Search This Blog

16.5.21

 

கடவுள் மறுப்பும் - கோவில் இருப்பும்!

கடவுள் மறுப்பு அட்டையைப் பார்த்தால் உங்கள் மனம் வேதனைப்படுவதாகக் கூறுகின்றீர்கள்.

 

கோயில் கட்டடங்களைப் பார்த்தால் எங்கள் மனம் வேகுதே! கடவுள் மறுப்பால் யாருக்கும் எவ்வித நஷ்டமும் இல்லை. கோவில் இருப்பால் மக்கள் பணம், அறிவு, நேரம், முயற்சி எவ்வளவு பாழாகிறது! இவ்வளவு கஷ்டத்திற்கு மக்களுக்கு ஏற்படும் பயன் என்ன? ஒரு கோவிலுக்கு மாதம் பத்து லட்ச ரூபாய் காணிக்கை வருகிறது. மற்றும் சில கோயில்களுக்கு ஒவ்வொன்றுக்கும் மாதம் ஒரு இலட்சம் ஒன்னரை இலட்சம் ரூபாய் வரும்படி வருகிறது என்று கணக்குக் காட்டுகிறார்கள்.

 

இவ்வளவு வரும்படி யாரால் வருகிறதோ அவர்களுக்கு மாதம் எத்தனை கோடி ரூபாய் செலவாகும்! இப்படி எத்தனை உற்சவம்! இதற்கு மக்களுக்கு ஏற்படும் பயன் என்ன?

 

இதெல்லாம் யாருடைய பணம்? பாட்டாளி மக்கள் பணம்தானே!

 

கடவுள் மறுப்பைக் கண்டு புண்படுகிற பார்ப்பனருக்கு இந்தச் செலவில் கோடியில் ஒரு பங்கு கூட இருக்காதே! குடும்பத்தோடு இந்தப் பணத்தை அனுபவிக்கிற கூட்டம் இந்த புண்படுவதாகப் பாசாங்கு செய்கிற கூட்டம்தானே!

 

கடவுள் இல்லையென்றால் யாருக்குத்தான் என்ன நஷ்டம்? இருக்கிறது என்கிறவன் கடவுள் இருக்கிறது என்று சொல்லட்டுமே! ஆயிரங்காலமாகக் கடவுள் இருக்கிறது, கடவுள் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டும் கல்லையும், செம்பையும் கடவுள் என்று காட்டிக் கொண்டும் தானே வந்திருக்கிறான்.

 

இவ்வளவுதானா! கடவுள் இல்லை என்று சொன்னவர்களைத் தலையை வெட்டியும், கழுவேற்றியும் கொன்று தள்ளிக் கொண்டு தானே இருந்திருக்கிறார்கள்.

 

கடவுள் இல்லை என்றால், கும்பிடாவிட்டால் வெட்டு, குத்து, கொல்லு என்று கூடச் சொல்லி, பாடி எழுதி வைத்துக் கொண்டும் தானே வந்திருக்கிறார்கள். கடவுள் இல்லை என்கிறவர் மடங்களை, வீடு வாசல்களை நெருப்பு வைத்துக் கொளுத்திப் பாழாக்கியும் வந்திருக்கிறார்களே!

 

பதினாயிரக்கணக்கான கோயில்களும், இலட்சக்கணக்கான கடவுள்களும் இருந்தும் அவற்றிற்காகப் பல கோடிக்கணக்கான ரூபாய் ஆண்டுதோறும் செலவு செய்து வந்தும் கண்ட பலன் என்ன? உன் நோய்கள் மறைந்தனவா? கொலைகள் நின்றனவா? அன்பு வளர்ந்ததா? அறிவு பெருகிற்றா? பஞ்சம் நீங்கிற்றா? என்ன கேடு ஒழிந்தது?

 

மக்கள் தொகையில் 100-இல் 3-பேர் மேல் ஜாதி.

 

மக்கள் தொகையில் 10-இல் 10-பேர் பிரபுக்கள், பணக்காரர்கள் மற்றவர் ஈனஜாதி, எளியவர்கள் ஆக இருக்கிறார்கள். வாடி வதங்குகிறார்கள் என்றால், "கடவுள் இருக்கிறார்" என்பவன் எவ்வளவு மடையனாகவும், மோசக்காரனாகவும் இருக்க வேண்டும்? பொதுவாகச் சிந்தித்தால் உலகில் கடவுள் இல்லாத நாடுகளும், கோடிக்கணக்கான மக்களும், ஆட்சிகளும் இருக்கின்றனவே, அங்கெல்லாம் அவர்களுக்கெல்லாம் என்ன கேடு ஏற்பட்டு விட்டது?

 

சர்வ சக்தியுள்ள ஒரு கடவுள் உலகை, மனிதனை நடத்துகிறார் என்றால் அந்தக் கடவுளுக்குத் தன்னை இருக்கிறதாகச் சொல்லிக் காப்பாற்றும்படி முட்டாள்களையும், அயோக்கியர்களையும் ஏவி விடுவதுதான் வேலையா? இதற்குப் பெயர் தான் சர்வசக்தியா?

 

கோயிலை இடிக்கிறவன் அயோக்கியன் என்றால், கோயிலைக் கட்டுகிறவன் இரட்டை அயோக்கியன் என்று ஏன் சொல்லக்கூடாது? ஆகவே, கடவுள் மறுப்பையும், கோயில் மறுப்பையும் கண்டு மனம் வேதனையடைகிறது. மனம் புண்படுகிறது என்பவர்கள் யோக்கியர்களா என்று சிந்திக்க வேண்டுகிறேன்.

 

- [14.07.1970- "உண்மை" இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை)

0 comments: