Search This Blog

29.8.08

பயத்தை உதறிய மாமி!

ஓரளவு அறிவு வளர்ச்சி பெற்றுள்ள இந்தக் காலத்தில்கூட பேய் பிசாசு என்று மக்களிடத்தில் பயத்தை உண்டாக்கி வருவது போல், சோதிடர்களும் அக்காலம் முதல் இக்காலம் வரை மன்னர்களிடத்திலும் மக்களிடத்திலும் ஒரு பயத்தை ஊட்டியே வந்திருக்கின்றனர். இது வரலாற்று உண்மை!

சோதிடர்கள் மக்களிடத்திலே பயத்தை ஊட்டியே அதை நம்பும்படி செய்து வருகின்றனர்!

பெண்ணின் மூல நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது!

ஆயில்ய நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது!

கேட்டை நட்சத்திரம் கணவரின் அண்ணனுக்குக் கேடு!

விசாக நட்சத்திரம் கணவரின் தம்பிக்குக் கேடு!

உத்திர நட்சத்திரம் கணவருக்குக் கேடு!

இப்படி பயமுறுத்துகிறது சோதிடம்,


இந்தப் பயமுறுத்தலைக் கண்டு அஞ்சாமல் துணிச்சலுடன் தன் மகனுக்கு ஆயில்ய நட்சத்திரத்துப் பெண்ணை மருமகளாக்கிக் கொண்ட சம்பவத்தை 2004-ஆம் ஆண்டு பிப்ரவரி மங்கையர் மலர் இதழில் வெளியிட்டிருக்கிறார்கள். அவர் வைதீகக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். ஆனாலும், சோதிடத்தின் பயமுறுத்தலைத் தகர்த்து, தன் மகனுக்கு ஆயில்ய நட்சத்திரத்துப் பெண்ணை மணமுடித்து வைத்தார். அதனால், மாமியாருக்கு எதுவும் ஆகிவிடவில்லை! அந்தத் தம்பதிகளும் சிறப்போடு வாழ்ந்து வருகிறார்கள். இதுபற்றி ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த தன் பெண்ணை மருமகளாக ஏற்றுக் கொண்ட மாமியாரைப்பற்றி அவர் சம்பந்தியம்மா கூறும்போது, ஆயில்யம் அவரை அண்ட முடியாது!

ஜாதகப் பொருத்தம் அமைந்தவர்களுக்குக் கஷ்டமே வந்ததில்லையா? ஜாதக தோஷம் போன்ற காரணங்களால் பெண்ணை வதைக்காதீர்கள்! என்றுகூறி இருக்கிறார். ஆயில்ய நட்சத்தித்துப் பெண்ணை மருமகளாக்கிக் கொண்ட மாமியாருக்கு எந்த தீங்கும் ஏற்படவில்லை. நலமாகவே இருக்கிறார்.

இந்த உண்மைச் சம்பவத்தைப் படித்துப் பார்த்த பிறகாவது சோதிடம் பற்றிய பயத்தை நீக்கி பகுத்தறிவோடு வாழ முற்படும்படி மக்களைக் கேட்டுக் கொள்கிறோம். சோதிடத்தால் எதுவும் ஆகப் போவதில்லை என்ற துணிவு கொண்டவர்களால் சோதிடத்தை உதறித் தள்ள முடியும்.

--------------- தி. பொன்னுசாமி - நூல்: "சோதிட மறுப்பும் வானவியல் சிறப்பும்"

0 comments: