Search This Blog

12.5.21

ஆண்களுக்குள்ள உரிமையைப் பெண்களுக்கும் தருக! -பெரியார்

 ஆண்களுக்குள்ள உரிமையைப் பெண்களுக்கும் தருக!



இப்பொழுது நடைபெற்ற இந்நிகழ்ச்சியானது நம்மிடையே கல்யாணம், விவாகம், முகூர்த்தம் என்னும் பெயரால் நமக்குப் புரியாததும், மூட நம்பிக்கை நிரம்பியதுமான கருத்துகளை வைத்து நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது.


இப்படி நடைபெறுவதில் பெண்கள் அடிமையாக்கப்படுவதோடு, முட்டாள்தனம், மூட நம்பிக்கை, ஜாதி இழிவு இவற்றை நிலை நிறுத்துவதாக இருந்ததால், பகுத்தறிவு – சுயமரியாதை இயக்கக்காரர்களாகிய  நாம் இதை மாற்றி வாழ்க்கை ஒப்பந்தம் என்ற பெயரில் பெண் அடிமையினை நீக்கி, பெண்களும் சுதந்திரம் பெற்று வாழ வேண்டும் என்பதோடு, மனிதனின் இழிவு, மூட நம்பிக்கை ஒழிய வேண்டுமென்பதால் இதனை மாற்றியமைக்க வேண்டியதாயிற்று.


இம்முறையில் மக்களிடையே பதினாயிரக்கணக்கில் திருமணங்கள் நடைபெற்று வந்தும் கூட, இதுவரை இருந்த அரசுகள் யாவும் பார்ப்பனர்களின் அரசாகவும், பார்ப்பன சார்புள்ள அரசாகவும் இருந்த காரணத்தால், இம்முறையானது சட்டப்படிச் செல்லுபடியாகாமலிருந்து வந்தது. இப்போது புதிதாக வந்திருக்கும் தி.மு.க. அரசானது பகுத்தறிவாளர்கள் யாவும் சட்டப்படிச் செல்லக் கூடியது என்று சட்டம் செய்திருக்கிறது.


பழைய நிகழ்ச்சிக்கும் இப்போது நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இந்நிகழ்ச்சியில் பார்ப்பான் இல்லை - தீ மூட்டவில்லை - குத்துவிளக்கு இல்லை - புரியாத மந்திரம் இல்லை - தாலி இல்லை - நாள், நட்சத்திரம், முகூர்த்த நேரம் பார்க்கவில்லை - இவையெல்லாம் எதற்காகச் செய்யப்பட்டு வந்தன என்பது எவருக்குமே தெரியாது.


இவற்றையெல்லாம் ஏன் செய்கிறோம் என்பது செய்கிறவர்களுக்கே தெரியாது. நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தது ஜாதி வழக்கம் என்று சொல்வார்களே தவிர, என்ன காரணத்திற்காக, எந்த அவசியத்தை முன்னிட்டு இவை செய்யப்படுகின்றன என்பது எவருக்குமே தெரியாமல் செய்யப்பட்டு வருபவையேயாகும்.


நாம் நடத்துகின்ற நிகழ்ச்சியானது சிந்தித்து - தேவையும், அவசியமுமானவற்றைக் கொண்டு செய்யப்பட்டு வருவதேயாகும்.


தோழர்களே! தாலி கட்டுவது எதற்காக? அது எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்றால், பெண்களை "முண்டச்சி"யாக்கப் பயன்படுகிறது. அறுப்பதற்காகவே கட்டப்படுகின்றது. இயற்கையாக 100-க்கு 90-திருமணங்களில் தாலிகள் கட்டப்படுகின்றன. நம் திருமண முறையே கணவனுக்கும் மனைவிக்கும் 5-வருஷம், 10-வருஷம் வித்தியாசமிருக்கும்படியாகத் தானிருக்கும். பெண் வயதில் குறைந்தும் ஆண் அதிக வயதுடையவராகவும் பார்த்துத் தான் திருமணம் செய்வார்கள். அதிக வயதுள்ளவர்கள் முன்னாலே சாகிறார்கள். இது இயற்கை. அதிக வயதான ஆண் இறந்ததும், பொதுவாகப் பெண்களை "முண்டச்சி" (விதவை) யாக்கி விடுகிறார்கள். அதற்காகவே தாலிக் கட்டப்படுகின்றது.


இரண்டாவதாக, தாலி கட்டினவனுக்கு ஓர் உரிமை கொண்டாடுவதற்காகக் கட்டப்படுவதே யாகும். ஆண்களுக்கு ஆதிக்கம் வந்த பின் பெண்களைத் தங்களுக்கு அடிமைகளாக்கவே இம்முறை கற்பிக்கப்பட்டதாகும். நம்மிடம் தோன்றிய பெரிய மனிதர்கள் - மகான்கள் என்பவர்கள் எல்லாம் பெண்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டுமென்றே எழுதி வைத்திருக்கிறார்கள்.


மிகப்பெரிய அறிவாளி என்று சொல்கிற வள்ளுவனே, பெண்கள் தங்கள் கணவனைத் தான் கும்பிட வேண்டும். அவன் சொல்படி தான் நடக்க வேண்டும். அப்படிச் செய்பவள் தான் கற்புடையவள் என்று எழுதி வைத்திருக்கிறான்.


உலகத்திற்கு நீதி சொன்ன அத்தனை பெரிய மனிதர்களும், பெண்கள் அச்சம் - நாணம் - மடம் - பயிர்ப்பு உள்ளவளாக இருக்க வேண்டும் என்று தான் எழுதி இருக்கிறார்கள். பெண்கள் படிக்கிற நாட்டில் மழை பெய்யாது என்று சாஸ்திரம் எழுதி வைத்திருக்கிறான். எல்லா தமிழ் இலக்கியங்களிலும் எல்லா தமிழ்ப் புலவர்களும் பெண்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும் என்று தான் எழுதி வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்று தான் தாலியுமாகும். பெண் அடிமை என்பதை உறுதி செய்வது தான் தாலியாகும். எப்படி ஓர் அரையணா ஸ்டாம்பில் முத்திரை குத்தினால் அதைத் திரும்பப் பயன்படுத்த முடியாதோ, அப்படிப் போன்றது தான் பெண்களுக்குக் கட்டப்படும் தாலியுமாகும்.


பெண்களை நிறையப் படிக்க வைக்க வேண்டும். ஆண்களுக்கிருக்கிற உரிமை பெண்களுக்கும் வேண்டும். இங்கு வாழ்க்கை ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் மணமக்கள் இருவரும் கணவன் - மனைவி என்று நடந்து கொள்ளாமல் நண்பர்களைப் போல் நடந்து கொள்ள வேண்டும். இருவரும் சம உரிமையுடையவர்கள் என்று கருத வேண்டும். முட்டாள்தனமான மூட நம்பிக்கையானக் காரியங்களைச் செய்யக் கூடாது. வரவுக்கு மேல் செலவிடக் கூடாது.


ஒன்றிரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளக் கூடாது. கூடியவரை குழந்தகைள் இல்லாமலிருந்தாலே நல்லது.


கோயில், சினிமா இவற்றிற்கெல்லாம் போகக் கூடாது. அறிவை வளர்க்கக் கூடிய கண்காட்சியைப் போய்ப் பார்க்க வேண்டும். பெரிய இயந்திர சாலைகளுக்குப் போய் அவை எப்படி வேலை செய்கின்றன என்பதையெல்லாம் பார்த்து அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.


இன்னும் நூறு ஆண்டுகள் போனால் பெண்களுக்கு ஆண்கள் அடிமைகளாக இருப்பார்கள். பெண்கள் அவ்வளவு உரிமை பெற்று விடுவார்கள். தங்கள் துணைவரைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளக் கூடிய அறிவைப் பெற்று விடுவார்கள். அந்த அறிவைப் பெற்றுவிட்டால், தாங்களே ஒருவர் தயவுமின்றி தங்களின் வாழ்வினை நடத்திக் கொள்ளக் கூடிய திறனைப் பெற்றுவிட்டால், பிறகு ஆண்களுக்கு அடிமையாளாக இருக்க சம்மதிக்க மாட்டார்கள். அது விரைவில் வந்து விடும்.


       ----------------------------- 17.01.1968 கரூரில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. 'விடுதலை', 27.01.1968

                        ஆக்கம் – தகவல் :- தமிழ் ஓவியா மாரிமுத்து

0 comments: