Search This Blog

4.8.08

பக்தர்களே, சிந்தியுங்கள்! இதுதான் கடவுள் கருணையா?


பக்தர்களே, சிந்தியுங்கள்!
இதுதான் கடவுள் கருணையா?


நேற்று மாலை வந்த செய்தி - நம் நெஞ்சை உலுக்கி வேதனைத் தீயில் தள்ளும் செய்தியாக உள்ளது!

இமாச்சலப் பிரதேசத்தில் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கோயில் திருவிழாவிற்கு கடவுள் தரிசனத்தைப் பெறச் சென்ற பக்தர்கள், கூட்ட நெரிசலில் சிக்கி, சுமார் 150 பேர்கள் மாண்டனர் என்பதும், அதில் குழந்தைகள் 40 பேர்களுக்குமேல் என்பதும் எவ்வளவு துயரமான செய்திகள்!

இறந்தவர்கள் பக்தர்கள் என்பதால், அவர்கள் இறந்தால் நமக்கென்ன என்று எந்த நாத்திகனும், பகுத்தறிவுவாதியும் எண்ணமாட்டான்; காரணம், அவர்கள் மனிதநேயத்தில் மிகுந்த பற்றுள்ளவர்கள்.

நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே என்பதுதான் சங்கராச்சாரியார்களின் மனிதாபிமானம்! நாத்திகர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்லர்.

இறந்த பக்தர்கள், குழந்தைகள், இழப்புக்கு ஆளானவர்கள் அத்துணைப் பேருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேநேரத்தில், கடவுள் நம்பிக்கையாளர்கள் முன் அவர்களது சிந்தனைக்காக சில கேள்விகளை வைக்கிறோம்:

1. எல்லாம் அவன் செயல்; அவனின்றி ஓரணுவும் அசையாது என்று நம்பும் பக்தர்களே, இது எவன் செயல்?
இதுவும் அவன் செயல் என்றால், அவனைவிட மோசமான குரூரபுத்தி படைத்தவன் வேறு இருப்பானா?

2. கடவுள் கருணையே வடிவானவன், சர்வ தயாபாரன் என்பது உண்மையானால், பச்சிளம் குழந்தைகள் - வளரவேண்டிய இளம் மொட்டுகள் இப்படி அழியலாமா? இதுதான் கடவுள் கருணையா?

3. பாவத்திற்குத் தண்டனைதான் மனிதர்களுக்கு இப்படிப்பட்ட சம்பவங்கள், கர்ம வினைப்பயன் என்று ஒரு சாக்கு - நொண்டிச்சமாதானம் கூறுகிறவர்களைக் கேட்கிறோம்; அப்பச்சிளம் பாலகர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்கள் உயிரைப் பறிப்பது எப்படி நியாயமாகும்?

4. தீவிரவாதிகள் குண்டு வைத்தனால் ஏற்படும் இறப்புகளைக் கண்டு, அதற்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து தண்டனை வழங்கும் நிலை உள்ளது. இதற்குக் காரணமான கடவுளை மீண்டும் மீண்டும் நம்பலாமா? தொழுதால் - வணங்கினால் பலன் கிட்டும் என்று நம்பி, அறிவையும், பொருளையும் இழக்கலாமா?

5. எல்லா கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகள் உள்பட அந்தந்த மதக் கடவுள்கள் இருப்பிடங்களைச் சுற்றி காவல்துறைக் கண்காணிப்பு - தீவிரவாத அச்சுறுத்தலால் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறதே! இப்போது சொல்லுங்கள் - கடவுள் நம்மைக் காக்கிறாரா? கடவுளை நாம் காக்கிறோமா?


சிந்தியுங்கள், சிந்தியுங்கள்!

---------------தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள் எழுதியது -"விடுதலை" 4-8-2008

3 comments:

ஆ.ஞானசேகரன் said...
This comment has been removed by the author.
ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் தமிழ் ஓவியா!
சமிபத்தில் குமுதம்.காம் வெப் டீவில் டாக்டர் ஷாலினி வழங்கும் உறவுகள் உணர்வுகள் பகுதியில் பக்தி என்பது ஒரு மனம் சார்ந்த பிரச்சனை, இது ஒரு பொதை பொன்றது, கவனிக்கவேண்டிய ஒன்று என்று கூறுகின்றார்.. முடிந்தால் பார்க்கவும். இதைப்பற்றி நானும் ஒரு பதிவு எழுதனும் என்ற என்னம் உள்ளது...
http://www.kumudam.com/webtv_streaming.php?catid=79&strid=3022&leftid=20&type=Ladies%20Corner

தமிழ் ஓவியா said...

நன்றி.அவசியம் பார்க்கிறேன்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கவும்.