Search This Blog

7.8.08

பெரியார் பார்வையில் இந்திய பொருளாதாரம்



பொருளாதாரம் என்கின்ற வார்த்தை நம் நாட்டில் தற்காலம் உள்ளதுபோல் முன் காலத்தில் இருந்ததாகச் சொல்ல முடியாது. முன் காலத்தில் எல்லாம் பொருளை உடைத்-தாயிருக்கவும், பணம் காசைக் கையாளவும் சிலருக்கே உரிமை இருந்தது. மற்றவர்களுக்குத் தானியம் தவிர, வேறு ஒன்றும் பெற உரிமை கிடையாது. நாட்டு வழக்கிலும் பணம், காசு கிடையாது. எல்லா வாழ்க்கையும் பண்ட மாற்றை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்தது. ஒரு பண்டத்தைக் கொடுத்து, மற்றொரு பண்டத்தை வாங்கிக் கொள்வார்கள். கூலியாட்கள், கைத்தொழில் செய்வோர், ஏவலாள் ஆகியோருக்கும் தானியமே கொடுப்-பது வழக்கம். மந்திரிகளுக்கும் அரசன் - பூமி மானியம் விடுவதே தவிர, பணமாக ஏதும் கொடுப்பதில்லை.

பெருத்த மிராசுதார்களிடம் பார்த்தாலும் தானியத்தைத்தான், பூமியில் பெரிய பெரிய குழிகள் ஆழமாக வெட்டிப் போட்டு வைத்திருப்பார்கள். பண்டமாற்றைத் தவிர, சாதாரண மக்கள் பணத்தைப் பார்ப்பது மிக்க அபூர்வமாகவே இருக்கும்.

ரூபாய், நாணயம் இவை நம் நாட்டு மொழியல்ல, சின்னப் பணம் அதாவது ரூ.1-க்கு 10 கொண்டதாக இருக்கும். விலை பேசுவதிலும், எத்தனை பணம்? என்று தான் கேட்பார்கள். செல்வமுள்ளவனையும் பணக்காரன் என்றுதான் சொல்லுகின்ற வழக்கம் இன்றும் உண்டு. அரசியல் அபராதம் முதலிய-வை-களிலும் 100 பணம் 200 பணம் என்று பணக் கணக்கில் தான் கணக்குச் சொல்லு-வார்கள். சமீப காலம் வரைகூட மலை-யாளத்தில் திருவாங்கூர், கொச்சி இராச்சியத்தில் சிவில் கோர்ட்டில், ரூபாய் என்று பிராது போடுவதில்லை. 10 ஆயிரம் ரூபாய்க்குப் பிராது போடுவதானாலும் அதைப் பணமாகப் பெருக்கி, அந்தப் பண எண்ணிக்கை-யைக் காட்டித்தான் பிராது போடும் வழக்கம் இருந்து வந்தது. ஆகவே, ரூபாய் என்பதும், பவுன் என்பதும் வெளிநாட்டு நாணயங்கள். அவை நம் நாட்டிலே புழங்கக்கூடிய நிலை ஏற்பட்டதே, பொருளாதார நிலையில் நம் நாடு முன்னையைவிடச் சற்று உயர்வடைந்தது என்பதைக் காட்ட அறிகுறியாகும். எனவே, பொதுவாகப் பார்த்தால், பொருளாதாரம் நம் நாட்டில் குறைவு என்று நான் சொல்ல மாட்டேன். மற்ற நாட்டைவிட இந்த நாடு பொருளாதாரத்தில் குறைந்ததல்ல. இந்தியாவை நம்பி அநேக நாடுகள் தங்கள் வாழ்வை நிச்சயித்துக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவின் பொருளாதாரத்தில் நாட்டமில்லையானால் வெள்ளைக்காரனுக்கு இங்கு வேலையில்லை. இதுபோலவே இதற்குமுன் வெளிநாட்டிலிருந்து இந்த நாட்டுக்கு வந்த அரசர்களுக்கும் அவர்களுக்கு முன் வந்த ஆரியர்-களுக்கும் இந்த நாட்டில் வேலையில்லை.

சாமி, பூஜை, உற்சவம், புண்ணியம், யாத்திரை ஆகியவைகளின் பெயரால் தனித் தனிச் செலவும், அவற்றிற்காக நடைபெறும் பொது ஏற்பாட்டுச் செலவும், கணக்குப் பார்த்தால் மனிதனின் மொத்த வரும்படியில் ஒரு குறிப்பிட்ட பாகம் வீணாவதைக் காணலாம். மற்றும் மனிதன் வாழ்க்கையில் பிரவேசிக்கும்போதே பெரும்பான்மையோர் அவர்களது கல்வி, கலியாணம் முதலியவைகளால் ஏற்பட்ட கடனின் பேரிலேயே வாழ்க்கையைத் தொடங்க வேண்டியிருக்கிறது. இவைகள் எல்லாம் சேர்ந்து அவசியமான காரியங்களுக்குப் பொருள் இல்லாமல் கஷ்டப்படும்படி செய்து விடுவதுடன், சதா தரித்திரர்களாகவும், கடன்காரர்களாகவும் இருக்க வேண்டியதாய் இருக்கின்றது. இவை மாத்திரமல்லாமல், நாட்டின் பொருளாதார நிலையை விருத்தி செய்ய அவசியமான பொதுத் தொழிற்சாலைகள், இயந்திர சாலைகள் முதலியவைகள் ஏற்பாடு செய்வதற்கும் மார்க்கமில்லாமல் பொருட்களை எல்லாம் மேற்கண்ட சடங்கு-களும், வாழ்க்கை முறைகளும் கவர்ந்து கொள்வதோடு கோவில் கட்டுதல், சாமிக்கு நகை, வாகனம் முதலியவைகள் செய்து வைத்தல், மற்றும் உற்சவம் பூசை ஆகியவைகளுக்குப் பண்டு, பூமிகள் முதலிய சொத்துகள் ஒதுக்கி வைத்தல் ஆகிய காரியங்-கள் பெரும்பெரும் தொகைகளைக் கவர்ந்து கொள்ளுகின்றன. ஆகவே, இந்த மாதிரியாக-வெல்லாம், எல்லாப் பொருள்களும் வீணாகிக் கொண்டிருக்கையில் இந்த நாடு எந்தக் காலத்தில்தான் - எந்த வகையில் தான் பொருளாதாரத்தில் சீர் அடைய முடியும்? நம் நாட்டுப் பொருளாதாரக் கஷ்டத்திற்கு மற்றொரு காரணத்தையும் கவனியுங்கள். நம்முடைய வாழ்க்கைத் தன்மையை, மேல்நாடுகளைப் பார்த்து - நாளுக்கு நாள் செலவை அதிகரித்து வருகின்றோம்; வசதிகளை அதிகப்படுத்திக் கொள்ளுகின்றோம். முன்னைவிட அதிக ஆடம்பரங்களை விரும்புகின்றோம். இவை-யெல்லாம் நமக்குத் தகாதென்றோ, குற்ற-மென்றோ சொல்லவில்லை. ஆனால், மேல்-நாட்டார் எப்படிப் பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டே தமது வாழ்வின் சுக போகத்தையும் உயர்த்திக் கொள்கிறார்களோ, அதுபோலவே நாமும் பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டு, வாழ்க்கைத் தன்மையின் அவசியத்திற்கேற்ற வருவாய்க்கு வகை செய்து கொண்டுதானே அதில் பிரவேசிக்க வேண்டும்? அதுவும் இல்லாமல், இதுவும் இல்லாமல் வெறும் மனப்பால் குடிப்பதில் என்ன பயன்? மேல் நாட்டான் குறைந்த நேரத்தில் அதிக வேலை செய்து பன்மடங்கு இலாபம் அடைகிறான். அதனால் அவர்கள் சுகமனுபவிக்க மார்க்கம் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆகவே, இவ்வளவு உயர்ந்த பொருளாதார நிலையுடைய இந்திய நாடு - இந்த நாட்டுப் பெரும்பான்மையான மக்கள் வயிறார உண்ணவும், இடுப்பார உடுக்கவும், மானத்தோடு பிழைக்கவும் முடியாதபடி வேறு பல காரியங்கள் கொடுமைப்படுத்துகின்றன. அவைகளில் முக்கியமானவை மதமும் கடவுளும் அடுத்த ஜென்மமுமேயாகும். மனிதன் எவ்வளவு சம்பாதித்தாலும், அநேகமாய் எல்லாவற்றையும் மேற்கண்ட மூன்றுமே அபகரித்துக் கொள்ளு-கின்றன. அதிலும் உலகத்தில் வேறு எப்பாகத்திலும் காண முடியாத மாதிரி இந்த நாட்டில் இம்மூன்றினாலும் பிழைப்பதற்கென்றே - பிறவியை ஆதாரமாகக் கொண்டு சில வகுப்புகள் ஏற்பட்டு, அந்த நிலைகளைக் காப்பாற்றிக் கொண்டு பாடுபடாமல் வயிறு வளர்ப்பதோடு சகல போக்கியங்களையும் தங்களுக்கே உரிமையாக்கிக் கொண்டதால், இந்த உலகம் உள்ள வரை இந்தியாவின் பொருளாதாரம் இப்படியே இருக்கும்படியாக ஆகிவிட்டது. அது மாத்திரமல்லாமல், இந்த நாட்டில் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இருக்கும் முறையும், மிராசுதாரனுக்கும் குடியானவனுக்கும் இருக்கும் முறையும், படித்தவனுக்கும் படிக்காதவனுக்கும் இருக்கும் முறையும், மேல்ஜாதிக்காரனுக்கும் கீழ் ஜாதிக்காரனுக்கும் இருக்கும் முறையும் பார்த்தால் இந்த நாட்டு மக்களில் 100க்கு 90 பேர்களுடைய பொருளாதார நிலை இன்றைய நிலையைவிடக் கடுகளவுகூட மாறி முன்னேற்றமடைய முடியவே முடியாது என்பது உறுதி.

நமது பொருளாதாரக் கஷ்டமெல்லாம்- முதலாவது அனாவசியச் செலவுகளுக்கும் அவற்றிற்கும் அதிகச் செலவுகளுமேயாகும். 100-க்கு 90 பேர்களுடைய சம்பாதனைகள் அனாவசியமானவைகளுக்கும், குருட்டுப் பழக்கம், மூடநம்பிக்கையானவைகளுக்கும், சோம்பேறியாய் வாழ்கின்றவர்களின் சுக போகத்திற்கும் செலவு செய்யப்படுவதனாலேயே வீணாகி விடுகின்றன.

இரண்டாவது, சுலபத்தில் ஒரே பக்கத்தில் பொருள்களெல்லாம் போய்ச் சேரும் படியாகவும் விடுகின்றன.

மூன்றாவதாக, மனிதனுக்கு உள்ள நேரமும் சக்தியும் குறைந்த வரும்படிக்கே செலவிடும்-படியான முறைகளே இங்கு வெகு காலமாக இருந்து வருகின்றன. அதாவது, புத்தியைச் செலவழித்துக் குறைந்த நேரத்தில் அதிகமான வேலைகள் நடைபெறவும், அதனால் அதிக சம்பாதனை அடையும் மார்க்கம் தேடவுமான துறையானது அடியோடு அடைபட்டுப் போய்விட்டது. இத்தியாதி காரணங்களே இந்தியாவின் பொருளாதாரக் குறைவிற்குக் காரணமாகும்.

------------- தந்தைபெரியார் - களக்காட்டில், 27.12.1930-இல் சொற்பொழிவு, 'குடிஅரசு' 18.1.1931

0 comments: