Search This Blog

13.8.08

அமர்நாத் கலவரம் - ஒரு பார்வை --- 2

தீயை அணையுங்கள்!

அமர்நாத் குகைக்கோயிலுக்கு நிலம் வழங்கப்பட்டது - அதன்பின் விலக்கிக் கொள்ளப்பட்டது என்பதை மய்யப் புள்ளியாக வைத்து, ஜம்மு- காஷ்மீர்ப் பகுதியில் மதக் கலவர நெருப்புத் தூண்டிவிடப்பட்டு, மக்களின் வாழ்வைத் துவம்சம் செய்துகொண்டிருக்கிறது. இந்து - முசுலிம் கலவரமாக வெடித்துக் கிளம்பியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கெல்லாம் யார் காரணம் என்கிற ஆராய்ச்சியில் இறங்கும் நேரமல்ல இது. எந்த விலை கொடுத்தாகினும் அந்தத் தீயை அணைக்கவேண்டும் என்பதில்தான் கட்சிகளை மறந்து அனைத்துத் தரப்பினரும் ஒருமனதாக ஈடுபடவேண்டும்.

பொறுப்பான அமைப்புகள், கட்சிகள், தலைவர்கள் என்பதற்கு அதுதான் சரியான அத்தாட்சியாக இருக்க முடியும்.

மதக்கலவரத்தைத் தூண்டிவிட சந்தர்ப்பம் கிடைக்காதா என்று காத்து நிற்கும் சக்திகள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி கலவரத்தை விசிறிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படுவதாகத் தெரிகிறது. அதனை அம்மாநில எல்லைப் பரப்பையும் தாண்டி, வேறு பகுதிகளுக்கும் கொண்டுவர முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

பா.ஜ.க.வின் பிரதமருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரு. எல்.கே. அத்வானி, எரியும் நெருப்பில் எண்ணெய்க் கொப்பறையைச் சாய்ப்பதுபோல, இந்துக்களுக்குத் தீங்கு இழைக்கப்பட்டால், அதனைப் பார்த்துக் கொண்டு பா.ஜ.க. சும்மா இருக்காது! என்று இத்தகு ஒரு தருணத்தில் சொல்வது எல்லாம் பொறுப்பான செயல்பாடா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இவர் இப்படிக் கூறினால், இன்னொரு மதக்காரர் வேறு மாதிரியாகச் சொல்லி மார்தட்டக் கூடும். அதன் கோர விளைவு மனித உயிர்களும், உடைமைகளம் நாசமாவதில்தான் போய் முடியும்.

இந்துமத வெறியனான பார்ப்பன நாதுராம் கோட்சேயால், இந்தியாவின் தந்தை என்று மதிக்கப் பெற்ற காந்தியார் அவர்களைத் துப்பாக்கியால் சுட்டுப் பசி தீர்த்துக் கொண்டபோது, தமிழ்நாட்டில் தலைவர்கள் எப்படி நடந்து காட்டினர் என்பதை இந்த நேரத்தில் எடுத்துக்காட்டுவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

இஸ்மாயில் என்ற இஸ்லாமியர்தான் காந்தியாரைக் கொன்றான் என்று நாடு முழுவதும் பரப்பப்பட்டது. பல இடங்களில் இந்து - முசுலிம் கலவரமாகக்கூட உருவானது.
கடவுளே, காந்தியாரைக் கொன்றவர் ஒரு இஸ்லாமியராக இருக்கக் கூடாது என்று இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டன் வேண்டிக் கொண்டாராம். அந்த அளவுக்குப் பிரச்சினை உக்கிரமமாக மாற்றப்பட்டது.

காந்தியாரைக் கொன்றவன் முசுலிம் அல்ல என்ற உண்மை வெளிப்பட்டது. தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்கள் வானொலியில் உரையாற்றி மக்களை அமைதி கொள்ளச் செய்தார். அந்த நேரத்தில், அவர் நினைத்திருந்தால், பார்ப்பனர்களுக்கு, அக்கிரகாரத்துக்கு எதிராக மக்களை எளிதில் தூண்டி விட்டிருக்க முடியும்.

அதுவும் பார்ப்பனர் எதிர்ப்புணர்ச்சி என்ற நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தமிழ்நாட்டில் ஒரு சிறு சைகையைக் காட்டியிருந்தால், அக்கிரகாரத்தில் புழு பூச்சிகூட எஞ்சியிருந்திருக்க முடியாது.

பொறுப்பு வாய்ந்த தலைவராக அவர் இருந்த காரணத்தால், சமுதாயப் பொறுப்பு அவர்களுக்கு இருந்த காரணத்தால், மற்ற மற்ற பிரச்சினைகளையெல்லாம் புறந்தள்ளி, சமூக அமைதிக்கும், பாதுகாப்புக்கும் உத்தரவாதம் தேவை என்ற கண்ணோட்டத்தில் பற்றி எரிந்த மதவாதத் தீயைக் குளிர வைத்தார்.


வட மாநிலங்களில், குறிப்பாக பம்பாய் போன்ற இடங்களில் அக்கிரகாரத்தில் தீ வைக்கப்பட்டது; பார்ப்பனர்கள் பல இடங்களிலும் தாக்கப்பட்டனர். ஆனால், பார்ப்பன எதிர்ப்பு உணர்வு மிகுந்த தமிழ்நாட்டில் அமைதித் தென்றல் தாண்டவமாடியது.
தமிழ்நாடு அன்று மேற்கொண்ட அந்த மனநிலையை இப்பொழுது வடநாட்டுத் தலைவர்கள் பின்பற்றக் கடமைப் பட்டுள்ளனர்.

இராணுவத்தைப் பயன்படுத்தியாவது உடனடியாக கலவரத்தைக் கட்டுப்படுத்தவேண்டும். கலவரத்துக்குக் காரண மானவர்களை கைது செய்து சிறையில் தள்ளவேண்டும். சமூக விரோதிகள் இப்பொழுது இருக்கவேண்டிய இடம் சிறைச் சாலைகள்தான்.

ஊடகங்களும் இதுபோன்ற நேரங்களில் பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும். 2008-லும் மதக் காரணங்களுக்காக மண்டையை உடைத்துக் கொள்ளுதல் காட்டு மிராண்டித்தனமாகும். மதத்தைப்பற்றி மக்கள் மறுபரிசீலனை செய்வார்களாக!

--------------------- நன்றி: "விடுதலை" தலையங்கம் 13-8-2008

0 comments: