Search This Blog

16.5.21

 

கடவுள் ஏன் செருப்பால் அடிக்கப்படுகிறார்?

அகில இந்தியத் தோழர்களே!

 

கடவுள் செருப்பால் அடிக்கப்படுகிறார் என்பது பற்றி உண்மையாகவே, பிடிவாதமாகவே சில அயோக்கியர்கள் கடவுளின் பெயரால் தங்களைப் போல் தங்கள் மக்கள் எண்ணிக்கையை விட 33-பங்கு அதிகமான மக்கள் எண்ணிக்கை கொண்டதும், இந்நாட்டில் கணக்கிட முடியாத காலத்திலிருந்து மக்கள் யாரையும் விட உயர்நிலையில் வாழ்ந்து வருகிற மக்களை ஈனஜாதி என்றும், 5-ஆம் ஜாதி என்றும் கூறிப் பிரிவுப்படுத்தி அதற்கேற்றடி "ஆதாரங்களை"ச் செய்து கொண்டு அவர்களுக்கு (இந்த மக்களுக்கு) உலக வாழ்வில் சமத்துவமில்லாமலும், சம உரிமை இல்லாமலும் செய்து தாங்கள் மாத்திரம், உயர் வாழ்வு வாழ்ந்து கொண்டு இந்த நிலையைப் பாதுகாக்க, நிலைக்கச் செய்ய கடவுளையும், மதத்தையும், சாஸ்திரங்களையும் ஆதாரம் காட்டி அவைகளைப் "பொறுப்பாக்கி" அதற்கேற்ற அரசையும் உண்டாக்கிக் கொண்டு, பலம் பெற்று வாழ்வார்களானால், அவற்றால் மானமிழந்து, இழி வாழ்வு வாழச் செய்யப்பட்ட மக்கள் இந்த நிலையில் இருந்து மீள வேண்டுமானால், மக்கள் கடமை என்ன என்பது பற்றிச் சிந்திக்கும் கடுகளவு மான உணர்ச்சி உள்ள எவனும் இந்தப்படியான ஈன நிலையைப்பற்றிக் கொடுமையும், வேதனையும் அடைந்து வரும் மக்கள் செய்ய வேண்டிய கடமையான இன்றியமையாத காரியம் என்ன என்று யோக்கியமாய்ச் சிந்தித்துப் பார்ப்பானானால், அவன் இதைத் தவிரகடவுளை இழிவுப்படுத்தி கடவுள் எண்ணத்தை ஒழிப்பதைத் தவிர வேறு என்ன காரியத்தைச் செய்ய முடியும்?

 

அதாவது, பொறுப்பாக்கிய கடவுளை இழிவு செய்து ஒழிக்கவும், ஆதாரங்களை நெருப்பிட்டுப் பொசுக்கவுமல்லாமல் வேறு என்ன செய்வான்? வேறு என்னத்தான் செய்வது?

 

தோழர்களே, சிந்தித்துப் பாருங்கள். இதைத் தவிர வேறு ஒரு மார்க்கத்தைக் காண வேண்டுமானால் - கைக்கொள்ள வேண்டுமானால் இந்தப்படி கடவுளையும், ஆதாரங்களையும் பொறுப்பாக்கி அதனாலேயே மற்றவர்களை இழிவுப்படுத்தி வாழ்கிற மக்களைப் பூண்டற்றுப் போகும்படிக் கொன்று அழித்துத் தீர்க்க வேண்டும். அதனால் ஏற்படும் பயனை அனுபவிக்கத் துணிவு கொள்ள வேண்டும். இதைத் தவிர வேறு மார்க்கம் இருந்தால் யோக்கியர் சொல்லட்டும். கேட்க, சிந்திக்கத் தயாராய் இருக்கிறேன். இவற்றில் எது எளிது?

 

முதலாவதாக கடவுள் என்பது உண்மையானயோக்கியமானஅறிவான கருத்தா? மடையர்களால் தோற்றுவிக்கப்பட்டு அயோக்கியர்களால் தங்கள் சுயநலத்திற்காகவே உருவம், குணம் முதலியவைகள் கற்பிக்கப்பட்டு பரப்பப்பட்ட ஒரு ஈனத்தனமான காரியமே அல்லாமல் வேறு விளக்கமும், பொருளும் சொல்ல முடியுமா? எந்த சங்கராச்சாரிகளோ, பண்டாரங்களோ, ஆத்திகரோ, அதிதீவிர பக்த சிரோமணிகளோ சொல்லட்டுமேவிளக்கட்டுமே பார்ப்போம்!

 

ஆண்களின் அயோக்கியத்தனத்தாலும், ஆதிக்கத்தாலும் "பெண்கள் பதிவிரதைகளாய் இருக்க வேண்டும்" என்று சொல்லப்படுவது போல்தான் "கடவுளுக்கு, மதத்திற்கு, சாஸ்திரங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்" என்று சொல்லப்படுவதுமே ஒழிய, அதில் அறிவோ யோக்கியமோ நாணயமோ அவசியமோ உண்மையோ தேவையோ என்ன இருக்கிறது?

 

அவை எப்படியாவது ஒழியும் வரைஒழிக்கப்படும்வரை நாம் யார்? ஒழித்த பிறகு நாம் யார் ஆவோம்? இதை சிந்தித்து அந்தப்படி (கடவுளை செருப்பாலடிப்பது என்பதை) செய்பவன் அயோக்கியனா? செய்யாதவன், அறிவற்ற, மானமற்றவன், இழிநிலைப் பற்றி கவலைப்படாமல் வாழ ஆசைப்படுபவனா? என்பது பற்றிச் சிந்தியுங்கள்.

 

இப்படிப்பட்ட இந்தக் காரியங்களால் - பிரச்சாரங்களால் எனக்கு என் சொந்தத்தில் ஆகவேண்டிய காரியம் என்ன?

 

எனது இந்த 50, 60-ஆண்டு தொண்டின் பயனாய் நான் செய்து கொண்ட சுயநல காரியமென்ன?

 

இதனால் இந்த 50-ஆண்டு காலத்தில் நம் மக்களுக்கு ஏற்பட்ட கெடுதி என்ன? நன்மை என்ன? நம் எதிரிகளின் நிலை குலைந்ததா? உயர்ந்ததா?

 

மற்றும் நம்மைக் குறைகூறும் ஒவ்வொருவரும் தன் குடும்ப சமுதாயம் பற்றியும், தன்னைப்பற்றியும் சிந்தித்துப் பார்த்து, உயர்ந்தோமா, தாழ்ந்தோமா என்பது பற்றியும் உணர்ந்து, பிறகு உங்கள் இஷ்டப்படி முடிவு செய்து கொள்ளுங்கள்.

 

- (03.04.1971- "விடுதலை" நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் வெளியிட்ட அறிக்கை)

0 comments: