ஏ, கடவுள் நம்பிக்கைக்கார
அறிவிலிகளே!
ஏ, அறிவிலிகளே! நீங்கள்
"கடவுள் ஒருவர் இருக்கிறார். அவர்தாம் பிறப்பிற்கும்
- சாவிற்கும், உற்பத்திக்கும் - அழிவிற்கும்
காரணமானவர்" என்கிறீர்களே, எதைக் கொண்டு இப்படிச்
சொல்லுகிறீர்கள்? அணுப்பூச்சி முதல் யானை, திமிங்கலம்
ஈறாக உள்ள
பல கோடி
கோடியான ஜீவராசிகளின்
தோற்றத்தையும், அவற்றின் துன்பத்தையும், கொடூர வேதனையையும்,
சாவையும் கண்டு
கூறுகிறீர்களா? அல்லது தோற்றத்தையும் வாழ்வையும் மாத்திரம்
பார்த்து இப்படிச்
சொல்லுகிறீர்களா?
ஜெகதீச சந்திரபோஸ் அவர்களின்
சித்தாந்தப்படி புல், பூண்டு, செடி, கொடி,
மரம் முதலிய
தாவரங்களுக்கு ஜீவப்பிராணி போலவே உயிரும் வாழ்வில்
இன்ப துன்பங்களும்
அழிவும் இருக்கின்றன
என்கிறபடி, அவை படும் அவஸ்தையைப் பார்த்து
"இவை கடவுளால்
உண்டாக்கப்பட்டன" என்றும் சொல்கிறீர்களா?
இந்த ஜீவப்பிராணிகளுக்கும், தாவரங்களுக்கும் தோற்றம், வாழ்வு, அறிவு,
அழிவு என்பவை
இருப்பதால் அவை துக்கம், தொல்லை அனுபவிக்கின்றன
என்பதில் சந்தேகமில்லை.
இவற்றிற்குக் காரணம் கடவுள் என்றால் தானே
கடவுள் இருப்பதற்கு
ஆதாரம் ஆகும்!
அப்படியானால் இவற்றால் கடவுளுக்கு
என்ன இலாபம்,
திருப்தி, கடமை
என்று தெரிய
வேண்டாமா?
எதற்காகக் கடவுள் இந்த
வேலையைச் செய்கிறார்
என்பது பற்றி
விளக்க வேண்டாமா?
"அதெல்லாம் அவரிஷ்டம்" என்றால்
கடவுள் புத்திசாலி,
யோக்கியன் என்று
கருத முடியுமா?
மற்றும் என்ன அவசியத்தைக்
கொண்டு ஒரு
கடவுள் இருக்க
வேண்டும் என்று
கருதுகிறீர்கள்? கடவுள் இல்லாவிட்டால் என்ன காரியம்
நடக்காது அல்லது
என்ன காரியம்
கெட்டுவிடும்?
கடவுள் இருப்பதால் மனிதன்
யோக்கியனாக இருக்கிறானா? மனிதனுக்கு வேதனையில்லாமல், துக்கமில்லாமல்,
கவலையில்லாமல் இருக்க முடிகிறதா?
கடவுள் இருப்பதால் மனிதன்
சாகாமல் இருக்கிறானா?
மனிதன் மற்ற
ஜீவன்களுக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருக்க முடிகிறதா?
கடவுள் இருப்பதால்
உலகில் துஷ்டமிருகங்கள்,
துஷ்ட ஜந்துக்கள்
தோற்றுவிக்கப்படாமல் இருக்கின்றனவா?
கடவுள் இருப்பதால் ஒரு
ஜீவனை மற்றொரு
ஜீவன் இம்சிக்காமல்,
கொல்லாமல் இருக்க
முடிகிறதா? கடவுள் இருப்பதால் ஒரு ஜீவனை
மற்றொரு ஜீவனைக்
கொன்று ஆகாரத்திற்கு
உணவாகக் கொள்ளாமல்
இருக்க முடிகிறதா?
கடவுள் இருப்பதால் மனித
சமுதாயத்திற்கு, அதன் பொருள்களுக்கு ஏதாவது பாதுகாப்பு
தேவைப்பட்டாமல் இருக்கிறதா? இப்படியாக மனிதனுக்கு, ஜீவராசிகளுக்கு
உலகத்திற்கு கடவுளால் ஆகிற "நல்ல" காரியமென்ன?
கடவுளால் ஆகாமல்
இருக்கிற "கெட்ட" காரிமென்ன?
பொதுவாக மனித சமுதாயம்
மனிதனிடமிருந்தே "பாதுகாப்பாய்" இருப்பதற்கு அவனவன் முயற்சியும், அரசாங்கப்
பாதுகாப்பும், மிக்க ஜாக்கிரதையும், கவலையும் கொண்டு
இருக்க வேண்டியிருக்கிறதா?
இல்லையா?
பொதுவாகவே உலகில் கடவுள்
நம்பிக்கை உள்ள
எந்த மனிதனும்,
கடவுள் பிரசாரம்
செய்கிற எந்த
மனிதனும், கடவுளுக்கென்று
எந்தக் காரியத்தையும்,
ஒதுங்கி வைக்காமல்
எல்லா காரியங்களையும்
தானே செய்கிறானே
ஒழிய, தானே
செய்ய வேண்டும்
என்கிறானே ஒழிய,
கடவுளுக்கு விடுவதில்லையே! தன்னால் ஆகாத காரியத்தையும்,
தெரியாத காரியத்தையும்
"கடவுள் செயல்" என்று சொல்லி விடுகிறான்.
தெரிந்த, முடிந்த
காரியம் எதையும்
தானே செய்கிறான்.
தண்டனைக்கு, வசவுக்கு, பழிப்பிற்குப் பயந்து தன்னால்
கூடிய கெட்ட,
கெடுதியான காரித்தைச்
செய்யாதிருக்கிறான்.
எனவே, உலகுக்கு, மனிதனுக்கு
ஜீவன்களுக்குக் கடவுள் தேவையில்லை என்பதோடு, மனிதனும்
கடவுளை எதிர்பார்ப்பதில்லை
என்றே தெரிகின்றது.
இவை ஒருபுறமிருக்க, பூகம்பங்கள்,
இடி இடித்தல்கள்,
பெரும் வெள்ளங்கள்,
புயல் காற்றுகள்,
விஷ நோய்கள்
ஏற்பட்டு மக்களின்,
ஜந்துக்களின் உயிர்கள் மாள்வதும், சொத்துக்கள் நாசமாவதுமான
காரியங்களுக்கு யார் பொறுப்பாளி? இவை ஏன்
நிகழ வேண்டும்?
இவை நிகழாமல்
இருப்பதற்கு வழி என்ன? என்பவை எந்தக்
கடவுள் நம்பிக்கைக்காரனுக்காவது
தெரியுமா? எவனாலாவது
தடுக்க முடியுமா?
இவைகளெல்லாம் "கடவுளால் ஏற்பட்டவை"
என்றால் கடவுளுக்கு
அவற்றைச் செய்ய
வேண்டிய அவசியமென்ன?
"இவற்றைச் செய்யாவிட்டால்" கெடுதி
என்ன என்பன
பற்றி எந்தக்
கடவுள் நம்பிக்கைக்காரனாவது
கூறமுடியுமா?
அட அறிவிலிகளே! கடைசியாய்ச்
சொல்லுகிறேன்; என்னவென்றால், நீங்கள் நினைக்கிற, செய்கிற,
நினைத்த, செய்த,
ஆசைப்படுகிற எண்ணங்களையும், காரியங்களும்
கொண்டு சிந்தித்துப்
பாருங்கள்!
"கடவுள் இருக்கிறார்; நாம்
செய்த, நினைத்த,
ஆசைப்பட்ட காரியங்களை
கடவுள் அறிவார்;
அவற்றிற்குத் தகுந்த பலன் கொடுப்பார்; அனுபவிக்க
வேண்டி வரும்"
என்று கடவுள்
உணர்ச்சியோடு நம்புகிறீர்களா? யோசித்துப்
பாருங்கள்!
- (14.08.1970- "உண்மை"
இதழில் தந்தை
பெரியார் அவர்கள்
எழுதிய கட்டுரை)
0 comments:
Post a Comment