Search This Blog

16.5.21

 

இழிவை ஒழிக்க வழி!

நான் மனித சமுதாயத் தொண்டு செய்கிறவன். சமுதாயத் தொண்டு செய்கிறவனுக்கு நாட்டுப்பற்றோ, ஜாதிப்பற்றோ, இலக்கியப்பற்றோ, எந்தப் பற்றும் கூடாது.

 

தோழர்களே! நமது சமுதாயம் உலகத்தில் தாழ்த்தப்பட்ட இழிவான சமுதாயம். அரசியல் பெயராலும், மதத்தின் பெயராலும், வயிறு வளர்ப்பவர்கள் பெருமையாக நாட்டையும், மொழியையும் பேசிக் கொள்ளலாம். நம்மிடம் உயர்வானது ஒன்றும் இல்லை. நம்முடைய இலக்கியங்கள் எல்லாம் 2000-வருடங்களுக்கு முந்தியவை. வள்ளுவன் காலம் காட்டுமிராண்டிக் காலம். அதேபோல கடவுளும் மனிதன் மடையனாக இருந்த போது உற்பத்தி செய்ய்பட்டவை. இயேசுவும், அல்லாவும், ராமனும், கந்தனும் 2000, 3000- ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டவைகள்.

 

அந்தக் காலங்களில் 5-வருடம் கூட மனித ஆயுள் இல்லையே. இந்தக் கடவுளும், சாத்திரங்களும் ஒழிந்து அறிவு வளர்ந்த பிறகு ஆயுள் வளர்ந்துள்ளதே. இன்றைக்கு சுயமரியாதை இயக்கம் வளர்ந்த பிறகு மனிதனின் சராசரி வயது 50-ஆக உயர்ந்தது. கடவுள் ஒழிந்து அறிவு ஆதிக்கம் செலுத்தியதால் தான் இப்போது மனிதன் வாழ்கிறான், வளர்கிறான்.

 

1952–ல் சராசரி வயது 25, 1973–ல் சராசரி வயது 52. 27-வயது இந்த 21–ஆண்டில் உயர்ந்திருக்கின்றோமே! அன்று கோயில் இல்லையா? கடவுள் இல்லையா? சங்கராச்சாரி இல்லையா? கிறிஸ்து பிறந்த முதல் ஆண்டில் உலக ஜனத்தொகை 20-கோடி. இன்று 350-கோடி. இந்தப் பாழாய்ப் போன கடவுள் இல்லாமல் இருந்தால் அன்றைக்கே மனிதன் உயர்ந்திருப்பான்.

 

நான் பந்தயம் கட்டுகிறேன். மேடைமீது வந்து சொல்லுங்கள். யாருக்காவது கடவுள் நம்பிக்கை இருக்கிறதா? சர்வசக்தி உள்ள கடவுள் இருக்கிறது என்று துணிவுடன் சொல்கிறாயா? கும்பிட்டால் கடவுள் நம்பிக்கையா? சாம்பல் அடித்துக் கொண்டால் கடவுள் நம்பிக்கையா? அவனே சம்பாதிக்கிறான், சண்டை போடுகிறான், வாழ்க்கையை வளர்க்கிறான். கடவுளை நம்பி எவன் உட்கார்ந்து கொண்டு இருக்கிறான்? என்னுடைய 15-வயதில் கடவுளை இல்லை என்று சொன்னவன் தானே நான். இப்பவும் சொல்கிறேன். நீங்கள் 100, 120- வருடம் சாகாமல் இருக்கப் போகிறீர்கள். 5-லட்சம், 3-லட்சம் பேர் இருக்கும் போது அக்காலத்தில் பல ஆயிரம் பேர் சாவார்கள். இப்போது 30, 40-லட்சம் பேர் இருக்கும் போது 4, 5-பேர்தானே காலரா வந்து சாகிறார்கள்?

 

மனிதன் முட்டாளாவதற்குஉலகம் வளராமல் இருப்பதற்குக் காரணம் கடவுள் தானே! நமக்குப் பல்லாயிரக்கணக்கான கடவுள், கோயில் - இத்தனை பேரும் இருந்து என்ன செய்தார்கள்? சாமிக்குக் கல்யாணம், கோயில், குளம், திருவிழா, ஒழுக்கக்கேடு இதைத்தானே செய்தார்கள்? இன்று மேல் நாட்டான் சந்திர மண்டலம் போகிறான். நீ பி.., எம்.., படித்து சந்திரனை பாம்பு விழுங்குகிறது என்கிறாயே! நீ படித்தவன் தானா?

 

சர்வசக்தி உள்ள சாமியை ஒருவன் இல்லை என்று சொல்லுகின்றான் என்றால் நீ உட்கார்ந்து கொண்டு அழலாமா? சர்வ சக்தி உள்ள சாமி, இல்லை என்று ஏன் சொல்ல வைக்க வேண்டும்? நான் இருக்கிறேன் என்று சொல்ல வேண்டாமா? திராவிடர் கழகம் இல்லை என்றால் நீங்கள் இவ்வளவு உயர்ந்திருப்பீர்களா? சுயமரியாதை இயக்கம் தோன்றி கடவுளை செருப்பால் அடித்து நொறுக்கியதால் தானே நாம் எல்லாம் மனிதன் ஆனோம்.

 

தோழர்களே! கடவுளை உண்டாக்கியவன் என்ன சொன்னான்? கண்ணுக்குத் தெரியாது. கைக்குச் சிக்காது, புத்திக்கு எட்டாது என்கிறான். தமிழ் மகான்களே இதைத் தானே சொன்னார்கள். அறிந்து கொள்ள முடியாதவன் ஒரு அணு அளவு கூடத் தெரிந்து கொள்ள முடியாதவன் என்று சொல்கிறான். நமது மடையர்களைத் தவிர, கடவுளுக்குப் பெண்டாட்டியும், வைப்பாட்டியும் குழந்தை இருக்கிறது என்று எவன் சொன்னான்? கருணையே வடிவான கடவுள் என்று சொல்லிக் கொண்டு கொலைக்காரனுக்கு வேண்டிய ஆயதங்கள் எல்லாம் கடவுளுக்குக் கொடுத்திருக்கிறான். அன்பே உருவானவன் என்கிறான். ராட்சகர்களையும், மற்றவர்களையும் கொன்று கசாப்புக் கடை வேலை செய்கிறான். எந்தக் கடவுள் கொலை செய்யாதவன்?

 

தேவர்களைக் காப்பாற்ற கடவுள் வந்தான் என்கிறான். தேவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள் தானே, நாம் எல்லாம் அசுரர்கள். நம்மை அழிக்கபார்ப்பானைக் காக்க கடவுள் வந்தான். கடவுள் உண்டாக்கிய காலத்தில் மனிதன் நாகரிகம் அடையவில்லை. தோழர்களே! இன்றைய தினம் நாம் எல்லாம் யார்? சூத்திரர்கள் தானே? சூத்திரன் என்றால் பார்ப்பானின் தாசிமகன் என்று சட்டம் சொல்கிறது, சாஸ்திரம் சொல்கிறது, ஒரு நாட்டிலே பெரும்பாலான மக்கள் ஏன் இழி மகனாக இருக்க வேண்டும்?

 

இன்று நம்மை மற்றவன் சூத்திரன் என்று சொல்ல மாட்டான்; சொல்ல முடியாது. ஆனால் நம்மை நாமே சூத்திரன் என்று ஒத்துக் கொள்கிறோம். நாம் சொல்கின்ற சாதிகள் எல்லாம் ஏது சாஸ்திரத்திலே? சட்டத்திலே? வைசிய சத்திரியன் கூட கோர்ட்டிலே போய்விட்டது. பிராமணன், சூத்திரன் தான் இருந்து கொண்டு வருகிறது. மற்றவர்கள் எல்லாம் பேசிக் கொள்ளலாம்; ஆனால் இந்தியாவில் நாம் எல்லாம் சூத்திரர்கள் என்று தானே இருக்கிறது.

 

இந்தியாவிலே உள்ள அத்தனை பேரும் இந்துக்கள். இந்துக்கள் என்றால் சூத்திரன், பிராமணன். நான் சொல்லுகிறேன்; இந்த உலகம் உள்ளவரை நீங்கள் தாசிமக்கள் தான். இந்தியா என்றால் சூத்திரன். இந்து என்றால் சூத்திரன். சூத்திரன் என்றால் தாசிமகன். இது என்றைக்கு ஒழிவது? நாம் எல்லாம் இந்துக்கள் அல்லவென்று கெசட்டில் வெளியிட்டு விட வேண்டும். நாம் இழிவை ஒழிக்க வேண்டாமா? பணக்காரனாகி விட்டால் போதுமா? மந்திரியாகி விட்டால் போதுமா? உத்தியோகம் வாங்கிவிட்டால் போதுமா?

 

இதையும் தவிர, நம்மை நாமே தீண்டத்தகாதவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம். கோயிலுக்குப் போகும் நீ, கர்ப்பக்கிரகம் வரை போகிறாயா? காரணம், சாமி தீட்டாகப் போய்விடும் என்று ஒத்துக் கொள்கிறாயே! நம்மை நாமே தானே இழிவுப்படுத்திக் கொள்கிறோம்.

 

மற்றவன் இழிவை சொல்லவிடாமல் நாம் தடுத்து விட்டோம். இனி நமது இழிவை ஒழிக்க நாம் தான் மாறியாக வேண்டும். ஒவ்வொருவரும், சாம்பல் அடிக்க மாட்டேன், நாமம் போடமாட்டேன் என்று முன்வர வேண்டும். கோயிலுக்குப் போகிறவனைப் பார்த்துக் காரித்துப்ப வேண்டும். சுதந்திரம் வந்து 26-ஆண்டுகள் ஆகியும் சூத்திரனாக இருக்கலாமா? நாம் வீணாயப் பதவி பெற போட்டி போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறோமே தவிர சமுதாய இழிவை ஒழிக்க வேண்டாமா?

 

கம்யூனிஸ்ட் எவனாவது சாதி பற்றிக் கூறுகிறானா? கடவுள் பற்றிப் பேசுகிறானா? உனது இழிவை ஒழிக்க இந்தக் கம்யூனிஸ்ட் செய்த காரியம் என்ன? நாளைக்கே காங்கிரஸ் வந்தாலும் என்ன செய்வார்கள்? சூத்திரன் இல்லை என்பார்களா? சூத்திரனே கிடையாது என்று சட்டம் போடுவார்களா? பதவிக்கு வருவார்கள் வாழ்க்கையை வசதியாக்கிக் கொள்வார்கள். 1952-லே காங்கிரசுக்காரன் 2000-பள்ளிக் கூடத்தை மூடினானே! 1938–லும் மூடினானே!

 

ஆகவே தோழர்களே, கடவுள், மதம், சாஸ்திரம், சம்பிரதாயம், சாதி எல்லாம் காட்டுமிராண்டிக் கால அமைப்பு. இது தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகிறது. இது என்றைக்கு மாறுவது? எனவே, நான் இனி இந்து என்று சொல்லிக் கொள்வதில்லை, சாம்பல் அடிப்பதில்லை, கோயிலுக்குப் போவதில்லை என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இழிவுக்குக் காரணம் நாம் தான். நாமே இழிவிலிருந்து நீங்க வேண்டும்.

 

- (25.08.1973- அன்று சென்னை புது வண்ணாரப்பேட்டையில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையில் ஒரு பகுதி - "விடுதலை" – 26.08.1973)

0 comments: