Search This Blog

4.8.08

பெரியார் இயக்கம் தோன்றியபின் .............



மனித வாழ்வுக்கு உதவுபவர் இழி சாதியா?

தந்தை பெரியாரவர்கள் நன்றியுரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

இன்றைய தினம் என்னுடைய 90 - ஆம் பிறந்த நாள் விழா என்னும் பெயரால், இந்நகர திராவிடர் கழகத்தினர் இக்கூட்டத்தினை ஏற்பாடு செய்து பல அறிஞர்களை அழைத்துப் பேசச் செய்திருக்கிறார்கள். இதில் அநேக அறிஞர்கள் நான் வெட்கப்படும் அளவிற்கு வாழ்த்துக் கூறி இருக்கிறார்கள். எனக்குத் தெரியும் நான் இதற்கு எவ்வளவு தகுதியுடையவன் என்பது!

பொதுவாகக் கடிதம் எழுதுவதாக இருந்தால், அவர்கள் நம்மை விட எவ்வளவு கீழானவர்களாக இருந்தாலும்கூட எப்படி மரியாதையாக
திரு, திருவாளர், ஸ்ரீ என்று போட்டு ஆரம்பிக்கின்றோமோ அதுபோல் தான் மரியாதைக்காக என்னைப் புகழ்ந்திருக்கின்றீர்கள் என்று கருதுகின்றேன். என்னைப் பற்றிப் பேசிய பலர் நான் இன்னும் நீண்ட நாட்கள் வாழ வேண்டுமமென்று சொன்னார்கள். அது கேட்பதற்கு இனியாக இருந்தது. ஆனால் வாழ்கிறவனுக்குத் தான் அதில் உள்ள கஷ்டமெல்லாம் தெரியும். வயதிற்கேற்ற நோவுகள், கஷ்டங்கள் இருக்கின்றன. பிறருக்கு அது தெரியாது. நான் வசவையும், வாழ்த்தையும் ஒன்றாகக் கருதக் கூடியவன் என்றாலும் என்னைப் பாராட்டியவர்களுக்கு நான் என் மனப்பூர்த்தியான நன்றியைக் கூறிக் கொள்கின்றேன்.

தோழர்களே, நம் நாட்டை எடுத்துக் கொண்டால், நம் நாட்டில் கடவுள் தொண்டு, மதத் தொண்டு,பக்தித் தொண்டு, மொழித் தொண்டு, நாட்டுத் தொண்டு, ஏழை மக்களுக்காகத் தொண்டு என்று செய்பவர்கள் பலர் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் மாறா நான் மனித சமுதாயத் தொண்டு செய்பவனாவேன். மனித சமுதாயத் தொண்டு செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்குக் கடவுள் பற்று இருக்கக்கூடாது. பற்று மட்டுமல்ல, கடவுள் நம்பிக்கையே இருக்கக் கூடாது.

கடவுள் நம்பிக்கை உள்ளவன் கடவுள் தான் எல்லாவற்றிற்கும் காரணம். உலகத்தில் எல்லா செயலுக்கும் கடவுள் தான் காரணம். அவரின்றி ஒரு சிறு துரும்பு கூட அசையாது என்கின்றான். பணக்காரனாக ஒருவன் இருக்கிறான் என்றால் கடவுள் அருளால் தான் பணக்காரனனாக இருக்கிறான் என்றும் உயர்ந்த சாதிக்காரன் - தாழ்ந்த சாதிக்காரன் இருக்கிறான் என்னும் போதும் கடவுள் அருளால் ஏற்பட்ட ஏழை - பணக்காரன் - கீழ்மேல் ஜாதி என்பதை ஒழிக்க எப்படி முற்படுவான் என்று சிந்திக்க வேணடுகிறேன்.

எனவே கடவுளை நம்புகிறவனால் உண்மையான சமுதாயத் தொண்டு செய்ய முடியாது.

எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு சமுதாயத் தொண்டு செய்கிறேன் என்றால், அது மக்களை ஏமாற்றவே தவிர, உண்மையில் சமுதாயத் தொண்டு செய்ய முடியாது. எந்தப் பற்றுமே இல்லாமல் மான - அவமானத்தைப் பற்றியும் கவலைப்படாமல் இருப்பவனால் தான் உண்மையான சமுதாயத் தொண்டு செய்ய முடியும்.

நம் சமுதாயத்திலிருக்கின்ற குறைகளை எடுத்துச் சொல்லித் திருத்த வேண்டுமென்று பாடுபடுகிறவனை ஒருத்தன் கல்லாலடிப்பான் - ஒருத்தன் செருப்பால் அடிப்பான் - ஒருத்தன் அயோக்கியன் - திருடன் என்றெல்லாம் சொல்வான். மலத்தால், சாணியால், முட்டையால் அடிப்பான். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படக் கூடாது. நான் இதைத் துவக்கும் போது என்னை மலத்தால், சாணியால், முட்டையால், செருப்பால், கல்லால் எல்லாம் அடித்திருக்கிறார்கள். கண்டபடியெல்லாம் சிந்திக்காமல், கவலைப்படாமல் இருந்தால் தான் என்னால் இத்தொண்டினைச் செய்ய முடிகிறது.


பக்தி மூலமாக எந்த ஆபாசத்தைக் கூறினாலும் நம் மக்கள் பொறுத்துக் கொள்வார்கள். சீர்த்திருத்தக் காரியத்திற்கு உண்மையை எடுத்துக் கொள்வார்கள். சீர்த்திருத்தக் காரியத்திற்கு உண்மையைச் சொன்னாலும் கோபப்படுவார்கள். நாம் எந்தச் சமுதாயத்திற்காகத் தொண்டாற்றுகின்றோமோ அந்தச் சமுதாயம் சுத்தக் காட்டுமிராண்டிச் சமுதாயமாகும். அதற்கிடையே, சமுதாயச் சீர்திருத்தத்திற்கான கருத்துக்களைக் கூறும்போது அவர்கள் எதிர்க்கின்றனர். மதத்தின் பெயரால் பார்ப்பான் மாட்டுச்சாணியும் - மூத்திரத்தையும் கரைத்துக் குடிடா என்றால் குடிக்கக் கூடிய காட்டுமிராண்டிகளாகத் தான் நம் மக்கள் இன்றைக்கும் இருக்கின்றனர்.

நம்மைப் பற்றி சொல்பவன் சமயத்திற்குத் தகுந்தது போலக் கட்சி விட்டுக் கட்சி மாறுகிறவர்கள் என்று சொல்லுவார்கள். ஆனால் அதற்கு என்ன காரணம் என்பதைப் பற்றிச் சிந்திப்பதும் கிடையாது - அதைச் சொல்வதும் கிடையாது. காங்கிரஸ்காரன் முதன்முதல் தான் இல்லையென்று சொல்லவில்லை. காங்கிரஸ்காரன் வெள்ளைக்காரனைப் போகச் சொல்லிவிட்டுப் பார்ப்பான் ஜெர்மன்காரனைக் கொண்டுவர வேண்டுமென்று பாடுபட்டான். பார்ப்பானையும், ஜெர்மன்காரனையும் விட வெள்ளைக்காரன் எத்தனையோ மடங்கு மேலானவன் என்பதோடு, நம் இழிவை ஒழிக்க அவனால் முடியும் என்பதால் மனித சமுதாத் தொண்டைப் பொறுத்து நான் அவனை ஆதரித்தேன் - அனுகூலமாக இருந்தேன்.

காங்கிரஸ்காரன் எதற்காக வெள்ளைக்காரனை வெளியேற்ற வேண்டுமென்று சொன்னான் என்றால், நம் சமுதாயத்தில் பல திருத்தங்களைச் செய்ய ஆரம்பித்தான். தன் நாட்டைப் போல இந்த நாடும் ஆகவேண்டும் என்று பாடுபட்டான். நம் மக்கள் திருத்தமடைந்தால் தங்களை மதிக்கமாட்டார்கள் என்று கருதியே காங்கிரஸ்காரனும்,பார்ப்பானும் வெள்ளைக்காரனை வெளியேற்ற வேண்டுமென்று பாடுபட்டார்களே தவிர வேறு
எதற்காகவுமல்ல.


உலகத்திலிருக்கிற கடவுள் நம்பிக்கைக்காரன் எவனும் நம் நாட்டிலிருக்கிற கடவுள் நம்பிக்கைக்காரனைப் போல ஆயிரம் கடவுள்களை வணங்குவது கிடையாது. கடவுள்களுக்குக் கல்யாணம், விழாக்கள் என்று கொண்டாடுவது கிடையாது. மனதிற்குள்ளேயே நினைத்து வணங்குவான். நாம் தான் காட்டுமிராண்டிகள் போல கடவுளுக்குப் பல உருவங்களைக் கற்பித்து அவற்றிற்குக் கோயில், குளம், சோறு, பூசை என்பதாக செய்து கொண்டிருக்கின்றோம். கடவுள் தன்மையில் தான் இப்படி என்பதில்லை.

மதத்தை எடுத்துக் கொண்டாலும் நாம் காட்டுமிராண்டித் தன்மையில் இருக்கிறோம். இன்று பூரி சங்கராச்சாரி சாதி காப்பாற்றப்பட வேண்டும் என்று சொன்னதற்கு எல்லோரும் கண்டிக்கின்றார்கள். அவர் இந்து மதத்தில் இருப்பதைத் தான் சொன்னார். இதைத் தான் காந்தியும் சொன்னார். "வெள்ளைக்காரன் வந்து சாதியைக் கெடுத்துவிட்டான். நான் சாதியைக் காப்பாற்ற வருணாசிரமதருமத்தைக் காப்பாற்றவே வெள்ளைக்காரனை வெளியேறச் சொல்கிறேன்" என்று சொன்னார். அப்படிச் சொன்ன காந்தியை மட்டும் மகாத்மா என்று சொல்கிறான். அதையே சொன்ன பூரி சங்கராச்சாரியை மட்டும் கண்டிக்கின்றான் என்றால் அர்த்தம் என்ன? என்று கேட்கின்றேன். இந்து மத்தை ஒத்துக் கொண்டு அதைப் பின்பற்றிக் கொண்டிருக்கிற எவனுக்கும் சங்கராச்சாரியைக் கண்டிக்க உரிமை இல்லை என்பதே எனது கருத்து.

100 - க்கு 90 - பேர்களாக இருக்கிற நாம் மனிதனின் உயிர் வாழ்வதற்கான எல்லா பொருளையும் - நம் உழைப்பால் செய்து கொடுக்கக் கூடிய நாம் ஏன் இந்த நாட்டில் இழிமகனாக இருக்க வேண்டும்? நம் இழிவையும், சூத்திரத் தன்மையையும் நிலைநிறுத்ததக் கூடியவை தான் இந்தக் கோயிலும், குட்டிச்சுவரும், உங்கள் நெற்றியிலே இருக்கிற சாம்பலும் - மண்ணுமாகும்.

எவனும் தான் சூத்திரனாக - இழிமகனாக இருக்கிறோம் என்பது பற்றிய கவலை சிறிதும் இல்லாமல் பார்ப்பானைப் போய்ப் பிராமணன், சாமி என்று அழைத்துக் கொண்டிருக்கின்றானே! அவனைப் போய்ப் பிராமணன் என்றால் இவன் யார்? சூத்திரன் தானே? இந்த இழிவெல்லாம் நீங்கவேண்டும், மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்பதற்காகத் தான் இந்தத் தொண்டினை நாங்கள் செய்கின்றோமே தவிர வேறு எதையும் எதிர்பார்த்து இத்தொண்டினைச் செய்யவில்லையே!

நம் மக்களின் இந்த இழிவிற்கு - சூத்திரத்தன்மைக்குக் காரணமாக இருப்பது நம் கடவுள் - மதம் சாஸ்திரம், இதிகாச புராண, தருமங்கள், இலக்கியங்கள், மொழி இவையாவுமே ஆகும் என்பதால் தான், மனித சமுதாய இழிவு நீங்க வேண்டுமென்று தொண்டாற்றக் கூடிய நாம் இவை யாவும் ஒழிக்கப்பட வேண்டுமென்று பாடுபடுகின்றோம்.

கடவுள் நம்பிக்கையுள்ள மக்கள் உலகத்தில் சுமார் 3 -இல் ஒரு பகுதியினரே ஆவார்கள். மற்ற 2 - பகுதி மக்கள் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் என்பதோடு உலகத்தில் கடவுள் நம்பிக்கை உள்ள நாடுகள் என்கின்ற நாடுகளில் எல்லாம் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் சங்கம், உண்மை விரும்பிகள் சங்கம், நாத்திகர்கள் சங்கம், சிந்தனையாளர்கள் சங்கம் என்று பல சங்கங்கள் இருப்பதோடு - பணக்காரர்களில் கடவுள் நம்பிக்கையற்றோர் சங்கம் அது போலவே பெண்களுக்குள் கடவுள் நம்பிக்கை அற்றோர்களுக்குத் தனிச் சங்கம்.

ஒவ்வொன்றிலும் பல லட்சணக்கணக்கா மக்கள் அங்கத்தினர்களாக இருக்கின்றனர். அவர்கள் நடத்தும் பத்திரிக்கைகள் பல லட்சக்கணக்கில் விற்பனையாகின்றன. அதன் காரணமாகப் பலர் பகுத்தறிவாதிகளாக கடவுள் நம்பிக்கையற்றவர்களாகின்றனர் என்பதோடு பல அதிசய அற்புத விஞ்ஞானச் சாதனைகளைச் செய்கின்றனர். அதன் பயனாக அவர்கள் இன்று சந்திரமண்டலம் வரைப் பிரயாணம் செய்கின்றனர். சந்திரனில் போய்க் குடியேற முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். நாம் மட்டும் இன்னமும் நமது காட்டுமிராண்டித் தன்மையிலேயே இருந்து கொண்டிருக்கின்றோம்.

இந்த இயக்கம் ஆரம்பிக்கிறதற்கு முன் நம் மக்களின் நிலை எவ்வாறு இருந்தது? "அடேய்" என்று அழைக்கும்படியான இழிவான வேலைகள் எல்லாம் நமக்குத்தான் இன்றைக்கும் அந்த வேலைகளை நம்மவர்கள் தான் செய்து கொண்டு வருகின்றனர். பெரும் உத்தியோகங்கள் - எஜமான் என்று அழைக்கக் கூடிய உத்தியோகங்களில் எல்லாம் பார்ப்பான் போய் உட்கார்ந்து கொண்டிருக்கின்றானே!

நம் இயக்கம் தோன்றியபின் இன்று நம்மவனும் உயர்ந்த உத்தியோகத்திற்கு வாய்ப்புக் கிடைத்தது என்பதோடு தீண்டப்படாதவன என்று ஒதுக்கித் தள்ளி வைக்கப்பட்டிருந்தவனும் உயர்ந்த உத்தியோகங்கள் பார்க்கம் படியான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. நம் மக்கள் தங்களுக்குப் பதவி உத்தியோகம் கிடைத்தால் அதையே பெருமை என்று கருதித் தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்கின்றனரே தவிர நம் சமுதாயத்திலிருநகிற இழிவு ஒழிய வேண்மென்று கருதுவது கிடையாது.


இந்த நாட்டுக்கு ஒரு பகுத்தறிவாளர் ஆட்சிவர 2000 -காந்தியாலே முடியாதே! 1000 - காமராஜராலே முடியாதே! பதினாயிரக்கண்ககான கோயில்கள், குட்டிச்சுவர்கள், பல கோடிக்கணக்கான மடையர்கள் இருக்கிற நாட்டிலே பகுத்தறிவாளர்கள் ஆட்சி வந்ததென்றால் அதற்குகக் காரணம் நம் இயக்கம். பிரச்சாரம் தானே - நம் மக்கள் இந்த அளவிற்குப் பக்குவப்பட்டிருப்பது நம் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியால் தானே!

(இயற்கையிலேயே நாம் இன்று புரட்சிகரமான காலத்தில் இருக்கிறோம். புரட்சி என்றால் சாதாரண புரட்சியல்ல! கடவுள் - மதம் - சாதி ஒழிக்கப்பட வேணடும் என்கின்ற கொள்கை உள்ளவர்கள் ஆட்சியில் இருக்கின்றோம். நம் மக்கள் இன்னும் சரியாகப் பக்குவமடையாததால் ஆட்சியாளர்கள் காரியம் செய்வதற்குப் பயப்படுகின்றனர். நம் மக்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் இருந்தால் துணிந்து பல சீர்த்திருத்தங்களளைச் செய்வார்கள்.

1000 -கோயில்களை இடித்து 4000, 5000 குழவிக்கற்களை( சாமிகளை) உடைத்து ரோட்டுக்கு ஜல்லியாகப் போட்டால் இந்த நாட்டில் பார்ப்பான் இருப்பானா? இந்தத் தொண்டிற்கு நாங்கள் மட்டும் கத்தினால் போதாது. நீங்களும் இறங்கி வர வேண்டும். அப்போது தான் நம் இழிவைப் போக்கிக் கொள்ள முடியுமே தவிர வாயால் மட்டும் சொல்லிக் கொண்டு வீட்டில் உட்கார்ந்திருந்தால் கடைசிவரை சூத்திரனாக, இழிமகனாக இருந்து சாக வேண்டியது தான்.

இன்றைக்கு நடக்கிற போராட்டங்கள் எதுவானாலும் எந்தப் பெயரைக் கொண்டவையாக இருந்தாலும், அது பார்ப்பான் வாழ்வதா- நாம் வாழ்வதா என்கின்ற பார்ப்பான் - பார்ப்பனரல்லாதார் இனப் போராட்டமேயாகும்)

இன்று இங்கு நடைபெற்ற தாலுக்கா கமிட்டிக் கூட்டத்தில், இந்த ஊரிலே ஒரு மாநாடு நடத்துவதாகத் தீர்மானித்திருக்கின்றோம். அதற்கு நீங்களெல்லாம் உங்கள் ஆதரவைத்தர வேண்டும். இந்த மாநாடு முடிந்ததும் மாநில மாநாடு ஒன்று போட்டு அதன் முடிவில் ஒரு பெரும் கிளச்சிகள் செய்தாக இருக்கின்றோம். நாங்கள் 1000 - கிளர்ச்சிகள் செய்தாலும் இந்தக் காலிப்பயல்கள் செய்கிற கிளர்ச்சி மாதிரி இருக்காது. ஒரு பைசா பொதுச் செத்துக்குச் சேதம் இருக்காது.

ஒரு போலீஸ்காரருக்கு அதனால் தொல்லை இருக்காது. காந்தி முதல் மற்ற எவன் நடத்திய கிளர்ச்சியை எடுத்துக் கொண்டாலும் அதனால் பொது மக்களுக்கு - அரசாஙகத்திற்குச் சேதம் ஏற்பட்டதாகவே இருக்கும்போது நாம் செய்யப்போகிற கிளர்ச்சி அரசியலில் பதவி உத்தியோகம் பெறுவதற்காக அல்ல. நம் சமுதாயத்திலிருக்கிற இழிவைப் போக்கிக் கொள்ளவேயாகும்.

இப்போது நம் இழிவு நிலை நிறுத்தப்படுவது கோயில்களிலேயே ஆகும். நம் கோயிலில் கர்ப்பகிருஹம் இருக்கிற இடத்திற்கு வரக்கூடாது என்கின்றான். ஏனென்றால் நீ சூத்திரன் என்கின்றான். நம் கிளர்ச்சி கர்ப்பகிருஹம் இருக்கிற இடத்திற்குச் சென்று அங்குள்ள சிலையைத் தொட நம் மக்களுக்கும் உரிமையுண்டு என்பது தான். அதற்காக நம் தோழர்கள் கர்ப்பக்கிருஹம் வரை செல்வது என்று தீர்மானித்து உள்ளே போவது என்றிருக்கின்றோம். அதற்கு உங்களின் ஆதரவைத் தர வேண்டும்.

------------------------- 06-14-1969 அன்று மன்னார்குடியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு விடுதலை 14-04-1969

0 comments: