Search This Blog
6.8.08
சிவன் - விஷ்ணு -பிரம்மா
நமது கடவுள்கள்!
சிவன்.
நமது கடவுள்களில் முதலாவது கடவுள் என்பதாக சிவனைக் குறிப்பிடுகிறார்கள். பொதுவாகவே நமது கடவுள்களின் காலம் சிவனைப் பொறுத்தவரை 3000 – ஆண்டகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்றாலும் "முதல் கடவுளாக" ஏற்படுத்திக் கொண்ட சிவனை அக்காலத்திற்கு ஏற்ற ஒரு காட்டுமிராண்டி மனிதனாகத்தான் அக்காலத்தவர்கள் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள். காட்டுமிராண்டி மனிதனாகவே கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது,சிவன் காட்டில் உள்ளவன், அவனது உடை ஒரு மிருகத்தின் (புலி) தோல், அவனுக்குக் காட்டான் போன்ற தாடியும், தலை சடை மயிருமாகும். தலையில் வைக்கும் பூ காட்டுப்பூவான கொன்றைப் பூ, எருக்கம் பூவாகும். கைகளில் ஒரு கையில் மான் குட்டியும், மற்றொரு கையில் மழுவுமாகும். கழுத்தில் மாலையாகப் போட்டுக் கொண்டவை இடுகாட்டில் கிடக்கும் தலை மண்டை ஒடுகளாகும். அவனுடைய உணவு காட்டு மிருகங்களும் காட்டுப் பண்டங்களுமாகும். மலைக்காட்டில் வசிக்கின்றவனைப் போல் கற்பித்ததால் அவன் தலையிலிருந்து ஒழுகும் தண்ணீர் (கங்கை) வெள்ளம் ஆகும். வானத்தில் இருக்கும் சந்திரன் இவன் தலையில் காணப்படுவதாகும். இவனது மனைவியும் கழுத்தில் மண்டை ஓடும் கையில் கபாலமும் பயங்கரமான உருவமும் கொண்டவள் (துர்க்கை) ஆகும். இவனது வாகனம் காளை மாடாகும். இவன் பிள்ளையும் யானையுடன் புணர்ந்து பெற்ற யானைத்தலை கொண்ட கணபதியுமாகும். இவனது விளையாட்டு என்பது பேயோடு தாண்டவமாடும் பேயாட்டமாகும். இவன் தொழில் பிச்சை எடுப்பதும் கொலைத் தொழிலும் (சம்மாரம்) ஆகும். இவன் மனைவியும் அதே தொழிலைக் கொண்டவள் என்பதோடு, மனித மாமிசம் உண்டவள் ஆகும்.இவனுக்கு அறிவும் மிகக் குறைவேயாகும். அதாவது பல சமயங்களில் விஷ்ணுவின் உதவியால் பிழைத்திருக்கிறான். இவைகளைக் குறிப்பிடுவதின் காரணம் என்னவென்றால் மனிதன் கடவுளைக் கற்பித்தது காட்டுமிராண்டி போல காட்டுமிராண்டிப் புத்தி கொண்டு என்பதைக் காட்டுவதற்கே ஆகும்.
விஷ்ணு
மகாவிஷ்ணு என்று அழைக்கப்படும் கடவுள் பற்றி சிந்திப்போமானால், இவன் (விஷ்ணு) மனித சமூதாயத்தில் சிறிது நாகரீகம் ஏற்பட்ட பிறகு கற்பித்துக் கொண்ட கடவுளாகும். அதிலும் பாரதகால விஷ்ணுவுக்கும், இராமாயண கால விஷ்ணுவுக்கும் அதிக பேதமுண்டு. அதாவது பாரதகாலம் இராமாயண காலத்தைவிட முந்திய காலமாகும். பாரதகாலத்தில் கற்பு என்பது பழக்கத்தில் முக்கியத்துவம் பெற்று இருக்கவில்லை.இந்த விஷ்ணுவின் உற்பத்திக்கு ஒரு குறிப்பிட்ட தன்மையோ, காலமோ கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், நடை, உடை, பாவனைகளில் சிறிது நாகரீகம் காணப்படுகின்றது. விஷ்ணு என்னும் கடவுள் நகரத்திற்குள் நகர வாழ்வோடு, ஆடம்பரமான தன்மையோடு கற்பிக்கப்பட்டிருக்கிறதுடன், சிவன் கற்பிதம் போல அவ்வளவு முட்டாள்தனம் கற்பிக்காமல் விஷ்ணுவை சிறிது அறிவாளியாகவும், தந்திரசாலியாகவும் கற்பிக்கப்பட்டிருக்கிறது. சிவனை எடுத்துக் கொண்டால் அவன் பிள்ளைகள் கணபதி, கந்தன் என்பவைபோல் விஷ்ணுவை எடுத்துக் கொண்டால் அவனது அவதாரங்களைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த அவதாரங்கள் ஒழுங்காக கற்பிக்கப்பட்டதாகச் சொல்ல முடியாது. அதாவது அவதாரம் பத்து எடுத்ததாகச் சொல்லி ஒன்பது அவதாரங்கள் தான் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. அந்த ஒன்பதும் ஆரிய – திராவிடப் போராட்டங்களையே கருத்தில் கொண்டு கற்பிக்கப்பட்டிருக்கின்றன.என்றாலும் அவற்றில் இரண்டு அவதாரங்களைத்தான் முக்கியப்படுத்தி முக்கியமான கடவுளாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றன.
அதாவது சிவன் மூலக்கடவுளாகவும், அவன் பிள்ளைகள் கணபதி, கந்தன் முக்கிய கடவுள்களாகவும் நடராஜன், சோமசுந்தரம், அண்ணாமலை, ராமனாதன் முதலியவை உபகடவுள்களாகவும் கற்பித்துக் கொண்டனர்.அதுபோலவே, வைணவர்களும் விஷ்ணு என்பதை மூலக்கடவுளாகவும் கிருஷ்ணன், இராமன் என்பதை – அவதாரங்களில் இரண்டை மாத்திரம் அதாவது கிருஷ்ணன், ராமன் என்பவற்றை முக்கிய கடவுள்களாகவும் ஸ்ரீரெங்கநாதர் வெங்கடாஜலபதி, வரதராஜன் முதலியவற்றை உபகடவுள்களாகவும் கற்பித்துக் கொண்டார்கள். இவையெல்லாம் நல்ல நாகரீகம் ஏற்பட்ட காலத்தில் உண்டாக்கிச் சொல்லப்பட்டவை என்றாலும் இவற்றில் கூறப்படும் கதைகள் மிகமிகக் காட்டுமிராண்டித்தனமான முட்டாள்தனம் கொண்டவையே.
பிரம்மா
மூன்றாவதான பிரம்மா என்னும் கடவுள் பயனற்ற – பிரபலமற்ற கற்பனைக் கடவுளேயாகும். அதற்கு எந்தவித முக்கியத்துவமும் கிடையாது. பிரம்மாவை சிவன் கற்பித்தான், பிரம்மாவை விஷ்ணு கற்பித்தான், சிவன் விஷ்ணுவை, பிரம்மாவைப் பிறப்பித்தான் என்பது போன்ற முழுமுட்டாள்தனமான கட்டுக்கதைகள் ஏராளம் உண்டு. இவர்களது மனைவிமார்கள் பற்றி அசிங்க ஆபாசக் கதைகள் ஏராளம் உண்டு.இவை தவிர சிறு தெய்வங்கள் என்னும் பேரால் கற்பிக்கப்பட்ட கடவுள்கள் ஏராளம் உண்டு. இந்தக் கடவுள்களால் என்ன பயன் என்று பார்த்தால் அறிவாளிகளுக்கு ஒரு விஷயம்தான் தோன்றும். அதாவது உலகில் கீழ்த்தரமான காட்டுமிராண்டி மக்களும், அயோக்கியர்களும், ஏராளமாய் இருக்கிறார்கள் என்று மற்ற நாட்டு மக்கள் தாராளமாகப் பேசிக் கொள்ளக்கூடிய தன்மை ஏற்படத்தான் பயன்படும்.
--------------- 07-09-1973 "விடுதலை" நாளிதழில் தந்தை பெரியார் அவர்களால் எழுதிய தலையங்கம். நூல்: "பெரியார் களஞ்சியம்" தொகுதி - 2 : பக்கம் 116 -119
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
periyar or dravidar kalagam can make any comments on cristianity or on muslim(allah) . you can't. because hindus are showing kindness to even idiots,as well as 0 minded people. IF YOU PEOPLE DARE ENOUGH THEN COMMENT CRISTIANITY AND MUSLIMS. WITHOUT KNOWING THE BASICS OF THE DIVINE TRUTH IN HINDUSIM YOU PEOPLE ARE NONE BUT POLITICIANS TO MAKE BENFIT FROM HINDUSIM
Post a Comment