Search This Blog

16.5.21

 

கடவுள்கள் உண்டாக்கப்பட்ட காலம்!

நமது கடவுள்கள் என்பவைகள் எல்லாம் புராணக் கடவுள்களேயாகும். சிவபுராணம், விஷ்ணுபுராணம், பிரம்ம புராணம், கந்தபுராணம், விநாயக புராணம், பாரதம், இராமாயணம் முதலியவைகளில் ஏற்பட்ட கடவுள்களேயாகும் இவை.

 

அவற்றின் காலம் சற்றேறக்குறைய 3000 (மூவாயிரம்) ஆண்டு என்று ஆராய்ச்சியின்படி சொல்லலாம். அக்கால மக்களுக்கு எவ்வளவு அறிவு இருந்திருக்க முடியும்! பெரும்பாலும் காட்டுமிராண்டி மக்களாகவே இருந்திருப்பார்கள்.

 

கிறிஸ்து முதலிய நபிகள் காலம் எல்லாமுமே பெரிதும் காட்டுமிராண்டிகள், அதாவது பகுத்தறிவுக்குச் சம்பந்தமில்லாத (மூடநம்பிக்கை) காலமாகவே இருந்திருக்கிறதுஅதாவது கந்தன், கணபதி கடவுள்களின் பிள்ளைகள்; அதுபோலவே ஏசு கிறிஸ்து கடவுள் குமாரன் (தேவகுமாரன்), முகம்மது நபி கடவுளின் தூதர் (கடவுளால் அனுப்பப்பட்டவர்), அதுபோலவே ராமன், கிருஷ்ணன் கடவுள் அவதாரங்கள் - அவர்களும் அற்புதங்களைச் செய்தார்கள். ஆகவே, இப்படிப்பட்ட எந்தக் கடவுளை, அவதாரங்களை, குமாரர்களை, தூதர்களை, நம்புவதானாலும் அவர்களுடைய அற்புத (அதாவது பகுத்தறிவுக்கு ஒவ்வாத, அனுபவத்திற்கு முடியாத) காரியங்களை நம்பினால் தான் ஏற்க முடிந்தவர்கள் ஆவார்கள்.

 

இவர்கள் மாத்திரமல்லர். மனிதத் தன்மைக்கு அதாவது ஆராய்ச்சிக்கு, சாத்தியத்திற்கு, அனுபவத்திற்கு ஒத்துவராத, நடப்புக்கு இணங்காத எந்தக் காரியத்தையும் ஒத்துக் கொண்டால் ஒழிய எந்த மதமும், எந்த ஆதாரமும், எந்த நபரும் ஏற்றுக் கொள்ளக் கூடாதவர்களே - கூடாதவைகளேதாம் - அதாவது மூடநம்பிக்கையேதான் ஆகும்.

 

ஆதலால் தான் எந்தக் கடவுளும், எந்த அவதாரமும், எந்த மதமும், எந்த மதத் தலைவரும் எல்லாம் மூடநம்பிக்கையில் பட்டவர்களே ஆவார்கள்.

 

மற்றும் இவர்கள் - இவைகள் எல்லாம் மூடநம்பிக்கையில் பட்டவைகளேயாகும்.

 

இப்படிப்பட்ட மூடநம்பிக்கைக்கு ஏற்ப கடவுள், மதம், அவதாரம், தலைவர்கள் எப்படி உண்டாக்கப்பட்டார்கள் என்றால் அந்தக் காலம் காட்டுமிராண்டிக் காலம் ஆனதால்தான் உண்டாக்கப்பட முடிந்தது. அக்கால மனிதர்களும் காட்டுமிராண்டிகள் ஆனதால் அவைகளை ஏற்றுக் கொள்ள முடிந்தது.

 

இக்காலத்திலும் மதவாதிகள் - பகுத்தறிவுக்கு ஒவ்வாத - மூடநம்பிக்கைக்கு ஆளான ஆத்திகர்கள் என்பவர்களைத் தவிர மற்றவர்கள் இவற்றை - இவை போன்றவற்றைச் சிறிதும் நம்புவதில்லையே!

 

- (14.04.1972- "உண்மை" இதழில் தந்தை பெரியார் அவர்களால் எழுதப்பட்டது)

0 comments: