Search This Blog

24.8.08

காந்தியும் கடவுளும்



திரு.காந்தியவர்கள் சென்ற வாரத்திய தமது யங் இந்தியாவில், தம்மை ஒரு நண்பர் கடவுளைப்பற்றிக் கேட்ட சில கேள்விகளைப் பிரசுரித்து, அவைகளுக்கு தமது அபிப்பிராயத்தையும் எழுதியிருக்கின்றார். கேள்விகளின் சுருக்கம் யாதெனில்:-

"கடவுளைத் தவிர மற்றதெல்லாம் நிச்சயமற்றதென்றும், சத்தியம்தான் கடவுள் என்றும் துன்பத்தைச் சகித்துக் கொண்டு பொறுமையாயிருப்பதே கடவுள் என்றும், அயோக்கியர்களை எச்சரிக்கை செய்து அவர்கள் தமக்குத் தாமே கேடு விளைவித்துக் கொள்ளும்படி செய்து விடுகிறார் என்றும் யங் இந்தியாவில் தாங்கள் எழுதியிருக்கிறீர்கள்.

ஆனால், கடவுள் இருக்கின்றார் என்கின்ற உறுதி எனக்கு இல்லை. ஏனெனில், அப்படி கடவுள் என்பதாக ஒன்று இருக்கும் பட்சத்தில் உலகத்தில் சத்தியத்தை நிலைநிறுத்துவதே அவரது லட்சியமாகவல்லவா இருக்க வேண்டும். ஆனால், உலகம் எங்கு பார்த்தாலும் பலவிதமான அயோக்கியர்களாலும் கொடுமைக்காரர்களாலும் நிரப்பப்பட்டிருப்பதுடன், ஒழுக்க நடவடிக்கைகளைப்பற்றிச் சிறிதும் கவலையே எடுத்துக் கொள்ளாத அயோக்கியர்களான அவர்கள் சவுகரியமாகவும் க்ஷேமமாகவும் வாழ்கின்றார்கள். அயோக்கியத்தனம் என்பது ஒருவித தொற்றுவியாதிபோல் உலகில் தாராளமாய்ப் பரவிக் கொண்டும் வருகிறது. இது இப்போதிருக்கும் மனிதவர்க்கத்துடன் மறைந்து போவதாக இல்லாமல், இனி வரப்போகும் பின்சந்ததியர்களும் ஒழுக்கமற்றவர்களாகவும், நாணயமற்றவர்களாகவும் நடக்கும்படி செய்கின்றது. கடவுள் சகலத்தையும் தெரிந்தவரும், சர்வ வல்லமையும் உள்ளவரல்லவா! அப்படியிருந்தால், தனது சகலத்தையும் அறியும் சக்தியைக் கொண்டு கெடுதியும் கொடுமையும் எங்கெங்கிருக்கின்றது என்பதை அறிந்து, தனது சர்வ வல்லமையைக் கொண்டு அவற்றை ஒழித்து, அயோக்கியர்களை வளரவிடாமல் ஏன் செய்யக்கூடாது? அன்றியும், கடவுள் ஏன் கஷ்டங்களை அனுமதித்துக் கொண்டு பொறுமையாய் இருக்கும்படி செய்யவேண்டும்? அயோக்கியத்தனத்துடனும் நாணயக் குறைவுடனும் மகாக் கொடுமையுடனும் உலகம் நடந்து கொண்டே இருப்பதை அனுமதித்துக் கொண்டே இருப்பாரானால் பிறகு கடவுளுக்கு என்னதான் யோக்கியதை இருக்கின்றது? தாங்கள் சொல்வதுபோல், கொடுமை செய்கின்றவர்கள் தாங்களாகவே கெட்டுப் போகவும், தங்களுக்குத் தாங்களாகவே குழி வெட்டிக் கொள்ளவும் கடவுள் செய்வது உண்மையானால், அவர் ஏன் அக்கொடியவர்களை, கொடுமை செய்வதிலிருந்து விலக்கி, கொடுமைகளை முளையிலேயே கிள்ளி எறிந்து விடக்கூடாது? அப்படிக்கில்லாமல், ஒருவனுக்கு கெட்ட காரியம் செய்யத் தாராளமாய் இடம் கொடுத்துவிட்டு, அக்கெட்ட காரியத்தால் உலகமும் பதினாயிரக்கணக்கான மக்களும் துன்பமும் அடையும்படி செய்துவிட்டு, அதன் பிறகு கேடு செய்தவனைத் தானாக கெட்டுப் போகும்படி செய்து கொண்டிருப்பது எதற்காக? உலகம் நாளுக்குநாள் கெட்ட தன்மையிலேயே போய்க் கொண்டிருக்கின்றது. ஆதலால் உலகத்தை யோக்கியமாகவும், அயோக்கியர்களை அழித்து யோக்கியர்களை உண்டாக்கவும் செய்வதற்கு தனது சக்தியை உபயோகிக்காத ஒரு கடவுளிடத்தில் மனிதன் ஏன் நம்பிக்கை வைக்கவேண்டும்? அயோக்கியர்கள் தாங்கள் அயோக்கியத்தனத்துடன் சவுக்கியமாகத் தீர்க்காயுளுடன் வாழ்வது எனக்கு நன்றாகத் தெரியும். அப்பேர்ப்பட்டவர்களால் மக்களுக்குத் துன்பம் இல்லாமலிருப்பதை முன்னிட்டாவது அவர்கள் ஏன் சீக்கிரம் அழிந்து போகக் கூடாது? எனக்குக் கடவுளை நம்ப வேண்டும் என்கின்ற ஆசை உண்டு. ஆனால், நம்புவதற்குக் கொஞ்சமும் ஆதாரம் இல்லவே இல்லை. தயவு செய்து தங்களுடைய யங் இந்தியா பத்திரிகை மூலம் இவற்றிற்குச் சமாதானம் சொல்லி எனக்கு நம்பிக்கை உண்டாக்க வேணுமாய்க் கோருகிறேன்.

இக் கேள்விகளுக்கு திரு.காந்தியின் சமாதானமாவது: இந்தக் கேள்விகள் மிகப் பழைய கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கு நான் சொல்லக்கூடிய பதில் ஒன்றும் இல்லை. ஆனால், நான் ஏன் கடவுளை நம்புகிறேன் என்பதற்கு மாத்திரம் சமாதானம் சொல்லக்கூடும். அதாவது, விவரித்துச் சொல்ல முடியாத ஒரு மறைவான சக்தி இருக்கிறது என்பதை நான் காண முடிவதில்லை. ஆனாலும், ஒருவாறு உணருகிறேன். ஆனால், அதை எந்த விதத்திலும் மற்றவர்களுக்கு ருஜுப்பித்துக் காட்ட முடியாத தாயிருக்கிறது. ஏனென்றால் அது எனது புலன்களின் சக்திக்கு மீறினதாய் இருக்கின்றது. வேண்டுமானால் ஒரு அளவுக்கு கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஆதாரம் காட்டலாம். அதாவது, ஒரு சாதாரண மனிதனுக்கு தன்னை ஆளுகிற அரசன் யார் என்பது தெரியாதபோதிலும், ஒரு அரசன் இருந்து ஆண்டுகொண்டுதான் இருக்கவேண்டும் என்பது மாத்திரம் அவனுக்குத் தெரியும். எனவே, ஒரு சாதாரண மனிதனுக்கு சாதாரண சங்கதிகூட தெரியாமலிருக்கின்றதுபோல், நம் போன்றவர்களுக்கு மகா பெரிய சங்கதியான கடவுள் விஷயம் புலப்படுவது என்பது சாத்தியமான காரியமல்ல. ஆனாலும், இந்த பிரமாண்டமான உலகத்தைப் படைத்து ஆட்சி செலுத்தும் சட்டம் ஒன்று இருக்கின்றதாக நான் அறிகிறேன். அந்தச் சட்டம் தான் கடவுள்; அதை நான் மறுக்க முடியாது. ஆனால், அந்தச் சட்டத்தைப் பற்றியாவது, அச்சட்டத்தை வழங்குபவரைப் பற்றியாவது எனக்கு ஒன்றுமே தெரியாது. ஒரு ராஜ்ஜியத்தை ஆளும் அரசனை மறுப்பதால் அந்த ராஜ்ஜியத்தில் உள்ளவன் எப்படி அந்த ஆட்சியில் இருந்து விடுதலை பெற முடியாதோ, அதைப்போல், கடவுளை மறுப்பதால் கடவுள் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றுவிட முடியாது. மொத்தத்தில், தெய்வீகமான சட்டம் ஒன்று இருக்கின்றது என்பதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டு அதற்குப் பணிந்து நடந்துவந்தால் வாழ்வு சுலபமாக நடைபெறும். கடவுளை உணர விரும்புபவன் உறுதியான நம்பிக்கை கொண்டால்தான் முடியும். அந்நம்பிக்கை வெளி ஆதாரங்கள் தேடப் புறப்பட்டால் அது முடியாத காரியமாகிவிடும். கடைசியாக, மேற்கூறிய கேள்விகளுக்கு ஒழுங்கு முறையில் காரணங்கள் காட்டி, மேல்கண்ட கேள்விகள் கேட்டவரை திருப்தி செய்யத்தக்க நியாயங்கள் ஒன்றும் என்னிடம் இல்லை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். கடவுள் நம்பிக்கை காரணகாரிய ஆராய்ச்சிக்கு எட்டாதது ஆனதனால், நான் இக்கேள்விகள் கேட்பவருக்கு கடைசியாகச் சொல்லுவதென்னவென்றால், சாத்தியப்படாத காரியத்தில் பிரவேசிக்க வேண்டாம் என்பதுதான். உலகத்தில் இருக்கும் கெடுதிகளுக்கும், கொடுமைகளுக்கும் அறிவினால் காரணம் காட்ட முடியாது. ஆனால், கெடுதிகள் இருப்பதையும் அதன் தன்மை அறிய முடியாதது என்பதையும் நான் ஒப்புக் கொள்ளுகிறேன். கடவுள் பொறுமை உள்ளவர் என்பதற்குக் காரணமே அவர் கொடுத்த உலகத்தில் நடக்க அனுமதிக்கிறதனால்தான். கடவுளிடத்தில் கெட்ட குணம் இல்லை என்பது எனக்குத் தெரியும். ஆனாலும், உலகில் ஏதாவது கெடுதியிருந்தால் அதற்கு அவரே கர்த்தா. ஆனால், அவருக்கு அதில் சம்பந்தமில்லை. எனவே, அவர் சொன்ன பதில்களிலிருந்தாவது, அவர் காட்டியிருக்கும் நியாயங்களிலிருந்தாவது, கேள்வி கேட்ட நண்பருக்கு ஏதாவது பதில் இருக்கின்றதா என்பதைக் கவனித்துப் பார்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்ளுகிறோம்.

இக் கேள்விகளை எப்படி திரு.காந்தி பழைய கேள்விகள் என்று சொன்னாரோ அதே போல் அவருடைய சமாதானங்களும் பழைய கதைகள் என்றுதான் சொல்லவேண்டும். என்னவென்றால், கடவுளை அறிவது அசாத்தியம். அசாத்தியமான காரியத்தில் பிரவேசிக்காமல் இருப்பது நல்லது. கடவுள் நம்பினால்தான் உண்டு. அதுவும் உறுதியான நம்பிக்கையாக இருந்தால்தான் முடியும் என்பன போன்ற சமாதானங்கள். ஆனால் ஒரு புதிய உதாரணம் காட்டியிருக்கிறார். அது என்னவென்றால்:- சாதாரண மனிதனுக்கு தங்கள் அரசர்கள் யார் என்பது தெரியாதாம். அதுபோல் தங்களுக்குக் கடவுள் என்பதும் தெரியவில்லையாம். இது எவ்வளவு அசட்டுத்தனமான சமாதானம் என்பதை வாசகர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். ஏனெனில், அரசன், எல்லோரும் தன்னை அறியும்படி செய்து கொள்ளத் தக்க சக்தி உடையவன் அல்ல. கடவுள் என்பவரோ சர்வசக்தி உள்ளவர் என்பதைக் கேள்வி கேட்ட நண்பர் முதலிலேயே குறிப்பிட்டிருக்கிறார். தவிர, மற்றொரு புதிய விஷயம் கண்டுபிடித்திருக்கிறார். அதாவது, கடவுள் இருக்கிறார் என்பது விளங்காமல் போனாலும், இருக்கிறார் என்று வைத்துக் கொண்டால் வாழ்க்கைப் பிரயாணம் எளிதில் முடியுமாம். வாழ்க்கைப் பிரயாணம் எளிதில் முடிகின்றதற்காக ஒரு விஷயத்தை - தனக்கு எட்டாததை - தெரியாததை நம்ப வேண்டும் என்று சொல்வதானால், வாழ்க்கைப் பிரயாணம் எளிதில் நடைபெற வேண்டியதற்குச் சவுகரியமான வேறு அநேக காரியங்கள் செய்யக்கூடுமானால் அவற்றையும் செய்யச் சொல்லுகிறாரா என்பது விளங்கவில்லை. ஏனெனில், பலவிதமான புரட்டு, பித்தலாட்டம், திருட்டு முதலிய காரியங்களைச் செய்து ஏராளமான பணம் சம்பாதித்தவர்களின் வாழ்க்கைப் பிரயாணம் சுலபமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். தனக்குத் தெரியாததான கடவுளை நம்பாமல், நிறைய கள்ளையும் சாராயத்தையும் குடித்துப் போதை ஏற்றிக் கொண்டு, வாய் குளறிப் பாடிக் கொண்டு, தள்ளாடி நடந்து போகிறவனுக்கு இதைவிட வாழ்க்கை யாத்திரை சுகமாகவும், சுலபமாகவும் கழிகின்றதை நாம் நேரில் பார்க்கிறோம். வாழ்க்கைப் பிரயாணம் எளிதில் கழிவதே முக்கியமானால் நாம் ஏன் இவனைப் பின்பற்றக்கூடாது? இந்த மாதிரி போதையில் மூழ்கியிருக்கும்போது எவ்வித இன்ப துன்பமும் தோன்றாமல் வாழ்க்கை கழிந்து விடுகிறதா? இல்லையா? தீமைகளும், கொடுமைகளும் கடவுளால் அனுமதிக்கப்படுகிறதென்றும், அதனாலேயே அவர் பொறுமைசாலியாகிறார் என்றும் சொல்லுவதைக் கவனித்தால் இது எவ்வளவு கவலையற்ற பதில் என்பது விளங்காமல் போகாது. ஏனெனில், கடவுள் பொறுமையால் மற்ற ஜீவன்களுக்கு எவ்வளவு கஷ்டம் இருக்கின்றது என்பதை உணர்ந்து பார்த்தால் விளங்கும். மற்றும், கொடுமைகளும், கெடுதிகளும் கடவுளிடம் இல்லை என்றும், ஆனாலும் அக்கெடுதிகளைக் கடவுளே உண்டாக்குகிறார் என்றும், ஆனால், அவற்றில் கடவுளுக்குச் சிறிதும் சம்பந்தமில்லை என்றும் சொல்லுவது அறியாமையால் சொல்லும் வாக்கியமா, அல்லது ஏதாவது ஒரு சமாதானம் சொல்லி கேள்வி கேட்பவர்களை ஏமாற்றிவிடலாம் என்பதாகக் கருதிச் சொன்ன வாக்கியமா என்பது நமக்கே விளங்கவில்லை. உலகில் மிகப் பெரியக் கூட்டத்திலும், மேதாவிகள் கூட்டத்திலும் சேர்ந்த ஒருவரும், சதா சர்வகாலம் கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டிருப்பவரும், கடவுள் செயலை அடிக்கடி உணர்ந்து அதன் பயனை அனுபவித்துக் கொண்டே இருப்பதாகச் சொல்லுபவருமான ஒருவரே கடவுளைப் பற்றிச் சொல்வது இதுவானால், மற்றவர்களிடம், அதாவது கடவுள் பெயரையும் சமயத்தின் பெயரையும் சொல்லிக் கொண்டு வயிறு வளர்ப்பவர்களிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? அன்றியும், கடவுளைப் பற்றிப் பேசுகின்ற ஒவ்வொருவரும் கடவுள் பெயரற்றவர் ரூபமற்றவர், குணமற்றவர் என்பதையும், அவர் மனதிற்கெட்டாதவர், இந்திரியங்களுக்கு அகப்படாதவர் என்பதையும் அவருக்கு லட்சணமாகச் சொல்லும்போது, அதற்குமேல், கடவுள் உண்டா இல்லையா என்கின்றது போன்ற கேள்விகளே அனாவசியமானதும் பலனற்றதும் என்பது நமது முடிவு. ஏனெனில், இது, ஆகாயத்தில் ஒரு கோட்டை இருப்பதாக வைத்துக் கொண்டு, அதற்கு ஜன்னல் எவ்வளவு, கதவு எவ்வளவு என்று சண்டை போடுவது போன்றது. அன்றியும், அவ் வேலையில் ஈடுபடுவது போன்ற முட்டாள் தனமும் அசட்டுத்தனமுமாகிய காரியம் வேறு இல்லை என்பதும் நமது முடிவு. அல்லாமலும், அப்படிப்பட்ட ஒரு கடவுள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அதைப் பற்றி நமக்குக் கவலை வேண்டுவதில்லை என்பதும் நமது முடிவு. ஆனால், கடவுளைப் பற்றிய விஷயங்கள் வரும்போது நாம் கவலைப்படுவது எதைப் பொறுத்தவரையில் என்றால், கடவுள் இருக்கிறார் என்று ஒருவன் ஒப்புக் கொள்ளுவதன்மூலம் அவனுடைய அறிவு வளர்ச்சியும், முயற்சியும் கெட்டு சோம்பேறித்தனம் உண்டாகக் கூடாது என்பதைப் பொறுத்தவரையில் தானே ஒழிய வேறில்லை. உதாரணமாக, பாதாள லோகம் என்று ஒரு லோகம் இருக்கிறது என்றும், அதில் நாகராஜன் என்கிற ஒரு அரசன் இருக்கின்றான் என்றும் ஒருவன் சொல்லிக் கொண்டு திரிவானானால், அந்த லோகம் எங்கே? அந்த அரசன் வீடு எங்கே? என்று கேட்டுக் கொண்டு திரியவேண்டியது ஒவ்வொருவனுடைய வேலை அல்ல. அதுபோலவே, இல்லாத பட்டணம் என்று ஒரு பட்டணம் ஆகாயத்தில் இருக்கின்றது என்றும், அதற்கு அரூபி என்கின்ற ஒரு அரசன் இருக்கின்றான் என்றும், அவனுக்கு அனங்கள் என்கின்ற பூஜ்ஜியம் (0-சைபர்) பெண்கள் இருக்கின்றார்கள் என்றும் ஒருவன் சொல்லிக் கொண்டு திரிவானானால், அதைக் காட்டு என்று கேட்டுக் கொண்டு திரிய வேண்டியதும் ஒவ்வொருவனுடைய வேலையல்ல. மற்றென்னவென்றால், இம்மாதிரி அரசர்களையும், பெண்களையும் பற்றி எல்லா மக்களும் நம்பாவிட்டால் அதற்காக தண்டனை என்று நிபந்தனை ஏற்படுத்தி, அந்த நாகராஜாவே உனக்குச் சோறு போட்டு விடுவார்; ஆகாய கன்னிகையே உனக்கு பெண் ஜாதியாய் இருந்து விடுவாள்; மற்றபடி நீ ஒன்றுக்கும் கவலைப்படாதே என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளச் செய்து, மக்களது அறிவையும் நேரத்தையும் பொருளையும் பாழாக்கி, அவர்களை வெறும் அர்த்தமற்ற அடிமைப் படுத்தி, பட்டினி போட்டுவதைப்பதில்தான் கவலையே ஒழிய வேறில்லை. ஒரு மனிதன், கடவுள் இல்லையென்று சொல்லுவானேயானால், அவன் உலகம் முழுவதும் அதற்கு அப்பாலும் இப்பாலும் என்பவையெல்லாம் அறிந்து, நேரில் தேடித் தேடிப் பார்த்து காணாவிட்டால்தான் சொல்ல வேண்டும் என்பதும் முழுதும் தப்பல்ல. ஆதலால் அதைப்பற்றிய முடிவைப் பற்றி நமக்கு இப்பொழுது ஒன்றும் அவசரம் இல்லை. ஆனால், அதற்கும் மனிதன் வாழ்க்கைக்கும் உள்ள சம்பந்தம் எவ்வளவு? அதற்காக மனிதனின் அறிவையும் நேரத்தையும் பொருளையும் ஏன் செலவு செய்து கொண்டே இருக்கவேண்டும்? இதுவரையில் அநேகர் அப்படிச் செய்துவந்ததன் மூலம் அடைந்த நன்மைகள் என்ன? அப்படிச் செய்யாததன் மூலம் ஏற்பட்ட அல்லது ஏற்படப் போகும் கெடுதி என்ன? என்பன போன்றவையே இந்நிலையில் முக்கியமாக ஆராயத் தகுந்த விஷயமாகும். இந்த சந்தர்ப்பத்தில் வாசகர்கள் தயவு செய்து கடவுளைப் பற்றிய நம்பிக்கையும், கவலையுமில்லாத புத்தர் நடந்து கொண்டதையும், கடவுளிடத்தில் நம்பிக்கை வைத்து அவரது அருள் பெற்றவர் என்பவரான சம்பந்தருடைய நடவடிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், கடவுளை நம்பினால்தான் யோக்கியனாக இருக்க முடியுமா? என்பதும், நம்பாதவன் எல்லாம் அயோக்கியனா என்பதும் விளங்காமல் போகாது. இதை ஏன் வலியுறுத்த நேரிடுகிறது என்றால், நம்மைச் சுற்றியுள்ள மக்கள் படும் கஷ்டங்களும், நமக்கு வெளியில் உள்ள நாடுகளில் உள்ள மக்கள் நிலையும், நடவடிக்கையும், அவர் கண்ட அற்புதக் காட்சியையும் அறிந்து, அந்நிலை பெற்று கஷ்டப்படுகிறவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்கின்ற கருத்துக் கொண்டே ஒழிய வேறில்லை. இந்த நிலையில் குட்டிச் சமயக்காரர்கள் தங்கள் நிலை என்ன? அவற்றின் அவசியம் என்ன? அதனால் ஏற்பட்ட நன்மை என்ன? என்பவற்றை தாங்களே சற்று தங்களது நடுநிலைமை அறிவைக் கொண்டு யோசிப்பார் களானால், அவர்களது மடமையும், இதுவரை தங்கள் வாழ்வு வீணானது ஒரு சிறிதாவது அவர்களுக்குப் புலப்படாமல் போகாது.



- தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம் (குடிஅரசு, 28.10.1928).

0 comments: