Search This Blog
1.8.08
கடவுள்கள் ஒண்ணாம் நம்பர் கொலைக்காரக் கடவுள்களாக இருக்கின்றன.
பேய் என்றெல்லாம் வேறொன்றும் இல்லை; இல்லாததை இருக்கிறதாக நினைத்துக் கொண்டு முட்டாள்தனமாகத் தொல்லைப்பட்டுக் கொண்டு இருப்பதுதான். சாதாரணமாக நம் பெண்களிடத்தில் பார்த்தால் தெரியும்; பேய் பிடித்துவிட்டது அதை விரட்டுகிறோம்' என்பார்கள்! பேயைப் போலவே இல்லாததை இருப்பதாக நம்புவது, கடவுள், மதமும் ஜாதியும், ஜனநாயகம் - இந்த மூன்று பேய்களும் நாட்டைவிட்டே விரட்டப்படவேண்டும். அப்போதுதான் நம் மக்கள் காட்டுமிராண்டித்தனத்திலிருந்து விடுபட முடியும்.
கடவுள் என்ற ஒன்று கிடையாது. பேய்போல அது ஒரு கற்பனைதான். உங்களிடத்திலேயே பலர் பக்தி நிறைந்தவர்களாக இருக்கலாம். ஆத்திரப்படாமல் கேட்டு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சிந்திப்பதற்கு முன், இதைச் சொல்லுகிற நான் யார் என்று யோசனை செய்து பார்க்க வேண்டும். `எங்கள் குடும்பம் ஈரோட்டிலேயே பெரிய கடவுள் பக்திக் குடும்பம். அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவன் நான். ஊரில் உள்ள பாகவதர்களெல்லாம் எங்கள் வீட்டில்தான் சதா சாப்பிடுவார்கள். எங்கள் வீட்டில் எந்த சாமானைப் பார்த்தாலும் அதில் நாமம் போட்டுத்தான் இருக்கும். நானும் பெரிய பதவிகள் வகித்து இருந்திருக்கிறேன். ஈரோடு தேவஸ்தான கமிட்டிக்கு பிரசிடென்டாக இருந்திருக்கிறேன். சில பாடல் பெற்ற ஸ்தலங்கள் எல்லாம்கூட என்னுடைய ஆதிக்கத்தின்கீழ் இருந்திருக்கின்றன. அதையெல்லாம் நிருவாகம் செய்து முதன் முதலாக ஆதிதிராவிடனை கோயில் உள்ளே நுழைய வைத்து கோர்ட் வரையிலே சென்றிருக்கிறேன். அப்படிப்பட்ட நான் ஏன் இப்படிச் சொல்ல வேண்டும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். கடவுள் என்பதை நம்பாததற்குத்தான் நிறைய அறிவு வேண்டும். கடவுளை நம்ப முட்டாள்களாக இருக்க வேண்டும். கடவுள் இல்லையென்று சொல்ல வேண்டுமானால் அதற்கு இயற்கையைக் கட்டி ஆள வேண்டும்; ஒவ்வொன்றுக்கும் சரியான சமாதானம் சொல்ல வேண்டும். நீங்கள் கடவுள் இல்லை என்று சொல்ல வேண்டும், நினைக்க வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. இருக்கிறதாகவே வைத்துக் கொண்டால், அது எப்படி இருக்க வேண்டும். இதுதான் எங்கள் கேள்வி!
உலக மக்கள் தொகையாகிய 230 கோடியில் இந்தியா என்ற இந்த நாட்டில் உள்ள 30 கோடியைத் தனியாக வைத்து விட்டு மற்றதைப் பார்த்தால் 100 கோடி மக்களுக்குமேல் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அதாவது, உலகத்தில் சரிபகுதி மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. சைனா, ஜப்பான், சயாம், பர்மா, சிலோன், கொரியா ஆகிய நாடுகளில் உள்ள பவுத்தர்களுக்கு மோட்சம், நரகம் ஆகியவற்றால் ரஷ்யாவில் உள்ள 30 கோடி மக்கள் ஒரு குஞ்சுக்குக்கூட கடவுள் நம்பிக்கை இல்லை. ஒன்றிரண்டு கிழடுகளுக்குத்தான் சில கோயில்கள் இருக்கின்றன. அதுவும் எல்லாக் கிழடுகளும் அப்படியிருப்பதில்லை. மற்ற பெரிய பெரிய ஆலயங்களெல்லாம் கண்காட்சி சாலையாகத்தான் அங்கு இருக்கிறது. நாம் 30 கோடி மக்களும் காட்டுமிரண்டிகளாக இருக்கிறோம். கடவுள் பேய் பிடித்து ஆட்டுபவர்களாக இருக்கிறோம். ஏன் மற்ற மதத்துக்காரர்கள் இருக்கிறார்களே, அவர்களைப் போலாவது கடவுளைப்பற்றி நினைக்கிறோமா? கடவுளால் ஜாதிக்க இயலாததை எல்லாம் வெள்ளைக்காரன் தற்போது ஜாதித்துக் காட்டுகிறானே, சக்கிமுக்கிக்கல் காலத்தில் கடவுள் இருந்திருந்தால் ஏன் அவன் நமக்கு எலக்டிரித் தரவில்லை? கட்டை வண்டிக் காலத்தில் கடவுள் இருந்திருந்தால் ஏன் நமக்கு அவன் ஆகாய விமானம் தரவில்லை? அவ்வளவு தான் கடவுள் சக்தி. கிறிஸ்தவனாக உள்ள வெள்ளைக்காரன் இதுமாதிரி பற்பல அதிசயங்களைச் செய்கிறான்.
கடவுளால் ஆகாததைச் செய்துகாட்டி, கடவுள் சக்தி இவ்வளவுதான் காட்டுகிறான் என்றாலும் அவன் ஒரு கடவுளைக் கும்பிடுகிறான் என்றால் அது சடங்கு சம்பிரதாயத்திற்கே தவிர வேறில்லை. அவன் கடவுளைத் தொழுகிறான்; அவனுக்கு ஒரே கடவுள்தான் உண்டு. அதற்கு உருவமில்லை; மகா யோக்கியர் அந்தக் கடவுள் என்கிறான். கருணாநிதி என்கிறான்; ஒழுக்கமுள்ளவர் என்று வருணிக்கிறான். அந்தக் கடவுளுக்கு ஒன்றும் தேவையில்லை. இதுதானய்யா கிறிஸ்தவனும், முஸ்லிமும் சொல்லும் கடவுள்!
ஆனால், உனக்குத் தெரியாதே உன் கடவுள் எப்படிப்பட்டதென்று. உனக்கு எத்தனை கடவுள் என்றால் உனக்கே தெரியாதே! நாட்டில் இருக்கிற அத்தனையும் கடவுள்கள்! ஏதோ நாங்கள் வந்ததனாலே இப்போது இந்த நாட்டிலே கடவுள்கள் குறைந்து இருக்கின்றன. ஒன்றா இரண்டா இங்கே - உன் கடவுள்? மாடு, பன்றி, குரங்கு, மீன், நாய், கழுதை, குதிரை எல்லாம் உன் கடவுள்! 600-700 ரூபாய் செலவு செய்து கல்லில் குதிரை செய்து வைக்கிறானே; மாட்டுச் ஜாதியைக் கடவுளாக்கி வைத்திருக்கிறானே. நல்ல வேளையாக மனுஷன் ஜாதியை கடவுளாக்கவில்லை. ஏனென்றால், பார்ப்பானுக்குத் தெரியும், அப்படி ஆக்கினால் பின்னால் அவனுக்கே கஷ்டம் என்று அதனால்தான் விட்டு விட்டான்.
மதுரை வீரன் என்றொரு கோயிலுக்குப் போனால், அங்கு இரண்டு நாய்கள் இருக்கும். ஒரு கடவுளுக்குப் பதில் இத்தனை கடவுள்கள் எப்படி ஆயிற்று இந்நாட்டில்? ஒரு கடவுளைப்பற்றிச் சொல்லுகிறான். அவனது அரைஞாண் கயிறு படாத பெண் பிள்ளையே உலகத்தில் இல்லை என்று சொல்லுகிறான்! கிருஷ்ணனைப் பார்த்து நாரதர் இப்படிச் சொன்னார் என்று எழுதி வைத்திருக்கிறான். கடவுள் யோக்கியதை இப்படியா இருக்கவேண்டும்? பெரும்பாலான கடவுள்கள் ஒண்ணாம் நம்பர் கொலைக்காரக் கடவுள்களாக இருக்கின்றன. கடவுள் தொகையைப் பெருக்குவதில் சைஃபர் சேர்ப்பதற்கு பஞ்சம் வந்தால்தான் அதோடு நிறுத்துகிறான். கருணாநிதியான கடவுள் மற்றவனைக் கடித்துத் தின்னும்; இரணியனைப் பிய்த்து எறிந்து கடித்தது என்றல்லவா எழுதி வைத்திருக்கிறான். நாய்கூட மனிதனைக் கடிக்கிறதே தவிர கடித்துத் தின்னுவதில்லை. ஆனால், கடவுள் மனிதனைக் கடித்ததோடு இல்லாமல் தின்னவும் செய்திருக்கிறது. நடராசன் என்று ஒரு கடவுள் மனுஷனை அதுவும் நம்மவனைப் போட்டு மிதித்து வைத்துக் கொண்டு நடனம் ஆடுகிறதாம். காளி என்ற இன்னொரு கடவுள் கழுத்தெல்லாம் மனிதத் தலையாகவே இருக்கும்! அவ்வளவு கருணை வெள்ளம்! கடவுள் உருவம் செய்தவனுக்காகவது புத்தி இருந்திருக்க வேண்டாமா? அன்பு வடிவமான கடவுள் என்று சொல்லப்படுவதற்கு வேலாயுதம் ஏன்? சூலாயுதம் எதற்கு? கொழுவும் மழுவும் வைக்கலாமா என்று யோசிக்க வேண்டாமா? இதையெல்லாம் வைத்திருந்தால் அவை கொலை பண்ணாமல் இருக்க முடியுமா? இப்படி நாம் அந்த காட்டுமிராண்டிகளாகத்தானே வாழ்கிறோம்? படியளக்கும் கடவுள் என்று சொல்லப்படுவதற்கு நாம்தானே படியளக்க வேண்டியிருக்கிறது? ஆவுடையார் கோயிலில் மூன்று மூட்டை அரிசி தினசரி செலவாகிறது என்றால் எதற்கு? சாமி பேரைச் சொல்லி பார்ப்பான் விழுங்குகின்றான். மிகுந்ததைப் பிறகு மார்க்கெட்டிலும் விற்கிறான், பார்ப்பான். தினசரிப் பத்திரிகைகளைப் பார்த்தால் கஞ்சியில்லாமல் செத்தார்கள் என்று போட்டிருக்கின்றன. இன்னொரு பக்கத்தில் கோயில் விழாக்கள், வடை, பாயசம், புளியோதரை, பொங்கல் இவற்றிற்கு குறைச்சல் உண்டா? இவ்வளவும் கடவுளுக்கு ஜீரணமாகுமா? என்று யாரும் யோசிப்பதில்லையே. இவ்வளவும் செய்த நாம் கோயிலில் ஏன் கடவுளுக்கு கக்கூஸ் கட்டி வைக்கவில்லை என்று யோசிப்பது இல்லையே? ஸ்ரீரங்கம் கோயிலில் டின் டின்னாக நெய்யை ஊற்றிச் செய்கிறானே, அதையெல்லாம் யார் வயிற்றிலே அறுத்து வைப்பதற்கு? கொட்டாப்புளி மாதிரி இருக்கிற பார்ப்பான்களுக்குத்தானே அவ்வளவும். ஸ்ரீரங்கம் கோயிலிலே சாமிக்குத் தேங்காய் உடைப்பது இல்லை. திருகுவதற்கு ஒரு பெரிய கருவியை வைத்திருக்கிறான். எவ்வளவு பெரிய தேங்காயானாலும் நொடியிலே திருகிவிடும். ஏண்டா என்றால், உடைக்கிற சப்தத்தைக் கேட்டு விழித்துக் கொள்ளுவார் என்று சொல்கிறார்கள். எப்போது படுத்தார், எப்போது எழுந்திருப்பார் என்று ஒரு பயலுக்கும் தெரியாது.
அப்படி எழுந்திருக்காமல் தூங்கிக் கொண்டேயிருக்கும் சாமிக்கு எதற்கு இத்தனைப் பண்டங்கள், ஆறுகால பூஜைகள்? ஒருத்தனும் ஏன் என்றே கேட்டதில்லையே. ஒருவனுக்கும் இந்த 1958-இல் கூட புத்தி இல்லையே. இன்னும் நாங்கள் இல்லை என்று சொன்னால் ஒவ்வொருவரும் கட்டாயம் ஸ்ரீரங்கம் வரவேண்டும் என்று சொல்லி உதைப்பானே? இந்த சாமிகளுக்கு எத்தனை பெண்டாட்டிகள், கருமாதிகள், கல்யாணங்கள் போன வருடம் பண்ணின கல்யாணம் என்ன ஆயிற்று. இந்த வருடம் சாமிக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறார்களே என்று ஒருத்தனும் யோசிப்பது இல்லையே. காளை மாடு கன்று போட்டது என்றால் உடனே சொம்பு எடுத்துக் கொண்டு போய் பால் கற என்று சொல்லுபவன் புத்தி மாதிரிதான் இருக்கிறது இவர்கள் நிலை, சாமி எதற்காக தேவடியாள் வீட்டிற்குப் போவது? மனுஷன் பிறகு இந்த இடத்திற்கெல்லாம் தாராளமாகப் போக மாட்டானா? கடுகு அளவு புத்தியிருந்தால் ஸ்ரீரங்கத்திலிருந்து உறையூருக்கு தேவடியாள் வீட்டிற்காக சாமியைத் தூக்கிக்கொண்டு வருவானா? வெளியார்கள் பார்த்தால் காரித்துப்ப மாட்டார்களா? நாம் இதற்கெல்லாம் வெட்கப்பட வேண்டாமா? பக்தி என்றால் ஒழுக்கம், நாணயம் இவை வேண்டாமா? பன்னிராயிரம் கோபிகாஸ்திரீகளோடு கொஞ்சினார், அத்தனை பேரும் கடவுளுடைய பெண்டாட்டிகள் என்று எழுதி வைத்திருக்கின்றானே. நாரதர் தனக்கொரு பெண்டாட்டி வேண்டுமென்று கேட்டாராம். கிருஷ்ணன், நான் எந்த வீட்டில் இல்லையோ அந்த வீட்டிற்கு நீ போ என்றானாம். நாரதர் எந்த வீட்டிற்குப் போனாலும் அங்கே கிருஷ்ணன் இருந்தானாம். நாரதர் திரும்பி வந்து இதைச் சொன்னாராம். பிறகு நாரதரும், கிருஷ்ணனும் சேர்ந்து பிள்ளை பெற்றார்களாம். அப்படிப் பிறந்த 60 குழந்தைகள்தான் பிரபவ, சுக்கில மற்றும் தமிழ் வருடங்கள் எனப்படுபவை எங்கேயாவது ஆணும் ஆணும் சேர்ந்து பிள்ளை பெற முடியுமா? இது எவ்வளவு ஆபாசமும் அறிவு அடிப்படையும் இல்லாத கதையாகும். இவ்வளவு ஒழுக்க ஈனமாக, அநாகரிகமாகவா நமது கடவுள் தன்மை இருக்க வேண்டும்? மனிதத் தன்மைகளே இல்லை இவைகளிடத்தில், இந்த மாதிரியான அயோக்கிக் கடவுள்கள் இருக்கலாமா? விஷ்ணு, சிவன், பிள்ளையார் கொழுக்கட்டைராயன் மாதிரி இந்தக் கடவுள்கள் என்ன ஜாதித்திருக்கின்றன? அல்லது அவற்றால் நாம்தான் என்ன ஜாதித்துக் கொண்டோம்? இல்லாத குறை ஒன்றைப் போக்க இத்தனை இழிவுகளா? எனவேதான் இந்தப் பேயை ஒழிக்க வேண்டுமானால், கடவுளை ஒழிக்க வேண்டுமானால் பார்ப்பானை ஒழிக்க வேண்டும்; பார்ப்பானை ஒழிக்க வேண்டுமானால் அரசாங்கத்தை ஒழிக்க வேண்டும் என்கிறோம். உலகத்தில் அனுபவிப்பதற்கென்றே பார்ப்பான் இருக்கிறான். நாம் என்ன பலனைக் கண்டோம்? அவன் அனுபவிப்பதைக் கண்டு நாம் என்ன பயன் பெறுகிறோம்?
-----------தந்தைபெரியார் -"விடுதலை" - 19.10.1958
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment