கோயில் கற்களை சாலை
போடுவோம்!
கடவுளைக் கற்பித்தவனை முட்டாள்
என்கிறேன். அதற்குக் காரணம் கூறுகிறேன். சரியில்லை
என்றால் என்னைத்
திருத்த முன்வரட்டுமே;
ஏற்றுக் கொள்கிறேன்.
கடவுளுக்கு அவதாரம் என்னடா என்று கேட்டால்,
அதெல்லாம் கேட்காதே,
'நம்பு' என்கிறான்.
சாணியைப் பார்த்து
நாறுகிறதே என்றால்,
அதல்லாம் தப்பு
– மோந்து பார்க்காதே,
நம்பு என்பது
போலல்லவா கடவுளைப்
பற்றி கூறுகிறான்.
கடவுள் இருப்பதாகக்
கூறுகிறானே – அவன் உண்மையில் நடைமுறையில் வாழ்க்கையில்
கடவுளை நம்புகிறானா?
கடவுளை நம்பி
எதை ஒப்படைக்கிறான்?
கடவுள் இருக்கிறது
என்பவனைக் கூப்பிட்டு
ஒரு அறை
அறைந்தால் அவன்
என்ன சொல்லுவான்?
அந்த அறைக்குக்
காரணம் கடவுள்தான்
என்று கூறி
பேசாமல் செல்வானா?
அல்லது அடித்தவனைத்
திருப்பி அடிக்க
முன் வருவானா?
எந்தக் கடவுள்
பக்தன் கடவுளை
நம்பி வீட்டைப்
பூட்டாமல் வருகிறான்?
கோயில் கதவையே
பெரிய பூட்டுப்
போட்டல்லவா பூட்டுகிறான்!
சர்வசக்தி உள்ள கடவுள்
என்கிறானே, ஒரு சர்வ சக்தி உள்ள
கடவுள், தான்
இருப்பதைக் கூட நமக்குச் சந்தேக மற
தெளிவுபடுத்த சக்தி இல்லாததாகத் தானே இருக்கிறது!
எல்லாம் வல்ல – எல்லாம்
உடைய சக்தியுள்ள
கடவுளுக்கு காணிக்கை எதற்காக? இலட்சக்கணக்கான ரூபாய்
இந்தக் குழவிக்
கல்லுக்குக் கொட்டி அழுகிறானே பக்தன், இதைப்
பற்றி எவன்
வாய் திறக்கிறான்?
எவனாவது கொஞ்சம்
கள்ளுக் குடித்து
விட்டு உளறினால்
போச்சு போச்சு
என்று கூப்பாடு
போடும் அரசில்வாதி
இந்தப் பக்கம்
திரும்ப மறுக்கிறானே!
குடிக்கிறவனாவது ஒரு பதினைந்து
நிமிஷமாவது ஜம்மென்று இருக்கிறானே! கோயிலுக்குச் சென்று
கொட்டி அழுகிற
மடையன் எதை
அனுபவிக்கிறான்? பார்ப்பான் தானே அதை மூட்டை
அடித்துக் கொழுக்கிறான்.
இதைப் பற்றி
எவன் பேசுகிறான்?
நமது சமுதாயம் இயற்கையிலேயே
இழிவான சமுதாயமாகப்
போய்விட்டது. நம் இழிவுக்குக் காரணம் பார்ப்பான்தான்
என்று கூறிக்
கொண்டே இனியும்
போவதில் ஒன்றும்
பிரயோசனமில்லை. பார்ப்பான் ஒழிந்து போய்விட்டான். நமது
இழிவை ஒழித்துக்
கொள்ள நமக்கே
விருப்பம் இல்லாதவர்களாக
இருக்கிறோம்.
போட்டி போட்டுக் கொண்டல்லவா
நாம் கோயிலுக்குப்
போகிறோம். போட்டி
போட்டுக் கொண்டல்லவா
நெற்றியில் சாம்பலையும் நாமத்தையும் பூசிக் கொள்கிறான்.
அப்படித்தான் கோயிலுக்குப் போகிறானே – சாமி இருக்கும்
இடத்திற்குச் செல்ல யோக்கியதை உண்டா?
சூத்திரப் பயலே, வெளியே
நில்லடா என்றல்லவா
கூறுகிறான். இதைப் பற்றி எவனுக்காவது மான
– ரோஷ- வெட்கம்
இருக்கிறதா? மானமுள்ளவனாக இருந்தால் கோயில் என்றால்
காரித் துப்புவானே!
பெண்கள் கையில்
விளக்கமாற்றை எடுத்துக் கொள்வார்களே! இந்த 1973– லும்
இந்தக் கேடுகெட்ட
இழிநிலை என்றால்
இதை விட
வெட்கக்கேடு ஒன்று உலகிலேயே இருக்க முடியுமா?
மனிதனுக்குள்ள இந்த இழிநிலையும்,
ஜாதிக்குப் பாதுகாப்பான சமுதாய அமைப்பும் இந்த
நாட்டை விட்டு
அடியோடு ஒழியவேண்டுமென்றால்
அவற்றிற்கெல்லாம் பாதுகாப்பாக இருக்கிற கடவுள் என்கின்ற
எண்ணமே நமது
புத்தியை விட்டு
அறவே அகல
வேண்டும். கடவுளை
மறப்பதால் தான்
மறுப்பதால் தான் உண்மை மனிதனாக உலகில்
உலவ முடியும்.
இன்றைக்கு உலகம் பூராவும்
நாத்திகர் கொள்கை
பரவி வருகிறது.
ருஷியாவில் கடவுள் என்ற சொல்லையே தூக்கி
எறிந்து விட்டான்.
மேல்நாடுகளிலும் பகுத்தறிவாளர் சங்கம், சிந்தனையாளர் சங்கம்,
உண்மை நாடுவோர்
சங்கம் என்று
ஏராளமாக உண்டாக்கி
பாடுபட்டுக் கொண்டு வருகிறார்களே!
இப்போதுதான் நம் நாட்டிலும்
அந்த சங்கங்கள்
பரவி வருகின்றன.
காலவாக்கில் இங்கும் மாறுதல் வந்தே தீரும்.
அதை யாரும்
தடுத்து நிறுத்த
முடியாது.
காட்டுமிராண்டிக் காலத்தில் கற்பனை
செய்யப்பட்ட கடவுளும், மதமும், சாத்திரமும் அறிவு
வளர்ச்சிக்கு முன்னே எத்தனை நாளைக்குத் தாக்குப்பிடிக்க
முடியும்? இந்தக்
கடவுள் விஷயமும்,
மத விஷயமும்
பொய் என்று
கூட நாங்கள்
சொல்லவில்லை. இவை நிஜமாக இருக்க முடியுமா
என்று சிந்தித்துப்
பாருங்கள் என்றுதானே
கூறுகிறோம். சிந்திக்க வேண்டாமா? சிந்திப்பதுதானே மனிதனின்
பகுத்தறிவுக்கு அழகு? சிந்திப்பது கூட பாவம்
என்றால் நீ
எப்படி பகுத்தறிவுள்ள
மனிதனாக முடியும்?
பகுத்தறிவைப் பயன்படுத்தி சிந்திக்க
ஆரம்பித்ததனால் தான் மற்ற நாட்டுக்காரன் எல்லாம்
எவ்வளவோ முன்னேற்றம்
அடைந்துவிட்டான். பகுத்தறிவு மனித சமுதாயத்தில் வளர்ந்தால்
தான் அமையும்
ஆட்சியும் ஒரு
பகுத்தறிவு ஆட்சியாக உறுதியோடு அமைய முடியும்.
அப்படி அமைகிற
ஒரு ஆட்சியால்
தான் கோயில்
என்கிற பேரால்
இருக்கிற குட்டிச்
சுவர்களை எல்லாம்
உடைத்து சாலைக்கும்
ஜல்லிபோட முடியும்.
ஆபாசக் களஞ்சியமாக
இருக்கக் கூடிய
புராண - இதிகாசங்களுக்கு
எல்லாம் தடை
போட முடியும்
- கல்வியிலும் ஒரு பெரிய மனிதனை உண்டாக்க
முடியும்?
எனவே தோழர்களே, எந்தத்
துறையிலும் உங்கள் பகுத்தறிவுக்கே முதலிடம் கொடுங்கள்.
நான் சொல்வதையெல்லாம்
அப்படியே நம்பிவிடாதீர்கள்.
உங்கள் அறிவுக்குச் சரி
என்றுபட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லை என்றால்
தள்ளிவிடுங்கள்.
- (29, 30, 31.01.1973- ஆகிய
நாட்களில் சிவகாசி,
விருதுநகர், தூத்துக்குடி ஆகிய ஊர்களில் தந்தை
பெரியார் அவர்கள்
ஆற்றிய உரையில்
ஒரு பகுதி
– "விடுதலை", 13.02.1973)
0 comments:
Post a Comment