Search This Blog

19.11.13

தமிழருக்கு மதம் கிடையாது-பெரியார்

தமிழருக்கு மதம் கிடையாது

எங்கள் கவலையெல்லாம் மக்களிடத்தில் ஒரு புதிய உணர்ச்சி ஏற்படவேண்டும். மாறுதல் வேண்டும். மக்களிடத்தில் கடவுள், மதம், சாஸ்திரம் இவற்றில் காட்டுமிராண்டித்தனமான புத்தி இருக்கிறது. இது மாற வேண்டும் என்று கருதி அதற்காகப் பாடுபடுகிறோம். எங்கள் கட்சிக்குப் பெயர் தமிழர் கட்சியாகும். தமிழர் கட்சியின் லட்சியம் தமிழர் நலன் பற்றியதேதான். மற்ற எந்தக் கட்சிக்கும் தமிழர் நலன் பற்றிக் கவலையில்லை.

காங்கிரஸ்காரர்களைக் கேட்டால் தமிழ் -தமிழ்நாடு - தமிழர்கள் என்று பிரித்துப் பேசாதே. எல்லோரும் அண்ணன் தம்பிகள் -_- எல்லோரும் சமம் - பிரிக்கக்கூடாது என்பான். இங்குள்ள காங்கிரஸ்காரர் அல்ல,- காங்கிரசை ஏற்படுத்தியவனே செய்த ஏற்பாடு எல்லோரும் பாரதமாதா புத்திரர்கள் என்று. பாரதமாதாவுக்கு எத்தனை புருஷர்கள்? துலுக்கன், கிறிஸ்துவன்,  தமிழன் என்று கூறிக்கொண்டேதான் போக வேண்டும். பாரதமாதா என்று மகாத்மாகாந்தி ஆரம்பித்ததே பித்தலாட்டம். மக்களுக்கு உணர்ச்சி ஏற்பட்டு தங்களை முன்னேற்றிக்கொள்ள இருப்பதைத் தடுக்கவே பாரதமாதா ஏற்பட்டது. இந்தக் கருத்தை நான் 30 ஆண்டுகளாகக் கூறிவந்திருக்கிறேன். தமிழ்நாட்டிற்கும் பாரதத்திற்கும் சம்பந்தம் என்ன என்று கேட்டால் இதை ஒரு பத்திரிகைக்காரன்கூட எழுதமாட்டான். எல்லா பத்திரிகைக்காரர்களும் வயிற்றுப் பிழைப்பைக் கருதி பித்தலாட்டம் அயோக்கியத்தனம் செய்பவர்கள்தான். ஒருவனுக்குக் கூட, நாம் தமிழர்கள் நலன்பற்றி பாடுபடணும், எழுதணும் என்ற கவலையே சிறிதுகூட இல்லை. அம்மாதிரி கருதி எழுதக்கூடிய பத்திரிகையே கிடையாது.
நாங்கள் கடவுள் இல்லை என்று கூற உங்களிடையே வரவில்லை. கடவுள் இல்லை என்று கூற அறிவுள்ளவனால்தான் முடியும். அந்த அறிவு உங்களுக்கு வருகிறவரையில் ஏதோ கடவுளை வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அது தமிழன் கடவுளாக இருக்கட்டும். பார்ப்பான் கடவுள் வேண்டாம். இப்போதிருக்கிற கடவுள்களில் ஏதாவது தமிழன் கடவுள் உண்டா என்றால் இல்லை, எல்லாம் பார்ப்பனக் கடவுள்களேயாகும்.
அதுபோலவேதான் மதமும். தமிழனுக்கு தமிழன் மதமும் கிடையாது.  மற்ற நாட்டில் எல்லாம் அந்தந்த நாட்டின் பெயர் அந்நாட்டின் மொழியின் அடிப்படையில் இருக்கிறது. ஜப்பான் மொழியைக்கொண்ட நாடு ஜப்பான் என்று உள்ளது. ஃபிரான்சு மொழியைக் கொண்ட நாடு ஃபிரான்சு நாடு என வழங்குகிறது. இப்படியே எல்லாமும். ஆனால் தமிழ்மொழியைக்கொண்ட நம் நாட்டிற்கு என்ன பெயர் - இந்தியநாடு. இந்திய நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்? அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் எவ்வளவு சம்பந்தமோ அப்படித்தான் இதற்கும். இந்த எண்ணம் எங்களைத்தவிர வேறு யாருக்காவது ஏற்பட்டு உண்மையில் பாடுபடுகிறார்களா என்றால் கிடையாது.
--------------------------சேத்தியாதோப்பில் தந்தை பெரியார் அவர்கள் சொற்பொழிவு, (விடுதலை 10.7.1961)
 ********************************************************************

வெளிநாடுகளில் மதம் என்றால் அவர்கள் என்னவென்று புரிந்து கொள்வார்கள். அதைப்பற்றி அவர்களுக்குத் தெரியும். நம் நாட்டில் யாருக்குத் தெரியும்? பொட்டு வைப்பது மதம், நாமம் போடுவது மதம், சேலை கட்டுவது மதம், இந்த வகையான சோறு தின்பது மதம் என்பதுபோன்றுதான் இருக்கின்றன. இப்படிப்பட்ட மத நம்பிக்கை கொண்ட பைத்தியக்கார நாடு நம் நாட்டைத் தவிர வேறு ஒன்றுமில்லை. மதத்திலேயே வைணவம், சைவம், காளிமதம் என்கிறான். இன்னும் போனால் பேய் மதம் என்றுகூட வைத்துக் கொள்வான்; மனிதனுக்கு அறிவு கொடுக்க வேண்டியது கடவுள். மதம், சாஸ்திரம்தான். இங்கு அப்படி இல்லையே.
எந்தக் கடவுளை எடுத்துக் கொண்டாலும் அயோக்கியக் கடவுளாகத்தான் இருக்கின்றன. விரோதிகளைக் கொன்று குவிப்பதும், பெண்ணை அடித்துக் கொண்டு போவதும், பெண்டாட்டி, பிள்ளைகளை வைத்துக் கொள்வதும்தான் நம் கடவுள். ஒவ்வொருவனும் தனக்கு ஏற்றாற்போல், சிவன், பரமன், சக்தி, குமரன் என்று வைத்துக் கொள்ளுகிறான். இவர்கள் எல்லாம் யார்? அப்படி எவனாவது இருந்தானா? அல்லது இருக்கிறானா? என்ன வெங்காயமோ தெரியவில்லை. அப்படி கடவுள் இருப்பதாகக் கூறினான். அவன் எங்கே போய் விட்டான்? கடவுள் கண்ணுக்குத் தெரியாது என்றால் அதற்கு ஏன் பெண்டாட்டி, வைப்பாட்டி, பிள்ளை, ஆறுவேளை சோறு? இவையெல்லாம் எவ்வளவு முட்டாள்தனம்? அடிக்கடி மக்களிடம் வந்துபோன கடவுள் இன்று ஏன் வரக்கூடாது? நாம் அவ்வளவு பாதகர்களா?
சாஸ்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள், எவனுக்கு சாஸ்திரம் என்றால் என்ன என்று தெரியும். அதில் அவனைப் பற்றிய மரியாதை என்ன? இதையெல்லாம் யோசிக்கத் தெரியாதா? மதத்தில் ஒரு வேத மதம், என்ன வெங்காய வேத மதம். அதைப்பற்றி யாருக்கு என்ன தெரியும்? அதன் கருத்துகள் படித்தால் சிரிப்பை மூட்டுகின்றன. இவையெல்லாம் விளையாட்டுத்தனமாகவே இருக்கின்றன.
கடவுளிடம் பேசினார் என்கிறான் ஒருவன். இவர் கடவுளைப் பார்த்தார் என்கிறான் இன்னொருவன். அப்படிக் கூறுகிறவன் எதைக் கடவுள் என்கின்றான். எந்தக் கடவுளை எடுத்துக் கொண்டாலும், மனிதனைத்தான் சித்தரித்துக் காட்டுகிறார்கள்.
மனிதனுக்கு இருப்பது போன்ற உடலமைப்புகள், உருவமெல்லாம் உணர்ச்சி குணங்கள். கடவுள் மனிதனைப் போன்று ஏன் இருக்க வேண்டுமென்று கேட்க ஆள் இல்லையே? மூட நம்பிக்கைகளை ஒழித்தால்தான் நம்மக்களுக்கு அறிவு வரும். கடவுள் இருக்க வேண்டுமென்றால் யோக்கிய உணர்ச்சிக்கு இருந்துவிட்டுப் போகட்டும். அப்படியில்லாத நிலையில் நீண்ட நாளாக இந்த மூட நம்பிக்கைகள்தானே தலைவிரித்தாடுகின்றன. நம் மக்களுக்கு அறிவு உணர்ச்சி, மான உணர்ச்சி வரவேண்டும் என்பதற்காகப் பாடுபடாமல் சும்மா ஏதோ பேசி காலத்தைக் கழிப்பதால் என்ன நன்மை? அப்படிக் காலத்தை வீணாக்கினால் எப்போது நாம் முன்னுக்கு வருவது?
--------------------------19.10.1963 அன்று எழும்பூர் பெரியார் திடலில் தந்தை பெரியாரின் 85ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் தந்தை பெரியார் சொற்பொழிவு, (விடுதலை, 25.10.1963)

19 comments:

தமிழ் ஓவியா said...


தனிச் சலுகை

ஏழைகள் வாழ்வு மலரவே சமதர்மம் விழைகிறோம். எல்லா வகுப்பினரும் சம வாய்ப்புப் பெறும் வரையில் திட்டமிட்டுப் பரம்பரையாய்த் தாழ்ந்துள்ள சமூகத்தினர்க்குத் தனிச் சலுகை தரப்படவேண்டும். - (விடுதலை, 8.12.1967)

தமிழ் ஓவியா said...சி.என்.ஆர்.ராவின் குற்றச்சாற்று


பாரத ரத்னா விருது இருவருக்கு அறிவிக்கப்பட் டுள்ளது. ஒருவர் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் இன்னொருவர் கிரிக்கெட் விளையாட்டுக்காரர் சச்சின் டெண்டுல்கர்.

முதலாமவருக்குப் பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டதில், எந்தவித சர்ச்சையும் கிடையாது. ஆனால் அவர் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சைப் புயலைக் கிளப்பி விட்டன.

அறிவியலுக்குப் போதுமான அளவு நிதி ஒதுக்கப் படாததால், அரசியல்வாதிகளை முட்டாள்கள் என்று கூறியதுதான் சர்ச்சைக்குக் காரணம்; பிறகு இதுபற்றி சிந்தாமணி நாகேச இராமச்சந்திரராவ் விளக்கம் அளித்துச் சமாதானம் சொல்லியுள்ளார். அது ஒருபுறம் இருந்தாலும், அவர் சொன்ன வேறு சில கருத்துக்கள் தள்ளுபடி செய்யப்பட முடியாதவை. அறிவியல் துறைக்குப் போதுமான அளவு நிதி அளிக்கப்படுவதில்லை என்பதில், தமது கோப நெருப்பைக் காட்டியுள்ளார்.

இத்துறையைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, ராவ் சொன்ன கருத்து சரியானது தான் - உண்மைதான் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

நிதி உதவி குறைவானதாக உள்ளது என்பதோடு மட்டுமல்ல, கால தாமதமாகவும் கிடைக்கிறது என்றும் கூறியுள்ளார். இது நமது நாட்டுக்கே உரித்தான சிகப்பு நாடா முறையாகும்.

சீனாவைப் போல நாம் உழைப்பதில்லை. எதையும் நாம் எளிதாக எடுத்துக் கொள்கிறோம் (சோம்பேறிகள் என்று சொல்லலாமல் சொல்லுகிறார் என்பதைப் புரிந்து கொண்டால் சரி) என்று கூறியுள்ளார்.

ராவ் கூறியதில் இன்னொரு முக்கியமான கருத்து; நம்மிடையே அறிவியல் மனப்பான்மை இல்லை என்பதுதான், நூற்றுக்கு நூறு துல்லியமான கருத்து இது. இந்த ராவ் கூறிய மற்ற மற்ற கருத்துக்களை வெளியிட்ட தமிழ் ஏடுகள் இந்தக் கருத்தை மட்டும் திட்டமிட்டு இருட்டடித்து விட்டன. குற்றமுள்ள மனம் குத்தியதோ என்னவோ!

இந்திய அரசமைப்புச் சட்டம் 51A என்பதில் உட்பிரிவு (h) என்பதில் தெளிவாக திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.

விஞ்ஞான ரீதியான அணுகுமுறை, மனப்பான்மை மனிதாபிமானம், ஆராய்வு ஊக்கம், சீர்திருத்தம் ஆகியவைகளை ஊக்குவிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின், அடிப்படைக் கடமையாகும் என்று வற்புறுத்தப்பட்டுள்ளது.

இது எந்த அளவுக்குக் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது நியாயமான வினாவாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீது உறுதி மொழி எடுத்துக் கொண்டு பதவி நாற்காலியில் அமர்பவர்களில் எத்தனைப் பேர் இந்தச் சரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஒரு கணமாவது நினைத்துப் பார்க்கக் கூடியவர்கள்?

மற்றவர்களுக்கு இந்த உணர்வை ஊட்டுவது ஒருபுறம் இருக்கட்டும்; முதலில் மத்திய அமைச் சர்கள், ஏன் குடியரசுத் தலைவர்; துணைக் குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் உட்பட இதன்படி ஒழுகுபவர்கள் எத்தனைப் பேர்!

அதையும்விட இன்னொரு உச்சக்கட்ட கொடுமை என்ன தெரியுமா? அறிவியல் துறையில் பணியாற்றும் விஞ்ஞானிகளிடம் முதலில் அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அந்த விஞ்ஞான மனப்பான்மை உண்டா?

இஸ்ரோ சார்பில் ஒவ்வொரு முறையும் விண் கலத்தை ஏவும் போதெல்லாம் அதனுடைய இயக்கு நராக இருக்கக் கூடிய ராதாகிருஷ்ணன் என்ன செய்கிறார்?

அந்த அறிவியல் ஆவணத்தைக் கொண்டு போய் திருப்பதி ஏழுமலையான் பாதத்திலும், காளஹஸ்தி சென்று அங்குள்ள கோயில் சன்னதியிலும் வைத்துப் பூசை செய்து வருகிறாரே - வெட்கப்பட வேண்டாமா?

விண்கலம் ஏவப்படுவது ஏழுமலையான் சக்தி யாலா? ஏழுமலையான் எத்தனை ஆண்டுகாலமாக அங்கே அடைத்து வைக்கப்பட்டுள்ளான்? அப்பொழு தெல்லாம் மங்கள்யான் பறக்க விடப்படவில்லையே - ஏன்?

இயக்குநர் பொறுப்பில் இருப்பவர்களுக்கே விஞ் ஞான மனப்பான்மை இல்லாதிருந்தால், இளை யோர்கள் எத்தகைய தாக்கத்திற்கு ஆளாவார்கள்? படிக்கும் மாணவர்களின் மத்தியில் மூடத்தனத்தைத் தானே ஏற்படுத்தும்.

வைத்தியரே, முதலில் உங்கள் நோயைக் குணப்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லு வதுபோல விஞ்ஞானிகளே! முதலில் நீங்கள் விஞ் ஞான மனப்பான்மையைப் பெறுங்கள் என்பதுதான் நமது வேண்டுகோள்!

தமிழ் ஓவியா said...


வாயைத் திறக்காதீர் குர்ஷித்!


சிலர் வாயைத் திறப்பதை விட திறக்காமல் இருந்தாலே உத்தமம். வாயைத் திறந்து எதையாவது கொட்டி வாங்கிச் சுமப்பதில் இந்தியாவின் வெளி யுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை அடித்துக் கொள்ள வேறு ஒருவரும் இல்லை.

இலங்கை சென்ற இவர், திருவாய் மலர்ந் தருளியுள்ளார். பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையான உதவிகளை மட்டுமே இந்தியா வழங்க முடியும். அதே நேரத்தில் இலங்கைப் பிரச்சினைக்கு அந்நாட்டு அரசும், மக்களும்தான் தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார்.

நிறவெறி காரணமாக தென் ஆப்பிரிக்கா புறக்கணிக்கப்பட்டபோது இந்தப் புத்தி அப் பொழுது வேலை செய்யவில்லையோ! வங்காள தேசம் உருவாக்கப்பட்டபோது - இந்த ஞானோதயம் எங்கே போயிற்றாம்! இவர் சொல் கிறபடி பார்த்தால் அய்.நா. மன்றம், மனித உரிமை ஆணையம் இவையெல்லாம்கூட வெட்டி அமைப்புகள்தானோ!

தமிழ் ஓவியா said...


கழகத்தின் முயற்சிக்கு வெற்றி!


பெரியார் சிலையை மூடிய தேர்தல்

ஆணையமே மூடிய துணியை அகற்றியது

சேலம், நவ.19- ஏற்காட்டில் நடைபெற உள்ள இடைத் தேர்தலையொட்டி அத்தொகுதி மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள சிலைகளை தேர்தல் ஆணையம் துணி போட்டு மூடியது தந்தை பெரியார் சிலையையும் இரவோடு இரவாக மூடினார்கள்.

இந்தத் தகவல் தலைமைக் கழகத்திற்கு வந்தது. இதற்கு முன் 2011இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது தேர்தல் ஆணையம் இதே தவறைச் செய்த நேரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் நீதியரசர் திரு பி. ஜோதிமணி அவர்கள் தலைவர்களின் சிலைகளை மூடியதை உடனே நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அந்த ஆணையைத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி, உடனே மூடப்பட்ட பெரியார் சிலையைத் தேர்தல் ஆணையமே நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் பட்டது. அதன்படி தந்தை பெரியார், அறிஞர் அண்ணா உள்ளிட்ட அனைத்து தலைவர் களின் சிலைகளை மூடியிருந்த துணிகளை தேர்தல் ஆணையமே நேற்று அகற்றிவிட்டது.

தேர்தல் ஆணையம் மூடிய சிலையைத் திறந்ததற்குப் பிறகு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே. ஜவகர், துணைத் தலைவர் சி.பூபதி, செயலாளர் அரங்க இளவரசன் மாநகரக் கழகத் தலைவர் பி. வடிவேல் ஆகியோர் இன்று காலை தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். தோழர்கள் ஜவகர், சி. பூபதி அரங்க இளவரசன், அ.க. இளவழகன் கடவுள் இல்லை சிவகுமார், பரமசிவம் ஆகிய கழகத் தோழர்கள் அதிகாரி களைச் சந்தித்து இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.

தமிழ் ஓவியா said...


சீனாவின் முதல் குரல்: இலங்கை மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்!


பீஜிங், நவ.19- இலங்கை மனித உரிமை களை பாதுகாக்கவும், ஊக்கப்படுத்தவும் நடவ டிக்கை எடுக்க வேண் டும் என்று இலங்கை யின் நட்பு நாடான சீனா திடீர் அறிவுரை வழங் கியுள்ளது.

இலங்கையில் சமீபத் தில் நடந்த காமன் வெல்த் மாநாட்டில் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் சார்பில் குரல் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இலங்கையின் நட்பு நாடான சீனாவும் முதன்முதலாக இலங்கை மனித உரிமை பிரச் சினை குறித்து கருத்து தெரிவித்துள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கியின் காங் செய்தியாளர்களி டம் கூறியதாவது:-

பல்வேறு நாடுகளில் உள்ள பொருளாதாரம், சமூக மேம்பாடு ஆகிய வற்றோடு ஒப்பிடும் போது, இலங்கையில் மனித உரிமைகள் பாது காப்பு மாறுபட்டதாக இருக்கிறது.

எனவே இதில் முக்கி யமானது என்னவென் றால், உலகின் மற்ற நாடுகள் இலங்கைக்கு சாதகமான உதவிகள் வழங்கும்போது, இலங்கை மனித உரிமை களை பாதுகாக்கவும், ஊக்கப்படுத்தவும் நடவ டிக்கை எடுக்க வேண் டும் என்றார்.

இங்கிலாந்து நாட் டுப் பிரதமர் டேவிட் கேமரூன் அந்த மாநாட் டில் எழுப்பிய பிரச்சினை களின் அடிப்படையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கூடும் அய்.நா. மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கை மீது சர்வதேச விசா ரணை நடத்தப்படுமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர், இது காமன்வெல்த் உறுப்பு நாடுகளுக்கிடையே உள்ள ஒரு பிரச்சினை. ஆனால் அதேசமயம், மனித உரிமைகள் பிரச் சினை தொடர்பாக நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தைகளும், தகவல் தொடர்புகளும் அதிகரிக்க வேண்டும் என்று நான் கருது கிறேன்.

மனித உரிமைப் பிரச் சினைகள் குறித்து உலக நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை மற்றும் தகவல் தொடர்புகள் மூலம் நல்ல புரிதல் ஏற் பட வேண்டும். இது சர்வதேச மனித உரிமை களை ஊக்கப்படுத்தவும், மேம்படுத்தவும் உதவும் என்று நாங்கள் எப்போ தும் கூறிவருகிறோம் என்று கியின் கூறினார்.

இலங்கையின் மனித உரிமைப் பிரச்சினை குறித்து சீனா கருத்து கூறியிருப்பது இதுவே முதல்முறையாகும். இலங்கைக்கு சீனா பில் லியன் டாலர் கணக்கில் உதவிகள் புரிந்து வரு கிறது.

இலங்கையில் நடை பெற்ற இறுதி போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அய்.நா. மனித உரிமை குழுவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்தபோது கூட, சீனா இலங்கைக்கு ஆதரவாக வாக்களித் தது. ஆனால் இந்தியா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது.

காமன்வெல்த் அமைப் பில் உறுப்பினராக இல் லாதபோதும், கொழும் பில் நடந்த காமன் வெல்த் மாநாட்டு கட் டமைப்பு வசதிகளுக் கான நிதியை சீனா வழங் கியதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


இன்றும் பார்ப்பனீயம் படம் எடுத்து ஆடும் கொடூரம்!

பார்ப்பனர் சாப்பிட்ட எச்சில் இலைகளில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணமாம்!

கருநாடக மாநிலத்தில் நடக்கும் காட்டுமிராண்டித்தனம்!

பெங்களூரூ, நவ. 20- கருநாடகாவில் அத்தேகுக்கே சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கேவலமான பிரார்த்தனை செய்வது வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது அங்கப்பிரதட்சணம் செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். இதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்று மாநில முதலமைச்சரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இது தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றதில் நிலுவையில் உள்ளது.

தட்சிண கருநாடக மாவட்டத்தில் அத்தேகுக்கே சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 3 நாட்கள் மாதே ஸ்நானா பிரார்த்தனை நடை பெறும். பார்ப்பனர்கள் சாப்பிட்டு வைத்த எச்சில் இலைமீது கீழ்தட்டு வகுப்பைச் சேர்ந்த பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்பது வழக்கத்தில் இருந்து வருகிறது. இவ்வாறு நேர்த்திக்கடன் செய்தால் அவர்கள் நினைத்தது நிறைவேறும் என்று நம்பப் படுகிறதாம்.

இந்தப் பிரார்த்தனை முறை கீழ்தட்டு மக்களை அவமதிப்பதாகும் என்று தட்சிண கருநாடக கல்லியா தாலுகாவைச் சேர்ந்த கருணாகர் என்னே மஜல், மங்களூரு தாலுகாவைச் சேர்ந்த ஜெயக்குமார் கிரேமத், கே.நாராயண செட்டி ஆகியோர் மாநில முதலமைச்சர் சித்தராமய்யாவிடம் மனு கொடுத் தனர். எச்சில் இலை மீது கீழ்தட்டு மக்கள் அங்கப் பிரதட்சணம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.

நீதிமன்றத்தில் வழக்கு

மதவழிபாட்டுத் தலங்களில் எல்லோரும் சமமே. இதில் பார்ப்பனர்கள், பார்ப்பனர் அல்லாதவர் என்ற பாகுபாடு கூடாது. ஆனால் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பார்ப்பனர்கள் சாப்பிட்டு தெருவில் போட்ட எச்சிலை மீது பார்ப்பனர் அல்லாத பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்று வலி யுறுத்தப்படுவது அவர்களை அவமானப்படுத்தும் செயலாகும். ஆகவே இதற்கு தடை விதிக்கப்பட்டே ஆக வேண்டும் என்று இந்த மனுவில் வலியுறுத்தி யுள்ளனர்.

இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாநில முதலமைச்சரின் அலுவலகம் உத்தரவிட்டது. ஆனால் இதுதொடர்பான எந்த உத்தரவும் தர வில்லை என்று கோவில் நிர்வாக அதிகாரி எம்.நாகராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தக் கேவலமான பிரார்த்தனையை மாற்றி அமைக்கக்கோரி கருநாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதற்கு அனுமதியும் வழங்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஒருசில பக்தர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கோவிலில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த நடைமுறையில் மாற்றம் செய்வதற்கு தடை விதித்தது. (என்ன கேவலம்!) இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காவல்துறையின் பாதுகாப்புடன் வழக்கம்போல் இந்தக் கேவலமான பிரார்த்தனை நடத்தப்பட்ட தாம். இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தமிழ் ஓவியா said...


மங்கள்யான் விண்கலம்: டிசம்பர் 1-இல் செவ்வாய்க்கோளை நோக்கிப் பயணிக்கும் இஸ்ரோ தலைவர் தகவல்


ஆலந்தூர், நவ.20- பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விடுபட்டு மங்கள்யான், செவ்வாய்க்கோளை நோக்கி டிசம்பர் ஒன்றாம் தேதி பயணம் மேற்கொள் ளும் என்று இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் செவ்வாய்க் கிழமை பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:

செவ்வாய்க்கோளுக்கு கடந்த 5 ஆம் தேதி அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலம் திட்டமிட்டபடி வெற்றிகரமாக இயங்கி வருகிறது. அது பூமியில் இருந்து 1.95 லட்சம் கி.மீ. தூரத்தில் தற்போது சுற்றி வருகிறது.

வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விடுபட்டு செவ்வாய்க்கோளுக்கு தனது பயணத்தைத் தொடங்கும்.

மங்கள்யான் விண்கலப் பயணம் திட்டமிட்டபடி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.

ஜி.எஸ்.எல்.வி டி-5 ராக்கெட் கடந்த ஆகஸ்டு மாதம் 19 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்தது.

ஆனால், இறுதி நேரத்தில் ஏற்பட்ட சிறிய கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

இந்த ராக்கெட் உள்நாட்டு இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்பட்டது.

தற்போது ஜி.எஸ்.எல்.வி டி-5 முழுமையாக தயாராகிவுள்ளது. இதை டிசம்பர் மாதம், இரண்டாவது வாரத்தில் விண்ணில் செலுத்த தயாராக உள்ளோம் என்றார் ராதாகிருஷ்ணன்.

தமிழ் ஓவியா said...


பாரத ரத்னா படும்பாடு!


கிரிக்கெட் விளையாட்டுக்காரர் சச்சின் டெண்டுல் கருக்குப் பாரத ரத்னா பட்டம் கொடுத்தாலும் கொடுத் தார்கள் - அது பெரிய சர்ச்சைப் புயலை நாடு தழுவிய அளவில் எழுப்பிவிட்டது.

விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு இதுவரை பாரத ரத்னா பட்டம் கொடுக்கப்பட்டதில்லை. மூன்றாண்டுகளுக்கு முன்புதான் அத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் கொடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

அப்படிப் பார்க்கப்போனால், இந்திய மண்ணுக்குச் சொந்தமான ஹாக்கிக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். மற்றவற்றில் எல்லாம் தேசியம் பேசுவோர்களின் சிந்தனையில் இந்த மின்னல் இழை தொனிக்காமல் போனது ஏன்?

ஒலிம்பிக்கில் எட்டு முறை தங்கத்தை வாங்கிக் கொடுத்த ஹாக்கிக்குக்கு அல்லவா முதல் மரியாதை செய்திருக்கவேண்டும்.

மற்ற மற்ற பிரச்சினைகள் என்று வரும்போது மட்டும்தான் வெள்ளைக்காரன் அந்நியனா? அவன் விட்டுச் சென்ற மிச்ச சொச்சங்களில் இந்தக் கிரிக்கெட்டும் ஒன்று.

பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் அஸ்தமிக்காத ஒன்று என்று சொல்லப்படுவதுண்டு; அவன் ஆட்சி செய்த நாடுகளில் எல்லாம் இந்தக் கிரிக்கெட் உண்டு.

மற்றபடி உலகின் மிகப்பெரிய நாடுகளான அமெரிக்கா, சீனா, ருசியா, ஜப்பான், பிரான்சு போன்ற நாடுகளில் இந்த விளையாட்டைச் சீந்துவார் இல்லை.

அதிகம் போனால் கிரிக்கெட் விளையாட்டு பத்து நாடுகளைத் தாண்டாது. இந்தியாவைப் பொறுத்தவரை இந்திய, வெள்ளைக்காரர்களான பார்ப்பனர்கள் சுவீ காரம் செய்து கொண்ட விளையாட்டு இது. அதனால் தான் இதற்கு இவ்வளவு மரியாதை - ஊடகங்கள் எல்லாம் அவர்களின் கைகளில் என்பதால் மற்ற மற்ற விளையாட்டுகள் எல்லாம் மக்கள் மத்தியில் புறந்தள்ளப்பட்டு, கிரிக்கெட் மட்டும் குதிரைச் சவாரி செய்துகொண்டு இருக்கிறது.

அறிஞர் பெர்னாட்ஷா சொன்னதுபோல, 11 மடை யர்கள் விளையாடுகிறார்கள்; 11 ஆயிரம் மடையர்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் நினைவிற்கு வருகிறது.

கிரிக்கெட் என்பது பணம் காய்த்துத் தொங்கும் மரம் போன்றது. ஒவ்வொரு முறை விளையாடும்பொழுதும் அளிக்கப்படும் பணம் போதாது என்று ஆண்டு சம்பளம் வேறு சுளை சுளையாக - மேலும் பலவகையான மாநில, மத்திய அரசுகளின் சலுகைகள் வேறு.

இவ்வளவும் போதாது என்று கிரிக்கெட் சூதாட்டம் வேறு - விளையாட்டு என்கிற வீரியத்தைக் காயடித்த ஆட்டம் ஒன்று உண்டு என்றால், அது கிரிக்கெட்தான்.

சச்சின் டெண்டுல்கரைப் பொறுத்தவரை, தன் சாதனைக்காக ஆடக் கூடியவரே தவிர, தான் சார்ந் திருக்கும் குழு வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கக் கூடியவரும் அல்லர்.

பொதுவாக ஒரு விமர்சனம் அவரைப் பொறுத்து உண்டு. அவர் அதிக ஓட்டம் எடுத்த ஆட்டம் வெற்றி பெற்றதில்லை என்று கூறப்படுவதுண்டு. அவர் சந்தித்த பந்துக்கும், ஓட்டத்திற்கும் உள்ள விகிதாச்சாரமும் அதனை நிரூபிக்குமே!

இவர் தனது 79 ஆவது ஆட்டத்தில்தான் முதல் சதமே போட்டார்.

இவர் அணித் தலைவராக இருந்து ஆடிய 5 நாள் போட்டிகள் 25; அதில் வெற்றி 4; தோல்வி 9. சரி சமம் (ட்ரா) 12.

ஒரு நாள் ஆட்டங்கள் 73; அதில் வெற்றி 23; தோல்வி 43. சரி சமம் 2; முடிவு இல்லாதது 5.
இதுதான் சச்சினின் சாதனையா? இவர்தான் கிரிக்கெட் கடவுளாம்!

இவர் தலைமையில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் வெற்றி பெற்றதும் இல்லை. கபில்தேவ், தோனி தலைமையில்தான் இந்திய அணி உலகக் கோப்பையைத் தட்டிப் பறித்ததுண்டு.

இதில் என்ன கொடுமையென்றால், 2011 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா வென்றது; அதன் பெருமை இந்திய அணியின் தலைவர் தோனிக்குத் தானே போய்ச் சேரவேண்டும்.

உண்மையில் என்ன நடந்தது? அந்தப் பதினோரு பேரில் ஒருவராக இருந்த சச்சினைத் தோளில் தூக்கிக் கொண்டு மைதானம் முழுவதும் வலம் வந்தனர். வெற்றிக் குரிய நாயகனான தோனியோ அமைதியாக ஒதுங்கி நின்றார்.

கிரிக்கெட்மூலம் சச்சின் கோடிகோடியாக சம்பாதித் தாரே தவிர, சமுதாயத்துக்கு அவரின் உதவி என்ன என்பது முக்கிய வினாவாகும்.

சச்சின் சாதனை என்பதைவிட, அவர் ஒரு பார்ப்பனர் என்ற எண்ணம் கொஞ்சம் தூக்கலாக இருப்பதுதான் இவ்வளவுக் களேபரம், கித்தாப்பு, விளம்பரங்களுக்கு எல்லாம் அடிப்படை!

தமிழ் ஓவியா said...


எனது ஆசை


எனக்கு ஆசை எல்லாம் - மக்கள் பகுத்தறிவாளர்கள் ஆகவேண்டும்; ஜாதி ஒழியவேண்டும்; உலகில் பார்ப்பனர் இருக்கக்கூடாது. இதுதான் எனது கொள்கை. (விடுதலை, 28.8.1972)

தமிழ் ஓவியா said...


கழிப்பறைகளும், நம் கவனமும்!


உலகக் கழிப்பறை நாள் நேற்று (19.11.2013, செவ்வாய்)!

பல்வேறு பிரச்சினைகளை முன் னிறுத்தி முக்கியமான பிரச்சாரத்திற் காக இப்படி ஆண்டில் பெரும்பாலான நாள்களைக் கொண்டாட முடிவு செய்து, உலக அளவில் இதற்குரிய முக்கியத் துவம் ஏற்பட்டு, நடைமுறைப்படுத் தப்பட்டு வருகிறது!

சிலர் இதனை மேலெழுந்தவாரி யாகப் பார்த்து கேலியாகக்கூட நினைக்கக்கூடும்.

அது சரியான கண்ணோட்டம் ஆகாது.

காரணம், கழிப்பறை என்பது மிகமிக முக்கிய தேவை வீடுகளில்.

வீடுகளில் மட்டுமா? உடலின் ஆரோக்கியத்திற்குக்கூட, கழிப்புகள் - அவை மலக்கழிப்பானாலும், சிறுநீர்க் கழிப்பாக ஆனாலும், மிக முக்கிய மல்லவா?

மருத்துவரிடம் நாம் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்று, சிகிச்சைக் காக உடலைக் காட்டிடும்போது, அவர் கேட்கும் சில முக்கிய கேள்விகள்:

பசி எடுக்கிறதா?

தூக்கம் சரியாக உள்ளதா?

மலக்கழிப்பு சரியாக நடைபெறு கிறதா?

சிறுநீர் கழிப்பு அதற்கும் உள் ளதா? என்பது போன்ற கேள்விகளும், முதல் கேள்விகளாக சரியாக மூச்சு விட முடிகிறதா? காய்ச்சல் (ஜூரம்), இருமல் உள்ளதா? என்ற கேள்வி களுக்கு முன்னுரிமை அளித்த நிலை யில், அடுத்து இவைதான் கேட்கப்படும் கேள்விகள்.
முதுமையில் மலச்சிக்கல் வெகு பலரையும் அல்லல்படுத்தும் அவதி நோய்களில் ஒன்று. எனவே, கழிப்பறை கள் மிகவும் உடல்நலப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியம்.

திறந்தவெளியிலும், தெருக்களிலும் குழந்தைகளை மலம், சிறுநீர் கழிக்க அனுப்பும் பெற்றோர் முன்பு அதிகம்; சிறுநகரங்களில்கூட முன்பு இருந்த கொடிய பழக்கம் அது! ஆனால், இப் பொழுது அது வெகுவாகக் குறைந்து விட்டது. மாறிவருவது நல்ல திருப்பம்.
பொதுவாக நமது கிராமப்புறங்களில் திறந்தவெளிகளில், பெண்கள்கூட மலங்கழிக்க ஒதுங்கும் பரிதாப நிலை இருந்தது; காரணம், அங்கே போதிய கழிப்பறை வசதிகள் கிடையாது; அதனால் அந்தப் பழக்கமும் அவர்கள் பதியவில்லை; இப்போது பெரிதும் அந்நிலை மாறிவிட்டது!

ஒரு வெளிநாட்டுக்காரர் எழுதிய ஒரு ஆங்கில நூலில், நமது வினோத மான பழக்கத்தை நன்கு சுட்டிக்காட்டி, சம்மட்டி அடி தந்துள்ளார்!

இந்தியாவில் ஒரு விசித்திர பழக்கத்தைக் கண்டு அதிர்ந்து போனேன்; மலங்கழிப்பது மனிதர்களின் தனியே நடக்கவேண்டிய (ரகசிய) நிகழ்வு ஆகும். இதை ஒரு சங்கிலித் தொடர் வண்டிபோல் அமர்ந்துகொண்டு (தள்ளித் தள்ளி உட்கார்ந்து) கூச்ச நாச்சமில்லாமல் செய்கிறார்கள்!

ஆனால், அதேநேரத்தில் மத உணர்வு காரணமாக சடங்காச்சாரத் தைக் காப்பாற்றுவதற்காக, எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சிந்தித்துப் பேசி மகிழ்ந்து கலந்து உண்ணும் உணவுப் பழக்கத்தை - சாப்பிடும்போது - தனியே திரைபோட்டதுபோல - மறைத்துக் கொண்டு சாப்பிடுகிறார்கள்!(Private) (மனுதர்ம சாஸ்திரத்தில் இது ஜாதிய - வருணாசிரமப்படி வற்புறுத்தப்பட் டுள்ளது).

எதைத் தனியாகச் செய்யவேண் டுமோ, அதைக் கூச்சமின்றி பொதுவாக -பப்ளிக்காக திறந்தவெளி அரங்கில் செய்கின்றனர்; எது பொதுவாக ‘Socially’ நடத்தப்படவேண்டுமோ அந்த உண்ணும் பழக்கத்தை ஒரு தனியே திரை போட்டு மறைத்துவிட்டுச் செய் கின்றனர் என்று எழுதியுள்ளார்!

- இது சரியான சுட்டிக்காட்டல் தானே! மறுக்க முடியாதே!

இப்போது அது வெகுவாக மாறி வருகிறது. வாஸ்து சாஸ்திர மூட நம்பிக்கை இப்போது படித்த தற் குறிகளையும்கூடப் பிடித்தாட்டுகிறதே! அந்த வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டுக் குள் கழிப்பறை கட்டுவதற்கு அனுமதி யில்லையே!

ஆனால், இன்றுள்ள நவீன வீடுகளில் ‘Bath Attached’ குளியல் - கழிப்பறை உள்ளடங்கிய அறைகள் தானே 2 முதல் 3, 4 என்று உள்ளதே!

எனவே, இது உடல்நலக் கண் ணோட்டத்தில் மட்டும் முக்கியமல்ல நண்பர்களே, அறிவுநலக் கண் ணோட் டத்திலும், பகுத்தறிவின்படி கழிப் பறைகள் எங்கும் தேவை.
அதேநேரத்தில், அவைகள் நன்றாக, சுத்தமாக உள்ளனவா என்ற கண் காணிப்பு மிகமிக அவசியமாகும்; நோய்க் கிருமிகளின் வாசமே அங்கு தான்!

வீடுகளில் வரவேற்பறையை அழகு படுத்துவதைவிட, கழிப்பறைகளைச் சுத்தப்படுத்துதல் மிகமிக இன்றியமை யாதது!

எனவே, கழிப்பறை என்றால் முகம் சுழிக்கவேண்டாம்; கவனம் தேவை!

அதுபோலவே, பூஜை அறை முக்கி யத்தைவிட, கழிப்பறை மிக முக்கியம். veramani

தமிழ் ஓவியா said...


சென்னை, காஞ்சி மண்டலக் கழகப் பொறுப்பாளர்களுக்கு அன்பு வேண்டுகோள்!

தஞ்சையில் டிசம்பர் 2ஆம் தேதி நடக்கவிருக்கும் நமது அருமைத் தலைவரின் 81ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழாவில், உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு நாம் நிறுவ இருக்கும் 95 அடி உயர பேருருவச் சிலைக்காக முதற்கட்டமாக ஆயிரம் சவரன் தங்கத்துக்கான நிதியை தஞ்சையில் அளிக்க இருக்கிறோம்.

நாள்தோறும் தோழர்கள் நன்கொடைகளை ஆர்வத்துடன் வழங்கி வருவதை விடுதலையின் வாயிலாக அறிந்து இருப்பீர்கள்.

சென்னை, காஞ்சி மண்டலக் கழகப் பொறுப்பாளர்கள் நவம்பர் 26ஆம் தேதி செவ்வாய்க் காலை சென்னை பெரியார் திடலில் நடக்கவிருக்கும் நமது அருமைக் கழகப் பொருளாளர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு நேரில் வந்து கழகத் தலைவரிடம் நிதியை அளிக்குமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

இடையில் நாட்கள் குறைவு - வேகமும், விவேகமும் காட்டுவீர்! தோழர்களே!

சென்னை
20.11.2013

- கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


செய்தியும், பின்னணியும்!

பதற்றம்

ஏற்காட்டில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளும் பதற்றமானவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

(ஜனநாயகமே பதற்றத்தில்தானே இருக்கிறது!).

அதிசயம்... ஆனால்...

அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் பிறந்த ஏழு குழந்தைகளும் இப்போது தங்கள் 16 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டா டினர்.

(இது என்ன அதிசயம்; ரிஷி பிண்டம் ரா தங்காது என்பது இந்து மதப் புண்மொழி; நாரதனுக்கும், கிருஷ்ணனுக்கும் ஒரே நேரத்தில் 60 குழந்தைகள் பிறந்திருப்பதாக கூறவில்லையா?)

காவிரி அன்னைக்கு...

கும்பகோணம் மேலக்காவிரியில் நேற்று காவிரி அன்னை கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

(இனிமேல் கவலையில்லை; கருநாடகத்திற்கு விண்ணப்பம் போடத் தேவையில்லை - அதுதான் காவிரித் தாய் கடவுளாகிவிட்டாரே... அதுசரி கும்பாபிஷேகத்துக்கு ஜலம் பஞ்சமில்லாமல் கிடைத்ததா?)

இருமுடி திருட்டு!

கன்னியாகுமரி வந்த சென்னை அய்யப்பப் பக்தர்களின் வேனை உடைத்து இருமுடிக் கட்டுகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருடப்பட்டது.

(அய்யப்பனே கொள்ளைக்காரன் என்ற கருத்துண்டே! அவனே ஆள் வைத்து ஏற்பாடு செய்திருப்பானோ!)

எட்டு வயதில் டும்! டும்! டும்!

உத்தரப்பிரதேசத்தில் நாசி என்னும் கிராமத்தில் 14 வயது சிறுவனுக்கும், 8 வயது சிறுமிக்கும் கல்யாணம் நடந்தது - தேசிய பெண்கள் ஆணையம் விசாரணை.

(அவ்வளவுத் தூரம் போவா னேன்?- சிதம்பரத்தில் தீட்சதப் பார்ப்பனர்கள் குடும்பத்தில் இன் றைக்குவரைக்கும் இது சர்வ சாதாரணமாயிற்றே!- சட்டம் பாயாது! படுத்துக்கொள்ளும். காரணம் அவாளாயிற்றே!- ராஜஸ்தானில் பால்ய விவாகத்தைத் தடுத்த பன்வாரி என்ற பெண்ணை மூன்று பார்ப்பனர்கள் பாலியல் வன்முறை செய்து தூக்கி எறிந்தனரே - வாழ்க பா.ஜ.க. ஆட்சி!).

செவ்வாயில்...

செவ்வாய்க் கோளில் கிரானைட் கற்கள் உள்ளதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

(இங்கு மணல் அள்ளுவதைப் போல் அங்குபோய் கிரானைட்டை அள்ளிவர ஏதாவது குறுக்குவழி இருந்தால் சொல்லுங்கள்).

சச்சின் கோவில்

சச்சின் டெண்டுல்கருக்கு பிகார் மாநிலத்தில் கோவில் கட்டப்படுகிறது.

(கோவில்கள் எப்படியெல்லாம் தோன்றியிருக்கின்றன என்பதற்கு கண்ணெதிரே நடைபெறும் இது ஒன்று போதாதா?)

தமிழ் ஓவியா said...


மோடிக்கு விசா கூடவே கூடாது! அமெரிக்கவில் மீண்டும் தீர்மானம்!


குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு விசா வழங்க மறுக்கும் நடவடிக்கையை அமெரிக்கா தொடர வேண்டுமென்று அந்நாட்டு நாடாளுமன்றத் தில் எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் இதற்கான தீர்மானத்தை எம்.பி.க்கள் கொண்டு வந்துள்ளனர். மத சுதந்திரம் மற்றும் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மோடிக்கு விசா மறுக்கும் நடவடிக்கையை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென்று அந்தத் தீர்மானம் வலியுறுத்துகிறது. குஜராத் கலவரத்தை சுட்டிக்காட்டியுள்ள அந்தத் தீர்மானம் அதில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் தங்களுக்கு நீதி கோரி வருவதையும் குறிப்பிட்டுள்ளது.

அதே சமயம் இந்தியாவின் மத சகிப்பு தன்மை கொள்கையை தீர்மானத்தில் எம்.பி.க்கள் பாராட்டியுள்ளனர். ஆளும் ஜனநாயக கட்சி எம்.பி. கீத் எலிசன் கொண்டு வந்த இந்த தீர்மானத்தை, குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் ஆதரித்துள்ளனர். இந்தத் தீர்மானம் வெளியுறவு அமைச்சக நாடாளுமன்ற துணைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. குஜராத் கலவரத்திற்கு பின்னர் மோடிக்கு விசா வழங்குவதை 2005 ஆம் ஆண்டுமுதல் அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இந்நிலையில் மோடிக்கு விசா வழங்கக் கூடாது என வலியுறுத்தி அமெரிக்கா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் அவருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி.யின் புளுகுப் பிரச்சாரம் அம்பலம்!

ஸ்பெயினில் உள்ள சாலைப் படத்தைப் போட்டு மத்திய பிரதேசத்தில் பி.ஜே.பி.யின் சாதனை என்று விளம்பரம்!

50 ஆண்டுகளாக இருந்த காங்கிரஸ் சாலைப் பணியை மேம்படுத்தவில்லை, ஆனால் 10 ஆண்டுகளுக்குள் அப்படி இருந்த சாலையை இப்படி மாற்றிவிட்டோம் என்று பி.ஜே.பி.யினர் விளம்பரம் தந்து இருந்தார்கள்; படத்தை உற்றுநோக்கும்பொழுது அது ஸ்பெனியில் உள்ள ஒரு கார்கோ நிறுவன விளம்பரத்தில் உள்ள படம் இது. இந்த நிறுவனம் 2009 ஆண்டு இந்த இணைய தளத்தை துவங்கி அதில் விளம்பரத்திற்காக (வவயீ://றறற.உயசபடி ளாயீயீபே.உடிஅ) ஸ்பெயின் சாலையில் கார்கோ நிறுவன வண்டிகள் ஓடுவது போன்று உள்ள இந்த படத்தை அப்படியே எடுத்து எடிட்கூட செய்யாமல் ஒட்டி வைத்து சிவராஜ் சிங் சவுகானோடு போட்டிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு முகநூலில் (ஃபேஸ்புக்) சீனாவின் பேருந்துகளை குஜராத்தின் சாலையில் ஓடும் பேருந்தாக சமூக வலைதளத்தில் போட்டு இருந்தார்கள் அது பொதுவான தளம் யாரும் என்னவேண்டுமானாலும், செய்யலாம், ஆனால் ஒரு மாநில அரசை ஆளும் கட்சி தன்னுடைய விளம்பரத்தில் இப்படி ஒரு பொய்யான விளம்பரத்தை பத்திரிக்கை வாயிலாக கொடுத்து அதிகாரபூர்வமாக மக்களை ஏமாற்றியுள்ளனர்.

அமெரிக்காவில் விற்பனைக்காக விளம்பரப்படுத்தப்பட்ட ஒரு வீட்டைப் போட்டு, இதுதான் ஆ.இராசாவின் வீடு என்று இணைய தளத்தில் பித்தலாட்டப் பிரச்சாரம் செய்த யோக்கியர்களையும் இந்த நேரத்தில் நினைவூட்டுகிறோம்.

கெட்டிக்காரன் புளுகே எட்டு நாள்கள்தான். பி.ஜே.பி.யின் புளுகுகள் ஒவ்வொரு நாளும் அம்பலமாகி வருகின்றன.

தமிழ் ஓவியா said...


கடவுள் செயல் என்பது...

தொட்டதற்கெல்லாம் கடவுள் செயல் - கடவுள் செயல் என்று சமாதானம் சொல்லு கின்றவர்கள் தங்கள் தப்பிதத்தின் காரணத்தை உணராதவர்கள். அல்லது தங்கள் தவறுகளை உணர்ந்து அதிலிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சிக்கின்றவர்கள் ஆவார்கள்.
(குடிஅரசு, 4.5.1930)

தமிழ் ஓவியா said...


ராக்கெட் ஏவுதளத்தை கோட்டை விட்டது ஏன்?


தமிழகத்தைப் புறக்கணிக்கிறது இஸ்ரோ என்ற தலைப்பில் குங்குமம் வார இதழில் (18.11.2013) கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது. அதில் ஆந்திர மாநிலம், சிறீஹரிகோட்டாவில் இரு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ள நிலையில், மூன்றாவது ஏவு தளத்தைத் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் உருவாக்கும் திட்டம் ஒன்று கணக்கில் இருந்தது. இப்பொழுது அது கைவிடப் பட்டு, ஏற்கெனவே இரு ஏவுதளங்கள் உள்ள சிறீஹரி கோட்டாவிலேயே இந்த மூன்றாவது ஏவுதளமும் அமைக்கப்படுவது குறித்து தி.மு.க. தலைவர் கலை ஞர் அவர்களும் அறிக்கை ஒன்றினை வெளியிட் டுள்ளார்.

12 ஆவது அய்ந்தாண்டுத் திட்டத்தில் விண்வெளி ஆய்வினை ஊக்கப்படுத்திட ஆண்டு ஒன்றுக்கு 60 திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் இதுவும்.

எல்லா வகையிலும் இந்தத் திட்டத்தைக் குல சேகரப்பட்டினத்தில் நிறுவினால், பல கோடி ரூபாய் மிச்சப்படும் என்று அதிகாரவட்டாரங்கள் தெரி வித்திருந்தும், 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தத் திட்டத்தை கையும் காதும் வைத்தாற்போல தமிழ்நாட்டுக்கு வராமல், சிறீஹரிகோட்டாவிலேயே முடக்கியது ஏன் என்பது புரியவில்லை.

தொழில்நுட்ப ரீதியாகவும் இந்தத் திட்டத்தைக் குலசேகரன்பட்டினத்தில் நிறுவுவது தான் சரியானது என்று திரவ இயக்க உந்து மய்யப் பொதுச்செயலாளர் எம்.மனோகரன் கூறுகிறார்:

சிறீஹரிகோட்டாவைவிட ராக்கெட் ஏவுதளம் அமைத்திட மிகச் சிறந்த இடம் குலசேகரன்பட் டினமே! சில தொழில்நுட்பக் காரணங்கள் மூலம் இதனை உறுதிப்படுத்தவும் முடியும். பி.எஸ்.எல்.வி. செயற்கைக்கோள்களை தெற்கு நோக்கி ஏவி, 450 கி.மீ. முதல் 1000 கி.மீ. தூரத்தில் நிலை நிறுத்த வேண்டும். ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை பூமத்திய ரேகைக்கு மேலாக கிழக்கு நோக்கி ஏவி 36 ஆயிரம் கி.மீ. தூரத்தில் நிலை நிறுத்தவேண்டும். உலக விண்வெளி விதிமுறைப்படி ஒரு நாடு ஏவும் ராக்கெட் டுகள் இன்னொரு நாட்டின்மீது பறக்கக்கூடாது. ஆனால், சிறீஹரிகோட்டாவிலிருந்து நேரடியாக ராக்கெட்டுகளை ஏவினால், இலங்கை, இந்தோனே சியா நாடுகள்மீது பறக்க வாய்ப்புண்டு. அதற்காக தென் கிழக்காக அனுப்பி, மீண்டும் திசை திருப்பி, சுற்றுப் பாதைக்குக் கொண்டுவரவேண்டும். இத னால் கூடுதலாக பல கோடி ரூபாய்கள் செலவழிக்க வேண்டிய அவசியம் ஏற்படும்.

மேலும், சிறீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் மூலம் 1600 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை 650 கி.மீ. தூரத்தில் நிலை நிறுத்த முடியும். ஆனால், குலசேகரன்பட்டினத்திலி ருந்து 2200 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை அனுப்புவது சாத்தியம். 600 கிலோ கூடுதல் எடை கிடைக்கும். இன்றைக்குப் பன்னாட்டுச் சந்தையில் ஒரு கிலோ எடையை விண்ணில் அனுப்பிட ரூ.12 லட்சம் முதல் ரூ.18 லட்சம்வரை கட்டணம்; அப்படிப் பார்த்தால், 600 கிலோ கூடுதல் எடைக்கான கட்டணம் ரூ.60 கோடி என்பது போன்ற காரணங்கள் சொல்லப்படுகின்றன.

எல்லா வகையிலும் பொருத்தமான இடம் குல சேகரன்பட்டினம் என்று இஸ்ரோவைச் சேர்ந்த நிபுணர்களே கூறியும், பிடிவாதமாக தமிழ்நாட்டுக்கு வராமல் தடுத்த சக்தி எது?

பெரும்பாலும் மலையாளிகளும், பார்ப்பனர்களும், தமிழர்களுக்கு எதிராக இருப்பது ஒரு காரணமா?

இந்தத் திட்டம் குலசேகரன்பட்டினத்தில் செயல் படுத்தப்பட்டால் நேரடியாக 4000 பேருக்கும் மறை முகமாக 10 ஆயிரம் பேருக்கும், வேலை வாய்ப்புண்டு. அதிகபட்சம் 3 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடுகள் வரும் - அவற்றின்மூலம் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும், மறைமுகமாக சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும் கிட்டும்.

இது இப்பொழுது தட்டிப் பறிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது. தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் இதுகுறித்துப் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்த நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரும் அழுத்தம் கொடுத்திருந் தால், தமிழ்நாட்டுக்கு எவ்வளவுப் பெரிய ஒளிமயமான வாய்ப்புக் கிடைத்திருக்கும். இதனைக் கோட்டை விட்டது ஏன்? இதிலும் அரசியல்தானா?

சேது சமுத்திரத் திட்டத்தை, ராமன் பெயரைச் சொல்லித் தடுத்தாயிற்று. வளர்ச்சியை நோக்கிச் சிந்தித்துச் செயல்பட்டால்தான், அதற்குப் பெயர் மக்கள் நல அரசாகும் என்பதை நமது முதல்வர் உணர்வாரா?

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் 95 அடி பேருருவச் சிலை அமைப்பு

பெரியார் உலகத்திற்கு நன்கொடை திரட்டும் தோழர்களே!

இருபத்தியோராம் நூற்றாண்டை பெரியார் நூற்றாண்டாக்கிடும் திட்ட இலக்கோடு செயல்படும் நாம் தற்காலத்தில் கற்காலத்தைத் தாண்டி, பொற்காலப் புது யுகத்தினை மக்களுக்கு உழைக்க உறுதி பூண்டு ஓய்வறியா உழைப்பினை - தன்னலம் துறந்த தொண்டறத் தினை, பதவி புகழ் வேட்டை அறி யாக் களப்பணியை முன்னாலே நிறுத்துவதில் சிறப்பான வகையில் மக்கள் ஆதரவினைப் பெற்று வருகிறோம்.

பால் (Sex), ஜாதி, மதம், கட்சி என்ற பேத உணர்வுகளைத் தாண்டி நமது இயக்கம் மக்கள் மத்தியில் பேராதரவினைப் பெற்றுவருவதால் இது பொற்காலம் ஆகும்!

தங்கம் தாருங்கள் என்று எங்கும் சென்று நீங்கள் சிறப்பாகத் திட்டமிட்டு, சிட்டுகளாகப் பறப்பதைக் கண்டு நாடே வியப்பு அடைகிறது!

தங்கம் தந்த தங்கங்கள் (‘Book of Gold People’) என்ற ஒரு அழகிய நூல் ஒன்றினை திராவிடர் கழகம் அதிகாரபூர்வமாக வெளியிட்டு அதில் பெயருடன் நன்கொடை விவரமும் பொறித்தால், வருங்கால சந்ததியினருக்கும், வரலாறு எழுதுவோருக்கும்கூட, இது எதிர்காலத்தில் நல்ல உதவியாக அமையக்கூடும் என்பது எனது பணிவன்பான யோசனையாகும்.

எவரிடமும் எதையும் கேட்டுப் பெறுவதற்கு முன்பு நாம் நமது பங்கினை அளித்துவிட்டுப் பேசுவதுதான் எடுத்துக்காட்டான அணுகுமுறை என்பதால், எளிய எம் தோழர்கள் குடும்பத்தில் உள்ள பொன் அணிகலன்களையும், தாலியையும் கூட இயக்கத்துக்கு மகிழ்வுடன் தந்து, எதிர்காலத்தில் இந்த இயக்கம் ஓர் உலக மாமலை யாகிட வேண்டும் என்பதற்கு நல்ல அடித்தளமிட்டுள்ளனர்.

இதற்காக இன்னும் சில மாதங்கள் உழைப்பு! உழைப்பு! உழைப்பு! - இவை மூலமாகவே நாம் இலக்கு அடைய வாய்ப்பு!

நமது கறுஞ்சிறுத்தைகள் அக ராதியில் நம் உழைப்பு ஒருக்காலும் தோல்வியை ஏற்படுத்தாது.

நமது இயக்கத்தை உலகளாவிய இயக்கமாக ஆக்கிடுதல் வேண்டும். மனிதனின் சுயமரி யாதையை முன்னிலைப்படுத்திய முதல் இயக்கம் அய்யா அணி - இந்த அறிவியக்கம் ஒன்றுதான் என்பது வரலாற்றுப் பெட்டகம் கூறும் உண்மையாகும்.

மத இயக்கங்கள் எப்படியெல் லாம் ஒவ்வொரு நாட்டில், ஒவ் வொரு கால கட்டத்தில் வேரூன் றியது என்பதை இவ்வாண்டு விடுதலை அய்யா விழா மலரில் நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.

அமெரிக்காவில் நான் பயணம் செய்தபோது, செயின்ட்லூயிஸ் என்ற ஒரு பெருநகரத்தின் விமான நிலையத்தில் இறங்கிச் செல்லும் போது, அங்கே ஹரே இராமா, ஹரே கிருஷ்ணா இயக்கத்தினைச் சார்ந்த தொண்டர்கள் (இவர்கள் அமெரிக்கர்கள்) சிலர் பகவத் கீதை புத்தகங்களை வைத்து பிரச்சாரம் செய்வதைப் பார்த்து, அவர்களது வெளியீட்டினை நான் தோழர் அரசுமூலம் வாங்கினேன். அதில் உலக நாடுகளின் முக்கிய பெரு நகரங்களில் எல்லாம் அவர்களது கிளைகள் ஏற்படுத்தப்பட்டு நடை பெற்று வருகின்றன என்று இருந்தது.

தமிழ் ஓவியா said...

அது மட்டுமா? பல மண்டை ஓட்டு அடையாள - ஆனந்த மார்க்க இயக்கத்திற்கு உலகம் முழுதும் 200, 300 கிளைகளாம்! இது எப்படி சாத்தியம்? தொண்டன் - உழைப்பு - நன்கொடை திரட்டல் - நிதி அடிப்படை சரியாக இருப் பதன் தத்துவம் தந்த தலைவருக்குப் பிறகு அதனைப் பலப்படுத்தி, பாரெங்கும் கொண்டு செலுத்தும் பணியை, அவருக்குப் பின்வரும் அத்தலைவரின் உண்மையான தொண்டர்கள் தான் செய்து முடித்திடுவர் -இதுதான் வரலாறு. மூலம் அடையலாம்.

கொள்கை பலமற்ற மனித குலத்தினைக் கூறுபோடுவோர் அதைச் செய்கின்ற நிலையில், மனித நேயத்தினையே மய்யப் படுத்தியுள்ள அரிய தத்துவ மாமலை பெரியார்தம் தத்துவத்தை உலகளாவச் செய்திட நாம் உழைப்பதுதானே நியாயம். பெரியார்விட்ட பணி முடிக்க எடுத்த சூளுரையில் உண்மையான செயலாக்கமாகவும் இருக்க முடியும்!

எந்தத் தத்துவமானாலும், எல்லா சமூக இயக்கங்களும் இப்படித்தான் உலக இயக்கங்களாக ஓங்கி உயர்ந்து நின்றன!

இதற்குமுன் இருபதாம் நூற்றாண் டில் பெரியார் தேவைப்பட்ட தைவிட, 21 ஆம் நூற்றாண்டில்தான் அதிகம் தேவைப்படுவார், பெரியார் என்றால் ஓர் வாழும் மானுடவியல் தத்துவம் - மனித குலத்தின் மகத்தான விடிவு! அதனை உருவாக்கிட நாம் எதை யும் கட்டுப்பாடு காத்து பழைமை வாதச் சக்திகளுடன் ஜாதி - மத - பேத மூடத்தனத்தினை - முகவர் களை எதிர்த்து, முழுப்போரை நடத்திட ஆற்றல் பெற்று, பெரிய ரின் இராணுவமாக ஆகிட வேண்டும்!

பெரியாருக்குப் பிறகு என்ற காலம்; மனித குலத்திற்கான பொற்காலம். உருவாக்க வேண்டிய பொறுப்பு மிகுந்த பணி நம் அனைவருக்கும் பேச்சாக அல்ல; மூச்சாகவே அமைந்துள்ளது என்பதை நான் இப்போது எடுத்துக் காட்டிடத் தேவையில்லை.

இயக்கக் குடும்பங்கள் ஒரு நிலையில் ஓங்கி உயர்ந்து தங்கம் திரட்டுவது, தனிப்பட்ட எவரின் சுயநல, சுகபோக வாழ்வுக்காக அல்ல; எதிர்கால மானுடத்தின் மகத்தான உய்வுக்காகவே!

இது இப்போது எழுதப்பட்ட தல்ல; எடைக்கு எடைத் தங்கம் வசூலிக்கும் திட்டத்தின்போது கழகத் தலைவர் 1998ஆம் ஆண்டு விடுத்த அறிக்கை இது!!

எனவே, அதே முயற்சியை மேலும் பன்மடங்காக்கி விழை யுங்கள்! வெற்றி நமதே! -

தலைமை நிலையம்

தமிழ் ஓவியா said...


ராஜராஜ சோழன் எங்க ஜாதி.. பங்காளி ஊரு மாப்ளே - வரிந்துகட்டி ஜாதிச் சங்கத்தில் உறுப்பினராக்கும்' அமைப்புகள்

ராஜராஜ சோழ உடையார்.. சோழர்குல படையாச்சியார்.. ராஜராஜ சோழ தேவேந்திரர்.. வன்னியர்குல சத்திரிய பேரரசன்.. - இந்த ஆண்டு ராஜராஜ சோழனின் 1028ஆவது சதய விழாவுக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் பளிச்சிட்ட வாசகங்கள்தான் இவை!

நேதாஜி, முத்துராமலிங்கத் தேவர், அம்பேத்கர் வரிசையில், கடல் கடந்து சைவத்தையும், தமிழையும் பரப்பிய ராஜராஜ சோழனையும் ஜாதி வட்டத் துக்குள் அடைத்துவிட்டார்கள். உடையார் என்றும் தேவர் என்றும் தேவேந்திரர் என்றும் ஆளாளுக்கு ராஜராஜ சோழனுக்கு ஜாதி முத்திரை குத்தியதால் இந்த ஆண்டு சதய விழா பதற்றத்துடனேயே கடந்திருக்கிறது.
பரம்பு மன்னனின் பேரன் ராஜராஜ சோழன்.., உடையார் ராஜராஜ சோழத் தேவருக்கு.. என்று கல் வெட்டுகளில் காணப்படுவதை வைத்து ராஜ ராஜனை எங்காளு என்கிறது உடையார் (பார்கவ குலம்) சமூகம்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழக பார்கவ குல இளைஞர் முன்னேற்றப் பேரவைச் செயலாளர் சசிகுமார், ராஜராஜன் உடையார்தான் என்பதற்கு கல்வெட்டு ஆதாரங்கள் இருக்கு. எங்கள் வம்சத்தைச் சேர்ந்த பரம்பு மன்னனின் பேரன்தான் ராஜராஜ சோழன். வர்ணாசிரம தர்மப்படி தேவேந்திரர்களோ, முக்குலத்தோரோ, சத்திரியர்களாக இருந்திருக்க முடியாது. அப்படி இருக்க, ராஜராஜன் எப்படி அந்த ஜாதிகளைச் சேர்ந்தவராக இருக்க முடியும்? என்றார்.

விஜயாலயச் சோழத்தேவர் எங்க ஊரு மாப்ளே!

ராஜராஜன் 48 சிறப்புப் பட்டங்களை உடையவர். இந்த உடையவர் என்பது தான் காலப்போக்கில் உடையார் என்றாகிவிட்டது. ஆனால், கல்வெட்டுக் களை முழுமையாக படித்துப் பார்த்தால் ராஜராஜ சோழத் தேவர் என்று இருப்பதை அறியமுடியும் என்கிறார் சோழ மண் டலத்து முக்குலத்தோர் சமுதாய மக்கள் அமைப் பைச் சேர்ந்த சிவகுரு நாதன். விஜயாலயச் சோ ழனுக்கு வலங்கைமான் அருகி லுள்ள ஊத்துக் காட்டில் வானவன்மா தேவி என்ற பெண்ணைத் தான் திருமணம் முடித் தார்கள். அந்தப் பெண் ணின் வம்சாவழியினர் எனக்கு உறவுமுறை. விஜ யாலயச் சோழன் எங்க ஊரு மாப்ளே என்கிறார்.
உடையார், தேவர் என்பதெல்லாம் ஜாதியில்லை
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலர் தியாககாமராஜ், உடையார், தேவர் என்பதெல்லாம் ராஜராஜனின் மறு பெயர்கள். சாதி அல்ல. ராஜராஜன் தேவேந்திரகுலத்தில் வந்தவன் என்பதை நாங்கள் தக்க சான்றுகளுடன் விவாதிக்கத் தயாராய் இருக்கிறோம் என்றார்.

சத்திரிய ஜாதி வன்னியர்கள் மட்டும்தான்!

வன்னியர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர் ஆறு. அண்ணல் கண்டார், தமிழகத்தில் சத்திரியன் என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே ஜாதி வன்னியர். சோழ மன்னர்களுக்கு சிதம்பரம் நடராஜர் கோயிலில்தான் முடிசூட்டு விழா நடப்பது வழக்கம். இன்று வரை சிதம்பரம் கோயிலில் முடிசூட்டும் ஒரே குடும்பம் வன்னியர்களான பிச்சாவரம் பாளையக் காரர் குடும்பம். நடராஜர் கோயிலில் இப்ப வரைக்கும் சோழர் மண்டகப்படின்னு மண்டகப் படியே நடத்திக்கிட்டு வர்றாரு. சகல சம்பத்துக்களும் உடையவர் என்பதால் ராஜராஜனை உடையார் என்றும் அனைவருக்கும் மேலானவன் என்பதால் தேவர் என்றும் அழைத்தார்கள். இந்த உண்மை தெரியாமல் அவரை தேவர் ஜாதியிலும் உடையார் ஜாதியிலும் சேர்ப்பது பிதற்றல் என்கிறார்.

அவலத்தை முளையிலேயே கிள்ளணும்

இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் கருத்து வேறாக இருக்கிறது. ராஜராஜன் இந்துப் பேரரசன். அதனால்தான் தன்னை சிவபாத சேகரன் என அழைத்துக் கொண் டான். அவரை ஜாதிக்குள் அடைப்பது அநியாயம்; அக்கிரமம். அருண்மொழித் தேவன் என்று இருப்பதால் அவரை தேவர் ஜாதி என்கிறார்கள். பெரிய கோயிலைக் கட்டியதால் ராஜராஜனுக்கு பெருந்தச்சன் என்ற பட்டம். இதனால் தச்சர்கள் எல்லாம், ராஜராஜன் எங்காளு என்கிறார்கள். தேவேந்திரகுலத்தினர், ராஜராஜன் மல்லர் குலத்தைச் சேர்ந்தவர் என்கிறார்கள். இதைவிட அபத்தம் என்னவென்றால், சாதி இரண்டொழிய வேறில் லைனு சொன்ன அவ்வைப் பாட்டியையே மள்ளத்தி என்று சாதிய வட்டத்துக்குள் கொண்டு வந்து விட்டார்கள். ராஜராஜ சோழனையும் ஜாதிய வட்டத்துக்குள் கொண்டுவரும் அவலத்தை முளை யிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றார்.

தஞ்சை பெரிய கோயிலை ஆய்வு செய்துவரும் வரலாற்றுப் பேராசிரியர் குடவாயில் பாலசுப்பிர மணியனிடம் இந்த சர்ச்சை குறித்துக் கேட்டதற்கு, இதுதொடர்பாக இன்னும் நிறைய ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது. ஆய்வின் முடிவில்தான் பதில் கிடைக்கும் என்று ஒதுங்கிக்கொண்டார். ராஜராஜ சோழனுக்கும் இது சோதனையான காலகட்டம்தான் போலிருக்கிறது! (தி இந்து, 16.11.2013)