ஆகஸ்டு 15
இந்தியாவின் சுதந்திர நாள் இந்தியா எங்கும் கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் இந்தியாவின் தூதரகங்களிலும் கொடியேற்றப்படும். குடியரசுத் தலைவர் உரை வானொலியில் நிகழ்த்தப்படும்.
இப்படி பல சம்பிரதாயங்கள் இந்நாளில் உண்டு. பொதுவாக சுதந்திர நாள் என்று சொல்கிறபோது, ஒவ்வொரு நாட்டிலும் தேசியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுவது இயல்புதான்; அதே முறையில் இந்தியாவிலும் அந்த மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது.
மகிழ்ச்சித் திருவிழா ஒருபுறம் இருக்கட்டும் - இந்நாளில் நமது வரவு - செலவுகளையும் கணித்துப் பார்க்கவேண்டியவர்களாகவே இருக்கிறோம்.
(1) மண்ணுக்குச் சுதந்திரம் கிடைத்திருக்கிறது என்பதுதான் உண்மை. ஆனால், மனிதர்களுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இன்னும் ஜாதி - அதன் தீய குணமாகிய தீண்டாமை ஒழிந்தபாடில்லை. ஜாதி உள்ள நாட்டில் சுதந்திரம் இருக்க முடியாது - சுதந்திரம் உள்ள நாட்டில் ஜாதி இருக்கக் கூடாது.
ஜாதி என்பது பிறவியில் ஏற்றத் தாழ்வைக் கற்பிக்கக் கூடியதாகும். அது நிலவும் வரையில் நாம் சுதந்திரர்கள் என்று சொல்லிக் கொள்ள அருகதை இல்லை. இதைத்தான் தன் இறுதி மூச்சு அடங்கும்வரை தந்தை பெரியார் முழங்கிக் கொண்டே இருந்தார். இதற்காகவே இந்திய அரசியல் சட்டத்தின் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவைக் கொளுத்தியும் காட்டினார். அப்படியாவது இந்திய ஆட்சியாளருக்கு ஒரு உணர்ச்சி வரவேண்டும் என்பது அவரின் எதிர்பார்ப்பு. ஆனால், இன்றுவரை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அது கம்பீரமாக வீற்றிருக்கிறது என்பதை வெட்கத்துடன் ஒப்புக்கொண்டுதான் தீரவேண்டும்.
(2) இந்தியா மதச் சார்பற்ற நாடு என்று அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால், நடைமுறையில் மதச்சார்பின்மை என்பது இல்லவேயில்லை. ஆட்சியில் வருவோர் தங்கள் மத உணர்வைத் தோற்றத்திலும், செயல்பாட்டிலும் வெளிப்படுத்துவதில் வெட்கப்படுவதில்லை.
பச்சையாக இந்துத்துவா பேசக் கூடியவர்கள் இந்த நாட்டின் ஆட்சிப் பீடத்திலே அமரும் நிலை ஏற்பட்டதே - மீண்டும் ஆளுவோம் என்று சூளுரைக்கும் சூழ்நிலை உள்ளதே - இதற்கு என்னதான் முடிவு? மதம் சார்ந்த அரசியல் கட்சிகள் தேர்தலில் நிற்பது தடை செய்யப்பட வேண்டாமா?
அரசியல்வாதிகளிடத்தில் மதச் சார்பின்மை என்பது இல்லாது போய்விட்ட காரணத்தாலும், ஊடகங்கள் பெரும்பாலும் உயர்ஜாதிக் காரர்களின் கையகத்தே அடைக்கலம் கொண்டிருப்பதாலும், மக்கள் மத்தியில் மதத்தின் பெயரால் வேர்ப் பிடித்து நிற்கும் மூடத்தனங்களை எதிர்ப்பதில் தயக்கங்கள் பெரும்பாலும் இருப்பதாலும், அரசியலுக்காக வாக்கு வங்கியை உருவாக்க மதத்தின் முந்தானையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு தொங்குவதாலும் நாடெங்கும் மதக்கலவரங்கள் தலைதூக்கி நிற்கின்றன.
படித்தவர்களே கூட பகுத்தறிந்து சிந்திக்கும் தன்மை அற்றவர்களாக மட்டுமல்ல; பழைமைக்கு முலாம் பூசும் பிற்போக்குத்தனத்தில்தான் போட்டி போடுகின்றனர். இந்தியாவின் இந்தத் துக்ககரமான நிலைதான் மத வீரியத்துக்கான தூண்டுகோலாகும். நம் நாட்டுக் கல்வியும் பகுத்தறிவை உண்டாக்கும் திசையில் இல்லை.
தமிழ்நாட்டில் தந்தை பெரியார் என்ற சமுகப் புரட்சியாளர் அவர்களால் உண்டாக்கப்பட்ட இயக்கத்தின் பணிகள் கிடைத்ததுபோல, பிற மாநிலங்களுக்குக் கிட்டும் வாய்ப்பு இல்லாமற் போய்விட்டது.
அதன் நிகர விளைவுதான் மதச் சண்டைகள் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன!
கல்வி ஊடகங்களில் மதப் பிற்போக்குத் தனத்திற்குத் துணை போகும் அம்சங்கள் அறவே நீக்கப்படவேண்டும்.
(3) அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த 10 ஆண்டுகளுக்குள் 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் அடிப்படைக் கல்வி என்பது 6 பத்தாண்டுகள் கழிந்தும் நிறைவேற்றப்படவில்லை.
(4) வறுமைக்கோட்டுக்கும் கீழே இந்தியாவில் இருப்பவர்கள் 77 விழுக்காடு என்று கூறப்படுகிறது.
(5) வேலை வாய்ப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். வேலை வாய்ப்பு என்பது அடிப்படை உரிமையாக்கப் படவேண்டும்.
(6) பெண்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. பெண்கள் ஒரு திடப்பொருளாக மட்டுமே கருதும் மனு தர்ம மனப்பான்மை இன்னும் சமூகத்தில் இருக்கிறது.
ஆண்களுக்குரிய அத்துணை உரிமைகளும் அவர்களுக்குக் கிடைக்கச் செய்யவேண்டும். கல்வி, வேலை வாய்ப்புகளில் 50 விழுக்காடு அவர்களுக்கு அளிக்கப் பெறவேண்டும்.
சட்டப்பேரவைகள், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்படுவதில் காட்டப்படும் தயக்கமே - இன்றைய ஆண் ஆதிக்கச் சமூகத்திற்கான எடுத்துக்காட்டாகும்.
(7) இருக்க இடம், உடுக்க உடை மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம், சுகாதார நிலை இவை எல்லாம் அடிப்படைத் தேவைகள். புதிய பொருளாதாரக் கொள்கை என்பது வேறுபாடுகளை அகலப்படுத்திக் கொண்டு இருக்கின்றனவே தவிர, இடைவெளியைக் குறைப்பதாகத் தெரியவில்லை. பணக்காரர்களின் எண்ணிக்கை வளர்கிறது; அதே நேரத்தில், வறுமைக்கோட்டுக்கும் கீழ் கிடந்துழலும் மக்களின் சதவிகிதமும் உயர்ந்துகொண்டே போகிறது. எந்த இடத்தில் கோளாறு என்பதைக் கண்டறிந்து சரி செய்யாவிட்டால், தீவிரவாதம், பயங்கரவாதம் எல்லோரையும் விழுங்கிவிடும்.
சுதந்திர நாளில் நமது வரவு - செலவுக் கணக்கு இந்த வகையில் அலசப்பட்டு பரிகாரம் காணப்படவேண்டுமே!
------------------ நன்றி: "விடுதலை" தலையங்கம் 15-8-2008
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment