Search This Blog
1.8.08
பள்ளி வாசலுக்குச் சென்று தொழுவதும்,சர்ச்சுக்குப் போய் மண்டியிடுவதும் எதற்காக?
பிறக்காத கடவுள்களுக்குப் பிறந்த நாள்!
எனக்கு இங்கு பிறந்தநாள் விழாக் கொண்டாடுகிறீர்கள். உண்மையிலேயே முதன் முதலாக பிறந்தநாள் விழாக் கொண்டாட ஆரம்பித்தது கடவுள்களுக்குத்தான். உண்மையிலேயே கடவுள்கள் அப்படிப் பிறந்தார்களா, அதற்கு ஆதாரம் உண்டா என்றால் இல்லை. வெறும் பொய்யை அடிப்படையாகக் கொண்டே கடவுள்களுக்குப் பிறந்தநாள் விழாக் கொண்டாடினார்கள்.
விநாயக சதுர்த்தி என்றும், இராமநவமி என்றும் கொண்டாடுகிறார்கள். இந்த நாட்களுக்கு அரசாங்கம் வேறு விடுமுறை அளிப்பது இன்னும் வெட்கக்கேடானது.அரசாங்கம் பாமர மக்களின் ஒட்டுகளை நம்ப வேண்டிய அரசாங்கமானதால் இவற்றில் எல்லாம் கைவைக்க யோசிக்கிறார்கள்.இந்தக் கடவுள்களுக்குப் பிறந்தநாள் விழாக்கள் இன்று நேற்றல்ல, சேர – சோழ – பாண்டியர்கள் காலத்திலிருந்தே கொண்டாடி வருகிறார்கள். இந்த ராஜாக்கள் என்பவர்கள் அத்தனைப் பேரும் அசல் மடையர்கள். பார்ப்பான் எப்படிச் சொல்லுகிறானோ அப்படியே கண்ணை மூடிக்கொண்டு ஆட்சி செய்வதுதான் அவர்கள் வேலை.
அரசர்கள் வேலை எல்லாம் கோயில் கட்டுவது குளம் வெட்டுவது மனுதர்மத்தைக் காப்பாற்றுவது இவைகள் தான்.மற்ற வேலைகளை எல்லாம் பார்ப்பான் பார்த்துக் கொள்வான். நாடுடைய ராஜாக்கள் யோக்கியதை எப்படி இருந்தது என்பதற்கு உதாரணம் நமது நாடகங்களில் பார்க்கலாமே." மந்திரி, மாதம் மும்மாரி பொழிந்ததா?" என்று மந்திரியைக் கேட்டுத்தான் மழை பொழிந்ததைக் கூட அறிந்து கொண்டான்."மக்கள் எல்லாம் வர்ணாசிரம முறைப்படி வாழ்கிறார்களா?" என்று அடுத்த கேள்வியைக் கேட்டுத் தெரிந்து கொள்வான். இவைதான் நமது முன்னோர்களாகிய அரசர்களின் வேலையாக இருந்து வந்தது. அரசன் அப்படி இருந்ததாலே குடிகளும் மத விஷயத்தில் அப்படியே ஊறிப் போய்விட்டார்கள்.
நமது இயக்கம் இந்த நாட்டில் தோன்றிய காலம் வரை, ஆட்சியிலிருந்து மக்கள் வாழ்வுவரை அத்துணையும் அப்படியே மத, கடவுள் நம்பிக்கைப்படிதான் இருந்து வந்தது. இன்றைக்குத்தான் நமது இயக்கத்தின் தொண்டு காரணமாக நிலைமைகள் திருந்திவருகின்றன. நம் நாட்டுக்கோட்டைமார்கள் எல்லாம் அவர்களுடைய சொத்துக்களை அழித்தது எல்லாம் இந்தக் கோயில், மதக் காரியங்களுக்குக்காகத்தான். அவற்றால் பலன் அடைந்தவன் எல்லாம் இந்தப் பார்ப்பனர்கள் தான். இப்போது தான் நாம் போட்ட கூப்பாட்டின் காரணமாகத் திருத்தி வருகிறார்கள். அந்த இனத்தில் ராஜா அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் தான் அதற்கு விதிவிலக்கு. அவர் மட்டும் தான் கல்விக் காரியத்திற்காக சொத்துக்களை ஏராளமாகச் செலவிட்டார்.மக்களிடத்தில் கல்வி மீதும், பகுத்தறிவு மீதும் ஆர்வம் உண்டாகுக்கும் பணியில் ஈடுபட்டதே எங்கள் இயக்கம் தானே!ஆரம்பத்தில் எங்கள் தொண்டுக்குக் கிடைத்த பரிசு எல்லாம் செருப்பு வீச்சுத்தான். அவற்றை எல்லாம் மீறித்தான் பொதுத்தொண்டு செய்து வந்தோம்.
நீங்கள் கேட்கலாம், கடவுள் இருக்கிறது என்பவர்களை எல்லாம் கடுமையாகப் பேசுகின்றீர்களே, இது சரியா என்று கேட்கலாம்! நியாயம்தான். அதே நேரத்தில், உங்கள் புராணங்களில் கடவுள் இல்லை என்று சொல்லுபவர்களை எவ்வளவு கேவலமாக - இழிவாக எழுதி வைத்திருக்கிறார்கள். கடவுள் இல்லை என்பவன் மனைவியை எல்லாம் கற்பழிக்க வேண்டும் தலையை வெட்ட வேண்டும் என்று எல்லாம் எழுதி வைத்துள்ளார்களே! அதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?கடவுள் இருக்கிறது என்பவனைத் தான் கேட்கின்றேன். கடவுள் இருக்கிறது என்று கருதுகிறவன் எல்லாம் மற்றவன் சொல்லி நம்புகிறானே தவிர, அவனுக்கே – அவன் சொந்தப்புத்திக்குப் பட்டு ஏற்றுக் கொண்டு இருக்கிறானா? கடவுளுக்கு ஏன் இவ்வளவு கோயில்கள், உருவங்கள்? கடவுள் அன்பே உருவானவன் என்கிறான். அவன் கையில் ஏன் அரிவாள், கொடுவாள் ஈட்டி எல்லாம்? இவை எல்லாம் கொலைக்காரன் கையில் இருக்க வேண்டிய ஆயுதங்கள் அல்லவா? உருவமே இல்லாத கடவுளுக்குப் பொண்டாட்டி ஏன்? வைப்பாட்டி ஏன்? வருஷா வருஷம் கலியாணம் ஏன்? போன வருடம் பண்ணின கல்யாணம் என்ன ஆச்சு? எவன் அவளை அடித்துக் கொண்டு போனான் என்று பக்தன் சிந்திக்க வேண்டாமா? இவற்றையெல்லாம் நம்புவதால் யாருக்கு என்ன பிரயோசனம்? மனித சமூதாயத்திற்கு என்ன லாபம்? பார்ப்பான் இடுப்பில் காசு சேருவதுதான் மிச்சம். மற்ற நாட்டுக்காரன் முயற்சி எல்லாம் சந்திர மண்டலத்துக்குப் பிரயாணம் செய்கிறான். இவன் என்னடா என்றால் சாமி என்கிறான், அவனுக்கு வைப்பாட்டி என்கிறான், திதி என்கிறான். பார்ப்பான் பஞ்சகவ்யம் என்று கொடுக்கிற மாட்டு மூத்திரத்தையும் சாணியையும் கைநீட்டி வாங்கிக் குடிக்கிறான். பக்தியின் பேரில் மாட்டுச் சாணி என்ன, மனித மலத்தைக் கூடக் குடிக்கத் தயாராக இருக்கிறான்.படிக்காதவன் மட்டுமல்ல, படித்தவனே மதக்கிறுக்கு பிடித்தவனாகத் தானே இருக்கிறான். இந்தக் கல்லூரிகள் எல்லாம் இருப்பதை விட இழுத்து மூடினால் கூட தேவலாம் போலிருக்கிறதே, எம்.ஏ. படித்தவன் கூட கோயில், குளம் என்று குழவிக்கல்லில் முட்டிக் கொள்கிறானே! இதுதான் படித்ததற்கு அழகா? குழவிக்கல்லில் மூட்டிக் கொள்வதற்கு பி.ஏ., எம்.ஏ. தேவையா? பகுத்தறிவைக் கொடுக்காத கல்வி இருப்பதை விட இல்லாமல் இருப்பதே நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது.
இந்தப் படிப்பு இன்றைக்கு எவ்வளவு தூரம் கொண்டு போய் விட்டிருக்கிறது என்றால் நெருப்பு வைப்பது, காலித்தனம் செய்வது என்பதில் கொண்டு போய் விட்டிருக்கிறது.இத்தகைய வெற்றுப் படிப்பை விட தொழிற்படிப்பு தேவலாம் என்று தோன்றுகிறது.இன்றைய தினம் நம் மக்கள் ஏராளமாகப் படித்திருக்கிறார்கள். இந்த வளர்ச்சிக்குப் பாடுபட்டது நாங்களா, இல்லை பார்ப்பனர்களா? சமீபத்தில் இறந்து போனாரே ராஜாஜி, அவர் செய்த தொண்டு எல்லாம் பள்ளிக் கூடத்தை இழுத்து மூடியதுதானே! நாங்கள் தானே எதிர்த்தோம். ராஜாஜியை அரசியலிலிந்து விரட்டியதே நாங்கள் தானே! எதற்காக விரட்டினோம்? நம் மக்கள் கல்வியில் கையை வைக்கிறாரே என்பதால் தானே.அப்படி வளர்ந்த கல்வி அறிவு வளர்ச்சிக்குப் பயன் படவில்லையென்றால் வேதனையாகத் தானே இருக்கிறது.
கல்வி என்பது அறிவு வளர்ச்சியைத் தூண்டுவதற்காகத் தானே இருக்க வேண்டும்! அதை விட்டுவிட்டு கடவுள் என்றால் மதம் என்றால் அப்படியே நம்புவது என்றால் நமக்கு எதற்குக் கல்வி, அறிவு எல்லாம்? அப்படித்தான் மான உணர்ச்சியோடு, அறிவு உணர்ச்சியோடு எந்தக் கடவுளைத்தான் உண்டு பண்ணினான்? காட்டுமிராண்டித்தனமான – அசிங்கமான கற்பனைகளைத்தானே கடவுள்களாக உருவாக்கி எழுதி வைத்திருக்கிறான்!
இந்த இராமனையே தான் எடுத்துக் கொள்ளுங்களேன். அவன் அவனுடைய அப்பனுக்கே பிறந்தவன் இல்லையே. பந்தயம் கட்டிக் கேட்கிறேன். மறுப்பு இருந்தால் சொல்லட்டுமே! ஆபாசம் அறிவுக்குப் பொருத்தமற்ற தன்மை - இவைகள் தானே நமது கடவுள்களும், புராணங்களும் இவற்றை எடுத்துச் சொல்லும் எங்களை வெறுத்தால் போதுமா? மனிதன் எப்படி அயோக்கியன் ஆனான் என்றால் இந்தக் கடவுள், மதக் காரணங்களால் தான். சர்ச்சுக்குப் போய் மண்டியிடுவதும், பள்ளி வாசலுக்குச் சென்று தொழுவதும், கோயிலுக்குச் சென்று தோப்புக்கரணம் போடுவதும் எதற்காக? செய்த பாவங்களை மேற்கண்ட காரியங்களால் கடவுள் மன்னிப்பாரென்றால் பாவம் செய்ய யார் தான் பயப்படுவார்கள்?அவனின்றிதான் ஒரணுவும் அசையாதே – அப்படி இருக்கும் போது மனிதனாக எப்படிப் பாவங்களை செய்ய முடியும்? அப்படிப் பாவங்கள் செய்தால் கடவுளும் அங்கு சம்மந்தப்பட்டிருந்தால் தானே முடியும்?துலக்கனாக இருந்தாலும் சரி, கிருஸ்தவனாக இருந்தாலும் சரி, இந்துவாக இருந்தாலும் சரி கடவுள் காட்டுமிராண்டி விஷயத்தில் எல்லோரும் ஒன்றுதானே!
மக்களுக்கு நல்ல உணர்வு ஏற்பட்டு ஆளுக்குக் கையில் ஒரு கடப்பாறையை எடுத்துக் கொண்டு, இருக்கிற கோயிலை எல்லாம் - குழவிக்கல்லை எல்லாம் இடித்துத் தள்ளுகிற காலம் வந்தால் தானே நாடு உருப்பட முடியும்.
'சாமி' என்று சொன்னால் வாயைக் கழுவவேண்டும். மதப் புரோகிதன் என்றால் அவனைப் பார்த்துப் பரிகசிக்க வேண்டும். அத்தகைய காலம் கனியும் போது தான் மனிதன் முழுமனிதனாக வளர்ந்து இருக்கிறான் என்று அர்த்தம்.இந்தக் குழந்தைகளுக்கு எல்லாம் சாமி என்றால் இன்னாதென்று தெரியாமல் வளர்க்க வேண்டும். அப்படியே சொன்னாலும் சாமி என்றால் காரித் துப்பப் பழக்க வேண்டும். அப்போது தான் வருங்கால சமூதாயமாவது உருப்படும்.
----------------10-01-1973 அன்று அண்ணாமலை நகரில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையில் ஒரு பகுதி –"விடுதலை" – 20-01-1973. பெரியார் களஞ்சியம் தொகுதி: 2…. பக்கம்:93-97
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment