Search This Blog
2.8.08
பவுத்த ராமாயணத்தில் ராமன் தனது தங்கையாகிய சீதையை கல்யாணம் செய்து கொண்டான்!
புதிய முறை விவாகம்!
உலகத்தில் விவாகம் செய்து கொள்வதில் ஒவ்வொரு மதத்திற்கு ஒவ்வொரு விதமான முறைகள் பார்த்து விவாகம் செய்து கொள்ளுவது வழக்கமாய் இருந்து வருகிறதே ஒழிய எல்லா நாட்டிலும் எல்லா மதத்திலும் ஒரே விதமான சொந்தங்களைக் கையாளுவதில்லை என்பது எவரும் அறிந்ததாகும்.
உதாரணமாக மகமதியர்களுக்குள்ளும்- அய்ரோப்பியகிருஸ்தவர்களுக்குள்ளும் தங்கள் தகப்பனுடன் பிறந்த பிறந்த சகோதரர்களான சிறிய தகப்பனார்- பெரிய தகப்பனார் பெண்களைவிவாகம் செய்துக் கொள்கின்ற வழக்கம் உண்டு. இந்துக்கள் என்பவர்களில் தகப்பனுடன் பிறந்த சகோதரிகளான அத்தை பெண்களையும், தனது சகோதரிப் பெண்களையும், தனது தாயுடன் பிறந்த மாமன் சிறிய தாயார், பெரிய தாயார் பெண்களையும் விவாகம் செய்து கொள்ளுகின்ற வழக்கம் உண்டு.
சையாம் தேசத்தில் தன்னுடன் கூடப் பிறந்த சொந்த தங்கையை விவாகம் செய்து கொள்ளும் வழக்கம் உண்டு. அந்த தேசத்தில் வேறு யார் விவாகம் செய்து கொண்டாலும், செய்து கொள்ளாவிட்டாலும் அந்த நாட்டு அரசன் கண்டிப்பாய் தனது தங்கையைத் தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். இது ஆரிய முறைப்படி அரசனாயிருப்பவன் அவசியம் செய்து கொள்ள வேண்டும் என்கின்ற பழக்கம் இன்றும் அங்கு இருந்து வருகின்றது. சையாம் நாட்டு அரசர்களுக்கு அநேகமாய் முதலாவது ராமன் இரண்டாவது ராமன் என்றே பெயர் இடுவது வழக்கம். இப்போதைய ராஜாவுக்கு நாலாவது ராமன் என்று பெயர்.
சையாம் நாட்டு பவுத்த ராமாயணத்தில் ராமன் தனது தங்கையாகிய சீதையை கல்யாணம் செய்து கொண்டான் என்றே கண்டிருக்கின்றது.திரு. சீனிவாசய்யங்கார் எழுதி இருக்கும் பால ராமாயணம் என்னும் புத்தகத்தில் இந்த சரித்திரம் காணலாம்.
ஆனால் இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் இவ்விஷயம் மிகவும் தோஷமாய் கருதப்பட்டு வரும் விஷயம் யாவரும் அறிந்ததாகும் என்றாலும் பார்ப்பன ஆதிக்கம் தலை விரித்தாடும் மலையாளத்தில் இந்துக்கள் என்பவர்களுக்கும் சிறிய தகப்பனார் பெண்களைப் பெரிய தகப்பனார் குமாரர்கள் கட்டிக் கொள்கின்ற வழக்கம் உண்டு என்பது சமீபத்தில் நடந்த ஒரு நாயர் சமூக விவாகத்தில் தெரிய வருகின்றது.அதாவது: சென்னை அரசாங்க நிர்வாகசபை லாமெம்பர் உயர்திரு. திவான்பகதூர்- எம்.கிருஷ்ணன்நாயர் அவர்களின் குமாரர் திரு.பி.அச்சுதமேனன் ஐ.சி.எஸ் அவர்கள் தனது சிறிய தகப்பனாரான தஞ்சை ஜில்லா போலீசு சூப்பிரண்டெண்டு திருவாளர் எம். கோவிந்த நாயர் அவர்கள் குமாரத்தி திருமதி. பத்மினி அம்மாளை விவாகம் செய்து கெபண்டிருக்கிறார்.
ஆகவே சொந்தம்- முறை- பந்துத்துவம் என்பவைகள் எல்லாம் அந்தந்த நாட்டுப் பழக்கவழக்கமென்பதைப் பொறுத்தே அல்லாமல் கடவுள் கட்டளை என்றோ- அல்லது வேத கட்டளை- சாஸ்திரக் கட்டளை என்றோ சொல்வதெல்லாம் அறியாமை அல்லது புரட்டு என்கின்ற இரண்டில் ஒன்றே தவிர வேறில்லை. இது இப்படி இருக்க அத்தைபிள்ளையையும், அக்காள் பிள்ளையையும், சிறிய தாயார் பிள்ளையையும் கட்டிக் கொள்ளுகின்ற இந்துக்களைப் பார்த்து கிறிஸ்தவர்களும் மகதியர்களும் பரிகாசம் செய்வதும் சித்தப்பன் பிள்ளையையும் சொந்த சகோதரியையும் கல்யாணம் செய்து கொள்ளும் கிருஸ்தவர் மகமதியர் சையம் அரசர் ஆகியவர்களை இந்துக்கள் பார்த்து பரிகாசம் செய்வதும் கிணத்துத் தவளை குணமேயொழிய வேறில்லை என்பதே நமது அபிப்பிராயம்.
------------------ தந்தை பெரியார் -- "குடிஅரசு" 27-04-1930
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment