கடவுள் அவசியமா?
கடவுள் இருக்கிறதா? இல்லையா?
என்பது ஒருபுறமிருக்கட்டும்.
மனிதனுக்கு (ஆறு அறிவு,
பகுத்தறிவு, சிந்தனா சக்தி கொண்ட மனிதனுக்கு)
கடவுள் அவசியமா
என்பது பற்றி
மனிதன் சிந்திக்க
வேண்டும். மனிதன்
இன்று கடவுளைப்
பற்றிச் சிந்திக்கிறான்.
கடவுளை வணங்குகிறான்
என்றால் அவனது
பெற்றோர் பயிற்சி,
சுற்றுச்சார்பு, பழக்க வழக்கம் அவற்றினால் ஏற்பட்ட
எண்ணங்கள், ஆசைகள் முதலியவைகளால் அல்லாமல் வேறு
எதனால் கடவுளைக்
கருதுகிறான், வணங்குகிறான் என்பது பற்றி நீங்களே
சிந்தித்துப் பாருங்கள்!
கடவுள் என்பது, மதங்கள்
போன்று செயற்கைப்
பண்டம் என்பது
மாத்திரமல்லாமல், கடவுள் எண்ணமே செயற்கை எண்ணம்
அல்லாமல் இயற்கையாகத்
தோன்றிய எண்ணமென்று
யாராவது சொல்ல
முடியுமா?
கிருத்தவர் வீட்டில் பிறந்தவன்
கிருத்தவன், இஸ்லாம் வீட்டில் பிறந்தவன் இஸ்லாம்
(மகமதியன்), பவுத்தன் வீட்டில் பிறந்தவன் பவுத்தன்,
கடவுள் இல்லை
என்கின்ற நாத்திகன்
வீட்டில் பிறந்தவன்
நாத்திகன். பிறப்பும் அதுபோலவே; இந்தியாவில் பிறந்தவன்
இந்தியன், அய்ரோப்பாவில்
பிறந்தவன் அய்ரோப்பியன்.
அதுபோலவே தமிழ்
பேசுபவன் வீட்டில்
பிறந்தவன் தமிழ்
பேசுகிறான். கன்னடம் பேசுபவன் வீட்டில் பிறந்தவன்
கன்னடம் பேசுகிறான்.
துருக்கன் வீட்டில்
பிறந்தவன் துரு(துலு)க்கு
பேசுகிறான். இவை போன்று தான் ஒருவன்
கடவுள் - மதம்
- நாடு - மொழி
உடையவனாகிறான். இவற்றுள் எதுவும் இயற்கையல்ல; அதாவது
தானாக ஏற்பட்டு
தானாக வந்து
புகுந்ததல்ல.
இவற்றுள், எதுவும் மனிதனுக்கு
இயற்கையானதுமல்ல என்பதோடு, குறிப்பிட்ட எதுவும் மனிதனுக்கு
தனிப்பட்ட அவசியமானதுமல்ல.
சந்தர்ப்பம் போல் சரி செய்து கொள்ள
வேண்டியதேயாகும். இவற்றுள் எதையும் மனிதன் மாற்றிக்
கொள்ளலாம். எது இல்லாவிட்டாலும் மனிதன் வாழலாம்.
அது போலத்தான்
மனிதன் கடவுள்
(எண்ணம்) இல்லாவிட்டாலும்
வாழலாம். உலகில்
கோடிக்கணக்கான பேர்கள் கடவுள் இல்லாமல் வாழ்கிறார்கள்.
கடவுள் நம்பிக்கையுள்ள மக்களிலும்
ஒருவர் கூடக்
கடவுளை கடவுள்
(சொல்லப்பட்டிருக்கிற) சக்திப்படி நம்புவதில்லை.
எப்படிப்பட்ட யாரும் தம்
சக்திப்படி, தம் செய்கைப்படி, தம் எண்ணப்படி,
தமக்கு ஏற்பட்ட
வாய்ப்புப்படி, அதாவது எதிர்பாராத ஏற்பாடு இல்லாத
வாய்ப்புப்படித்தான் பலன் அனுபவிக்கிறார்கள்.
வாய்ப்பு என்பதை சிலர்
(அது தான்)
கடவுள் செயல்
என்று சொல்லலாம்.
வாய்ப்பு என்பது, ஒரு
சந்தைக்கு, ஒரு காட்சிக்கு, காட்சிக் கூட்டத்திற்கு
ஒருவன் போகிறான்;
அங்கு பெரும்
கூட்டமாக மக்களைப்
பார்க்கிறான். அப்பெருங் கூட்ட மக்களும் (அங்கு
வந்தவர்கள், போகிறவர்கள், உள்ளவர்கள்) அவனை சந்திப்பது
போல்தான். இவர்களில்
அவனோ, மற்றும்
அங்கு வந்தவர்களோ
ஒருவரையொருவர் பார்க்க முன் ஏற்பாடு செய்து
கொண்டு அங்கு
வரவில்லை. சென்ற
காரணத்தால் ஒருவரையொருவர் சந்திக்க நேருகிறது. இதுதான்
வாய்ப்பு என்று
சொல்வதாகும். அகஸ்மாத்தாக நேர்ந்தது என்றும் சொல்வதாகும்.
இவையெல்லாம் குறிப்பிட்ட அமைப்பு ஆகுமோ?
சந்திப்பது என்பது மனிதனை
மாத்திரமல்ல. ஈ, எறும்பு, கொசு, ஆடு,
மாடு, எருமை,
யானை, குதிரை,
அரசன், திருடன்,
கொலைக்காரன் முதலிய அநேக ஜந்துக்களைக் காண்கிறோம்.
அவைகளால் தொல்லைப்படுகிறோம்.
அவையெல்லாம் முன்னேற்பாடு, தலைவிதி, அமைப்பு, கடவுள்,
செய்தது என்பதாகுமா?
இவற்றிற்கெல்லாம் "நேர்ந்தது" என்பதல்லாமல்
கடவுள் காரணமாக
இருக்க முடியுமா?
அப்படியானால் அவற்றிற்கு, கடவுளுக்குக் காரணம் வேண்டாமா?
அந்த ஜீவப்பிராணிகளுக்குக்
காரணம் வேண்டாமா?
வெள்ளம் வந்து
நாசம் ஏற்பட்டது,
இடி விழுந்து
நாசம் ஏற்பட்டது,
திருடன் வந்து
நாசம் ஏற்பட்டது,
ரயில் விபத்தில்
நாசம் ஏற்பட்டது,
பஸ் ஏறி
நாசம் ஏற்பட்டது
என்பவை போன்ற
காரியங்களுக்குக் காரணம் அமைப்பு முன்னேற்பாடு தலைவிதி
இருக்க முடியுமா?
இவற்றால் மனிதனுக்கு
மாத்திரமல்லாமல் மிருகங்கள் முதலிய ஜீவன்களுக்கு, வீடு
வாசல் முதலிய
கட்டிடங்களுக்கு ஏற்படுகிற நாசங்களுக்கு, அவைகளுக்கு அமைப்பு,
தலைவிதி, கர்ம
பலன் இருக்க
முடியுமா? எனவே,
இவற்றில் கடவுளுக்கோ,
கடவுள்களுக்கோ என்ன வேலை? ஏனந்த வேலை?
இதை எப்படி
மனிதன் தெரிந்து
கொள்வது?
கடவுள் நம்பிக்கையுள்ள மக்களே
இப்படிப்பட்ட நாசவேலைக்கு ஆளாகிறார்களே! அது ஏன்?
கடவுள் நம்பிக்கையால்
ஏதாவது பாதுகாப்பு
ஏற்படுகிறதா? அல்லது மனிதனாவது கடவுளை நம்பி
பாதுகாப்புச் செய்து கொள்ளாதவனாக இருக்கிறானா? யாவும்
கடவுள் செயல்
என்று வெறியோடு
கடவுளை நம்புகிறவனுக்கே
கடவுள் என்ன
செய்யப் போகிறார்
என்பது தெரிவதில்லையே!
இப்படிப்பட்ட நிலையில், கடவுள்
இல்லையென்று ஒருவன் சொன்னால், உண்டு என்று
கூற மனிதன்
தான் முயற்சிக்கிறானே
ஒழிய, "நான் இருக்கிறேன்" என்று சொல்ல,
காட்ட ஒரு
கடவுளையும் காண முடியவில்லையே!
இது மாத்திரமா? கடவுளையே
திருடிக்கொண்டு போகிறான், திருடன்; கடவுள் மனைவியின்
தாலியையும், சீலையையும் திருடிக் கொண்டு போகிறான்.
பூசாரி, இதைத்
தடுக்கவே கடவுள்
செயலால் முடியவில்லையென்றால்
மனிதனுக்கு கடவுள் எதற்காக வேண்டும்? எதற்காக
வேண்டியதாய் இருக்கிறது?
அறிவைக் கொண்டு சிந்தித்துப்பார்!
- (14.03.1970- "உண்மை"
இதழில் தந்தை
பெரியார் அவர்களால்
எழுதப்பட்டது)
0 comments:
Post a Comment