Search This Blog

16.5.21

 

கடவுள் இல்லை என்பதை நிரூபிக்கவே செருப்படி கொடுத்தோம்!

மனிதன் என்பதற்குப் பொருள் சிந்தனா சக்தியுள்ளவன், அறிவைக் கொண்டு எதையும் சிந்தித்து ஏற்பவன் என்பதாகும். அவன் தான் மனிதனாவான். அறிவைக் கொண்டு சிந்திக்காதவன் மனிதனல்ல; மிருகத்திற்கு ஒப்பானவன் ஆவான். ஆனதனால் நீங்கள் எனது கருத்துக்களைச் சிந்தித்து ஏற்க வேண்டும்.

 

ஒரு மனிதன் - கடவுள் இல்லை; மதம் இல்லை; நமது முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள்; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; பரப்பினவன் அயோக்கியன்; வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்கின்ற தீவிரமான கருத்துக்களை எடுத்துச் சொல்லி வருபவன் - கடவுள் உருவத்தைச் செருப்பாலடித்து வருபவன் 92-வயது வாழ்வது என்றால், 100-க்கு 90–க்கு மேற்பட்ட மக்களுக்கு மாறான கருத்துடைய ஒருவனை மக்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதோடு, மக்கள் மதிக்கிற கடவுளாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை.

 

அவன் 92-வயதுக்கு மேல் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்றால், நீங்கள் சிந்திக்க வேண்டும். கடவுள் இருந்தால் இத்தனை நாட்கள் இவ்வளவுக்கும் காரணமான ஒருவனைஎன்னை வாழவிட்டிருப்பாரா? எனவே, இதிலிருந்தாவது நீங்கள் கடவுள் இல்லை என்பதை உணர வேண்டுமென்பதற்காகவே கழகத் தோழர்கள் எனக்கு பிறந்த நாள் விழா கொண்டாடுகிறார்கள்.

 

பிறந்த நாள் விழா என்றால் நமது கொள்கைகளை மக்களிடையே எடுத்துச் சொல்லுவதற்காகவேயாகும். சாமியைச் செருப்பாலடிப்பது என்பது சாதாரண விஷயம் என்றாலும், இந்தச் சிறிய காரியம் தேர்தலில் நாம் ஜெயிப்போமா, தோற்போமா என்கிற பயத்தை ஏற்படுத்தி விட்டதே! பார்ப்பனர்களுக்குள்ள தைரியம் எனது படத்தையெல்லாம் செருப்பாலடித்திருக்கிறார்கள்; சிலையை கல்லாலடித்திருக்கிறார்கள். என்னை ஒழிக்கவே திட்டம் போட்டிருக்கிறார்கள். எனவே தான் இந்த சாதாரண காரியத்தைச் செய்ய பயப்படுகிறார்கள்.

 

இன்னும் வரவர இது சாதரண விஷயமாகப் போய்விடும். இளைஞர்கள் எல்லாம் இக்காரியத்தில் ஈடுபட்டு விடுவார்கள். என்னைப் பாராட்டியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதோடு, நமது கொள்கைக்கு மக்களிடையே இவ்வளவு ஆதரவு இருப்பதைக் கண்டு என்னையே நான் பாராட்டிக் கொள்ளுகின்றேன். இந்த நம்முடைய சமுதாயமானது அனாதிகாலம் தொட்டு இருந்து வருகிறது என்றாலும், நாம் அனாதைச் சமுதாயமாகவே இருந்து வருகின்றோம். எப்படிப்பட்ட அனாதைச் சமுதாயமென்றால், தமிழனுக்கென்று ஒரு சரித்திரமே இல்லை; நமக்கென கடவுள் - மதம் - மதத் சாஸ்திரம் - மதத் தலைவன் எதுவுமே கிடையாது. அவன் பழக்க வழக்கம், சமுதாய அமைப்பு எப்படி இருந்தது என்பதற்கு ஆதாரமே இல்லை.

 

பார்ப்பான் வந்தபின் ஏற்பட்டவைகள்தான் நமக்கு சரித்திரம். அவன் அதில் நம்மை தனது வைப்பாட்டி மக்களாகி (சூத்திரனாகிவிட்டான்) ஈனசாதி 4- ஆவது, 5-ஆவது சாதியாக்கி விட்டான் என்பதோடு, இவைகளையெல்லாம் தமிழன் ஏற்றுக் கொண்டு அதனைத் தன் வாழ்வாகக் கருதிக் கொண்டிருக்கின்றான்.

 

எவன் ஒருத்தன் முன்னோர் சொன்னதற்குசாஸ்திரத்திற்கு மாறாக அறிவைக் கொண்டு சிந்திக்கச் சொல்கின்றானோ அவன் நாத்திகன் என்று சொல்லிவிட்டான். ஆனதால் அவற்றிற்கு மாறாக நம் நாட்டில் எவனுமே சிந்திக்க வேண்டுமென்று கருதவில்லை.

 

நாம் கடவுளைச் செருப்பாலடிக்கவில்லை. கடவுளைச் செருப்பாலடிக்க யாராலும் முடியாது. காரணம், கடவுள் என்று ஒன்று இருந்தாலல்லவா செருப்பாலடிப்பதற்கு? நாம் தான் கடவுள் இல்லை என்கின்ற கொள்கையுடையவர்களாயிற்றே! பின் ஏன் செருப்பாலடித்தோமென்றால், கடவுள் இருக்கிறது என்று முட்டாள்தனமாக நம்பிக்கொண்டிருக்கிற மக்களுக்கு கடவுள் இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவே!

 

திராவிடர் கழகம் - தி.மு. கழகம் என்கின்ற இரண்டும் தமிழர்களின் கட்சியேயாகும். தமிழ் மக்களுக்கென்று பாடுபடுவதற்காகத் தோற்றுவிக்கப்பட்டது தான் இக்கழகமாகும். மற்றதெல்லாம் வயிற்றுப் பிழைப்பிற்காக உள்ளவைகளேயாகும். திராவிடர் கழகம், தி.மு.கழகம் இவை இரண்டும் தான் இன உணர்ச்சியோடு பாடுபட்டு வருகிறது.

 

தி.மு.கழகம் நான்காண்டுகால ஆட்சியில் தமிழர்களுக்கு நிறைய நன்மைகள் செய்திருக்கின்றது. நம் நாட்டில் அரசியல் போராட்டம் என்பது அரசியல் தோன்றிய நாள் முதல் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டமாகவே இருந்து வந்திருக்கின்றது.

 

இப்போது நடைபெற்ற தேர்தலும் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டமேயாகும். இதனால் நம்மவர்கள் இன உணர்வோடு நடந்து கொண்டுள்ளனர்.

 

தேர்தலின் போது எதிரிகள் தி.மு.கழக ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது என்று பிரசாரம் செய்தார்கள். உடனே நான், தி.மு.கழக ஆட்சியில் ஊழல் இருப்பதாகவே ஒப்புக் கொள்கின்றேன். ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழலை விட ஒழுக்கக்கேடுகளைவிட இவர்கள் செய்தது ஒன்றும் பெரியதல்ல என்பதைப் புள்ளி விபரத்தோடு எடுத்துக்காட்டி உலகில் காங்கிரஸ்காரனைவிட ஊழல் செய்தவர்கள் யாருமில்லை என்று விளக்கியதும் ஊழல் என்பதை விட்டுவிட்டு சேலம் மாநாட்டில் போடப்பட்ட பெண்கள் பற்றிய ஒரு தீர்மானத்தை எடுத்துக் கொண்டு அதைத் திரித்து பெண்களின் கற்பிற்கே ஆபத்து வந்துவிட்டது என்று பிரச்சாரம் செய்தார்கள்.

 

என்னுடைய எண்ணம் கோயிலில் இருக்கிற சிலையை அடிக்க வேண்டியதாகும். காரணம் இக்கடவுளால் பார்ப்பனர்கள் இன்னமும் உயர்சாதியாக இருக்கலாம் என்று பார்க்கிறார்கள். அதற்காகவே அவர்கள் கடவுள் பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்கள் பத்திரிக்கைகள் அனைத்தும் கடவுள் பிரச்சாரம் செய்கின்றன. எவ்வளவு நாட்களுக்கு நம் மக்களுக்கு கடவுள் உணர்ச்சி இருக்கிறதோ அதுவரை பார்ப்பனர்கள் உயர்சாதி; நாம் கீழ்சாதிதான்; சூத்திரர்கள்தான், நமது தாய்மார்கள் பார்ப்பானுக்கு வைப்பாட்டிகள் தான். இது மாற வேண்டுமானால் கடவுளை ஒழித்தால் தான் முடியும்.

 

பார்ப்பனர்கள் எப்போதும் மடையர்கள். சுத்த அன்னக்காவடி அயோக்கியர்களைமடையர்களையெல்லாம் சங்கராச்சாரி, புதுப்பெரியவாள் என்று சொல்லி விளம்பரப்படுத்துகின்றார்கள்.

 

கொஞ்சம் புத்தியுள்ளவனாக இருந்தாலும் கடவுளைப்பற்றி எழுதியவன், கடவுளை ஒழுக்கத்தோடு நாணயத்தோடு ஏற்படுத்தி இருப்பான். ஆனால் பார்ப்பான் கடவுள் என்று ஏற்படுத்திய இராமன், கிருஷ்ணன், கந்தன், கணபதி இவர்கள் பிறப்பைப்பற்றிய கதையைப் பார்த்தாலே அவன் எவ்வளவு முன்யோசனையற்ற மடையன் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

 

நான் தான் கடவுள் இல்லை என்கின்றேனே, பின் நான் ஏன் கடவுளைச் செருப்பாலடிக்க வேண்டுமென்று சொல்கின்றேன் என்றால், பார்ப்பான் உண்டாக்கிய கடவுள்களைத்தான் செருப்பாலடிக்க வேண்டுமென்கின்றேன். அந்தக் கடவுள்கள் தான் நம்மை இழிசாதியாகசூத்திர்களாகபார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்களாக ஆக்கி வைத்திருக்கின்றன என்பதாலேயேயாகும்.

 

கடவுள்களின் பெயரால் ஆபாசமான கதைகள், நம்மை இழிவுபடுத்தும் கடவுள்கள் நமக்கு எதற்காகத் தேவை? எதற்காக நாம் இழிமக்களாக இருக்க வேண்டும்? இவர்களால் நம் இழிவைப் போக்க முடியவில்லையென்றால் அடுத்து துலுக்கனையோ, சைனாக்காரனையோ, ரஷ்யாக்காரனையோ கூப்பிட்டு நம் இழிவைப் போக்கிக் கொள்ள வேண்டும். துணிந்தால் தான் ஆகும்.

 

கடவுளைக் குற்றம் சொல்லுகின்றான் இவன் என்று எவன் நினைக்கின்றானோ அவனை விட மடையன் எவனுமிருக்கமாட்டான். அவனின்றி அணுவும் அசையாது என்கின்ற போது, கடவுள் சொல்லித்தான் நான் செருப்பாலடிக்கின்றேன் என்று நம்ப வேண்டுமே ஒழிய, நானாகச் செய்கின்றேன் என்று நம்பக்கூடாதே. அப்படி நம்புவதே கடவுள் நம்பிக்கையற்ற செயல்தானே.

 

- (09.04.1971–அன்று தர்மபுரியிலும், 04.05.1971-அன்று மாயூரம் வட்டம் மாதிரிமங்கலத்திலும் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரைகளில் சில பகுதிகள் - "விடுதலை" 09.06.1971, 01.06.1971)

0 comments: