Search This Blog

13.5.21

பெண்கள் நிலையம் அவசியம் ! - பெரியார்

 

பெண்கள் நிலையம் அவசியம்!

 


கலப்புமணம் என்பது இந்திய நாட்டில் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. எல்லா மதங்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டதும், வேத புராண காலங்களில் இருந்தும், ஸ்மிருதி சுருதி ஆகியவைகளால் அனுமதிக்கப்பட்டும் நடந்து வருகின்ற காரியம் தானே ஒழிய சுயமரியாதைக்காரர்கள் மாத்திரம் ஆரம்பித்து நடத்துவதாகச் சொல்லி விட முடியாது.

 ஆகையால் கலப்பு மணம் என்பதை எந்த மதக்காரர்களும், ஆட்ஷேப்பிப்பதற்கு இடமில்லை.

 அன்றியும் இன்று பிரதியஷ அனுபவத்திலும் மதவாதிகளுக்குள்ளாகவே கலப்பு மணங்கள் தாராளமாக அனுமதிக்கப்பட்டும் வருகின்றதை நாம் பார்க்கின்றோம்.

 

சர்.பி. ராஜகோபாலாச்சாரியார் என்கின்ற பார்ப்பனர் சர்க்காரில் லோக்கல் முனிசிபல் மந்திரியாய் இருந்தவர். அவரும் 20-வருஷத்துக்கு முந்தியே ஒரு நாயர் பெண்ணை மணந்தார்.

 ஒரு ரெட்டியார் சென்னையில் வேறு ஜாதி முத்துலட்சுமி அம்மாளை மணந்திருக்கிறார்.

 சென்னையில் 2, 3-நாள் ஹோம் மெம்பராய் இருந்த வெங்கட்ராம சாஸ்திரியார் குமாரர் ஒரு பார்ப்பனரல்லாத பெண்ணை நல்ல முத்தம்மாளை மணந்திருக்கிறார்.

 சென்னையில் இந்துமத பரிபாலனபோர்ட் தலைவர் சூரியராவ் நாயுடு புதல்வி ஆர்.லட்சுமி தேவி அம்மாள் பி.. சென்னை போலீஸ் டிப்டி கமிஷனர் ஜயநுதீன் சாயபு பி.. (முஸ்லீமை) மணந்திருக்கிறார்.

 சென்னையில் நீலகண்ட சாஸ்திரியார் பெண் ருக்குமணி அம்மாள் ஒரு அய்ரோப்பியரை மணந்திருக்கிறார்.

 சரோஜினி தேவி பார்ப்பனப் பெண் 35- வருஷங்களுக்கு முன்பே ஒரு டாக்டர் கோவிந்தராஜீலு நாயுடுவை மணந்திருக்கிறார்.

 இப்படியாக "பெரிய" இடங்களிலேயே அநேகம் கலப்பு மணங்கள் நடைப்பெற்றிருக்கின்றன. இவர்கள் எல்லோரும் சுயமரியாதைக்காரர்கள் என்றோ நாஸ்திகர்கள் என்றோ சொல்லி விட முடியாது.

 

இந்துக்கடவுள்கள் என்று சொல்லப்படுபவைகள்கூட முஸ்லீம் பெண்ணையும், தாழ்த்தப்பட்ட வகுப்பு பெண்களையும் மணந்திருப்பதாக ஆஸ்திகர்களுக்கு ஆதாரங்கள் இருக்கின்றன. மற்றும் அவர்களுடைய ரிஷிகள், முனிவர்கள் 100-க்கு 100-கலப்பு மணக்காரர்களாகவே இருந்திருக்கிறார்கள். அப்படியெல்லாம் இருக்க கலப்பு மணத்தைப் பற்றி அதிசயப்படுவதோ, ஆஷேப்பிப்பதோ உலகனுபவம் தெரியாததும், அறிவில்லாததுமான செய்கை என்று தான் சொல்ல வேண்டுமே தவிர மற்றபடி அதில் எவ்வித கெடுதியோ ஆஷேபனையோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

 ஒரு சமயம் விதவாவிவாகஞ் செய்து கொண்டது குற்றம் என்று சொல்லப்படுமானால் அதுவும் அறியாமை என்று தான் சொல்ல வேண்டும். உலகில் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும், இந்துமதத்திலும் விதவை மணம் ஒப்புக் கொள்ளப்படுகின்றது.

 இந்தியாவிலும் இந்துமதத்திலும்கூட அநேக ஜாதிகளில் விதவை மணம் அனுமதிக்கப்பட்டும் நடந்தும் வருகின்றது.

 சில ஜாதிகளில் வழக்கமில்லை என்றாலும் தோழர் .ராம சொக்கலிங்கம் (செட்டியார்) அவர்கள் பேசியதில் தங்கள் வகுப்பில் வெளிப்படையாய் விதவை மணம் இல்லையே ஒழிய விதவைப் பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் மாத்திரம் தெரியும்படி ஆயிரக்கணக்கான மணங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன என்று சொன்னார். இந்த மாதிரியான மணம் அந்த வகுப்பில் மாத்திரம் என்று சொல்லிவிட முடியாது. விதவைகளாக இருக்க அனுமதிக்கப்பட்ட எந்த வகுப்பிலும், விதவை மணம் அனுமதிக்கப்படாத எந்த வகுப்பிலும், சர்வ சாதாரணமாய்க் "கண்டாலும் காணவில்லை" என்றும், "கண்டுதோ காணலையோ" என்றும் சொல்லும் முறையில் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன.

 இதை யாரும் தப்பு என்று சொல்லிவிட முடியாது. இது இயற்கையின் ஆட்சியேயாகும்.

 தோழர் நித்தியானந்தமவர்கள் பேசியதில் இந்தக காரைக்குடி நகரில் 2400 (இரண்டாயிரத்து நானூறு) விபச்சாரிகள் இருப்பதாக சர்க்கார் கணக்கில் இருப்பதாய் ஒரு பெரிய சர்க்கார் அதிகாரி சொன்னதாக சொன்னார்.

 இந்த 2400- பெண் விபச்சாரிகளும் எந்த சாமி பேருக்காவது பொட்டுக்கட்டி விபச்சாரிகளாக ஆக்கப்பட்டார்கள் என்று சொல்லிவிட முடியுமா?

 காரைக்குடி ஜன சங்கிலியை 20.000-ஆனால் இதில் 10,000-தான் பெண்கள் இருக்க முடியும். அந்தப் பெண்களிலும் சரிபகுதிப் பேராவது குழந்தைகளாக கிழவிகளாக இருக்கக்கூடும். மீதி 5000-பெண்கள் உள்ள காரைக்குடியில் 2400- பெண்கள் விபச்சாரிகள் என்றால் இவர்களில் குறைந்தது 3-இல் 2-பாகம் 1,600-பேராவது முதலில் விதவைகளாக இருந்து இரகசிய மணம் செய்து பிறது அம்பலத்துக்கு வந்த விபச்சாரிகள் ஆகியிருப்பவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

 மற்றும் தோழர் ஜீவானந்தம் அவர்கள் பேசியதில் ஊருணிக்கேணியில் வாரத்துக்கு 4-குழந்தை, 5-குழந்தை செத்து மிதக்கின்றது என்று சொன்னார்.

 இதுவும் பார்ப்பனர்களே சுற்றியிருக்கின்ற சென்னை பார்த்தசாரதி கோயில் தெப்பக்குளத்திலும் மற்றும் அநேக புண்ணிய தீர்த்தங்கள் என்பவைகளிலும் காணக்கூடிய காட்சியேயாகும்.

 தோழர் பொன்னம்பலம் பேசுகையில் அனேக சமூகங்களில் கலப்பு மணம் செய்து கொள்வதற்கு இருக்கும் கஷ்டம் விபச்சாரித்தனம் (வெளிப்படையாய்) செய்வதற்கு இல்லை என்றும், விச்சாரித்தனம் என்பதை வெகு சாதாரணமாய் அனுமதிக்கப்படுகிறது என்றும், ஒடிப்போன விதவைப் பெண்களைக் கூட்டிவந்து ஜோடியாகக் கூட வசிக்கவே அனுமத்திக்கப்படுகிறார்கள் என்பதோடு, செலவுக்கும் கொடுக்க சம்மதிக்கிறார்களே ஒழிய அதற்குக் கல்யாணம் செய்வதென்றால் அது பெரிய தவறான காரியம் என்று மதிக்கிறார்கள் என்றும் சொன்னார்.

 ஆகவே இவைகளையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் விதவையாய் இருக்கும் எந்தப் பெண்ணுக்கும் விதவைப் பெண்களை வைத்துக் இருக்கும் எந்த வீட்டுக்காரரும், எந்த சமூகத்தவரும் வெட்கப்பட வேண்டுமே ஒழியவேறில்லை.

 எதற்காக ஒரு பெண் விதவையாக இருப்பது என்பது எனக்கு விளங்கவில்லை. விதவைத்தன்மை என்பதை தண்டனைக்குள்ளாக்க வேண்டும் என்பது எனது வெகுநாளைய அபிப்பிராயமாகும்.

 ஏனெனில், விதவைத் தன்மையை அனுமதிக்கும் சமூகம் மற்றொரு விதத்தில் விபச்சாரத்தனத்தைத் தூண்டவும், அனுமதிக்கவும் செய்கின்ற சமூகம் என்று தான் சொல்ல வேண்டும்.

 அநேக விதவைகள் தங்களுக்கப் போக்கிடமில்லாமல் சித்திரவதை போன்ற துன்பம் அனுபவிக்கிறார்கள்.

 ஆதலால் சுயமரியாதை இயக்கக்காரர்களாகிய நாம் அங்கொரு விதவை மணம், இங்கொரு விதவை மணம் வீதம் செய்வதாலேயே விதவைக் கொடுமைகள் ஒழிந்து விடாது.

 தோழர்கள் .ராமலிங்கம் (செட்டியார்) ஜீவானந்தம், நீலாவதி ஆகியவர்கள் சொன்னது போல் ஒரு பெண்கள் நிலையம் ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு விதவைகள் விஷயத்தில் அனுதாபம் இருக்கின்ற மக்கள் பல விதத்திலும் உதவிபுரிய வேண்டும்.

 வயது சென்ற பல விதவைப் பெண்கள் அந்நிலையத்து மேற்பார்வைக்கு வரவேண்டும். பெரும் குடும்பங்களில் அவஸ்தைப்படும் விதவைப் பெண்களைக் கூட்டிக் கொண்டு வர வேண்டும். அவர்களுக்குக் கல்வி, தொழில் முதலியவைகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். கலியாணம் வேண்டியவர்களுக்குக் கல்யாணம் செய்து வைக்க வேண்டும். கல்யாணம் வேண்டாதவர்களைப் பிரச்சாரத்துக்குப் பழக்கிப் பிரச்சாரம் செய்யச் செய்ய வேண்டும். இந்தக் காரியங்கள் சுயமரியாதைககாரர்கள் செய்தால் தான் உண்டு. மற்றவர்கள் செய்யவே மாட்டார்கள். ஆதலால் கூடுமானவரை செய்வதற்கு உடனே முயற்சி எடுக்க வேண்டும்.

 

                 --------------------------------------------------- 19.04.1935-அன்று தந்தை பெரியார் அவர்கள் காரைக்குடியில் ஆற்றிய உரை. "குடிஅரசு" 28.04.1935

0 comments: