Search This Blog
1.8.08
கட்டுப்பாடற்ற காதல்
மணமுறைக்கும் பழமையைத் தேடி திரிய வேண்டியதில்லை!
நான் ரஷ்யாவில் பார்த்தேன், திருமணம் என்ற முறையின் அமைப்பும், ஏற்பாடும் இல்லாமலேயே வாழ முடியும் என்பதை. இதற்குக் கட்டுப்பாடற்ற காதல்(free love) என்று பெயர். இந்த முறையும் அங்கு அமலில் வைத்திருக்கிறார்கள். இது எப்படிச் சாத்தியமாகிறது என்றால்,
அந்த நாட்டு மக்கள் சோற்றைப்பற்றிக் கவலையில்லாமல் வாழ்கிறார்கள்.
சுதந்திரமான வாழ்க்கை ஆண் - பெண் உறவிலும் நடத்துகிறார்கள். சொத்து வாரிசு உரிமை இருப்பதால் தான் நம்முடைய சமூதாயத்தில் கட்டுப்பாடு உள்ள குடும்ப முறையை ஏற்படுத்தவேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதைத்தான் உயர்ந்த முறை என்று கூறி மதவாதிகள் வாழ்கிறார்கள்.
காதல் என்பதற்கும் - கலியாணம் என்ற ஏற்பாட்டிற்கும் எந்த விதத்திலும் சம்பந்தமில்லை. கலியாணம் செய்து கொண்ட பெண்ணிடம் தான் காதல் உணர்வு உண்டாக வேண்டும் என்ற இயற்கை நியதி இல்லைதான். கலியாணம் செய்து கொள்ளாத பெண்ணிடம் கூடக் காதல் உணர்வு ஏற்பட்டுவிடலாம். இதை இயற்கையால் தடுத்து விட முடியாது.
எந்தப் புலவரையாவது கேளுங்கள்! எப்படி அந்தக் காலத்தில் திருமணம் நடந்தது என்றால் நந்தவனத்தில் இப்படி ஒர் ஆண்மகன் போவான். எதிர்த்தால் போல் ஒரு பெண் வருவாள். இரண்டு பேரும் பார்த்துக் கொண்டார்கள். காதல் பொங்கியது. திருமணம் நடந்தது என்பார்கள்.
எங்கே உண்மையில் அம்மாதிரி நடக்கிறது? யாராவது தன் வீட்டுப் பெண்ணைப் பார்த்து அம்மா நந்தவனத்திற்குப் போய்விட்டு வா என்று அனுப்புவார்களா? கதவு கொஞ்சம் திறந்திருந்தாலும் ஏன் அதிகமாகத்
திறந்து வைத்திருக்கிறாய்? உள்ளே வா என்று சொல்லி வீட்டுக்குள் அடைத்து வைப்பார்களே தவிர அம்மாதிரி அனுப்புவார்களா? இது எல்லாம் வெறும் கதைதான்.
அப்பாவும் அம்மாவும் பார்த்து ஒருவனுக்குக் கொடுத்து அடங்கி இருக்க வேண்டும்.அவ்வாறு இருந்தால் தான் கற்பு. அல்லாமல் பெண்ணும் பிள்ளையும் பார்த்துக் கொண்டால் உடனே களவு என்றாகிவிடும்.நாம் இப்போது செய்வது புதியதா? அல்லது பழைய முறையா? என்று கேட்கலாம். அதை எப்படிச் சொல்ல முடியும்? ஏதாவது ஒருமுறை இருந்தால் தானே இதைப்பற்றிச் சொல்லலாம்.
---------- பெரியார் ஈ.வெ.ரா. - நூல்: "வாழ்க்கைத்துணைநலம்" பக்கம் 9 - 10
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment