Search This Blog

16.5.21

 

கடவுள் அவதாரங்கள்!

அவதாரம் என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் இருந்தாலும், நாம் மதவுலகில் பயன்படுத்தும் அவதாரம் என்ற சொல்லுக்குப் பொருள் என்னவென்றால், கடவுள் என்னும் பொருள், கடவுளாக வேறு ஒரு பொருளாகத் தோன்றுதல் - உற்பவித்தல் என்பது தான் பொருளாகக் கொள்ளப்படுகிறது.

 

அதுவும், விஷ்ணு என்னும் கடவுள், அதன் கருத்தைச் சாதித்துக் கொள்ள, கடவுளாகவே இருந்து சாதிக்காமல், வேறு ஜீவ உருவாகத் தோன்றி தனது கருத்தைச் சாதித்துக் கொண்டது என்பதற்கே பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 

இந்தத் தன்மையில் தான் விஷ்ணு "பத்து அவதாரங்கள் எடுத்தார்" என்று சொல்லப்படுகிறது. பத்து அவதாரங்கள் எடுத்தார் என்று சொல்லப்படுகிறதே ஒழிய, எடுத்த அவதாரங்கள் ஒன்பது தான் என்று ஆதாரங்களில் வரையறுக்கப்பட்டிருக்கிறது. இதுவே பெரிய புரட்டாகும்.

 

இந்த ஒன்பது அவதாரங்களுக்கும் சொல்லப்படும் காரணங்கள் மிக மிகப் புரட்டும் மகா பித்தலாட்டமுமேயாகும்.

 

இதைவிட, அந்த அவதாரங்கள் விதங்களோ, எல்லாவற்றையும் விடப் புரட்டு, பித்தலாட்டம் என்று சொல்வதற்குரியன மாத்திரம் அல்லாமல், மகா மகா அக்கிரமங்களையும், அயோக்கியத்தனங்களையும் கொண்டவையாகும்.

 

மச்சம் (மீன்), கூர்மை (ஆமை), வராகம் (பன்றி), நரசிம்மம் (சிங்கம்), வாமனன் (குள்ளப் பார்ப்பான்), பரசுராமன் (கோடாலிப் பார்ப்பான்), இராமன், பலராமன், கிருஷ்ணன் என்பதாக ஒன்பது அவதாரங்கள்.

 

இவைகளில் நான்கு ஜந்துக்கள் (மனிதரல்லாத ஜீவன்கள்), அய்ந்து மனித உரு (மனிதர்கள்). இப்படியாக ஒன்பது அவதாரங்களே எடுக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் ஓர் அவதாரம் நடக்காமலே பத்து அவதாரங்கள் என்று சொல்லப்படுகிறது என்பதுடன், இனிமேல் ஒரு அவதாரம் - கல்கி என்பதாக ஏற்படப் போகிறது என்றும் சொல்லப்படுகிறது.

 

இவை எதற்காக, ஏன் எடுக்கப்பட்டன என்பதற்குச் சொல்லப்படும் காரணங்கள் சிறிதும் அறிவற்றதும் யோக்கியமற்றதுமேயாகும்.

 

கடவுள் என்பவர் சர்வ சக்தியுள்ளவர், அவர் இஷ்டப்படாமல் ஒரு காரியமுமே நடக்காது; அவர் இஷ்டப்பட்டால், நினைத்தால் எந்தக் காரியமும் தானாகவே நடந்து விடும் - இதுதான் கடவுள் தன்மை என்று கூறப்படுவதாகும்.

 

பிரம்மா, விஷ்ணு, சிவன், என்கின்ற மூன்று கடவுள்களுக்கும் இந்தச் சக்தியுண்டாம்.

 

இப்படிப்பட்ட கடவுள் எதற்காக அவதாரம் - மற்றொரு பொருளாக உருவமெடுத்துப் பிறந்து வருவது?

 

கடவுளால் ஆகாத காரியம் இந்த ஜீவன்களாலும், மனித உருவங்களாலும் ஆக்கப்படுவது என்பது கடவுள் சக்திக்குப் பொருந்துமா?

 

இந்த அவதாரங்களால் செய்யப்பட்ட காரியங்கள் எவை மனித அறிவுக்குப் பொருத்தமானதாகுமா?

 

மீன் அவதாரம்:

 

முதல் அவதாரமாகிய மீன் அவதாரம் எதற்காக எடுக்க வேண்டும்?

 

பிரம்மா அயர்ந்து தூங்கும் போது ஒரு இராட்சதன் வேதங்களைத் திருடிக் கொண்டு போய், சமுத்திரத்துக்குள் ஒளிந்து கொண்டானாம். அவனைக் கொன்று அவனிடமிருந்த வேதங்களை எடுத்துக் கொண்டு வருவதற்காக மீன் அவதாரம் எடுக்க வேண்டி வந்ததாம்!

 

கடவுளுக்கும் வேதத்திற்கும் சம்பந்தம் என்ன? அதுதான் தானாகத் தோன்றியதும், சப்த ரூபமாக ஒலிக்கப்பட்டதும், அது மக்கள் மனதில் இருத்திக் கொண்டிருப்பதுமான சாதனமாயிற்றே! வேதத்துக்குப் பெயரே "எழுதாக் கிளவி" என்பதாயிற்றே! எழுத்துசப்த ரூபமாக உள்ளது என்பதைத் தூக்கிக் கொண்டு போவான்? எப்படி முடியும்?

 

அப்படியே ஆனாலும் பிரம்மனுக்கு வேறு ஒன்று தயாரித்துக் கொள்ள முடியாதா? அல்லது பிரம்மனே (கடவுளே) பார்த்து அந்த ராட்சதனிடம், "கொண்டு வந்து வைத்து விட்டுப் போடா" என்றால் அவன் கேட்கமாட்டானா?

 

அப்படி அவன் கேட்கவில்லையானால், தானாக அவனைக் கொன்று, அந்த வேதங்களை எடுத்துக் கொண்டு வரமுடியாதா?

 

எப்படியிருந்தாலும் அந்த விஷ்ணு கடவுள் அவதாரம் எடுப்பது எதற்கு?

 

மேலும் இது போன்ற விஷயங்களைக் கவனித்தால் - சிந்தித்தால் இதில் எவ்வளவு புரட்டு, பித்தலாட்டம், பொய் முதலிய கூடாத குணங்கள் நிறைந்திருக்கின்றன என்பது புலனாகிறது.

 

சர்வசக்தி, சர்வ வியாபகமான கடவுள் என்றதாக இல்லைவிஷ்ணு என்பவனும் கடவுள் அல்ல; கட்டிச் சக்தி கொண்டவனல்ல. இந்த நிகழ்ச்சிக்கு மீனாகிப் போய் ராட்சதனைக் கொன்று வேதத்தை எடுத்து வந்தான் என்று தான் சொல்லப்படுகிறது.

 

இப்படிப்பட்ட விஷ்ணு என்பவனை கடவுள் என்று சொல்லுவது எவ்வளவு அறிவீனம்!

 

ஆமை அவதாரம்:

 

அடுத்ததாகிய ஆமை (கூர்மம்) அவதாரம் முன் அவதாரத்தை விட எவ்வளவு முட்டாள்தனமும் அயோக்கியத்தனமுமானது என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்.

 

தேவர்களும், அசுரர்களும், அமிர்தம் கடைந்தார்களாம் (அமிர்தம் என்பதைச் சாப்பிட்டால், சாப்பிட்டவர்கள் சாகவே மாட்டார்களாம். அவர்களைக் கொல்ல யாராலும் முடியாதாம்) இதற்காகத் தேவர்கள், சமுத்திரத்தைக் கடைந்தார்களாம். இதற்கு (கடைவதற்கு) மத்தாக ஒரு பெரிய மலையான மேருமலை என்பதைக் கொண்டு வந்து சமுத்திரத்தில் போட்டு, கடைவதற்குக் கயிராக வாசுகி என்கின்ற ஒரு பாம்பைப் பிடித்து வந்து அதில் சுற்றிக் கடைய ஆரம்பித்தார்களாம்.

 

சமுத்திரத்தில் போடப்பட்ட மேருமலை தண்ணீருக்குள் அமிழ்ந்து, மூழ்க ஆரம்பித்ததாம். அந்த மலை தண்ணீருக்குள் அமிழாதிருப்பதற்கு, தேவர்கள் கடவுளை (விஷ்ணுவை) வேண்டிக் கொண்டார்களாம். உடனே விஷ்ணு ஆமை அவதாரமெடுத்து, தண்ணீரில் மிதந்து, அந்த மேருமலை தண்ணீரில் மூழ்காதபடி, அந்த மலையைத் தன் முதுகில் தாங்கிக் கொண்டாராம். அப்போது மேருமலை மூழ்கவில்லையாம். பிறகு மலையை மத்தாகக் கொண்டு கடையப்பட்டதாம்.

 

இப்படிக் கடையும் போது, அந்தப் பாம்பு என்னும் கயிற்றை தேவர்கள் ஒருபுறமும் அசுரர்கள் ஒருபுறமுமாகப் பிடித்துக் கடைந்தார்களாம்.

 

இப்படிக் கடைந்த போது, கடலிலிருந்து அமிர்த கலசம் தோன்றிற்றாம். அதை தேவர்களும் அசுரர்களும் சண்டை போட்டுக் கொண்டார்களாம். அந்தச் சண்டையில் அமிர்தகலசத்தை அசுரர்கள் பறித்துக் கொண்டார்களாம். அதன் பேரில் தேவர்கள் விஷ்ணுவை அணுகி வேண்டினார்களாம். உடனே அந்த விஷ்ணு, தேவர்களுக்காக ஓர் அழகான விபசாரப் பெண் உருவம் கொண்டு தோன்றினாராம்.

 

அந்தப் பெண் உருவத்தைக் கண்டு அசுரர்கள் புத்தி மயங்கி, அந்தப் பெண் (விஷ்ணு) இடம் அமிர்த கலசத்தைக் கொடுத்து, தங்கள் இருவருக்கும் (அசுரர் - தேவர்) அதைப் பங்கிட்டுக் கொடுக்கச் சொன்னார்களாம்.

 

அந்த விபசாரப் பெண் (விஷ்ணு) அமிதர் கலசத்தைத் தேவர்களிடம் கொடுத்து, அசுர்களை ஏமாற்றி விட்டாளாம். இதுதான் கூர்ம (ஆமை) அவதாரக் கதை, தலைப்பு முதல் இறுதி வரை எவ்வளவு முட்டாள்தனமும் அயோக்கியத்தனமும் கொண்டிருக்கிறது பாருங்கள்.

 

தேவர்கள் அமிர்தம் எடுக்க உப்பு நீரை உடைய சமுத்திரம் எப்படிப் பயன்படும்? பயன்பட்டாலும், சமுகத்திரத்தைக் கடைவது என்பது எப்படிச் சாத்தியமாகும்? கடைவதற்குப் பெரிய மலையை உபயோகிப்பது என்பதும், கடைவதற்கு மத்துக்கோல் கயிராக பாம்பை உபயோகிப்பது என்பதும், அந்த மலையைத் தாங்க கடவுள் ஆமையாக வந்து தாங்குவது என்பதும் எவ்வளவு முட்டாள்தனதும், அயோக்கியப் புரட்டுத்தனமானதும் என்பதைச் சிந்தித்தால், கடவுள் (விஷ்ணு) என்பதாக ஒன்று இருந்திருக்க முடியும்? அதனிடம் கடவுள் சக்தி இருந்திருக்குமா? அப்படி இருந்திருந்தாலும் நியாயம், நீதி, யோக்கியம் என்பதல்லாமல் மோசடி செய்து அசுரரை ஏமாற்றுவது கடவுள் தன்மை ஆகுமா?

 

மலையைத் தாங்குவதற்கு, ஆமை உரு எடுக்க வேண்டுமா? ஆமைக்கு மலையைத் தாங்கும் சக்தி இருந்திருந்தால் பூமிக்கு ஏன் மலையைத் தாங்கும் சக்தி இருக்காது?

 

ஆமை அந்தரத்தில் இருந்து மலையைச் சுமந்ததா? பூமி மீதிருந்து மலையைச் சுமந்ததா? – என்பதை அக்கதையில் அறிய முடியவில்லை.

 

ஆறறிவு (பகுத்தறிவு) உள்ள மனிதன், இந்தக் காட்டுமிராண்டித்தனமான, அயோக்கியத்தனமான வஞ்சகம் நிறைந்த இழிதன்மைக் கதையை நம்புவதால்தானே கடவுளை நம்ப முடியும்?

 

இப்படிப்பட்ட கதையினால் கதை எழுதியவர்கள் அயோக்கியர்கள், காட்டுமிராண்டிகள் என்பதைத் தவிர, இக்கதையினால் யாருக்கு என்ன பயன்?

 

கதையைப் படிக்கிறவர்கள் தாங்கள் வாழ எவ்விதமான அக்கிரமும், அநீதியும், அயோக்கியத்தனமும் செய்யலாம் என்று கருதுவதை விட வேறு என்ன பாடம் கற்றுக் கொள்ள முடியும்?

 

மற்றும் கடவுள் என்றால் அயோக்கியனத்தனத்தின் சின்னம் என்பதாகத் தானே கூறமுடியும்?

 

ஆமை (கூர்மா) அவதாரமென்பது, சாதாரண மூன்றாம் தர மனிதனுக்குக் கூட யோக்கியதைக்குக் குறைவான காரியம் என்று கருதப்படும் அயோக்கியத்தனமான, அக்கிரமமான காரியத்துக்காக எடுக்கப்பட்ட அவதாரமாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 

தேவர்களும், அசுரர்களும் கூட்டுச் சேர்ந்து ஒரு காரியம் செய்தால், அதில் வரும் நற்பயனை இருவரும் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டியதுதான் சிரமம். அதை, ஒரு கூட்டத்திற்கு அனுகூலமாகவும், மற்றொரு கூட்டத்திற்கு விரோதமாகவும் பயன்படுத்த, கடவுள் ஒரு அவதாரமாய் வருவதென்றால், அந்தக் கடவுளை யோக்கியன், நேர்மையானவன் என்று எப்படிச் சொல்ல முடியும்? அதுவும், ஒரு அவதாரம் - ஒரு விபச்சாரி அவசரமாய் வந்து சாதித்துக் கொள்வது என்றால், கடவுளும், கடவுள் இனத்தவரும், பக்தர்களும், ஒவ்வொருவரும் தாங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளப் பெண்களை விட்டுக் கொடுத்து, பெண்கள் மூலமாகக் காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம் என்கின்ற படிப்பினைக்குத் தான் இந்தக் காரியம் பயன்படும்.

 

மக்கள் படிப்பினைக்காகக் கடவுள் செயல் என்று கருதும்படி ஏற்பாடு செய்தவர்களின் யோக்கியதை, பழக்க வழக்கங்கள் எப்படிப்பட்டவை என்பதையும் இந்த அவதாரக் கதை விளக்கம் தரவில்லையா? அவதாரங்களின் படிப்பினை இதுதானா?

 

வராக (பன்றி) அவதாரம்:

 

இனி, பன்றி அவதாரக் கதையையும் கவனிப்போம்.

 

"பெண்களை விட்டு, "விபச்சாரம்" செய்தாவது காரியத்தைச் சாதித்துக் கொள்" - என்ற படிப்பினைக்காக மேற்கூறிய அவதாரம் சித்தரிக்கப்பட்டது என்பதோடு, இந்த மலம் சாப்பிட்டு வாழும் பன்றி போல், எந்த ஈனத் தன்மையான, இழித் தன்மையான, மலம் சாப்பிடும் தன்மைக்குப் போயாவது உன் காரியத்தைச் சாதித்துக் கொள் என்ற படிப்பினைக்குத் தான் இந்த பன்றி அவதாரக் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது!

 

உருவாக்கக் கதை என்னவென்றால்-

 

ஒரு இராட்சதன், தேவர்களுக்குத் தொல்லை ஏற்படுத்துவதற்காக, பூமியையே பாய்போல் சுருட்டி எடுத்துக் கொண்டு ஓடி சமுத்திரத்தில் மூழ்கி ஒளிந்து கொண்டான். அவனைக் கண்டுபிடித்துக் கொன்று, பூமியை- சமுத்திரத்துக்குள் மூழ்கி இருப்பதை எடுத்து வந்து விரித்து தேவர்களைக் காப்பாற்றினார் என்பது.

 

எப்படி அவனைக் கொன்று தேவர்களைக் காப்பாற்றினார்? கடவுள் பன்றியாக வந்து காப்பாற்றினார் என்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 

இந்தக் குறிப்பில் எத்தனை முட்டாள்தனங்கள் காணப்படுகின்றன, பாருங்கள்!

 

தேவர்களுக்குத் தொந்திரவு கொடுக்க, பூமியைப் பாயாகச் சுருட்டினான் என்றால், அப்படிச் சுருட்டும் போது, தேவர்கள் எங்கே இருந்ததார்கள்? சுருட்டியவன், அவர்களை வெளியாக்கிவிட்டுச் சுருட்டினானா? அல்லது அவர்களையும் சேர்த்தே சுருட்டினானா?

 

தேவர்கள் வெளியாக்கி விட்டுச் சுருட்டியிருந்தால் அவர்கள் வெளியில் எங்கே இருந்திருப்பார்கள்?

 

சுருட்டினவன் எங்கே இருந்து சுருட்டியிருப்பான்? அப்போது பூமியைச் சுருட்டித் தூக்கிப் போனவன் எங்கே இருந்து போயிருப்பான்?

 

சமுத்திரத்திற்குள் ஒளிந்து கொண்டான் என்றால் சமுத்திரம் எங்கேயிருந்தது? சமுத்திரம் பூமியை விட்டு வெளியே போய் விட்டதா? சமுத்திரத்தை விட்டு பூமியைச் சுருட்டினானா? சமுத்திரத்தில் ஒளிந்தவனைக் கண்டு பிடித்துக் கொல்ல, முந்திய அவதாரங்களைப் போல், தண்ணீருக்குள் வாழும் பிராணி போல் தானே இந்தக் கடவுள் அவதாரமும் இருக்க வேண்டும்? அப்படிக்கில்லாமல் நீந்த முடியாத, தண்ணீரில் வாழாத பிராணியாகவும் - அதுவும் இழி பிராணியாகவும் ஏன் அவதாரம் எடுக்க வேண்டும்?

 

அதற்குக் காரணம் என்ன? அது, தன் கொம்பினால், இரண்யகசிபு என்ற மாபெரும் இராட்சதனை, ஒரு ஆட்டின் அளவுள்ள பன்றி எப்படிக் கொல்ல முடிந்தது? கொம்பினால் குத்திக் கொன்றதாம்! அப்படியானால், பன்றிக்கு ஆறு அங்குலத்துக்கு மேல் கொம்பு முளைத்திருந்ததை நாம் பார்த்ததே இல்லை. அந்தச் சின்னஞ்சிறிய கொம்பினால், பூமியைச் சுருட்டித் தூக்கிய இராட்சதனை எப்படிக் கொல்ல முடியும்?

 

கடவுள் சக்தி என்றால், இராட்சதன் பூமியைச் சுருட்டாமலும், தூக்கிக் போகாமலும் அந்தக் கடவுள் சக்தி செய்ய முடியாமல் போனது எதனால்?

 

போகட்டும். பூமியைத் திருப்பிக் கொண்டு வந்து விரித்த பன்றிக்கு, அந்த பூமியைப் புணரவேண்டும் என்கிற ஆசை ஏன் வந்தது?

 

அந்தப் புணர்ச்சியால், பன்றி போலாவது, பூமி போலாவது பிள்ளை பிறக்காமல், அது அசுரன் போல் (நரகாசுரன் என்ற) பிள்ளை பிறந்ததற்குக் காரணம் என்ன?

 

பூமியை, மிருகமாக்கிய பன்றி எப்படிப் புணர முடியும்? பூமி பிள்ளை எப்படிப் பெறமுடியும்?

 

இந்த மாதிரி கட்டுக்கதையால் ஏற்படும் - ஏற்பட்ட பலன் என்ன? படிப்பினை என்ன? பன்றியை விஷ்ணு என்றும், பூமியை விஷ்ணுவின் மனைவி பூமிதேவி என்றும் வைத்துக் கொண்டாலும், இருவருக்கும் அசுரன் ஏன் பிறக்க வேண்டும்?

 

அப்படிப் பிறந்த குழந்தை (மகன்) தாய் - தகப்பனுடன் ஏன் சண்டை பிடிக்க வேண்டும்? இதற்கெல்லாம் காரணம், நியாயம் எதுவும் வேண்டாமா? அப்படிப்பட்ட கொலை பாதகத்தை மக்கள் எதற்காகப் பாராட்டி, மகிழ வேண்டும்?

 

மற்றும் இந்த இராட்சதன், பிரம்மாவின் மூக்கின் இடது துவாரத்தில் இருந்து வந்தவனாம். இவனைக் கொல்ல வந்த பன்றியானது பிரம்மாவின் மூக்கின் வலது துவாரத்தில் இருந்து வந்ததாம். இந்த சேதி அந்தக் கதை எழுதியவரின் எவ்வளவு பெரிய முட்டாள்தனமாகும்!

 

பிரம்மா முகத்தில் இருந்து பிறந்தவர்கள் பிராமணர், பிரம்மாவின் மூக்கின் இரண்டு துவாரங்களில் வந்தவர்களில் ஒருவன் இராட்சதன், இரண்டாவது, கடவுளின் அவதாரமாகிய பன்றி என்றால் இதைப் பற்றி அறிவுடையவர்கள் என்ன நினைப்பார்கள்? இதுதான் கடவுள் தன்மையா? கடவுள் சக்தியா? இது காட்டுமிராண்டிகளின் மடமைக் கற்பனையே அல்லாது வேறு என்ன?

 

இந்தக் கதைதான் தீபாவளிப் பண்டிகை என்றால் மனிதன் சிந்தித்துப் பார்த்துக் கொண்டாட வேண்டும்.

 

நிற்க; மேற்கண்ட அவதாரக் கதைகளின் தத்துவம் என்னவென்று பார்த்தால், முந்தின காலங்களில், எந்த ஆரியனல்லாதான் ஒருவன் ஆட்சியில் அல்லது, ஆதிக்கத்திலாவது ஆரிய வேதங்களைப் பகிஷ்கரித்து இருக்க வேண்டும். அதுபோலவே ஆரியர்களை நாட்டை விட்டு வெளியாக்கி இருக்க வேண்டும். அவற்றைச் சமாளிக்க ஆரியர்கள் செய்த முயற்சிகளை, மேற்கண்ட அவதாரக் கற்பனைகளாக்கி இருக்க வேண்டும். இது தான் என் புத்திக்குப்படுகிறது.

 

ஏன் என்றால், இப்போதும் இந்த நடப்புகள் நடக்கின்றனவல்லவா? இதுதான் முந்தைய சம்பவங்களாகவும் இருக்கலாம்.

 

இந்த இரண்டு காரியங்களும், இன்று இல்லாவிட்டாலும், ஏதாவது ஒரு நாளைக்கு நடந்துதான் தீரும். நம்மவர்களில் மானங்கெட்ட ஈன ஜீவன்கள் எப்போதுமே இருந்து கொண்டுதானிருக்கும் என்று சொல்ல முடியுமா?

 

குறைந்தது இந்தியா முழுவதற்கும் இந்த நிலை ஏற்படாவிட்டாலும், தமிழ்நாடு தனி சுதந்திர நாடு ஆக ஆய்விட்டாலே "தமிழர் பூமியை தமிழன் சுருட்டிக் கொண்டு போய்விட்டான்" என்று தானே சொல்லப்படும்!

 

எனவே, இன்றைய நம்நாட்டு நிலைமைதான் பழைய அமைப்புக்கதைகள் முழுவதும் என்று நம்மவர்கள் அறிய வேண்டும்.

 

விஷ்ணுக் கடவுளின் நான்காவது அவதாரம்:

 

முந்திய அவதாரங்களில் கடவுள் அவதாரமெடுத்து வந்து, தேவர்களுக்கு அனுகூலமாகக் காரியங்களைச் செய்திருக்கிறார்.

 

நான்காவது அவதாரத்தில் விஷ்ணு கடவுள் அவதாரம் எடுத்து வந்து, கடவுளையே நேரில் காட்டி இருக்கிறார். அதாவது கடவுளை மறுத்தகடவுளை எதிர்த்து, கடவுளை ஒழிக்க முயற்சி செய்த இரண்யகசிபு என்கிற ஒரு இராட்சதனைக் கொல்ல கடவுளே நேரில் வந்து கொன்றார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 

இந்த அவதாரக் கதையானது இரண்டு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அதாவது இரண்யன் என்னும் இராட்சதன் விஷ்ணு கடவுளை ஒழிப்பதற்காகவும் பார்ப்பனர்களை ஒழிப்பதற்காகவும் போராடினான் என்று பாகவத புராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 

அவை என்னவென்றால், கடவுளுக்கு அவதாரமாகப் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். ஆதலால் பார்ப்பனர்களை ஒழிப்பதால் கடவுள் ஒழிந்து விடும் என்பதாகவும் - பார்ப்பனர்களுக்கு ஆதரவாக விஷ்ணு கடவுள் இருக்கிறது; அந்தக் கடவுளை ஒழித்தால் பார்ப்பனர்கள் ஒழிந்து விடுவார்கள் என்றும் கூறி, இரண்டு காரியங்களையும் செய்ய முற்பட்டிருக்கிறான்.

 

இந்த உணர்ச்சி இன்று நமக்கு ஏற்பட்டு, இந்த இரண்டு காரியங்களையும் இன்று நாம் செய்து வருகிறோம். என்றாலும் இந்த உணர்ச்சி ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பார்ப்பனரல்லாத மக்களுக்கு ஏற்பட்டிருந்ததாகப் பார்ப்பனர் கற்பனை செய்து கொண்டு அதற்குப் பரிகாரம் செய்ததாக, இந்த நான்காவது அவதாரத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

 

பாகவதத்தில் இரண்யன் வாக்காகக் கூறப்பட்டிருப்பது என்னவென்றால்: (பாகவதம் 7-வது ஸ்கந்தம் 2-ம் அத்தியாயம் 4-வது பக்கத்தில்)

 

"இரண்யன் தன் படைகளை அழைத்து "விஷ்ணு நாசமடைந்தால் தான், அந்த விஷ்ணுவைப் பிராணனாக உடைய தேவர்கள் நாசமடைவார்கள். ஆகையால் நீங்கள் பூமியை அடைந்து தபசு, எக்யம், அக்கினி, ஹோத்திரம் நடத்தும் பிராமணர்களை சம்ஹாரம் செய்யுங்கள் - எந்தெந்த தேசத்தில் பிராமணர்கள் வர்ணாசிரம தர்மங்கள் முதலியன உண்டாக்கி இருக்கின்றனவோ அந்த தேசங்களுக்குப் போய் அவற்றைக் கொளுத்துங்கள். அங்குள்ளவர்களைச் சேதியுங்கள்" என்று சொன்னான்.

 

இதைக்கேட்ட வைத்தியர்கள் தானவர்கள், பட்டணங்களையும், பிரஜைகளையும், நாசம் செய்து, ரிஷிகளின் ஆசிரமங்களையும், ஷேத்திரங்களையும் தகித்தார்கள். சிலர் மண்வெட்டிகளாலே தடாகங்கள், கோபுரங்கள் முதலியவைகளைச் சேதித்தார்கள் - என்று எழுதப்பட்டிருக்கிறது.

 

மற்றும் இந்த இரண்யகசிபுவை ஒழிக்கும் தந்திரமாக, இரண்யனின் மகனான பிரகலாதனை சுவாதீனம் செய்து கொண்டு, அவனால் தகப்பனுக்கு அழிவுகாலம் ஏற்பட்டதாகவும் கதையை முடிக்கிறார்கள்.

 

எனவே, இந்த நான்காவது அவதாரத்தில் பார்ப்பனர் பச்சையாக, பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் தன்மைகளை வெளிப்படுத்தி அதற்குப் பரிகாரம் தேடும் முறையையும் வெளிப்படுத்திவிட்டார்கள்.

 

- (14.10.1972, 14.11.1972, 14.12.1972- "உண்மை" இதழ்களில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை)

0 comments: