Search This Blog

16.5.21

 

பக்தி என்பது முட்டாள்தனம் அல்லது புரட்டு!

பக்தி என்றால் என்ன? கோவிலுக்குப் போய் கடவுளைக் கும்பிடுவதும், வீட்டில் கடவுளை நினைத்து நாமம், விபூதி அணிந்து கடவுளைக் கும்பிடுவதும், பார்ப்பனரிடம் மிக்க விசுவாசம் காட்டி அவர்களுக்கு மரியாதை செய்து காசு, பணம், பொருள் கொடுப்பதும், ராமாயணம், பாரதம், பாகவதம், கந்தபுராணம், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம் முதலிய மத நூல்களைப் படிப்பதும்; படிக்கக் கேட்பதும் அல்லாமல் - வேறு எதைப் பார்ப்பனர்கள் பக்தி என்கிறார்கள்?

 

ஸ்தல யாத்திரை, தீர்த்த யாத்திரை செய்வது புண்ணியம் என்பார்கள். பிரபந்தம், தேவாரம் படிப்பது பெரிய பக்தி என்பார்கள்.

 

பக்தியை பற்றி விளக்கப் போவோமானால், இப்படி ஏதாவது இன்னும் பல நடப்புக்களைத்தான் சொல்லலாமே யொழிய, பக்திக்கும், அறிவுக்குமோ அல்லது எந்தவிதமான ஒழுக்கம், நாணயம், நன்றி, உபகாரம், நேர்மை முதலிய மனிதப் பண்புகள் - அதாவது மற்ற மனிதனிடம் நாம் நடந்து கொள்ள வேண்டிய எந்த ஒரு நற்குணத்தையாவது முக்கியமாகக் கூறமாட்டார்கள்.

 

இந்த மேற்கண்ட குணங்கள் தான் மனிதனிடம் இருக்க வேண்டிய அவசியமான பண்புகளாகும் என்று மக்களிடையில் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்திருக்குமானால், இவ்வளவு ஒழுக்கக்கேடு, நாணயக்கேடு, நேர்மைக்கேடு ஏற்பட்டிருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

 

இன்றைக்கு நாம், எத்தனை மக்களிடம் விபூதி, நாமம், கோவில் செல்லுதல், வீட்டில் பூசை செய்தல், வாயால் சிவநாமம், ராமநாமம் உபசரித்தல் முதலிய பக்திக் குணங்களைக் காண்கிறோம் - அவற்றில் ஒரு பங்குக் கூட யோக்கியதையோ, ஒழுக்கத்தையோ, நாணயத்தையோ, நேர்மையையோ, காணமுடிவதில்லையே, என்ன காரணம்?

 

சாதாரணமாக, பக்தி என்பது ஒரு மனிதனுக்கு வெறும் பச்சை சுயநலமே ஒழிய அதனால் மற்ற மக்கள் எவருக்கும் எவ்விதப் பயனுமில்லை. ஒரு மனிதனுடைய பக்தியினால் ஏதாவது பலன் கிடைப்பதானாலும் பக்தி செலுத்தும் மனிதனுக்கு மாத்திரம் பலன் உண்டாகலாமே தவிர, வேறு எந்த மனிதனுக்கும் அதனால் எந்தவித பயனும் ஏற்படுவதற்கும் இடமே இல்லை.

 

ஆனால் -

 

மனிதனுடைய ஒழுக்கம், நாணயம், நேர்மை முதலானவை அவற்றை உடைய மனிதனுக்குப் பெருமையளிப்பது மாத்திரமல்லாமல் அவனைச் சுற்றியுள்ள எல்லா மக்களுக்கும் நன்மை அளிக்கும் காரியமாகும். உதாரணமாக ஒரு மனிதன் பக்தியற்றவனாக இருந்தால், அதனால் யாருக்கும் எவ்விதக் கெடுதியும் ஏற்படப் போவதில்லை.

 

ஆனால் -

 

ஒரு மனிதன் ஒழுக்கமற்றவனாக இருந்தால், நாணய மற்றவனாக இருந்தால், நேர்மையற்றவனாக இருந்தால், அவனைச் சுற்றியுள்ள, அவன் சம்பந்தப்பட்டுள்ள எல்லா மக்களுக்கும் தொல்லை, துன்பம், நட்டம், வேதனை, உண்டாகுமா இல்லையா?

 

மற்றொரு மனிதனுக்குக் கேடு செய்வது என்பது தானே ஒழுக்கக்கேடு, நாணயக்கேடு, நேர்மைக்கேடாக முடிகிறது.

 

உலகிலே - பாழாய்ப் போன எந்தக் கடவுளும் உலகத்தில் மக்களுக்குக் கேடு செய்த எப்படிப்பட்ட அயோக்கியனையும் மன்னிக்கவும், முடியாவிட்டால் தண்டிக்கவும் தான் தகுதி உடைய கடவுளாக இருக்கிறதே தவிர, எவனையும், எந்த ஜந்துவையும், மற்ற மனிதனுக்கு மற்ற ஜந்துவுக்குத் துன்பம் செய்யாமல் இருக்கும்படியான சக்தி இல்லாதவையாகத் தானே இருக்கின்றான்.

 

மக்களுக்குக் கேடு செய்யாதவனைத் தண்டித்தால் தண்டிக்கப்பட்ட மனிதன் இனிமேல் கேடு செய்யாமல் இருக்கத்தான் அந்தத் தண்டனை பயன்படலாமே ஒழிய துன்பமோகேடோ அடைந்தவனுக்குக் கடவுளால் என்ன பரிகாரம் செய்ய முடிகிறது? நல்லபடியாய் பக்தி செய்தவனுக்குக் கேடு, துன்பம் வந்தாலும் இதுதானே முடிவு?

 

ஆகையால், பக்தியால் மனிதனுடைய குணமாவது மாறுகிறதா? மற்ற மனிதனுக்குக் கேடு செய்யாமல் இருக்கவாவது பயன்படுகிறதா?

 

ஆகவே, பக்தி என்பதெல்லாம் முட்டாள்தனமும், புரட்டும் பயனற்ற தன்மையும் கொண்டதல்லாமல் வேறு என்ன என்று கேட்கிறேன்.

 

- (17.04.1973- "விடுதலை" நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்)

0 comments: