Search This Blog

3.8.08

கடவுள் கற்பனைக்கு இன்னொரு சரியான கற்பனை பிசாசுதான்



பகுத்தறிவினுடைய குறைவில்தான், அதை நல்லபடி சிந்திக்காததால்தான், நல்ல வண்ணம் பயன்படுத்தாததால்தான் இந்த 1967-லும் நாம் காட்டுமிராண்டிகளாக இருக்கிறோம். அதைப் பயன்படுத்தியவர்கள் விஞ்ஞானத் துறையில் முன்னேறியுள்ளனர். மனிதனுக்கு மனிதன் உள்ளபேதம் என்னவென்று நல்ல வண்ணம் பரிஜோதித்துச் சொல்லுவோமானால் அறிவில்தான். பணம், செல்வாக்கு, வலிமை எல்லாம் அதற்கு அடுத்தபடிதான்.

மனிதனுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் உள்ள பெரிய பேதம் என்னவென்றால் பகுத்தறிவுதான்,
மற்ற ஜீவன்கள் மனிதனைவிட வலிமைமிக்கதாக இருக்கலாம், பெரியனவாக இருக்கலாம்; மனிதன் செய்ய முடியாத அநேகக் காரியங்களை சாதாரண ஜீவன்கள்கூட செய்கின்றன. அப்படி இருந்தாலும்கூட, மனிதன் சகல துறைகளிலும் தனக்கு வேண்டிய வசதிகளை தேவைக்கு ஏற்ப செய்து கொள்கிறான், மாற்றிக் கொள்கிறான். மற்ற ஜீவன்கள் அப்படிச் செய்வதில்லை. 1000 வருடங்களுக்குமுன் எப்படி இருந்ததோ அப்படியேதான் இன்றும் இருக்கின்றன. ஆனால், மனிதனுக்கு நல்ல பகுத்தறிவு இருந்தும் அதனுடைய பலனை, அதற்குரிய சக்திகளை மனிதன் இன்னும் அடையவில்லை. இவற்றை அடைய முடியாமைக்குக் காரணம் அறிவின், பேதமல்ல. பின் என்னவென்றால் அறிவைத் தடை செய்யும்படியான வாய்ப்புகள்தான்.

அதில் முதலாவது கடவுள்தான். கடவுள், கடவுளைச் சார்ந்து எழுதப்பட்ட கதைகள், கடவுள், மதம் இரண்டையும் சம்பந்தப்படுத்தி எழுதப்பட்ட ஆதாரங்கள் இவை எல்லாம் சேர்ந்து நாம் பகுத்தறிவைப் பயன்படுத்தி அதனால் ஏற்படும் பயன், சக்திகளை அடைய முடியாமல் தடை செய்துவிட்டன. முதலாவது கடவுள் என்று ஏன் சொன்னேன் என்றால் கடவுள் என்பது பகுத்தறிவைக் கொண்டு பார்க்கக் கூடாது, அது அறிவிற்கு எட்டாதது, அறிவைக் கொண்டு சிந்திக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படியே அறிவையே பயன்படுத்தாமல் நம்ப வேண்டுமென்று சொல்வதே பகுத்தறிவைப் பயன்படுத்துவதைத் தடுப்பதாக இல்லையா?அறிவைக் கொண்டு சிந்திக்க முடியாத நம்பிக்கை மக்களிடையே நிலைபெறச் செய்ய வேண்டுமென்பதற்காக மேலும் வலியுறுத்த வேண்டுமென்று கடவுளோடு நிற்காமல் ஆத்மா, மேல் கீழ் உலகங்கள், வேத சாஸ்திர சம்பிரதாயங்கள், அவற்றுக்காக வேண்டி அதை நிலை நிறுத்த மனிதத் தன்மைக்கு மீறிய சக்திகளை உடைய அதாவது பகுத்தறிவுக்கு எட்டாத மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்திகளை உடைய பாத்திரங்கள், அதற்கும் மேல் இயற்கைக்கும் பகுத்தறிவுக்கும் அனுபவத்திற்கும் சம்பந்தமில்லாத, ஒத்துக் கொள்ள முடியாத நிகழ்ச்சிகள், அதாவது ஆகாயத்தில் ஒரு கோட்டையை கற்பனை செய்து, அதற்கு சுவர் இத்தனை அடி நீளம், அகலம், அதற்கு வாசல் இந்தப் பக்கம், ஜன்னல் இப்படி இருக்கும் என்று அடுக்கிக் கொண்டே போவான்.

முதலில் ஆகாயத்தில் கோட்டை எப்படி இருக்க முடியும் என்று சிந்திக்க முடியாமல் மேலே அடுக்கிக் கொண்டே போக ஆரம்பித்து விட்டான்.ஆகாயத்திலிருந்து வழுக்கியவன் எப்படி எந்த பிடியும் இன்றி பாதாளத்திற்கு வருகிறானோ அந்த அளவிற்கு நம் அறிவை சிந்திக்கவிடாமல் ஆக்கிவிட்டான். அதனால்தான் பகுத்தறிவில் பாதாளத்தில் இருக்கிறோம். சாதாரணமாக ஒன்று சொல்கிறேன். நான்கும் நான்கும் எட்டு என்பது கணக்கு. விரலை விட்டுக் கூட்டினால் எட்டுதான் வருகிறது. ஆனால், நான்கும் நான்கும் 12 என்கிறான். எப்படி என்றால் நான் சொல்லுவதுதான் சரி, அதை நம்ப வேண்டும். எப்படி, ஏன் என்று எல்லாம் கேட்கக் கூடாது; 4ம் 4ம் 12, அதை ஆளுக்கு இரண்டு வீதம் 25 பேருக்கு பிரித்துக் கொடுத்தேன். என்கிறான். நான்கும் நான்கும் 12 என்கிறாய்; அதை 25 பேருக்கு ஆளுக்கு இரண்டுவீதம் கொடுத்தால் பிரித்துக் கொடுத்தேன் என்கிறாயே, ஆளுக்கு இரண்டுவீதம் கொடுத்தால் அய்ம்பது வருமே, நீ எப்படி 12அய் ஆளுக்கு 2 வீதம் 25 பேருக்குக் கொடுப்பாய்? என்றால், உனக்குத் தெரியாது. புரிந்து கொள்ள முடியாது, நம்ப வேண்டும். நம்பினால்தான் முடியும் என்கிறான்.

இப்படித்தான் கடவுளும், கடவுள் கதைகளும் நம்ப வேண்டும், காரண காரியங்களைப் பற்றிக் கேட்கக் கூடாது. நம்பிக்கையைத்தான் அடிப்படையாகக் கொள்ள வேண்டுமே தவிர அறிவை அடிப்படையாக வைத்து ஆராயக் கூடாது என்று அவன் தன் மனதிற்குப்பட்டவாறு புளுகித்தள்ளி இருக்கிறான். உலகில் உள்ளவை தோன்றுவதற்கு ஒரு சக்தி இருந்துதானே ஆக வேண்டும் என்று சொன்னான். பின் ஒரு சக்தி இருக்க வேண்டும் என்று சொன்னதை ஒரு மனிதன் இருக்க வேண்டும் என்று ஆக்கிக் கொண்டான். அந்த மனிதனும் அப்படிச் செய்தான், இப்படிச் செய்தான், அவனுக்கு பலம் மலையைத் தூக்கும் அளவிற்கு இருந்தது. கடலைத் தாண்டினான் என்று மனித சக்திக்கும் அனுபவத்திற்கும் பொருத்தமற்ற - அனுபவ சாத்தியமற்ற பலவற்றை அதன் மேல் போட்டு நம்பு என்கிறான். கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் அதை வலியுறுத்த கடவுள் ஆத்மா என்ற ஒன்றை உண்டாக்கி இருக்கிறார் என்றான். அந்த ஆத்மாவிற்கு சொன்ன லட்சணமும் கடவுளுக்குச் சொல்லப்பட்ட லட்சணங்கள்தான்! அது கண்ணிற்குத் தெரியாது. சூட்சுமம் என்றான். முதலில் கடவுள் ஒவ்வொரு ஜீவனுக்கம் என்று ஆரம்பித்தான்; பிறகு மனிதனுக்கு மட்டும்தான் என்று சொல்லி விட்டான். கடவுளை, ஆத்மாவை எப்படி உண்டாக்கினானோ அப்படி அந்த ஆத்மாக்கள் அனுபவிக்கும் பலாபலன்களுக்கு ஒரு மேல் உலகத்தை உண்டாக்கிக் கொண்டான். அந்த உலகத்திற்கு பூகோளம், சரித்திரம் கிடையாது. எப்படி என்றால் எல்லாவற்றையும் நம்பு, நம்பு என்று சொல்லி நம்ப வைத்துவிட்டான். அதுவும் இதைக் கடவுள் சொன்னார், ரிஷிகள் சொன்னார்கள், வேதம் சொல்கிறது, சாஸ்திரத்தில் இருக்கிறது. ஆகவே நீ நம்பித்தான் ஆக வேண்டுமென்கிறான்.ஒரு மனிதன் தன் அறிவைக் கொண்டு தன்னிஷ்டப்படி சிந்தித்தாலே பாவம் தண்டனை வரும் என்று அநேக ஆதாரங்கள் இருக்கின்றன. அதே மாதிரி சிந்திப்பதே பாவம் - சிந்தித்தால் நரகம் கிடைக்கும் என்று சொல்லி விட்டான். அறிவின் தத்துவத்தைச் சொல்லி எவன் வாதாடுகிறானோ அவன் நரகத்திற்குப் போவான் என்று சொல்லிவிட்டான். இப்படி மனிதனைப் பயப்படுத்தி பயப்படுத்தி இல்லாத ஒன்றை நம்பும்படியாகச் செய்து விட்டான்.

கடவுளை உண்டாக்கியவன் என்னமோ ஒன்று இருக்கும் என்று கடவுளைக் கற்பித்தான். அதன்பின் வந்தவன் மனிதனைப் பயன்படுத்த வேண்டுமென தெரிந்தே ஒரு ஆத்மாவைக் கற்பித்தான். கடவுள் கற்பனைக்கு இன்னொரு சரியான கற்பனை பிசாசுதான். பகுத்தறிவுக்கு என்ன தன்மை இருக்கிறதென்றால் ஒரு மனிதன் ஒரு பொருளை நிச்சயம் செய்ய வேண்டுமானால் அதற்கு ஒரு ஃபார்முலா - மூலவழி இருக்க வேண்டும். அந்த ஃபார்முலாவிற்கு ஏற்ற தன்மையில் இருந்தால் அப்பொருளை ஏற்றுக் கொள்ள முடியும். கடவுள் என்று பொருள் ஃபார்முலாவிற்கு எப்படியும் ஒத்து வரவில்லை. இரும்பு, பித்தளை, தங்கம் இவை மூன்றும் உலோகங்கள்தான். பித்தளையையும், தங்கத்தையும் மெருகு கொடுத்து வைத்தால் இரண்டும் பார்வைக்கு ஒன்றுபோல் தோற்றமளிக்கக் கூடியது ஆகும். எது தங்கம், எது பித்தளை என்று சொல் என்றால் பார்வையால் சொல்வது சற்று சிரமமாயிருக்கும். ஆனால், அதைக் கையில் எடுத்துப் பார்த்ததும் அதன் கனம், பளபளப்பு, மற்ற குணங்களைக் கொண்டு உரசிப் பார்த்து இது தங்கம், இது பித்தளை என்று சொல்லி விடுகிறோம். ஒவ்வொரு வஸ்துவையும் நிர்ணயம் செய்ய வழிமுறைகள் இருக்கின்றன.

கடவுள், ஆத்மா, பிசாசு இவை ஒரு வஸ்துவை நிர்ணயிக்கக் கூடிய தன்மைக்கு ஏற்றதல்ல. சிறிதும் பொருத்தமற்ற வகையில் சொல்லப்படுவதே ஆகும். பகுத்தறிவினால் எப்படி ஒரு பொருளின் தன்மையை - சக்தியை - குணத்தை நிர்ணயிக்க முடியுமோ அதுபோல் இவை நிர்ணயிக்க முடியாத தன்மையில் இருக்கின்றன. இது மரம் என்றால் இது என்ன மரம்? இது தண்ணீர் என்றால் என்ன தண்ணீர்? என்கிறோம். இப்படி ஒவ்வொரு காரியத்தையும் சிந்தித்து சிந்தித்து ஒரு பொருளை மனிதன் நிர்ணயிக்கிறான். ஆனால், இந்தக் கடவுள், ஆத்மா, பிசாசுகளைப் பற்றி மனிதன் சிந்திப்பதே கிடையாது!இப்படி பகுத்தறிவைப் பாழாக்கியதன் பயன் மனிதனுடைய ஒழுக்கம், நாணயம், கடமைகளைக் கெடுத்து மனிதனை ஒரு காரியத்திற்கும் பயனற்ற கொழுக்கட்டையாக்கி விட்டது. அதன் காரணமாக மனிதனாகிய நாம் அடைய வேண்டியதை அடையாததோடு பகுத்தறிவின் பயனால் பெறவேண்டிய, அனுபவிக்க வேண்டிய பல வசதிகளைப் பெறாமல், அனுபவிக்காமல் இருக்கின்றோம்.நல்ல பகுத்தறிவுவாதிகளாக நாம் இருந்தால் நமக்கு துக்கமும் இருக்காது, சந்தோஷம் இருக்காது. இவை பழக்கத்தால் வருவதாகும். அதற்கு என்ன சொல்வார்கள் என்றால் ஞானிகள் மெய்ஞானிகள், இவர்களுக்கு சுகம் துக்கம் கிடையாது என்கிறான். அவர்கள் இரண்டையும் ஒன்றுபோல் கருதக்கூடியவர் என்பான். அவனுக்கு வசவும் ஒன்றுதான். புகழும் ஒன்றுதான். பகுத்தறிவை உடையவன் ஆராயும்போது அவனும் அப்படித்தான் கருதுகின்றான். ஞானி என்பதே அறிவுடையவன் என்பதுதான். பகுத்தறிவின் எல்லைக்குப் போகும் வாய்ப்பு நமக்கு இருக்குமானால் நமக்கு சுகதுக்கம் இருக்காது. அந்த வாய்ப்பு நமக்கு இல்லாமல் நமது சமுதாய அமைப்பு தடுத்துவிட்டது.

நாம் எந்த அளவிற்கு பகுத்தறிவைப் பற்றி பேசுகிறோம் என்றால் சமுதாயத் துறையில் - வாழ்க்கைத் துறையில் - கடவுள் மத சாஸ்திர துறையில் எந்த அளவிற்கு மடையர்களாக இருக்கிறோம் என்பதை எடுத்துக் காட்டவே பயன்படுத்துகிறோம். ஜாதி காரணமாகவும், பிறப்பு காரணமாகவும், மத சாஸ்திர தர்மம் காரணமாகவும், நாம் எவ்வளவு இழி மக்களாக இருக்கிறோம் - எந்தெந்தத் துறைகளில் பிற்படுத்தப்பட்டிருக்கிறோம் என்பவற்றை அறிந்து, அதன் காரணங்களைத் தெரிந்து அதைப் போக்கத்தான் நாம் நம் பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம். உலக மக்கள் பூராவிற்கும் பகுத்தறிவைக் கொண்டு செல்லக் கூடிய வாய்ப்பும் வசதியும் கிடைத்திருக்கிறது என்றாலும் நம் நாட்டிற்கு அது கிடைக்கவில்லை; அது கிடைக்க எவரும் பாடுபடவுமில்லை.


பகுத்தறிவை உலக வாழ்க்கையில் மக்களோடு மக்களாக இருக்கும்படியாய் அமைத்துக் கொள்ள வேண்டும். நம் தந்தையோடு பிறந்தவர்கள் இருவர். ஒருவர் ஆண், மற்றொருவர் பெண், அந்தப் பெண் நமக்கு அத்தையாகிறாள். அவள் மகளைக் கட்டிக் கொள்ள உரிமை உண்டு. ஆனால், தந்தையோடு பிறந்த ஆண் நமக்கு சிறிய தந்தையாகிறார். அவர் பெண்ணைக் கட்ட உரிமை கிடையாது. அவள் சகோதரி முறையாகிறாள். இது இந்நாட்டு வழக்கு. நான் பகுத்தறிவுவாதி. பெண் என்றால் எல்லா பெண்ணும் ஒன்றுதான். நான் சிற்றப்பன் மகளைக் கட்டிக் கொள்கிறேன் என்றால் அது அறிவுப்படி சரி; ஆனால் வழக்கப்படி அது குற்றமாகக் கருதப்படுகிறது.


எனவேதான் பகுத்தறிவுவாதி உலகத்தோடு ஒட்டியும் பழக வேண்டும். எல்லோரும் வேட்டி கட்டிக் கொண்டிருக்கும்போது நாம் மட்டும் பகுத்தறிவுவாதி என்று எதையும் அணியாமல் இருக்க முடியுமா? நாட்டு மக்களோடு ஒட்டிப் பழக வேண்டும். எது எது தவறு என்று கருதுகிறோமோ, எது எது நம் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கிறதோ, எது எது நம் அறிவைப் பாழ்படுத்துவதாக இருக்கிறதோ, எது எது நம் சிந்தனைக்கு, அறிவிற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறதோ அவற்றை எல்லாம் நாம் துணிந்து எதிர்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

பகுத்தறிவிற்கு மாறாக கேடாக வளர்ந்தன எல்லாம் 2,500 ஆண்டுகளுக்கு முன் இருந்துதான். அதற்குமுன் புத்தர் மக்களிடையே பகுத்தறிவை வளர்த்திருந்தார். எந்தக் காரியத்தைச் செய்வதானாலும் ஏன்? எதற்காக? எப்படி? என்ற வினாக்களைப் போட்டு சிந்தித்துச் செய் என்று மக்களைத் தன் அறிவைக் கொண்டு சிந்திக்கச் செய்திருந்தார். பிறகுதான் பார்ப்பனர்கள் அதை ஒழித்து மனிதன் சிந்திப்பது பாவம் என்பதாகச் சொல்லி மக்களை மடையர்கள், காட்டுமிராண்டிகள் ஆக்கிவிட்டான். அதன்பின் இன்று நாம்தான் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து வருகின்றோம்.

பகுத்தறிவு என்பது இரு பக்கமும் முனை உள்ள ஆயுதம் போன்றதாகும். அதை எந்தப் பக்கம் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால், நேர்மையாகப் பயன்படுத்த வேண்டும். நமது பகுத்தறிவு இயக்கத்தினால் ஒன்றுமே நடைபெறவில்லை என்று எவரும் சொல்ல முடியாது. நாம் நினைத்த அளவு காரியங்கள் நடைபெறவில்லை என்பது உண்மைதான். மற்ற நாடுகளில் எல்லாம் பகுத்தறிவு நாளுக்குநாள் வளர்ந்து கொண்டு போகிறதென்றால் அவனெல்லாம் நம்மைப்போல் எதற்கெடுத்தாலும் கடவுளைக் கட்டிக் கொண்டு மாரடிப்பதில்லை. அவன் சம்பிரதாயத்திற்காக சடங்கிற்காகத்தான் கடவுளை வைத்துக் கொண்டிருக்கிறானே தவிர, கடவுளைத் தொழுகிறானே தவிர, நம்மைப்போல் மனித வாழ்க்கையோடு கடவுள் பின்னிப் பிணைந்தது என்று கருதவில்லை. நம்மைப்போல் மனித வாழ்க்கையில் கடவுள் குறுக்கிடுவதில்லை. இந்த 50 ஆண்டுகளாக கடவுள் இல்லை என்கின்ற பிரச்சாரமானது எல்லா நாடுகளிலும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. பல நாடுகளின் ஆட்சியும் அந்த அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. நமது அரசாங்கத்தின் திட்டம், கொள்கை சமதர்மம், இதைக் கொண்டு வரும்போது அது கடவுள் இல்லை என்ற கொள்கைக்காக கொண்டுவரப்படவில்லை என்றாலும், சமதர்மம் என்பது அந்த (கடவுள் இல்லை என்ற) அடிப்படையில் அமைந்து விட்டது. பேதத்தை ஏற்படுத்தியதே கடவுள் என்று கருதுகின்ற நாம், அந்த பேதத்தை ஒழித்து சமதர்மம் கொண்டுவர வேண்டுமென்று முற்பட்டால் அது கடவுளை ஒழிப்பதாகத்தானே முடியும் - அர்த்தமாகும்.

மனிதனிடமிருக்கின்ற பேதங்களை நிலைநிறுத்தக்கூடிய மதம், கடவுள், ஜாதி, சாஸ்திரம், தர்மம், புராணம், இதிகாசம் இவை எல்லாம் ஒத்துக் கொண்டால் சமதர்மத்தைக் கொண்டு வரமுடியாதே! இவற்றையெல்லாம் ஒழித்துக் கட்டினால்தானே உண்மையான சமதர்மத்தைக் கொண்டுவர முடியும்.
இந்த சமதர்மக் கொள்கையைக் கொண்டுவர முயன்றதால்தானே இதற்கு முன் இருந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டது! அந்த ஆட்சி கவிழ்வதற்கு வேறு என்ன காரணம்?இனியும் மனிதனின் அறிவை அடக்கிவிட முடியும் என்று கருதுவது முட்டாள்தனமே ஆகும். இனி மனிதன் அறிவை அடக்க எவராலும் முடியாது. பகுத்தறிவு வளர்ந்து கொண்டே போகிறது; அதற்கு எல்லையோ முடிவோ கிடையாது. அது வளர வேண்டும் என்பதற்காகத்தான் நாம் பணியாற்றுகிறோம்.

எதிரிகளைவிட நமக்கு இருக்கிற பெரிய இழப்பு (கேடு) என்னவென்றால் அவன் எப்படிப்பட்ட அயோக்கியத்தனமும் செய்யலாம்; எவ்வளவு பெரிய பொய்களையும் சாதாரணமாகப் பயன்படுத்தலாம்; ஒழுக்கம், நாணயம் இவற்றை பற்றி இலட்சியம் செய்ய வேண்டியதில்லை. ஆனால், நாம் - பகுத்தறிவாளர்கள், பிரசாரகர்கள் நேர்மையானவர்களாக, ஒழுக்கமானவர்களாக, நாணயமுள்ளவர்களாக இருப்பதோடு, உண்மைகளையே எடுத்துச் சொல்பவர்களாகவும் இருக்க வேண்டும். அதோடு சுயநல உணர்ச்சி என்பது சிறிதும் இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். ஒரு சிறிது சுயநல உணர்ச்சி இருந்தாலும் நம்மை மக்கள் மதிக்க மாட்டார்கள். எந்த உணர்வும் இல்லாமல் நாம் உண்மையை எடுத்து பிரச்சாரம் செய்து வருவதால்தான் மக்கள் நம்மை மதிக்கிறார்கள். நம் பேச்சுக்கு செவி சாய்க்கிறார்கள். நமது நாட்டிலுள்ள மற்ற இயக்கங்கள், கட்சிகள் பற்றி பொது மேடைகளில் குற்றம் குறைகள் கூறி வெளுத்து வாங்குகிறார்களல்லவா! சுயமரியாதை இயக்கத்தையாவது யாராவது குற்றம் சொல்லி இருக்கிறார்களா? என்னைக் குறை கூறி இருக்கலாம் - நம் கழகத்திலுள்ள மற்றவர்களைப் பற்றி குற்றம் கூறி இருக்கலாம். ஆனால், நம் இயக்கத்தையோ, அதன் கொள்கையையோ தவறு என்று எவரும் சொல்ல முடியாது. இந்த இயக்கத்தை வைத்துக் கொண்டு நாம் சுயநலத்தை அனுபவிப்பது கிடையாது. பகுத்தறிவு இயக்கத்தார் என்று சொன்னால் மக்கள் மதிக்கத் தக்கவகையில் நடந்து கொள்பவர்களாக இருக்க வேண்டும்.

பகுத்தறிவின் பயனைப் பற்றி நான் உங்களுக்கு அதிகம் விளக்க வேண்டிய தேவையில்லை. தினசரி அதன் அதிசய அற்புதங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மேல் நாட்டார்கள் அதன் துணையால்தான் சந்திர மண்டலத்திற்குப் போகும் அளவிற்கு வந்திருக்கின்றனர். இப்படிப்பட்ட சிறப்பும் அதிசய அற்புதமும் கொடுக்கின்ற பகுத்தறிவை நம் மக்கள் பயன்படுத்த முன்வர வேண்டுமென்பதுதான் நமது ஆசை. அதற்காகவே நாம் பாடுபடுகிறோம். நீங்களும் மக்களை பகுத்தறிவுவாதிகளாக்கப் பாடுபட வேண்டும். அதற்காக அமைக்கப்பட்டதுதான் இந்த பயிற்சி.

------------------- 30.5.1967 அன்று விடயபுரம் பயிற்சிப் பள்ளியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை - `விடுதலை' - 7.6.1967.

0 comments: