Search This Blog

24.8.08

ஆரியர்களியற்றிய ஆசாரணைகள்

இந்த ஆரிய சிகாமணிகள் நமது தென்னாட்டில் பிரவேசித்த பிறகே, அவர்கள் நிஷ் கபடிகளாகிய திராவிடர்களுக்குப் பல ஆசாரணைகளைப் புகட்டிக் கொண்டு தாங்கள் உயர்ந்த அந்தஸ்துக்களை வகித்தவர்களாயினர். அவ்வாசாரணைகளை யறிந்த மட்டும் இங்கெடுத்து விளக்குவாம்: - அவையாவன: குழந்தை கலியாணம், உடன் கட்டையேறல், தீப்பாய்தல், துர்க்கை காளி, முனி, பிடாரி முதலிய தேவதா பூஜைகள், அஸ்வமேதயாகம், மேஷ யாகம், பவுண்டரிய யாகம் முதலிய பாகாதி கர்மங்கள், சக்தி பூஜை, நிர்வாணக் கூத்து, செடிலாடல், பிராண தோஷணிக் கிரந்தம் படித்தல், கெங்கைக்குக் குழந்தைகளை பலியிடுதல், தோடிச் சக்கரத்தில் பிராண பலி கொடுத்தல், இறந்தவனது திதியில் விதவையைப் பிராமணக் குருவுக்குச் சமர்ப்பித்தல், வேதியரது ஆலயத்துக்கு ஸ்திரீகளைத் தானியாக்குதல், குலஸ்திரீகளை நடனமாட வைத்தல், வாய்ப்பூட்டு போடல், உண்டி கட்டுதல், முதலிய ஆசாரணை களை தென்னிந்தியத் திராவிடர்களனுசரிக்க போதித்தும், போதுமான திரவியங்களைச் சம்பாதித்து வந்த ஆரியர்களது கூற்றதிகமாகி மனிதன் பிறந்து இறக்கும் வரையில் பிரம்மாண்ட வரிகளை வசூல் செய்து ஏமாற்றியசமத்காரர்களென்போம். மஹா தந்திரசாலிகளாகிய விப்பிரர்கள் இக்கலிகாலத்திலும் கொண்ட மட்டும் திராவிடர்களிடமிருந்து அபிமானிகளை விடுவிக்கப் பொருளையும், சுய காரியங்களுக்காகக் கையொப்பத் தொகைகளையும் பெற வேதியர்களே முன் வருதலைக் காண்க.

வேதியர்களுக்குள் அர்ச்சகத் தொழிலாளிகளைக் கேவல மாக்குவதினாலேயே பிரதி ஆராதனைகளை மறுக்கப்பட்டதாக விளங்குகின்றது. நிற்க, ஓர் நகருக்கு யாம் எமது பந்துமித்திரர் களுடன் சென்று ஓர் விஷ்ணு ஆலயத்திற்குப் பிரவேசித்துத் தரிசித்த போது அக்கோவில் வைணவ அர்ச்சகர் சடகோபத்தை எங்கள் சிரசுகளில் வைத்தனர். இதைக் கண்ட சில வைணவவிப் பிரர்கள் அதைத் தடுத்து பிராமணரல்லாதவர்களுக்குச் சடகோபமேற்றலாகாதென வாதாடினார்கள்.

இவ்வதிசயத்தை யாம் கவனித்து அப்பிராமணர்களை நோக்கி, ஹே வைணவ! நும் பூர்வாசாரியாது விசிஷ்டாத வைதப்படி ஜாதி வேற்றுமை களின்றியிருக்கையில் யாம் வைணவரென்று நீவிர் அறிந்திருந்தும் நும் கொள்கைக்கு மாறுபடுகின்றீர்களென யாம் புகன்றபோது, அசட்டை செய்து தம் பிராமணக் குல வதிகாரத்தை மேற்கொண்டனர். இதை வாசிக்கும் திராவிட நண்பர்களே கவனியுங்கள்.

இவ்வாறு பொது ஆலயங்களிலும் வேளாளத் திராவிடர்களை அவமதிக்கும்படியான சுதந்தரங்களை நாமே அவர்களுக்குக் கொடுத்துவிட்டு விழிக்கிறோமல்லவா? இத்தகைய விப்பிரர்களை நாம் நம்பி அவர்கள் கோரும் சுய ஆட்சிக்கு இடந்தருவ தென்றால் எவ்வாறு முடியும்? ஒருக்காலும் நாம் ஏமாறலாகாது. ஏமாந்தாலோ மனுதருமநூல் மானிடத் தன்மையைக் குறைத்து விடும். எப்போது நீதி நூலை நாம் கையாளக் கருதுகிறோமோ அப்போது ஜாதி, மத வேற்றுமை களொழிந்து! சரியான ஒற்றுமையடைய நேரிடுமென்க. ஆகவே ஆரியர்களா லியற்றிய ஆசாரணைகளை இன்றே வொழித்துத் தந்யர்களாக வேண்டும்.


------ திராவிட நேசன் - "திராவிடன்" 17.8.1917

0 comments: