Search This Blog

1.8.08

இராமாயணம் ஒழுக்கத்தைப் போதிக்கிறதா?


இதிகாசங்களும், ஒழுக்கமும்!

இதிகாசங்களில் சிறந்தவையாக இராமாயணமும், பாரதமும் விளக்கப்படுகின்றன.இவை பக்தியை அடிப்படையாய்க் கொண்டவையா? அல்லது மனிதன் நடந்து கொள்ள வேண்டிய நடத்தைகளை, ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டவையா? என்று சொல்ல முடியாத தன்மையில் - இரண்டிற்கும் பயன்படாத தன்மையில் தான் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இவ்விரண்டு நூல்களில் எது முந்தியது? எது பிந்தியது? என்பது விவாதத்திற்குரியதாகவே இருந்து வருகிறது. (Evolution Theory) எவாலுஷன் தியரி என்னும் வளர்ச்சிக் கொள்கைப்படி பார்ப்போமானால், பாரதக் கதை முந்தியதாகவும், இராமாயணக் கதை பிந்தியதாகவும் தான் சொல்லி ஆக வேண்டும்.

ஆனால் எந்தக் காரணத்தாலோ இராமாயணக் கதை முந்திய நடத்தையாகவும், பாரதக் கதை பிந்திய நடத்தையாகவும் புனையப்பட்டு விட்டது.

இந்தக் கட்டுரையில் அதைப்பற்றிய விவாதத்தை ஒதுக்கி வைத்து விட்டு, அந்தக் கதைகளால் ஏற்படும் பயன் என்ன என்பதைப்பற்றி ஆராயலாம் என்றே கருதி இதை எழுதுகிறேன்.

இதை வலியுறுத்த விஷ்ணுவுக்கு- விஷ்ணு மனிதனாகப் பல சாபங்கள் பல சம்பவங்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அச்சம்பவங்கள் யாவும் ஒழுக்கம் அற்றவையாகவே கற்பிக்கப்பட்டிருக்கின்றன. ஆதலால் விஷ்ணுவுக்குக் கடவுள் தன்மையோ, இராமனுக்கு மனிதத் தன்மையோ இராமாயணத்தில் கற்பிக்கப்படவில்லை என்று உறுதியாய்க் கூறலாம். எப்படியெனில் விஷ்ணு மனிதனாகப் பிறப்பதற்கு புராணங்களில் பல காரணங்கள் சொல்ல்பட்டிருக்கின்றன.

அவைகளில்,

ஒன்று: விஷ்ணு ஒரு கற்புள்ள அசுரப் பெண்ணைக் கற்பழித்து விட்டதால் அந்தப் பெண்ணின் சாபத்தால் மனிதாகப் பிறந்தான். (இது கந்தப்புராணம் தக்க காண்டத்தில் உள்ளது)

மற்றொன்று: விஷ்ணு தன் மனைவியுடன் ஒரு பிரதோஷ வேளையில் சுகித்துக் கொண்டிருக்கும் போது ( புணர்ந்து கொண்டிருக்கும் போது) அற்புதர்க்கன் என்னும் சிவகணங்களின் தலைவன் அங்கு சென்று, என்ன நீ இப்படி செய்கிறாய் என்று கேட்டான். அதற்கு விஷ்ணு நீ யாரடா இப்படிக் கேட்பதற்கு? என்றான். இதை அந்த சிவகணத்தலைவன் நந்தியிடம் தெரிவித்தான். நந்தி உடனே விஷ்ணுவுக்கு, பூமியில் பிறந்து மனைவியைப் பிரிந்து தவிக்கும்படி சாபம் கொடுத்தான் (இது 'சிவ ரகசிய'த்தில் இருக்கிறது)

மற்றொன்று: இதுபோலவே மாலை நேரத்தில் விஷ்ணு தன் மனைவியைப் புணர்ந்து கொண்டிருப்பதைப்பார்த்த பிருகு முனிவர் மேலும் சென்ற போது விஷ்ணு நீங்காமலும் முனிவரை வரவேற்காமலும் இருந்ததால் பிருகு முனிவர் சாபமிட்டார். (இதுவும் 'சிவ ரகசிய'த்தில் இருக்கிறது)

மற்றொன்று
: ஒரு முனிவன் மனைவியை விஷ்ணு கொன்று விட்டான். அதனால் அந்த முனிவன் விஷ்ணுவுக்கு (ராமன்) தன் மனைவியை இழந்து வருந்தும்படி சாபமிட்டான். (இது இராமாயணம் உத்தரகாண்டத்திலும், ஸ்கந்த புராணம் உபதேசகாண்டத்திலும் இருக்கிறது) இந்த சாபங்கள் பலவிதமாகும். தேவர்களுக்காக அதைப் பயன்படுத்திக் கொண்டு மனிதனாகப் பிறந்தார் என்பது இராமாவதாரக் கருத்து.

இந்தப் பிறப்பு "தசரதனுக்குப் பிள்ளை" என்னும் பெயரில் "யாகப் புரோகிதப் பார்ப்பனருக்குத் தன் தாய் கர்ப்பமடையப்பிறந்தான்." அப்படிப் பிறப்பதிலும், பல இழிதன்மை நடப்புக்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. உலக ஷேமத்திற்காக இராமனாக விஷ்ணு வந்தான் என்றால் இப்படி ஒழுக்கக்கேடும், இழிவும், அவமானகரமானதும் அசாத்தியமானதுமான நடத்தைகள் ஏன் ஏற்பட்டிருக்க வேண்டும்?இந்த மாதிரி நூல்களால் (அவதாரங்களால்) மக்களுக்கு என்ன நன்மை ஏற்படும்? மற்றும் இராமன், யாகக் கொலையைத் தடுத்த தாடகையைக் கொல்லுவது எதற்காக? இதனால் மக்களுக்கு ஏற்படும் படிப்பினை என்ன? மற்றும் இராமன் எதற்காக நாடு கடத்தப்பட்டு காட்டுக்கு போனான்? அவன் நாடு கடத்தப்பட்டதற்குக் காரணம் இராமனின் துரோகமும் இழிதன்மையுமான காரியம் தானே இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது அயோத்திய அரசு தசரதனுக்குப் பின் தனக்கு இல்லை என்பதும், அது பரதனுக்கு உரித்தாக்கப்பட்டது என்பதும் இராமனுக்குத் தெரியும். அப்படி இருக்க அயோத்தியின் ஆட்சியை இவன் (இராமன்) இச்சிக்கலாமா?தகப்பன் அயோக்கியத்தனமாய் நடந்து கொண்டாலும் அவதார புருஷனாகிய இவன் (இராமன்) தகப்பனுக்குப் புத்தி சொல்லித் திருத்த வேண்டாமா?இவன் எப்படி ஆசைப்படலாம்? இந்த ஆசையில் மக்களுக்கு ஏற்படும் பயன் என்ன? மற்றும் அரசு கிடைக்காமல் போய்விட்டதே என்றும் விசனப்படலாமா? அதற்காக உரியவனாகிய தம்பியையும் தம்பியின் தாயையும் குறைக் கூறலாமா? வசவு மொழி கூறலாமா? இந்தச் செய்கையால் மக்களுக்கு என்ன படிப்பினை கிடைக்கும்?

காட்டில் வசிக்கையில் "முனிவர்களுக்கு - பிராமணர்களுக்கு எதிரானவர்களைக் கொல்லத்தான் நான் காட்டுக்கு வந்தேன்" என்று சொல்லுகிறானே, இதனால் மக்களுக்கு என்ன படிப்பினை உண்டாகும்?வாலியை முதுகுப்புறம் அவனுக்குத் தெரியாமல் நின்று, அவன் வேறு ஒருவனிடம் போராடிக் கொண்டிருக்கும் போது அம்பை எய்திக் கொன்றானே இதனால் மக்களுக்கு என்ன படிப்பினை – ஒழுக்கம் - வீரம் ஏற்படக்கூடும்?தன் ஆட்சிக்கு உள்ள குடிமகன் ஒருவன் (சம்பூகன்) "பார்ப்பானைக் கடவுளாக வணங்காமல் கடவுளை நேரில் வணங்கிப் பயன்பெற முயற்சித்தான்" என்று அவனைத் துண்டு துண்டாக வெட்டிச் சித்தரவதை செய்தானே, இதனால் மக்களுக்கு என்ன படிப்பினை ஏற்படக்கூடும்?இராமனால் கொல்லப்பட்ட ஒரு மனிதனின் தாயாரை, அவள் "தன்னைப் புணரும்படிக் கேட்டாள் - பலாத்தாரத்தில் பிரவேசித்தாள் என்று ஒரு இராஜஸ்திரீயை மூக்கும், முலையும், காதும் அறுக்கச் செய்தானே, அதனால் மக்களுக்கு என்ன படிப்பினை ஏற்படக்கூடும்?வால்மீகி இராமாயணக் கதையின் உட்கருத்துப்படி இராமன் மனைவி சீதை தானாக இராவணன் பின் சென்றிருக்க, அதை இராமனும் தெரிந்திருக்க வேண்டியவனாக இருக்க, இராவணன் மீது குற்றம் சுமத்திக் கொன்றதன் பயனாய் மக்களுக்கு என்ன ஒழுக்கம் படிப்பினை ஏற்பட முடியும்?இராவணனோடு சீதை பத்து மாதம் அவன் அரண்மனையில் அந்தப்புரத்தில் இருந்தும், அவனுக்கு சீதை கர்ப்பமாகி இருந்தது தெரிந்ததும் அவளைத் தன் விட்டிற்கு அழைத்து வந்து பிறகு அவளைக் கண்ணைக்கட்டி ஆளில்லாத காட்டில் கொண்டு போய்விட்டுவரச் செய்ததால் மக்களுக்கு ஏற்படும் படிப்பினை என்ன? கடைசியாக, இராமன் எல்லா மக்களைப் போலவே ஆற்றில் இறங்கி செத்து மேல் உலகம் போனான் என்பதனால் மக்களுக்கு ஏற்படும் படிப்பினை என்ன?

இவ்வளவு பயனற்றதும் கேடானதுமான கருத்தை வைத்து ஒரு கதையை அதுவும் மற்றொரு (கந்தப்புராண) கதையிலிருந்து எடுத்துக் கொண்ட கதையை கடவுளுடன் சம்பந்தப்படுத்தி, மத நூலாக்கி, இலக்கியமாக்கி, கடவுள் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தி உலக மக்களையே மடையர்களாக்கிவிட்டு அதை தேவாரம் என்று கூறி "பக்திக்காக" – ஒழுக்கத்திற்காக மக்கள் படிக்க வேண்டுமென்றால் இது எவ்வளவு பெரிய மோசடியான காரியம் என்று சிந்திக்க வேண்டுகிறேன்.மேலும் இராமன் மனிதனாகப் பிறந்தான், சீதை மனுஷியாகப் பிறந்தாள் இராமன் தம்பிமார் மனிதராகப் பிறந்தார்கள் என்று எழுதிவிட்டு இவர்கள் 1000- வருஷம், 10.000 -வருஷம் வாழ்ந்தார்கள் அரசு செலுத்தினார்கள் என்று அதில் - இராமாயணத்தில் எழுதி இருப்பது எப்படி பொருத்தமானதும் உண்மையானதுமாக இருக்க முடியும்? அறிவாளிகள் சிந்திக்க வேண்டும்.

--------------------- 22-06-1972 "விடுதலை" நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்."பெரியார் களஞ்சியம்" - தொகுதி:2 … பக்கம்:68 -72

1 comments:

alanchialbert said...

கிருஸ்துவுக்கு முந்திய பிந்திய சமஸ்கிருத இலக்கியங்கள் அனைத்திலும் போஜ மன்னனின் (கி.பி.1010 - 1050 ஜம்பு ராமாயணம் வரைக்கும் சிங்களம் (சிலோன்) என்பது திரிகூட மலைமீது உள்ள இராவணனின் 'லங்கா'வுடன் இணைத்துப் பேசப்பட்டதில்லை. குணாத்யாவின் காலம் தொடங்கி சாதவாகனர்களின் காலக்கட்டத்திலிருந்தே சிங்களம் என்பது நாகரீக மேம்பாடு அடைந்த ஒரு பவுத்த அரசாக குறிப்பிடப்படுகிறது. இரத்தினக்கற்களுக்குப் பேர் பெற்றதாக அது கருதப்பட்டது. கி.பி.330 - ல் சிங்கள அரசன் மேகவர்மன் பேரரசன் சமுத்ரகுப்தனுக்கு விலையுயர்ந்த பரிசுப் பொருளுடன் தூது ஒன்றை அனுப்பினான்.

புகழ் பெற்ற சீனப்பயணி பாஹியான் (கி.பி.5 - ம் நூற்றாண்டு) தமிழகத்திலிருந்து 14 நாள் பயணத்தில் சிலோனை அடைந்து புத்தரின் புனிதப்பல்லைக் காட்சிப்படுத்திய திருவிழாவில் கலந்துகொண்டார். ஹர்ஷ மன்னரின் (கி.பி.608 - 648) 'இரத்னாவளி'யில் சிங்களம் பற்றிய குறிப்புகள் பல இடங்களில் உள்ளன.
இராமாயணம் குறித்த அறிதல் ஹர்ஷருக்கு உண்டு. 'இரத்னாவளி'யில் மேகநாதன் லட்சுமணனை வென்றது பற்றிய பதிவும் உண்டு. இருந்தபோதிலும் இராவணனின் 'லங்கா'வை அவர் சிங்களத்துடன் ஒன்றாக்கவில்லை.

வால்மீகி இராமாயணத்தில் ஒரே ஓரிடத்தில்தான் இராவணனின் இலங்கையும் இன்றைய சிலோனும் ஒன்று என பொருள்படும் குறிப்பு உள்ளது. (கிஷ்கிந்தா காண்டம் சர்கம்: 41, பாடல்கள்: 17 - 25) சிங்களம் என்கிற பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும் மகேந்திர மலைக்கு எதிரே உள்ள தீவு எனப்படுகிறது. 'பாண்டிய ககாவ்வதம்' அல்லது கொற்கைக்கு அருகில் தாமிரபரணி கடலுக்குள் கலக்குமிடத்தில் அகஸ்தியர் அதை அமைத்தார் எனவும் குறிப்பிடப்படுகிறது.

பின்னாளில் சிலோனையும் கொற்கைத் துறைமுகத்தையும் படையெடுத்து ஆக்ரமித்து தலைநகர் அனுராதபுரத்தைக் கைப்பற்றி சிங்கள மன்னனை வீழ்த்திய இந்திய மன்னனை முகஸ்துதி செய்யும் நோக்குடன் இந்த வரிகளை இடைச்சரகலாகச் சேர்த்தனர்.

10 - ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழ மன்னர்கள் (ராஜராஜன் ராஜேந்திரன்) மிகப்பெரிய ஆற்றலாக வளர்ந்த காலத்தில்தான் இராமாயண 'லங்கா'வும் இன்றைய சிலோனும் ஒன்றாகப்பட்டது.

சுமார் 2 நூற்றாண்டுக் காலம் சூரிய வம்சத்தவர்களாகத் தங்களை கூறிக்கொண்ட சோழர்களின் ஆதிக்கத்தில் இலங்கை இருந்தது. தமிழ்க் கல்வெட்டுக்களில் சிலோன், 'ஈழ' என்றே குறிப்பிடப்படுகிறது. 'ஈழ' என்பது இலங்கை என்பதன் சுருக்கமாக இருக்கலாம்.

சோழ மன்னர்களின் காலத்தவரான கம்பர் தனது இராமாவதாரத்தின் கிஷ்கந்தா காண்டம், நாடவிட்ட படலத்தில் 'லங்கை'யை தமிழ்நாட்டிற்குத் தெற்கே உள்ளதாக 'தெளிவாக' வரையறுத்து விடுகிறார். ஏற்கனவே குறிப்பிடப்பட்டபடி போஜனின் காலம் வரை (கி.பி.1050) இராவணனின் 'லங்கா'வும் இன்றைய சிலோனும் ஒன்றாக்கப்பட்டதில்லை. லட்சுமண சூரிதான் தனது யுத்த காண்டத்தில் முதன்முதலாக 'சிங்கள தீபம்' என்கிற பொய்யை இடைச்செருகலாகச் சேர்த்திருக்க வேண்டும்.

"(திரிகூட) மலையுச்சி நகரமான லங்காவும் சிலோன் தீவும் மட்டுமல்ல இராமேஸ்வரத்துக்கும் மன்னார் தீவுகளுக்கும் இடையில் அமைந்த மணற்திட்டுகளின் தொடரான ஆதம் பாலமும், கற்கள் மலைப்பிஞ்சுகள், மரங்கள், முட்புதர்கள் ஆகியவற்றால் இராமனின் உத்தரவின்பேரில் (யுத்தகாண்டம், சர்கம்: 22, பாடல்கள்: 50 - 70) வானரங்களால் அமைக்கப்பட்ட 'நளசேது'வும்கூட இவ்வாறு ஒன்றாக்கப்பட்டது."

ஒரு காலத்தில் ஆதம்பாலம் ஒரு தொடர்ச்சியான பூசந்தியாக இருந்து கி.பி.1480 - ல் புயல் ஒன்றில் சிதைக்கப்பட்டது என ராமேஸ்வரம் கோயில் ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

வால்மீகி இராமாயணத்தில் குறிப்பிடப்படும் மகேந்திர மலைக்கும் சுவேல மலைக்குமிடையில் 100 யோஜனை நீளமுள்ள வடக்குத் தெற்காகக் கட்டப்பட்ட 'நளசேது'விற்கும் ஆதம்பாலத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இரண்டையும் ஒன்றாக்கியதன் மூலம் இராமனின் படையெடுப்பை கொற்கைத் துறைமுகத்திலிருந்து தனுஷ்கோடி என்பதாக மாற்றிய செயல், இராமேஸ்வரத்தில் லிங்கம் நிறுவப்பட்டு இராமேஸ்வரக் கோயில் கட்டப்பட்ட காலத்துடன் இணைத்திருக்க வேண்டும். ஆக ஆதம்பாலம் 'நளசேது'வாக 'இராமர் சேது'வாக மாற்றப்பட்டது கி.பி.1000 - 1100 காலக்கட்டத்தில்

தொடர்ந்து இதையொட்டி பல கதைகள் கட்டப்பட்டன. கிழக்கிலங்கையில் அமிர்தகலி என்னுமிடத்திலுள்ள ஒரு குளம்தான் அனுமான் தீர்த்தம், அதாவது 'லங்கை'யை எரித்தபின் தனது வால் நெருப்பை அனுமன் அணைத்த இடம் அது எனவும் குறிப்பிடப்படுகிறது. அமிர்தகலியில் உள்ள லிங்கத்தை பிரதிஷ்டை செய்தது இராமன் என்றும் கூறப்படுகிறது. ஆனால் வால்மீகி இராமாயணத்தில் (சுந்தரகாண்டம், சர்கம்: 54, பாடல்: 50) அனுமன் தன் வால் நெருப்பை சமுத்திரத்தில் அணைத்ததாகக் குறிப்பிடப்படுவது கவனிக்கத்தக்கது.

ஈஸ்வரன் அதாவது சிவன் ராட்சசர்களின் கடவுள் இராவணன்தான் லிங்கத்தை வணங்குபவன். திருமாலின் அவதாரமாகக் கருதப்படும், இராமன் சென்ற இடமெல்லாம் லிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாக கதை கட்டியது சமயவெறி பிடித்த சைவர்களின் வேலை

கி.மு. 180 - ல் ப்ருகத்ரதனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றிய பார்ப்பனன் புஷ்யமித்ர சுங்கனின் காலத்தில் பவுத்தம் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு அழிக்கப்பட்டதை டாக்டர் அம்பேத்கர் விரிவாக எழுதியுள்ளதை நாம் அறிவோம். புஷ்யமித்ரனைப் புகழ்ந்து எழுதியுள்ள வடமொழியின் முக்கிய இலக்கண ஆசிரியன் பதஞ்சலி அசோக் மன்னனைப் புறக்கணிப்பதையும் அவர் காலத்தில் உயிர்ப்பலிகள் தடுக்கப்பட்டதை மறைமுகமாகக் கண்டித்ததையும் குறிப்பிடுகிறார்.

இராமாயணத்திலும்கூட இராமனைப் பயன்படுத்தி புத்தரை இழிவு செய்யும் போக்கு மதவெறியர்களால் இடைச்செருகலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராமன் புத்தருக்கு முற்பட்டவன் என்பது யாவரும் ஏற்றுக்கொள்ளும் வரலாற்று உண்மை. ஆனால் அயோத்தியா கண்டத்தில் (சர்கம்: 109, பாடல்: 34)) இராமன் புத்தரைத் திருடன் எனவும், நாஸ்திகன் எனவும் ஏசுகிறான். எல்லாம் புஷ்யமித்ரன் மற்றும் பதஞ்சலியின் காலத்திற்குப் பிந்திய செயல்கள்.

இப்படித்தான் சிங்கள தீபம், திரிகூட 'லங்கா'வாகவும், மகேந்திர மன்னர்கள் இராவணர்களாகவும் பவுத்த சிங்களர்கள் ராட்சசர்களாகவும், புத்தர் திருடராகவும் கட்டமைக்கப்பட்டது. கி.பி.1000 - க்கு பின் இதுவே இந்திய வரலாறாக மாறியது. 'இன்றைய தென்னிந்தியாவின் ஸ்ரீ ராமனான ராஜாஜி வாள்', "இன்னொரு இராமாயண யுத்தத்தைத் தூண்டாதே", என சிலோன் ஆட்சியாளர்களை எச்சரிக்கவும் நேர்ந்தது.

மகேந்திரமலையிலிருந்து சுவேலமலையில் உள்ள திரிகூட 'லங்கா'வை வந்தடைவதற்கு இராவணன், அனுமன், வானரப்படை சகிதம் இராம - லட்சுமணர் ஆகியோர் 100 யோஜனை தூரமுள்ள சமுத்திரத்தைக் கடக்க வேண்டியிருந்தது. இவர்களின் யாரும் இடையில் நர்மதையைக் கடக்க நேரவில்லை. நர்மதையைத் தாண்டி இராமன் வந்ததற்கு, எந்த ஆதாரமும் இல்லை.

இராமாயணத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் இராமனின் பஞ்சவடியில் தொடங்கி இராவணனின் 'லங்கா'வில் முடிகிறது. இராவணன் கழுதை பூட்டிய ரதம் ஒன்றிலேயே சீதையைத் தூக்கி வந்தான். குதிரை இந்திய மிருகமல்ல என்பது குறிப்பிடத்தக்கது. பம்பை ஏரி, சீதை தன் ஆபரணங்களை எறிந்த குன்று. இராவணன் சுபார்வாவைச் சந்தித்த மலைப்பிளவு ஆகியன இடையிலுள்ள முக்கிய நிலக்குறிகள் மகேந்திர மலையிலிருந்து அனுமன் கடலைக் கடந்தான் என்பதாகவும் குறிப்பு வருகிறது.

ஆக மகேந்திர மலைக்கும் 'கங்கா' அமைந்திருந்த சுவேல மலைக்கும் இடைப்பகுதி இராவணனால் கழுதை பூட்டிய ரதத்தால் கடக்கப்பட்டது. அனுமன் அதை நீந்திக் கடந்தான். இராமனோ தனது வானரப்படையின் உதவியோடு தற்காலிகப் பாலம் அமைத்துக் கடந்தான். இடைப்பட்ட கடலைக் கடந்தது (லங்கண) பற்றிச் சொல்லுகையில் இராவணனைக் குறிக்கும்போது செல்லுதல் (கமண) எனவும், அனுமனைக் குறிக்கும்போது நீந்துதல் (பிளவண) எனவும் குறிப்பிடப்படுகிறது. எங்கும் 'தயண' (பறந்து கடத்தல்) என குறிப்பிடப்படவில்லை.

அதாவது மகேந்திர மலைக்கும் திரிகூடத்திற்குமுள்ள 100 யோஜனைத் தொலைவு என்பது வசந்த காலத்திலும் கோடை காலத்திலும் (மார்ச், ஜூன்) கழுதை வண்டி ஒன்றால் கடத்தக்கூடிய ஒரு ஆற்று நீர் வற்றிய பகுதிதான் என்பது கவனிக்கத்தக்கது. பிற காலங்களிலேயே நீந்துதலோ பாலமோ தேவைப்படுகின்றன

"யோஜனை என்கிற தொலைவு குறித்து இரு விளக்கங்கள் வால்மீகியில் காணப்படுகின்றன. பொதுவாக ஒரு யோஜனை என்பது 4 குரோசாக்கள் அளவுடையது. 1 குரோசா என்பது 1000 வில்நாண் நீளமுடையது. 1 வில் நாண் என்பது 6 அடி நீளம். எனவே 1 யோஜனை இந்தக் கணக்கில்படி 4 1 2 மைல்கள் என்றாகிறது