Search This Blog
19.8.08
விநாயகர் ஊர்வலமும் - விளையும் கேடுகளும்!
கடவுள் அரூபி - அதாவது உருவமற்றவன் - என்று சொல்லும் மதங் கள் கடவுளுக்கு வடிவம் கற்பித்து விட்டன (இஸ்லாம் இதில் விதி விலக்கு!). உருவங்கள் கற்பிக்கப்பட்ட பிறகு - அந்தக் கடவுள்களுக்கும் மனைவி, மக்கள் என்ற முறையில் குடும்பங்களும் கற்பிக்கப்பட்டன.
குடும்பங்கள் கற்பிக்கப்பட்ட பிறகு - அவற்றின் பெருமைகளை, அற்புதங்களைப் பறைசாற்ற தலபுராணங்கள் உருவாக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்ட பிறகு, வழிபடுவதற்குச் சடங்குகள், நேர்த்திக் கடன்கள் ஏற்படுத்தப்பட்டன.
மக்கள் பொருள்கள் - கோயில்களுக்கு வந்து சேர ஆரம்பித்தன. புரோகிதன் என்கிற சுரண்டல்காரன் அதன் அதிகாரியாகி விட்டான். உண்டியல்கள் நிரம்பி வழிந்தன - சொத்துக்களும் வந்து குவிந்தன.
இந்தச் சுரண்டல் முறை தொடரவேண்டும் என்பதற்காக - வழிபாட்டு நாள்களும், பண்டிகைகளும், தேர்த் திருவிழாக்களும், உற்சவமூர்த்தி ஊர்வலங்களும், கொடியேற்றங்களும் உண்டாக்கப்பட்டு மக்கள் மத்தியில் சதா கோயில், கடவுள், பக்தி, நேர்த்திக்கடன்கள் என்ற எண்ணங்களே ஆக்கிரமிப்புச் செய்யும் ஒரு உளவியல் நிலை அழுத்தமாக உருவாக்கப்பட்டு விட்டது.
எல்லாக் கஷ்டங்களுக்கும் சர்வ நிவாரணம் இந்தக் கோயிலுக்குள் சிற்பிகளால் அடித்து வைக்கப்பட்ட சிலைகளுக்கு - அவர்களின் கண்ணோட்டத்தில் கடவுள்களுக்கு - இருப்பதாக ஒரு எண்ணம் மக்கள் மத்தியில் ஆழ விதைக்கப்பட்டு, அது நாளும் வளர்ந்த நிலை ஏற்பட்டு விட்டது.
அச்சமும், பேராசையும் குடிகொண்ட மனிதனின் சிந்தனைகள் இந்த அறிவீனமான இருளுக்குள் சிக்கிக் கொண்டு விட்டன. கடவுளைப்பற்றி எதைக் கூறினாலும் அப்படியே கண்ணை மூடிக்கொண்டு நம்புவதில்தான் பலனே இருக்கிறது என்கிற அளவுக்கு அவன் மூளைக்கு விலங்கிடப்பட்டு விட்டது.
கற்பனைக்கும் எட்டாத வடிவத்தில் கடவுள் சிலைகள் உருவாக் கப்பட்டன - அது அவனுக்குப் பிரமிப்பை ஊட்டியதே தவிர, இது அறிவுக்குப் பொருந்துமா? என்கிற இடத்துக்கே அவன் போகவில்லை.
இதில் கை வைக்க யாரும் துணியவில்லை. அதில் கை வைக்க வந்தவர்களைக் கைவைக்க பக்திப் போதை ஏறிய மக்கள் கூட்டம் தயாராகி விட்டது.
மனிதன் - தன் ஆசாபாசங்களை எல்லாம் தன்னால் உருவாக்கப் பட்ட கடவுள் மீது திணித்து விட்டான். கலவி செய்வது, குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது, விலை மகள் வீட்டுக்குச் செல்வது, குடிப்பது, கூத்தாடுவது, சண்டை போடுவது, கொலை செய்வது இவை அத் தனையும் - மனிதனால் கற்பிக்கப்பட்ட கடவுள்களிடத்திலும் உள்ளதை கடவுளைப்பற்றிப் புகழ் பாடும் புராணங்கள் பேசுகின்றன.
இத்தகைய பாழடைந்த ஒரு சமூகத்தைத் திருத்துவதற்கு உலகின் பல்வேறு நாடுகளிலும் சீர்திருத்தவாதிகள் தோன்றியிருக்கின்றனர். தோல்விகளையே பெரும்பாலும் சந்தித்தனர்.
இந்தியாவின் தென்பகுதியில் தமிழ்நாட்டில் தோன்றிய ஒரு தலைவர் சீர்திருத்தவாதியல்ல; புரட்சியாளர் - மக்களின் மூளையையே களமாகக் கொண்டு அவரது பகுத்தறிவுப் போராட்டம் தொடங்கப்பட்டது. எதிர்ப்புகள் விசையோடு கிளம்பின - அடிதடிகள் விழுந்தன - கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதும் உண்டு.
அவற்றிற்கெல்லாம் முகங்கொடுத்து ஒரு மாறுதலை மக்கள் மனதில் ஏற்படுத்தியவர்தான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்.
தங்கள் கைமுதலான பக்தியை எப்படி புனருத்தாரணம் செய்வது என்கிற நெருக்கடிக்கு மதவாதிகள் - சுரண்டும் புரோகிதக் கூட்டம் ஆளானது.
மும்பையிலே பாலகங்காதர திலகர் என்ற பார்ப்பனர் விநாயகர் என்ற கடவுளைப் பிடித்துக் கொண்டு - அதை மய்யப்படுத்தி மக்கள் மத்தியில் புத்துயிர் கொடுக்க முன் வந்தார். விநாயகர் சதுர்த்தி என்று கூறி, அந்த மாநிலத்திலேயே ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தினார் - பெரிய அளவு ஊர்வலங்களை நடத்தினார்.
அதே முறையை அண்மைக்காலமாக ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி வகையறாக்கள் முன்னின்று தமிழ்நாட்டிலும் பிள்ளையார் ஊர்வலம் நடத்திட முற்பட்டுவிட்டன.
விநாயகர்பற்றி எந்த புராணத்திலும் கண்டிராத வகைகளில் எல்லாம் - புதுப்புது பெயர்களைச் சூட்டி - மிகப்பெரிய உருவத்தில், உயரத்தில் உருவங்களைச் செய்து, ஊர்வலமாக எடுத்துச் செல்லுகின்றனர். மக்கள் மத்தியில் ஒரு கிளுகிளுப்பை ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கமாகும்.
நீர் நிலைகளில், ஏரிகளில், குளத்தில், ஆற்றில், கடலில், கடைசியாக அந்தப் பிள்ளையார் உருவங்களைக் கரைக்கின்றனர். அதற்கு முன்பெல்லாம் வீட்டின் கொல்லைப் புறத்தில் உள்ள கிணறுகளில் போடுவார்கள். அதற்கு ஒரு பெரிய விளம்பரத்தை ஏற்படுத்தத்தான் பல இடங்களிலும் ஊர்வலமாக வந்து கடலில் கரைக்கும் ஒரு ஏற்பாட்டைச் செய்ய ஆரம்பித்தனர்.
சர்வசக்தி வாய்ந்ததாகப் பீற்றிக்கொள்ளும் மதவாதிகள், மக்களிடம் மகேசன்களைத் தூக்கிச் செல்லும் ஒரு பிரச்சார யுக்தியைக் கையாளுகின்றனர் என்பது கவனிக்கத்தக்கதாகும்.
சுற்றுச்சூழல் பாதிப்பைப்பற்றியெல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு எழுதும் பார்ப்பன ஏடுகள், இந்தப் பிள்ளையார் ஊர்வலத்தாலும், ரசாயனப்பூச்சு பூசப்பட்டுள்ள பிள்ளையார் உருவங்களை நீர் நிலை களில் கரைப்பதாலும் ஏற்படுகின்ற பாதிப்பைப்பற்றி மூச்சுவிட மாட்டார்கள். காரணம், பார்ப்பான் உயிர் இந்தக் கடவுள் பொம்மைகளிடத்தில் தான் இருக்கிறது!
தந்தை பெரியார் கடவுள்மீது கை வைத்த இரகசியமும் இதுதான். கடவுள் நம்பிக்கையால் புத்தி பறிபோய், பொருளும் நாசமாகி, பொழுதும் விரயமாகிறதே - இதுபற்றி மக்கள் சிந்திப்பார்களாக!
-------------- நன்றி: "விடுதலை" தலையங்கம் 19-8-2008
Labels:
மூடநம்பிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
இந்த இடுகை எனக்குப் புதிய செய்திகளையும் தெளிவுகளையும் வழங்கியது.
எமது வலைப்பதிவில் விநாயகர் சதுர்த்தி பற்றிய இடுகையைப் பார்க்கவும்.
Post a Comment