Search This Blog

8.8.08

அமர்நாத் கலவரம் - ஒரு பார்வை

--------------------------------------------------------------------------------



மதம் என்றாலே கலவரத்தின் கைப்பிள்ளை என்பது வரலாறு தரும் பாடமாகும். மதக் காரணங்களுக்காக மனிதக் குருதி சிந்தப்பட்டதுபோல வேறு எந்தக் காரணங்களுக்காகவும் சிந்தப்பட்டதில்லை என்பதுதான் உலக வரலாறு.

ஒரு மதத்துக்கும், இன்னொரு மதத்துக்கும் மட்டுமல்ல - ஒரே மதத்துக்குள் உள்ள உள் பிரிவுகளுக்கிடையே கூட மோதல்கள், கொலைகள், ரத்தப் பரிமாற்றங்கள் நடந்ததுண்டு.
சிலுவைப் போர்களை வரலாறு மறக்குமா? பாபர் மசூதி இடிப்புதான் சாதாரண விஷயமா? அதனைத் தொடர்ந்து இந்தியா முழுமையும் (தமிழ்நாட்டைத் தவிர) அடிதடிகள் - மோதல்கள் - பலிகள் எல்லாம் உண்டே!

குஜராத் மாநிலத்தில் கொட்டப்பட்ட ரத்தத்தின் வாடை இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கும் வீசிக் கொண்டேதானிருக்கும்.

இப்பொழுது அமர்நாத் பனிக் கோயில் பிரச்சினை தலைதூக்கி விட்டது. ஏதோ பனி லிங்கமாம் - அதுவும் இரண்டு மாதங்களுக்குத்தான் தரிசனமாம் - அதற்குப் பின் அந்தக் கடவுள் காணாமல் போய்விடுவாராம் - அதாவது உருகிக் கரைந்து போய்விடுவாராம். இதிலிருந்தே இது இயற்கையின் தட்பவெட்ப நிலையைப் பொறுத்ததே தவிர, கடவுளும் இல்லை - ஒரு புடலங்காயும் இல்லை என்பது வெளிப்படை.

இந்த ஒரு பைத்தியக்காரத்தனமான மூட நம்பிக்கைக்காக மனிதக் குருதி சிந்தப்படுகின்றது.
அந்த மாநிலத்தில் இருந்த ஆர்.எஸ்.எஸ்.காரரான ஆளுநர் சின்கா குந்தினாற்போல வனத்துறைக்குச் சொந்தமான 40 ஹெக்டர் நிலத்தை இந்துத்துவா கூட்டத்துக்குத் தூக்கிக் கொடுத்துவிட்டார். அதில் அவர் சட்டப் பிரச்சினைகளை யெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அத்துமீறுதல் என்பதுதானே ஆர்.எஸ்.எஸ். அணுகுமுறை.
அப்படி நிலம் கொடுத்தது தவறு என்று இன்னொரு மதக்காரர்கள் முஷ்டியைத் தூக்கினர். அரசு பின்வாங்கியது. ஏன் - ஒரு அரசே கவிழ்ந்துவிட்டது! மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள்கூட மூடத்தன மதப் பிரச்சினைக்காகக் கவிழ்வது என்பது இன்னும் நாடு கற்காலத்தில் சஞ்சரித்துக் கொண்டி ருக்கிறது என்பதற்கான அடையாளமாகும்.
கொடுக்கப்பட்ட நிலம் விலக்கிக் கொள்ளப்பட்டது என்றவுடன், ஏற்கெனவே நிலத்தைப் பெற்றவர்கள் - இந்து மதவாதிகள் விட்டேனா பார்! என்று வேல் கம்பு, அரிவாள் சகிதத்துடன் புறப்பட்டு விட்டனர். ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்துபரிசத், சங் பரிவார்கள் இந்த வாய்ப்பை நழுவ விட்டு விடுவார்களா? இது போன்ற வாய்ப்புக்காகத்தானே அவர்கள் காத்துக் கிடக்கிறார்கள்! நெருப்பை விசிறிவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

எங்கோ நடந்த ஒரு பிரச்சினையை, இந்தியா முழுவதும் கொண்டு சென்றுவிட்டனர் - அதுவும் சில மாநிலங்களில் அவர்களின் அரசுகள் இருக்கின்றனவே! காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்! என்கிற உபாயத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.
மத்திய அரசாங்கமே இதுபற்றி கவலைப்படவேண்டிய, தலையிட வேண்டிய ஒரு அவசியத்தை இன்று உருவாக்கி விட்டது. எங்கோ ஊற்றெடுத்த இந்தச் சண்டை சம்பந்தா சம்பந்தம் இல்லாத மக்களின் உயிரைக் காவு கேட்கிறது. தாக்கியவனுக்குக் காரணம் தெரிந்தாலும், தாக்கப்பட்டவனுக்குக் காரணம் தெரியவில்லை - அப்படி ஒரு அயோக்கியத்தனம் இந்த மதவாதத்தில் சூள்கொண்டு இருக்கிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங்கோடு தொடர்புகொண்டு ஒத்துழைப்பைக்கோரவும், பிரதமரே எதிர்க்கட்சிக்காரர்களை அழைத்து ஆலோசனை நடத்தவுமான ஒரு நெருக்கடியை ஏற்படுத்திவிட்டனர்.

சுமூகமாக இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. ஆனால், பா.ஜ.க. தலைவர் என்ன சொல்கிறார்? சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகக் கருதி காவல்துறைதான் இதனைச் சமாளிக்கவேண்டும் என்று கூறுகிறார்.

காவல்துறையோ, இராணுவமோ தலையிட்டு நான்கு இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு - பத்துப் பிணங்கள் விழுந்தால், அதைத் தூக்கிக்கொண்டுபோய் வெறியைக் கிளப்பி, குஜராத் பாணி வேட்டைகளை நடத்தி, இந்து - முசுலிம் என்று வாக்கு வங்கிகளைப் பிரித்து, ஆதாயம் அடையலாம் என்பது ஆர்.எஸ்.எஸ். - அது சம்பந்தப்பட்டவர்களின் சூட்சமத் திட்ட மாகும்.

மதத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அரசியல் நடத்தும் அமைப்புகள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று அழுத்த மான சட்டத்தின்மூலம் செயல்பட்டால்தான், இந்தக் கூட்டத்தின் கொடுக்கை நறுக்க முடியும். மத்திய அரசு யோசிக்குமா?

------------------" விடுத்லை" -தலையங்கம் 8-8-2008

0 comments: