிப்புகள் காணப்படுவதைக் கீழே குறிப் பிடுகின்றோம்:

நாட்டில் ஏராளமான உணவுப் பொருட்கள் மலிந்து கிடக்கையில் அநேகர் பட்டினி யால் வாடுவதேன்? வேலையின்றித் தவிப்ப தேன்? பெரிய செல்வாதார நிபுணர்களடங் கிய இங்கிலாந்தில் அரசாங்கத்தாரிடம் பிச்சை வாங்கிப் பிழைக்க லட்சக்கணக்கான ஜனங்கள் இருக்க வேண்டுவதேன்?

அதிகமான உற்பத்தியிருக்கின்றது. ஜனங்களுடைய தேவைக்கு மேல் ஆகாரப் பொருட்கள் அதிகமாய்க் குவிந்து கிடக்கையில் அவற்றிற்கெதிரில் கணக்கில்லா ஜனங்கள் ஆகாரத்தைப் பார்த்துக் கொண்டே பட்டினியால் வாடுகின்றனர்.

இது மாத்திரமா? இந்தப் பொருட் கள் அதிகமாய் விளைந்து விட்டன வென்று அவற்றை அழிக்கவும் செய் கிறார்கள். ஏன்? அவற்றை உற்பத்தி செய்தவர்கட்குப் போதிய விலை கிடைக்கவில்லையாம்

கடவுளால் அளிக்கப்பட்ட விளை பொருட்களை அழிக்க முற்படுவது என்றால், மனிதரின் போக்கை என்ன வென்று சொல்லுவது? முதலாளிமார்கள் தங்களுக்கு லாபம் கிடைக்கவில்லை யென்று சாதாரண ஜனங்களுக்கு உபயோகக் கூடிய ஆகாரப் பொருட்களை யும் பிறவற்றையும் அழித்திருக்கின்றனர். அவ்வாறு அழித்து வந்திருப்பதன் கணக்கைப் பாருங்கள்.

அமெரிக்காவில் (அய்க்கிய நாடுகள்)

புளோரிடாப் பகுதியில் காரட் கிழங்கு உற்பத்தி முழுவதையும் பூமியில் புதைத்து விட்டார்கள்.

ஆண் பன்றிகள் 6,200,000, பெண் பன்றிகள் 20,000 ஆகிய இவைகளை அழித்து விட்டார்கள்.

ஈஜிப்ட் என்னும் எகிப்து தேசத்தில் ஏராளமான பருத்தியை அழித்து விட்டார்கள்.

கனடாவில் ஏராளமான கோதுமையை அடுப்பெரித்து விட்டார்கள்.

பிரேசிலில் 270 லட்சம் மூட்டை காப்பியை அழித்து விட்டார்கள்.

சிலியில் 225,000 ஆடுகள், டச்சு கிழக்கிந்திய நாடுகளில் பல நூறு டன் கறுவாச் சாமான்களை அழித்து விட்டார் கள்.

அலாஸ்கா, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ் முதலிய நாடுகளில் பிடிக்கப் பட்ட மீன்களை மறுபடியும் கடலில் போட்டு விட்டார்கள்.

இவற்றை ஏழைகளுக்கும், நோயாளி களுக்கும் கொடுத்துதவலாகாதா?

அமெரிக்காவில் விவசாயப் பொருட் களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டு மென்று ஏராளமான காணிக்காரர் களுக்கு நஷ்ட ஈடு கொடுத்துப் பயிர் செய்யாது விடும்படி அமெரிக்க அரசாங் கத்தார் செய்திருக்கிறார்கள்.

பிரான்ஸ் தேசத்தில் நூல் நூற்கும் தொழிற் சாலைகளில் உற்பத்தி குறைவதற் காக 40,000 கதிர்களை அரசாங்கத்தார் தீயிலிட்டிருக்கின்றனர்.

செல்வ நூல் சாஸ்திரத்தின் பேரால் மேற் சொல்லிய அக்கிரமங்கள் செய்யப் பட்டிருக்கின்றன.

ஆகாரச் சாமான்களை அழிக்கக் கூடா தென்று பிரஞ்சுப் பார்லிமெண்டு சபை 1932ம் வருஷம் ஜனவரி மாதம் 19ந் தேதி கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோற் றுப் போயிற்று. எனவே, இவ்விதக் காரியங்களுக்கெல்லாம் காரணம் யார் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை.

ஆனால், பஞ்சமும், பட்டினியும் கடவுளால் ஏற்படுகின்றன என்று மதக் குருக்கள் மக்களுக்குப் போதிக்கிறார்கள். இதில் இருக்கும் நாணயத்தை உணரவே விடு கின்றோம்.

-------------------நாஸ்திகன் என்ற பெயரில் தந்தை பெரியார் எழுதியது, "குடிஅரசு" 27.1.1935

0 comments: