Search This Blog

16.5.21

 

மனிதனுக்குக் கடவுள், மதம் வேண்டுமா?

மனிதன் என்பவன் பகுத்தறிவு உடையவன் சிந்தனா சக்தியோடு எந்தக் காரியத்தையும் செய்யக் கூடிய சக்தி உடையவன். இன்று நல்ல அனுபவங்களையும், வளர்ச்சித் தன்மையையும் பெற்று, நாளுக்கு நாள் முன்னேற்றப் பாதையில் சென்றுக் கொண்டிருப்பவன்.

 

ஒரு மணிக்கு 1000, 2000, 3000-மைல் வீதம் ஆகாயத்தில் பறக்கிறவனாக இருக்கிறான். பத்தாயிரம் (10,000) மைலுக்கு அப்பாலுள்ள மனிதனிடம் பக்கத்தில் இருப்பவனிடம் பேசுவதுபோலப் பேசுகிறவன்.

 

அது மாத்திரமல்லாமல், அப்படியே பேசுகிற மனிதனை நேருக்கு நேராகக் காணுகிறவனாக இருக்கிறான். சூரிய மண்டலத்தை அளந்துவிட்டான். சந்திர மண்டலத்துக்குப் போய் வந்து கொண்டிருக்கிறான்.

 

அனேக வியாதிகளுக்கு மருந்துகள், சிகிச்சை முறைகளைக் கண்டு பிடித்து விட்டான். சராசரி அய்ந்து வருஷம், பத்து வருஷமே வாழ்ந்த மனிதர்கள் இப்போது சராசரி 50-வயது முதல் 75-வயது வரையில் வாழ்கிறார்கள்.

 

இப்படிப்பட்ட மனிதனுக்கு, இவை எல்லாம் - இந்தச் சக்தியெல்லாம் இல்லாத காட்டுமிராண்டிக் காலத்தில் - அதாவது 1000, 1500, 2000, 3000- வருஷங்களுக்கு முன்னால் இருந்த மூட மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கடவுள், மதம், வேதம், இவைகளைக் கற்பித்துக் கூறிய தலைவர்கள் இனியும் இன்றைக்கும் வேண்டுமா? அவைகளால் இனியும், இன்றைக்கும்  வேண்டுமா? அவைகளால் ஏதாவது பலன் உண்டா என்பவைகளைப் பற்றி மனிதன் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

 

முதலாவது, கடவுள் என்றால் என்ன என்று தெரிந்தவன் யாராவது, ஒருவனாவது இருக்கிறானா?

 

கடவுள் தன்மை இன்னது என்று தெரிந்தவர்களில் ஒருவனாவது அதை நம்பி; அதைப்போல நடக்கிறவன் ஒருவனாவது இருக்கிறானா? மனிதன் கடவுள் செயலை (விதியை) நம்புகிறானா அல்லது தன் செயலை (மதியை) நம்புகிறானா என்று வரையறுத்துக் கூறமுடியுமா?

 

கடவுள் எங்கும் இருக்கிறான் என்று சொல்லுகிற அறிவற்றவர்களே, கடவுளுக்குக் கோயில் இருப்பிடம் கட்டுகிறார்கள்.

 

கடவுளுக்கு உருவமில்லை என்ற சொல்லுகிற புத்தி ஈனனே அந்தக் கடவுளுக்கு உருவம்; அதுவும் பல்வேறு உருவங்கள் கூறியிருக்கிறான்.

 

கடவுளுக்கு ஒன்றும் வேண்டியதில்லை என்று சொல்லுகிற முட்டாள்களே, அந்தக் கடவுளுக்குச் சோறு, பெண்டாட்டி, வைப்பாட்டி முதலியவைகளை அமைக்கிறார்கள்.

 

கடவுள் யோக்கியர் என்று சொல்லுகிற முட்டாள்களே, அந்தக் கடவுள் அவனைக் கொன்றார், இவனைக் கொன்றார், திருடினார், விபசாரத்தனம் செய்தார், அவன் மனைவியைக் கெடுத்தார், இவன் மனைவியை அபகரித்தார் என்றெல்லாம் கூறி, பண்டிகைகள் நடத்துகிறார்கள்.

 

இவையாவும், இவை போன்றவையும் ஒரு புறமிருந்தாலும், இப்படிப்பட்ட கடவுளால் மனிதன் அடையும் பயன் என்ன என்று சிந்தித்தால் என்ன பதில் கிடைக்கிறது?

 

கடவுளினால் ஒன்றும் பயனில்லை என்பது ஒரு பக்கமிருந்தாலும்,  மேற்கண்ட முட்டாள்தனக் காட்டுமிராண்டி, அயோக்கியத்தனங்கள் ஒழிக்கப்படுவதற்காகவாவது கடவுள், மதம் ஒழிக்கப்பட வேண்டாமா என்று கேட்கிறேன்.

 

ஒழுக்கத் துறையில், அறிவுத்துறையில் இவ்வளவு கேடுகள் இருப்பது மாத்திரமல்லாமல், பொருளாதாரத் துறையில் எவ்வளவு கேடுகள் - நட்டங்கள் ஏற்படுகின்றன? இந்தக் கேட்டிற்கப் பயன் என்ன?

 

அயோக்கியர்கள், மடையர்கள், சோம்பேறிகள் பிழைக்கிறார்கள் மக்களை - ஏய்க்கிறார்கள் என்பதல்லாமல் நற்பயன் என்ன என்று கேட்கிறேன்.

 

இவை மட்டுமா?

 

சமுதாயம் எவ்வளவு பிரிவுற்று சின்னாபின்னப்பட்டுக் குதறிக் கிடக்கிறது!

 

எதற்காக, "இந்து", எதற்காகக் கிறிஸ்தவம், எதற்காக மூஸ்லீம் முதலிய மதங்கள் வேண்டும்? இவர்களுக்குத் தனித்தனி வேதம், வேஷம், செய்கைகள் முதலியன தேவை இருக்கிறது. இவைகளால் பிரிவினை உணர்ச்சி அல்லாமல் சமுதாயத்திற்கு நலன் என்ன என்று கேட்கிறேன்.

 

கடவுளாலும் இந்த வேதங்களாலும் பிரிவினை உணர்ச்சி தவிர வேறு பலன் என்ன என்று கேட்கிறேன்.

 

இவைகள் எல்லாம் ஒருபுறமிருந்தாலும், இவற்றால் மனிதனின் அறிவு கெட்டு, வளர்ச்சி பாழாகி, இந்த இருபதாவது நூற்றாண்டிலும் மனிதன் அறிவிற்கும் சிந்தனைக்கும் ஏற்றபடி வளராமல் தேங்கி கிடக்கின்றான். இது எவ்வளவு பெரிய கேடு? மனித வாழ்வினால், எந்த மனிதன் கவலை, தொல்லை, அடிமைத்தனம் இல்லாமல் இருக்க முடிகிறது? ஏன் பிறக்க வேண்டும்? ஏன் சாக வேண்டும்? இவை இரண்டும் இல்லாமல் செய்து கொள்ள மனிதனால் முடியாதா? பாழும் "கடவுளால்" நான் இது முடியாததாக இருக்கிறதே!

 

பிறப்பித்தல், சாகடித்தல் (ஆக்கல், அழித்தல்) என்ற இரண்டைத் தவிர "கடவுள்" வேறு வேலை எதைப் பார்க்கிறானாம்? இந்தக் காரியத்திற்கு "ஒரு கடவுள்", "பல கடவுள்கள்" ஏன்?

 

ஆகவே, தன்னைப் பகுத்தறிவுள்ள மனிதன் என்று உணர்ந்த எவனும், மனித சமுதாயத்துக்கு ஏதாவது தொண்டு செய்ய வேண்டும் என்றோ; தன் வாழ்நாளில் ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்தோம் என்று கூறிக் கொள்ளவோ வேண்டுமானால், கடவுள், மதம், வேதங்கள் ஒழிக்கப்படத் தன்னால் கூடியதைச் செய்ய வேண்டும்.

 

இதுதான் அறிவுள்ள மனிதர்க்கு அடையாளம் என்பது எனது கருத்து.

 

- (14.10.1972- "உண்மை" இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்)

0 comments: