Search This Blog

24.5.21

 

பறைகள், தப்பட்டைகள் அடிக்கும் இழிவு நீங்க வழி என்ன?

மக்களுக்கு அரசியல் சுதந்திர உணர்ச்சி ஏற்பட்டதன் காரணமாய் பிரிட்டிஷ் ஆட்சி அடியோடு வேண்டாம் என்று கருதத்தகுந்த அவசியம் எப்படி ஏற்பட்டதோ, அதேபோல் சமுதாய உணர்ச்சி ஏற்பட்டதன் காரணமாய் சமுதாய சுயமரியாதை ஏற்பட்டு தாழ்ந்த ஜாதித் தன்மையை வெறுத்துத் தங்களுக்கு இந்து மதமே வேண்டாம் என்று சொல்லும்படியான ஆத்திரம் வந்துவிட்டது. மானமுள்ள எவருக்கும் இந்த எண்ணம் வந்துதான் தீரும். இதற்கு யாரும் வருத்தப்பட்டுப் பயனில்லை அவனவன் தீண்டாத ஜாதியாக பஞ்சமனாக இருந்தால்தான் அவனவனுக்கு முஸ்லிமாக, கிருஸ்தவனாக ஆகிவிட வேண்டியது எவ்வளவு அவசியம் என்பது விளங்கும். எவனோ பறையன் - சக்கிலியாக உதைவாங்கிக் கொண்டு, கக்கூஸ் (மலம்) எடுத்துக் கொண்டு தீண்டத்தகாதவனாக இருக்கும் போது எவனோ ஒருவன் வந்து, 'நீ முஸ்லிமாகாதே, கிறிஸ்தவனாகாதே' என்று உபதேசம் செய்வது கொஞ்சம் கூட தகுதியும் யேர்ககியமுமான காரியமாகாது.

 

பறையன், சங்கிலியன், பள்ளன், புலையன், செரமன், குறவன், நாவிதன் என்று பெயர் சொல்லி இழிவாய் அழைத்து தீண்டாதவர்கள், புழங்காதவர்கள் என்று இழிவுபடுத்துவது இன்றா? நேற்றா? இராமாயண - பாரத காலம் தொட்டு, வேத சாஸ்திர புராண காலம் தொட்டு, பல ஆயிரக்கணக்கான வருஷங்களாக இருந்து வருகிறதென்றால் இதற்கு பரிகாரம் யார் செய்தார்கள்? எந்த அரசாங்கம் செய்தது? எந்தக் கட்சியார் செய்கிறார்கள்?

 

நேற்று காலம் சென்ற மாபெரும் தலைவர்களான விஜயராகவாச்சாரியார், பண்டித மாளவியா இவர்கள் சங்கதி யாருக்கும் தெரியாதா? இவர்கள் வருணாசிரம தர்மப் பிரசாரகர்களாகத் தானே செத்தார்கள்? அவர்கள் பார்ப்பனர்களானதால் அவர்களைப் பெரிய தேசியவாதிகள் என்று பார்ப்பனர்கள் பிரசாரம் செய்கிறார்கள். பைத்தியக்காரர்களாகிய நம்மவர்கள் கூலிக்கோ, முட்டாள்தனத்திற்கோ, கூடவே ஒத்துபாடுகிறார்கள்.

 

காந்தியார் தானாகட்டும் இந்தக் கீழ்ஜாதி தன்மைக்குப் பரிகாரமாக என்ன செய்தார்? காங்கிரஸ் தானாகட்டும் என்ன செய்தது? தீண்டாமை விலக்கு என்னும் பித்தலாட்டப் பெயரால் ஏராளமான பணம் வசூல் செய்து கீழ்ஜாதி என்பதில் உள்ள மானமற்ற, உணர்ச்சியற்ற மக்களைக் கூலிக்கமர்த்தி, கீழ்ஜாதி நிலைக்கும் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதல்லாமல் செய்யும் காரியமென்ன? என் மீது கோபிப்பதில் பயனில்லை. கீழ்ஜாதித் தன்மையைப் போக்க இன்று இஸ்லாம் - கிருஸ்து மார்க்கத்தில் சேருவதை தவிர இன்றைய நிலையில் வேறு மார்க்கம் இல்லை என்பதைப் பந்தயம் கட்டிக் கூறுவேன்.

 

காந்தியார் தீண்டாமையில்லை என்கிறாரே தவிர, கீழ்ஜாதி மேல்ஜாதி இல்லை என்று ஒரு நாளும் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக "வருண தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட இராமராஜ்யத்தை ஸ்தாபிப்பேன்; ஸ்தாபிப்பதற்கே உயிர் வாழ்கிறேன்; அதற்காகவே சுயராஜ்யம்" என்கிறார். இதை எந்தக் காங்கிரஸ்காராவது மறுக்க முடியுமா?

 

காங்கிரஸ் தானாகட்டும், ஜாதி ஒழிப்புத் திட்டம் இருக்கிறதா? தீண்டாமை வேறு; ஜாதி வேறு; இதையறியாமல் காங்கிரசிலிருக்கும் பல சூத்திர - பஞ்சம தோழர்கள் என்பவர்கள் ஏமாந்து போய் நம்மீது கோபிக்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறார்கள் இந்துமதம் உள்ளவரை ஜாதி அதாவது பிராமணன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற பிரிவு தன்மை போகவே போகாது. கீதை, இராமாயணம், மனுதர்மம் முதலியவை பொசுக்கப்பட்டால் ஒழிய, ஜாதிப்பாகுபாடுத்தன்மை போகவே போகாது என்பது உறுதி. அதனால் தான் ஜாக்கிரதையாக காந்தியாரும் காங்கிரசும் ஜாதியைப் பற்றிப் பேசுவது கிடையாது என்பேன்.

 

முஸ்லிமாகவோ, கிருஸ்தவனாகவோ ஆவதற்கு இஷ்டமில்லாதவன் சூத்திரனாகவோ, பஞ்சமனாகவோ இருக்க இஷ்டமுள்ளவன் பேசாமல் இருந்து தொலையட்டுமே! அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால் அப்படிப்பட்டவன் மற்றவர்களை ஏன் தடுக்க வேண்டும்? ஏன் குறைகூற வேண்டும்? என்று கேட்கிறேன்.

 

காங்கிரஸ்காரர் சுயராஜ்யத்தைப் பொருத்தவரை வெள்ளையனை விரட்டுகிறவரை, வேலை பார்த்துக் கொண்டு போக வேண்டுமே தவிர, இந்து மதத்தைக் காப்பாற்றவும், சூத்திரன் பஞ்சமன் ஜாதியை, பட்டத்தைக் காப்பாற்றவும் வேறு மதத்திற்குப் போவதைத் தடுக்கவும் ஏன் வரவேண்டும்? இதிலிருந்தே தெரியவில்லையா காங்கிரஸ் ஜாதி மத ஸ்தாபனம்; இந்து மதத்தை ஜாதி வர்ணத்தைக் காப்பாற்றும் ஸ்தாபனம்" என்பது? ஜின்னாவும், டாக்டர் அம்பேத்கரும் காங்கிரஸ் ஓர் இந்து ஸ்தாபனம் என்று சொல்லுவதில் என்ன குற்றம் காணமுடியும்?

 

டாக்டர் அம்பேத்கார், "நான் இந்துவல்ல, என்னைத் தலைவனாக ஒப்புக் கொண்டு இருக்கும் மக்கள் இந்துவல்ல. எனக்கு எந்த மதத்தையும் தழுவ உரிமையுண்டு" என்று சொன்னால் காங்கிரஸ்காரன் ஏன் அதை மறுக்க வேண்டும்? அதுவும் அம்பேத்கரையும் அவரது சமூகத்தாரையும் பறையர், சக்கிலி, பஞ்சமன் என்று கருதிக் கொண்டு தன்னையும் சூத்திரன் என்பதைச் சம்மதித்துக் கொண்டு இருக்கும் ஒரு காங்கிரஸ்காரன் ஏன் மறுக்க வேண்டும்?

 

திராவிடர் கழகமோ, ஷெட்யூல் வகுப்பு கழகமோ ஜாதியை, வர்ணமுறையை, ஒழிப்பதைத் தங்கள் சுயராஜ்யத் திட்டமாகக் கொண்டிருப்பதால் அதைப்பற்றிப் பேசவும் போராடவும் வேண்டி இருக்கிறதே தவிர வேறு என்ன? திராவிடர் காங்கிரஸ் தோழருக்குக் கவலை இருந்தால் ஒரு அறிக்கை வெளியிடட்டுமே, பார்க்கிறேன். அதாவது:

 

'தோழர் அவினாசிலிங்கம், பக்தவச்சலம், குமாரசாமி ராஜா, காமராஜர் முதலியவர்கள் சேர்ந்து "காங்கிரஸ் பெறும் சுயராஜ்யத்தில் சூத்திரன் இருக்கமாட்டான். பஞ்சமன் இருக்க மாட்டான். இது சம்பந்தமான மதம் ஆதாரம் இருக்காது. ஒரு ஜாதி, ஒரு கடவுள் தான் இருக்கும்' என்று அறிக்கை விடட்டுமே பார்ப்போம்! அதாவது ரோஷமிருக்கிறவர்கள் ஆத்திரமிருக்கிறவர்கள் காந்தியாரை, ராஜகோபாலாச்சாரியாரைப் பிரகாசம் காருவை எழுதிக் கேட்கட்டுமே? அதை விட்டுவிட்டுக் காங்கிரஸ் திராவிடனையும், ஷெட்யூல் வகுப்பானையும், சூத்திரன் அல்ல, பஞ்சமன் அல்ல என்று செய்யப்பாடுபடுகிற எங்களையா அடிப்பது, கோபிப்பது? இதைவிட நாங்கள் வேறு என்ன வேலை பார்ப்பது? கொடி தூக்கி ஜே போடுவதா? அல்லது திராவிடனையே உதைக்கவும், அடிக்கவும், வையவும் கூலிபெறுவதா? அந்த வேலைக்கு ஒரு பகுதி போகட்டும். மானமுள்ள திராவிடர்கள் இழிவை நீக்கப் பாடுபடட்டும்.

 

காங்கிரஸ்காரர்கள் உண்மையாய் வெள்ளையனை முடுக்குவதானால் அந்த வேலைக்கு நாங்கள் சிறிதும் தடையாக இல்லை. வெள்ளையன் வேண்டாம் என்றே சொல்லிவிட்டோம். எங்கள் திட்டத்தில் அதுவே முதல் காரியமாகும்.

 

ஆகையால் அதில் அபிப்பிராய பேதம் இல்லை. ஆதலால் ஷெட்யூல் வகுப்பார் இஸ்லாத்தையோ, கிருஸ்து மதத்தையோ தழுவுவதைப் பற்றி யாரும் வருந்த வேண்டியதில்லை. அதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியும் இல்லை யாரும் காட்டவும் இல்லை; அவர்கள் ஸ்தானம் அவர்களுடைய பஞ்சமத் தன்மையை நீக்கிக் கொள்ளவே இருக்கிறதே தவிர, சட்டத்திற்கும் மந்திரி வேலைக்கும் இல்லை. அது சிலருக்குத்தான் கிடைக்கும் என்பதை உணர வேண்டுகிறேன்.

 

இந்த நாட்டில் இந்து முஸ்லீம் கலகம் ஏற்படுமேயானால் அடுத்தாற் போல் நடக்கும் காரியம் அதுதான். அதாவது மக்கள் மதம் மாற வேண்டியதுதான். அதைத் துரிதப்படுத்தத்தான் கலவரம் ஏற்படுகிறது என்று அர்த்தம். எப்படியெனில் இந்து - முஸ்லீம் கலவரத்தால் ஷெட்யூல் வகுப்பார்கள், மந்திரி, சட்டசபை மெம்பர், மக்கள் பௌத்தம், சமணம், இஸ்லாம், கிருஸ்து யாவரும் ஒரே மதம் ஆய்விடுவார்கள். இது உறுதி. ஷெட்யூல் வகுப்பு மந்திரி, காரியதரிசி, சட்டசபை மெம்பர்கள் தவிர மற்றெல்லோரும் இஸ்லாம் ஆகப்போவது உறுதி.

 

(பெரியார் பேசி உட்கார்ந்தவுடன் சில ஷெட்யூல் வகுப்புத் தோழர்கள் தப்பட்டைகள், தாசாக்கள், மத்தளங்கள் முதலிய பல திறப்பட்ட தோற்கருவிகளுடன் சுமார் 100-பேர்கள் திடீரென்று மேடை அருகில் வந்தார்கள். வந்தவுடன் கூட்டத்தில் தடபுடல் ஏற்பட்டது. பெரியார் அமைதியாயிருக்கும்படி வேண்டி அமைதி ஏற்படுத்திய பிறகு பெரியாருக்கு முன்னிலையிலேயே அவைகளைப் போட்டுக் குவித்துவிட்டு ஒருவர் மேடை மீது ஏறி நின்று,

 

"நாங்கள் பறை அடிப்பதால்தானே பறையர்கள் என்று அழைக்கப்படுகிறோம். இனிமேல் பறை அடிப்பதில்லை. சாவு வீட்டிற்கும், வாழ்வு வீட்டிற்கும், சாமி வீட்டிற்கும் கண்டிப்பாகப் பறை அடிப்பதில்லை என்று இப்போது உறுதி செய்து கொண்டோம். அதற்காக அந்தக் கருவியை இதோ கொளுத்துகிறோம்" என்று சொல்லி 4, 5-புட்டி மண்ணெண்ணெயை ஊற்றி நெருப்பு வைத்தார். நெருப்பு திகு திகு என்று எரிந்தது. யாவரும் ஆரவரித்தார்கள். "டாக்டர் அம்பேத்கர் அனுமதி வந்ததும் நாங்கள் பெண்டு பிள்ளைகளுடன் மதம் மாறுவோம்" என்று ஒலித்துக் கொண்டு கலைந்து சென்றார்கள்.

 

- (22.11.1946-ல் வாணியம்பாடியில் பெரியார் .வெ.ரா பேச்சு ('விடுதலை', 23.11.1946)

0 comments: