Search This Blog
15.8.08
நாஸ்திகத்திற்கு பயந்தவனானால் ஒரு காரியமும் செய்ய முடியாது?
கடவுளை மறுக்கத்துணியவேண்டும் என்னை நாஸ்திகன் என்று சொல்லுகின்றவர்கள் நாஸ்திகன் என்பதற்கு என்ன அர்த்தம் கொண்டு சொல்லுகிறார்களோ அந்த அர்த்தத்தில் நான் நாஸ்திகன்தான் என்பதை வலியுறுத்திச் சொல்லுகின்றேன். நாஸ்திகத்திற்கு பயந்தவனானால் ஒரு காரியமும் செய்ய முடியாது? அதிலும் சமதர்மக் கொள்கையை பரப்பவேண்டுமானால் நாஸ்திகத்தினால்தான் முடியும். நாஸ்திகம் என்பதே சமதர்மம் என்று பெயர். அதனால் ரஷ்யாவையும் நாஸ்திக ஆட்சி என்கிறார்கள். பவுத்தரையும் நாஸ்திகம் என்றதற்குக் காரணம் அவர் சமதர்மக் கொள்கையை பரப்ப முயற்சித்ததால்தான். நாஸ்திகம் என்பது சமதர்மக் கொள்கை மாத்திரமல்ல; சீர்திருத்தம் அதாவது ஏதாவது ஒரு பழைய கொள்கைகளை மாற்ற வேண்டுமானால் அந்த மாற்றத்தையும், ஏன், எவ்வித சீர்திருத்தத்தையுமே நாஸ்திகம் என்றுதான் யதாப்பிரியர்கள் சொல்லித் திரிவார்கள். எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இடமில்லையோ அங்கு எல்லாம் இருந்துதான் நாஸ்திகம் முளைக்கின்றன. கிறிஸ்துவையும், முகமது நபியையும்கூட நாஸ்திகர்கள் என்று யூதர்கள் சொன்னதற்கும் அவர்களது சமதர்மும், சீர்திருத்தமும்தான் காரணமாகும். துருக்கியில் பாட்சாவும், ஆப்கானிஸ்தான் அமீரும் நாஸ்திகர்கள் என்று அழைக்கப்பட்டதற்கும் அவர்களது சீர்திருத்தந்தான் காரணம். ஏனென்றால், இப்போது வழக்கத்தில் இருக்கும் கொள்கைகளும், பழக்கங்களும் எல்லாம் கடவுள் செய்ததென்றும், கடவுள் கட்டளை என்றும், கடவுளால் சொல்லப்பட்ட வேதங்கள், சாஸ்திரங்கள் ஆகியவற்றின் கட்டளையென்றுமேதான் யதாப்பிரியர்கள் சொல்லுகின்றார்கள். ஆகவே, நாம் இப்போது எதை எதை மாற்றவேண்டும் என்கிறோமோ அவை எல்லாம் கடவுள் செய்ததாகவும் அல்லது கடவுள் தனது அவதாரங்களையோ, தனது தூதர்களையோ செய்யச் சொன்னதாகவுமே சொல்லப்படுவதால், அவற்றைத் திருத்தவோ, அழிக்கவோ புறப்படுவது கடவுள் கட்டளையை மீறின அல்லது கடவுள் கட்டளையை மறுத்ததேயாகும்.
உதாரணமாக, மக்களில் நான்கு ஜாதி கடவுளால் உற்பத்தி செய்யப்பட்டது என்று சொல்லப்படுகையில், மேற்படி ஜாதி ஒழியவேண்டுமென்றால், அவன் கண்டிப்பாக கடவுளை மறுத்தோ அலட்சியம் செய்தோதான் ஆகவேண்டும். எல்லா மதங்களும், மதக் கொள்கைகளும் கடவுளாலோ, அவதாரங்களாலோ, கடவுள் தன்மையாலோ ஏற்பட்டது என்று சொல்லப்படுகையில், அம்மத வித்தியாசங்கள் ஒழியவேண்டும் என்றும், மதக் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும் என்றும் சொல்லும்போது, அப்படிச் சொல்லுபவன் அந்தந்தக் கடவுள்களை, கடவுள்களால் அனுப்பப்பட்ட தெய்வீகத்தன்மை பொருந்தினவர்களை அலட்சியம் செய்தவனேயாகின்றான். அதனால்தான் கிறிஸ்தவர் அல்லாதவர் அஞ்ஞானி என்றும், மகமதியரல்லாதார் காபீர் என்றும், இந்து அல்லாதார் மிலேச்சர் என்றும் சொல்லப்படுகின்றனர். அன்றியும், கேவலம் புளுகும் ஆபாசமும் நிறைந்த புராணங்களை மறுப்பதே இந்துமதக் கொள்கைப்படி நாஸ்திகம் என்று சொல்லப்படும்போது, ஜாதியையும், கர்மத்தையும் மறுப்பதை ஏன் நாஸ்திகம் என்று சொல்லமாட்டார்கள்? ஜாதி உயர்வு தாழ்வு, செல்வம் தரித்திரம், எஜமான் அடிமை ஆகியவற்றுக்குக் கடவுள்களும் கர்மமும்தான் காரணம் என்று சொல்வதானால், பிறகு மக்களுக்கு விடுதலையும், முன்னேற்றமும் எங்கே இருக்கின்றது? கடவுளையும், கர்மத்தையும் ஒழித்தாலொழிய அதற்காக மனிதன் எப்படிப் பாடுபட முடியும்? மேடும் பள்ளமும் கடவுள் செயலானால், மேட்டை வெட்டி பள்ளத்தில் போட்டு சமன் செய்வது கடவுள் செயலுக்கு விரோதமான காரியமேயாகும். மனிதனுக்கு முகத்தில், தலையில் மயிர் முளைப்பது கடவுள் செயலானால், சவரம் செய்து கொள்வது கடவுள் செயலுக்கு எதிராகவே செய்யும், அதாவது ஓரளவுக்கு நாஸ்திகமான காரியமேயாகும். அதிலும், சவரம் செய்யச் செய்ய மறுபடியும் மறுபடியும் மயிர் முளைப்பதைப் பார்த்ததும் மேலும் சவரம் செய்வது வடிகட்டின நாஸ்திகமேயாகும். பிச்சைக்காரனுக்குச் சோறு போடுவதும் நாஸ்திகமேயாகும். ஏனெனில், கடவுள் பார்த்து ஒருவனை அவனது கர்மத்திற்காக பட்டினி போட்டிருக்கும்போது, நாம் அவனுக்குச் சோறு போடுவது கடவுளுக்கு விரோதமான காரியமேயாகும். அதாவது, கடவுளை நம்பாத - கடவுளுக்கு செயலை லட்சியம் செய்யாத தன்மையேயாகும். இப்படியே பார்த்துக் கொண்டு போனால் உலகத்தில் ஆஸ்திகன் ஒருவனும் இருக்க முடியாது. ஆதலால், நம்மைப் பொறுத்தவரை நாம் பல மாறுதல் ஏற்பட விரும்புவதால் அவை கடைசியாய் நாஸ்திகமேயாகும். நாஸ்திகமும் சாஸ்திர விரோதமும், தர்மத்திற்கு விரோதமும் செய்யாமல் யாரும் ஒரு சிறிதும் உண்மையான சீர்திருத்தம் செய்யவே முடியாது. நமது நாட்டினர்களே ஏழைகளை வஞ்சித்துக் கொள்ளை அடிக்கிறார்கள்; பாமர மக்கள் கடவுள் செயல் என்று கருதிக் கொள்வதால் தினமும் ஏய்த்துக் கொண்டே வருகின்றார்கள். அப்படிப்பட்ட பாமர மக்களை விழிக்கச் செய்து, நீங்கள் ஏழைகளாய், தரித்திரர்களாய் இருப்பதற்கு கடவுள் செயல் காரணமல்ல; உங்கள் முட்டாள்தனம்தான் காரணம்; ஆதலால், நீங்கள் கடவுள் செயலை லட்சியம் செய்யாதீர்கள் என்று சொன்னால் தான் செல்வந்தர்களின் அக்கிரமங்களைப் பாமர மக்கள் அறியக் கூடும். அப்பொழுது கடவுள் செயலையும், அதிக மூடர்களிடம் கடவுளையும் மறுத்துத்தான் ஆகவேண்டும்.
இந்த நாட்டில் ஒரு புறம் ஏழைகள் பட்டினி கிடக்க, ஒருபுறம் சிலர் கோடீஸ்வரராய்க் கொண்டு தலைகொழுத்து டம்பாச்சாரியாய்த் திரிவது கடவுள் செயல் என்றால், இந்த நாட்டு செல்வத்தை வெளியான் சுரண்டிக் கொண்டு போவதும், அவன் இங்கு ஆடம்பரமாய் வாழ்வதும் கடவுள் செயல் என்றுதான் சொல்லவேண்டும். ஆகையால், கடவுள் செயல்கள் ஒரு காரியத்திற்கும், மற்றொரு காரியத்திற்கும் மாறுபடுவது போலவே, தர்மமும் நீதியும்கூட ஒரு சமயத்திற்கும் மற்றொரு சமயத்திற்கும் மாறுபடவேண்டியதேயாகும். ஒரு காலத்தில் அரசர்கள் விஷ்ணு அம்சமாய் இருந்தார்கள். ஆனால், இப்போது அரசர்கள் கொள்ளைக்காரர்கள் என்று சொல்லப்படுகின்றார்கள். அதுபோலவே செல்வவான்கள் இந்தக் காலத்தில் லஷ்மி புத்திரர்களாய் இருக்கின்றார்கள். இன்னொரு காலத்தில் அவர்கள் பெருத்த வஞ்சகப் பகற்கொள்ளைக்காரர்கள் என்று அழைக்கப்பட்டு, பலாத்காரத்தில் அவர்களிடமிருக்கும் செல்வங்களைப் பிடுங்கிக் கொள்ளப்பட வேண்டியவர்கள் ஆவார்கள். உதாரணமாக, மனுதர்ம சாஸ்திரத்தில் சூத்திரன் பொருள் சேர்த்து வைத்திருந்தால், பார்ப்பனன் அதை பலாத்காரத்தினால் பிடுங்கிக் கொள்ளலாம் என்று இருக்கின்றதை இன்றும் பார்க்கின்றோம். கொஞ்ச காலத்திற்கு முன் இது அமலிலும் இருந்திருக்கிறதாம். இனி கொஞ்ச நாள் போனால், பார்ப்பான் பணம் வைத்திருந்தால் பார்ப்பனரல்லாதார் பலாத்காரமாய் பிடுங்கிக் கொள்ளலாம் என்று தர்மம் ஏற்பட்டாலும் ஏற்படும். அப்படி ஏற்படுவது முன்னைய வழக்கத்திற்கு விரோதம் என்பதாக யாரும் சொல்ல முடியாது. காலம் போகப் போக, நேரில் உழுது பயிர் செய்ய முடியாதவனுக்கு பூமி இருக்கவேண்டியதில்லை என்றும், அப்படி இருந்தாலும் சர்க்காருக்கு வரி கொடுப்பதுபோல் ஒரு சிறு அளவுதான் பாத்தியமுண்டேயொழிய, இப்போது இருப்பதுபோல், உழுகின்றவன் தன் வயிற்றுக்கு மாத்திரம் எடுத்துக்கொண்டு, ஏன், சில சமயங்களில் அதற்கும் போதாமலும் இருக்க, பூமிக்கு உடையவனுக்கு பெரும் பாகம் கொடுப்பது என்கின்ற வழக்கம் அடிபட்டாலும் அடிபடலாம். அதுபோலவே, இன்று கோயில் கட்டுவது தர்மமாக இருக்கின்றது. ஆனால், பிற்காலத்தில் கோயிலை இடித்து விக்கிரங்களை உடைத்து, பள்ளிக் கூடங்களும், தொழிற்சாலைகளும் ஏற்படுத்துவது தர்மம் என்றானாலும் ஆகலாம். இதுபோலவே, அநேக விஷயங்களில் இன்றைய தர்மம் நாளைக்கு அதர்மமாகி தலைகீழாக மாறக்கூடும். அப்பேர்பட்ட நிலைமை வரும்போது இன்றைய நிலைமையெல்லாம் கடவுள் கட்டளை என்றால், அதை மாற்ற முற்படுகின்றவன் கடவுள் கட்டளையை மறுக்க, ஏன், கடவுளையே மறுக்கத் துணிந்தாகவேண்டும். கடவுளை மறுக்கத் துணிந்தவனே தர்மத்தின் பேரால் உள்ள இன்றைய கொடுமைகளை ஒழிக்க முடியும். அப்படிக்கில்லாமல், கடவுளுக்கும், மோட்சத்திற்கும் பயந்து கொண்டிருப்பவனால் ஒரு காரியமுமே செய்ய முடியாது என்பது உறுதி. ஏனெனில், அரசியல், சமூக இயல், பொருளாதார இயல் ஆகியவற்றில் உள்ள இன்றையக் கொடுமையான நிலையும், முட்டாள்தனமான நிலையும், அயோக்கியத்தனமான நிலையும் எல்லாம் கடவுள் கட்டளையாலும் மோட்ச சாதனங்களாலும், சாஸ்திர தர்மங்களாலுமே ஏற்பட்டவையாகும். ஆகையால் தான் அவ்விஷயங்களில் நான் அவ்வளவு உறுதியாய் இருக்கிறேன்.
-----------------தந்தைபெரியார் -"குடிஅரசு" -21-5-1949
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment