Search This Blog

21.8.08

வேதங்கள் என்பது கடவுள் சொன்னதல்ல; குடிபோதையில் பார்ப்பனர்கள் திராவிட மக்கள் மீது வெறுப்புக் கொண்டு பாடிய பாட்டுக்கள்

புத்தர் கொள்கைகளை மதம் என்று சொல்வது அழிக்கும் சூழ்ச்சியே


பார்ப்பன ஆதிக்கத்துக்கும், அதிகாரத்துக்கும், வாழ்வுக்கும் என்ன ஆதாரம் என்றால், முதலாவதாக இந்து மதம். அதாவது, வர்ணாசிரம தர்மத்தைக் கொண்ட மதம். நம் மக்களில் பெருத்த அறிவாளிகள் என்பவர்களிலும் கூட 100க்கு 75 பேர் இந்த இந்து மதத்தை ஒப்புக் கொண்டு ‘நாங்கள் இந்துக்கள்' என்கிறார்கள். இரண்டாவதாகப் பார்ப்பனர்களால் ஏதேதோ எப்படியெப்படியோ ஆக்கப்பட்ட கடவுள்கள் என்று சொல்லப்படுபவைகளை, நம்மவர்களில் 100க்கு 50 பேருக்கு மேலாக ஒப்புக் கொள்ளுகிறார்கள். மூன்றாவதாகப் பார்ப்பனர்கள் எதையெதை மத ஆதாரங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் என்று எழுதி வைத்திருக்கிறார்களோ, அவற்றையெல்லாம் ஒப்புக்கொள்ளுகிறார்கள். இவைதான் பார்ப்பன ஆதிக்கம் நிலை பெறுவதற்கு உதவியாய் இருக்கின்றன.

நீங்கள் நினைக்க வேண்டும் - நாம் எதனால் கீழ் ஜாதி மக்கள், சூத்திர மக்கள் என்றால், இந்து மதத்தின்படி, அந்த மதத்திற்கான கடவுள்களின்படி, அந்த மதத்தையும், கடவுளையும் விளக்கும் சாஸ்திர, புராண இதிகாசங்களின்படி நாம் சூத்திரமக்கள். உள்ளபடியே இந்த நாட்டு ஜன சமுதாயத்தில் நாம், ‘சூத்திர' மக்கள், கீழ் ஜாதி என்று சொல்லப்படுகிற நம் மக்கள் - 100க்கு 90 பேராக உள்ள நாட்டுப் பெருவாரியான மக்கள் சமுதாயத்தவர் ஆவோம்.

இவைகளையெல்லாம் நாம் எடுத்துச் சொன்னால், நம் ஜாதி மக்கள் என்பவர்களே, எந்த மக்களைப் பார்ப்பான் ‘சூத்திரன்' என்றும் ‘தேவடியாள் மக்கள்' என்றும் கற்பித்திருக்கிறானோ, அந்த மக்களே நம்மிடம் தகராறுக்கு வருகிறார்கள். காரணம் என்ன என்றால், நான் முன்பே சொன்னபடி அந்த மக்களுக்குப் பார்ப்பன ஆதிக்க ஆதாரங்களான கடவுள், மத, சாஸ்திரம் முதலியவைகள் பற்றிய நம்பிக்கையும், ஒப்பமுமேயாகும்.

இப்படியிருக்கும்போது நாங்கள் மாத்திரம் இந்தக் கொள்கைகளை, கருத்துக்களைச் சொல்லவில்லை. இப்போது நாங்கள் சொல்லுகிற எவையெவைகளை நீங்கள் நாத்திகம் என்று சொல்லுகிறீர்களோ, அந்தக் கொள்கைகளை புத்தர் 2500 ஆண்டுகாலத்திற்கு முன்பே சொல்லியிருக்கிறார் என்று புத்தரை– அவருடைய கொள்கைகளை நம்முடைய கருத்துக்குத் துணையாக எடுத்துக்காட்டி, மக்களுக்கு தெளிவு ஏற்படுத்த புத்தர் கொள்கைகள் வசதியாக இருக்கின்றன.

புத்தர் 2500 ஆண்டுகளுக்கு முன்பே இந்து மதம் எனப்படுகிற இந்த ஆரிய மதத்தைக் கண்டித்து - அதன் அடிப்படையான கடவுள்களையும், சாஸ்திரங்களையும் ஒதுக்க வேண்டுமென்று வலியுறுத்தி, பார்ப்பன ஆதிக்க மூலங்களான மோட்சம், நரகம், புரோகிதம், ஆத்மா, முதலியவைகளைக் கண்டித்து, அவை எல்லாம் பித்தலாட்டமானவை என்பதாகக் கூறியுள்ளார்.

தோழர்களே! புத்தர் போதித்தவை என்பவை ஒரு மதம் அல்ல. நீங்கள் நன்றாக கவனத்தில் வைக்க வேண்டும். புத்தர் போதித்தவைகளை மதம் என்று சொல்லுவது, புத்தர் கொள்கையின் வலுவைக் குறைப்பதற்காகவும், அதுவும் மற்ற மதங்களைப் போல ஒரு மதம் என்பதாகி விடுவதற்காகவுமே தவிர வேறில்லை. ஒரு மதம் என்று சொன்னால், அது என்றைக்கும் யாராலும் மாற்ற முடியாதது. தோன்றிய காலத்தில் என்னென்ன கோட்பாடுகள், தத்துவங்களைக் கொண்டதாக இருந்ததுவோ அவைகளை அப்படியே பின்பற்றி அனுஷ்டித்து வரவேண்டும். மதத்தை ஏற்படுத்தியவர்கள் அன்றும், இன்றும் என்றும் ஆக முக்காலங்களையும் உணர்ந்த திரிகால ஞானிகள் என்பதாகக் கருதப்பட்டு அப்படியே பின்பற்ற வேண்டும் என்பது தான் ஆகும். அதை மாற்றியோ, அல்லது அவை ஏற்றதாய் இல்லையே என்று எதிர்த்தோ, இப்படி நடந்திருக்க முடியுமா என்று சந்தேகித்துப் பேசுவதோ அந்த மதத்திற்கு விரோதமானது ஆகும்.

புத்தர் கொள்கைகள் அப்படி அல்ல; அவருடைய கொள்கைகளை மாற்றாமல் என்றென்றும் அப்படியேதான் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடோ, நிபந்தனையோ இல்லை. புத்தர் கொள்கை அறிவை அடிப்படையாகக் கொண்டது. எந்தக் காரியத்தையும் அறிவின்படி தடையில்லாமல் தாராளமாக பகுத்தறிவுடன் ஆராய்ந்து ஒத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையைக் கொண்டது. எனவேதான் புத்தருடைய கொள்கைகள் மதம் அல்ல. அதை மதம் என்று சொல்லுகிறது, புத்தர் கொள்கைகளை அழிக்க வேண்டும் என்ற உள் எண்ணத்தில் செய்யப்படுகிற சூழ்ச்சி காரியமாகும்.

இன்னும் நீங்கள் கவனிக்க வேண்டும். இந்து மதத்தின் அடிப்படை என்று சொல்லப்படுவது வேதங்கள் ஆகும். ஆனால் அந்த வேதங்களையே அவைகளின் கூற்றுகள் பற்றியே பிய்த்து எறிந்துவிட்டார்கள். வேதங்கள் என்பது கடவுள் சொன்னதல்ல; குடிபோதையில் பார்ப்பனர்கள் திராவிட மக்கள் மீது வெறுப்புக் கொண்டு பாடிய பாட்டுக்கள் என்பதாக எழுதி விட்டார்கள்.

24.7.1954 அன்று சென்னையில் புத்தர் கொள்கைப் பிரச்சார மாநாட்டில் ஆற்றிய உரை

0 comments: