Search This Blog

28.8.08

பக்தர்களே பார்ப்பனச் சூழ்ச்சியில் அவதரித்த இந்தப் பிள்ளையாரை கும்பிடப் போகிறீர்களா?



விநாயக சதுர்த்தியாம்!

பிறப்பு - இறப்பு இல்லாதவன் கடவுள் என்று சொல்லுவார்கள். இந்து மதத்திலோ கடவுளுக்குப் பிறப்பும் உண்டு, இறப்பும் உண்டு.


கடவுளுக்குப் பிறப்பை வைத்தால், அதற்கென்று ஒரு நாளை ஒதுக்கி, புரோகிதச் சுரண்டலுக்கு விரிவான ஏற்பாட்டைச் செய்துகொள்ளலாம் அல்லவா!

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் கன்னி ராசியில் விருச்சிகம் லக்னத்தில் சதுர்த்தி திதியில் அவதரித்தாராம் விநாயகர். எப்படி அவதரித்தாராம்?

பார்வதி தேவியார் குளிக்கச் சென்றபோது, தன் உடலில் தேங்கிக் கிடந்த அழுக்கையெல்லாம் திரட்டி, அதை ஒரு உருவமாக்கி, காவலுக்கு வைத்தாராம். அப்பொழுது அங்கு வந்த சிவனை அந்த அழுக் குருண்டை தடுத்ததாம்; சிவனைத் தடுப்பது என்பது சாதாரணமா? சினம் கொண்ட சிவன் சூலாயுதத்தினால் அந்த அழுக்குருண்டையின் தலையைக் கொய்தானாம். முண்டமான தன் பாலகனைப் பார்த்து பார்வதி தேவியார் வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறினாளாம்.

வடக்கே தலை வைத்துப் படுத்துக் கிடந்த ஒரு யானையின் தலையை வெட்டிக் கொண்டு வந்தனராம் கணநாதர்கள்.

சிவன் என்ன செய்தான்? அறுவை சிகிச்சை நிபுணர்போல அந்த முண்டத்தின் உடலோடு யானைத் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்து கணங்களுக்குத் தலைவன் ஆக்கினானாம்.

பார்வதி உடலின் அழுக்கு என்று சொன்னால், அருவருப்பாக இருக்கிறது என்றவுடன், பார்ப்பனர்கள் என்ன வியாக்கியானம் சொன்னார்கள் தெரியுமா? பார்வதி தன் உடலில் உள்ள சக்தியையெல்லாம் திரட்டி ஒரு உருவமாக்கினாள் என்று கதை கூற ஆரம்பித்துவிட்டனர். காரணம், எல்லாம் தந்தை பெரியாருக்கும், திராவிடர் கழகத்திற்கும் பயந்துதான்.

இந்தப் பிள்ளையார் பிறப்புக்கு ஒரு கதையல்ல, இரு கதையல்ல, பல கதைகள் உண்டு.
கதைக்குத்தான் கண் இல்லை என்று வசதியாகச் சொல்லி வைத்துவிட்டார்களே!

பகவான் விநாயகரைக் கும்பிட்டுச் சென்றால், எல்லாக் காரியமும் ஜெயம்தானாம். விக்னம் இல்லாமல் காப்பாற்றுவாராம் - அதனால்தான் அந்த அழுக்குருண்டைக்கு விக்னேஸ்வரன் என்று பெயராம்.

இந்த விநாயகன் பிரம்மச்சாரி என்று ஒரு கதை. சித்தி, புத்தி என்று இரு மனைவிமார்கள் உண்டு என்று இன்னொரு கதை. உண்மை யிலே இப்படி ஒரு கடவுள் இருந்தது என்றால், ஏனிப்படி முரண்பாடான கதைகள் - மாறுபாடான கதைகளைச் சொல்கின்றன புராணங்கள்?

கடவுள் விஷயம் என்பதால் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள் என்ற துணிவில் உளறி வைத்துவிட்டனர்.

தனக்கு அம்மாவைப்போல அழகான மனைவிவேண்டும் என்று உலகிலேயே கேட்ட கயவாளி இந்த விநாயகனாகத்தான் இருப்பான்.

விநாயகர் என்று பெயர் இந்தப் பிள்ளையாருக்கு வந்ததற்கெல்லாம் ஒரு சதி - பின்னணியில் இருக்கிறது.

புத்தருக்கு விநாயகர் என்றும், சாஸ்தா என்றும் பெயருண்டு. பிற்காலத்தில் புத்தர் கோயில்களை இந்துமதவாதிகள் தங்கள் கோயில்களாக உருமாற்றி விட்டனர். புத்தருக்கு இருந்த விநாயகர் என்ற பெயரை இந்தப் பிள்ளையாருக்குச் சூட்டி, புத்த விகாரங்களை மோசடி செய்துவிட்டனர். இந்துக் கோயில்களாக்கிவிட்டனர். அது போலவே, புத்தருக்கு சாஸ்தா என்ற பெயருண்டு, பிற்காலத்தில் அய்யப்பனுக்கு சாஸ்தா என்ற பெயர் சூட்டி புத்த விகாரங்களை அய்யனார் - அய்யப்பன் என்ற கோயில்களாக உருமாற்றம் செய்தனர்.

இதுபற்றி ஆய்வாளர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்களால் எழுதப்பட்ட பவுத்தமும் - தமிழும் என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

இந்து மதம் பவுத்த மதத்தை அழித்துவிட்டபோதிலும், அந்த மதத்தை உண்டாக்கின புத்தரை ஒரு தெய்வமாக ஏற்றுக்கொண்டது. அஃதாவது, புத்தர் திருமாலின் அவதாரங்களில் ஒருவரென்று ஒப்புக் கொண்டு விட்டது. ஏன் ஒப்புக்கொண்டது? புத்தரின் உருவ வழிபாடு அக்காலத்து மக்களிடையே வேரூன்றியிருந்தபடியால், பவுத்த மதத்தை அழித்துவிட்டபோதிலும், புத்தரைத் தெய்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இந்து மதத்திற்கு ஏற்பட்டதுபோலும்!

இந்து மதத்தின் ஒரு பிரிவான வைணவ மதம் புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாக ஏற்றுக்கொண்டதுபோலவே, மற்றொரு பிரிவாகிய சைவ சமயமும், புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராக ஏற்றுக் கொண்டது. சாஸ்தா, அல்லது அய்யனார் என்னும் பெயருடன் புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டு, பின்னர் முருகர் அல்லது சுப்பிரமணியரோடு புத்தரை ஒற்றுமைப்படுத்திக் கொண்டது. புத்தருக்குத் தருமராசன் என்றும், விநாயகன் என்றும் பெயர்கள் உள்ளன. இப்பெயர்களை நிகண்டுகளிலும் காணலாம். தருமராசன் என்னும் பெயருடன் இருந்த பவுத்தக் கோயில்களைப் பிற்காலத்தில், பாரதத்தில் கூறப்படும் பஞ்சபாண்டவரைச் சேர்ந்த தருமராசன் கோயிலாக மாற்றி விட்டனர். அதுபோலவே, விநாயகன் என்னும் பெயருடன் இருந்த புத்தர் கோயில்களை விநாயகர் (பிள்ளை யார்) கோயிலாகவும் மாற்றி விட்டார்கள். துடித லோகத்தில் எழுந்தருளியிருந்த அவலோகிதர் எனப்படும் போதிசத்துவர், புத்தராக மாயா தேவியின் திருவயிற்றில் வந்து அமர்ந்தபோது, வெள்ளையானைக் கன்று உருவமாக வந்தார் என்று பவுத்த நூல்கள் கூறுகின்றன. பவுத்த மதம் செல்வாக்குக் குறைந்த பிற்காலத்தில், விநாயகர் என்னும் பெயரு டைய புத்தக் கோயில்கள் விநாயகர் (பிள்ளையார்) ஆலயங்களாக மாற்றப்பட்டன. பழைய சைவ மதத்தில் விநாயகர் வணக்கம் கிடையாதென்றும், கி.பி. 6 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு விநாயகர் வணக்கம் சைவ சமயத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டதென்றும் சைவப் பெரியார் உயர்திரு மறைமலையடிகள் போன்ற அறிஞர்கள் கூறுவதும் ஈண்டு கருதத்தக்கது. (“பவுத்தமும் - தமிழும்”, பக்கம் 77)


பக்தர்களே பார்ப்பனச் சூழ்ச்சியில் அவதரித்த இந்தப் பிள்ளையாரை கும்பிடப் போகிறீர்களா? இங்கு பக்தி என்பது பார்ப்பனர் நலம் என்பதைப் புரிந்துகொள்வீர்!



-----------நன்றி: "விடுதலை" 28-8-08

0 comments: