Search This Blog

2.8.08

வரவுக்கு மேல் செலவு செய்வது விபச்சாரம்


சிக்கன வாழ்க்கை முதல் அவசியம்!

முக்கியமாகக் கணவனும்- மனைவியும் தங்கள் முதல் லட்சியமாகக் கொள்ள வேண்டியது வரம்புக்கு மீறாமல் செலவு செய்ய வேண்டியது. வரவுக்கு மேல் செலவு செய்வது விபச்சாரம் போன்றதாகும். இப்படியெல்லாம் வாழ்க்கையில் வழுக்கி விடக்கூடாது.

ஆண்கள் பெண்களின் மூடநம்பிக்கையைப் போக்கிப் பக்குவப்படுத்த வேண்டும். துணிமணி நகைகளை வாங்கிக் கொடுத்து ஏமாற்றி விடுவது சரியன்று. பெண்களுக்கு அறிவை அளிக்க வேண்டும். சிந்தனையத் தூண்ட வேண்டும்.


இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, துருக்கி, ஜப்பான், சைனா போன்ற நாடுகளில் பெண்கள் நகை அணிவதில்லை. எங்கோ பெரிய அரச குடும்பங்களில் வேண்டுமானால் நகை இருக்கும். அவர்களும் எப்போதும் கழுத்திலும் காதிலும் அணிந்துக் கொண்டே இருப்பதில்லை. நகைகளை இன்சூர் செய்து பெட்டியில் பூட்டி வைத்திருப்பார்கள்.

நாமோ துணிமணிகளுக்காக நிறைய செலவு செய்கிறோம். இந்தப் பழக்கத்தை நிறுத்த வேண்டியது அவசியமாகும். போலீஸ்காரனுக்கு ரூ.30- சம்பளம். ரூ.20- கிராக்கிப்படி! 8- குழந்தை இருந்தால் எப்படி ஒழுங்காக நடத்த முடியும்? கூலிக்காரனும் அப்படியே. கால் ரூபாய் உயர்வதற்குள் இரண்டு குழந்தை பிறந்தால் செலவை எப்படிச் சமாகிக்க முடியும்? வரவுக்கு மிஞ்சின செலவுக்குக் குடும்பம் திருட்டுக் குடும்பம். எப்படி ஒழுங்காக இருக்க முடியும்? வரவுக்கு மிஞ்சிச் செலவு செய்தால் ஏதாவது அயோக்கியத்தனம் செய்து தான் சரிகட்ட முடியும். ஆகவே வரவுக்குத் தகுந்தாற் போல் செலவு செய்ய வேண்டும்.

என்றைக்கும் வரவுக்கு மிஞ்சிச் செலவு செய்து விட்டுக் கடனாளியாக மாறிப் பிறரை ஏமாற்றுவது இழுக்கு. இதை விட விபச்சாரம் என்பது இழிவானதன்று. விபச்சாரத்தை விட மோசமான செயல் அதிகச் செலவு செய்து அதற்காகக் கடன் வாங்கித் திண்டாடுவது என்று தான் சொல்ல வேண்டும். 30- ரூபாய் சம்பாதிக்கிறவனும் கடனாளி 1000 ரூபாய் சம்பாதிக்கிறவனும் கடனாளி என்றால் என்ன அர்த்தம்? தன்னை அடக்காதவனுக்குத் தான் தரித்திரம் உண்டாகும். தன்னை அடக்காதவன் தான் விபச்சாரி. ஆகவே சிக்கனத்தில் குறிகொண்டு வாழுங்கள்.

---------------பெரியார் ஈ.வெ.ரா. -நூல்: "வாழ்க்கைத்துணை நலம்" பக்கம் 56-58

0 comments: